இளைஞர் உலகம்
உறவு
பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588
அசட்டை முகத்தினர் என்று அழைக்கப்படும் உளப்பாங்கை கொண்டோரின் பொதுமைப் பண்புகளைப் பட்டியலிட்டு வருகிறோம். இதுவரை 7 பண்புகள் பற்றி அலசினோம். இந்த இதழில் இன்னும் சில பண்புகள் பற்றி ஆய்வு செய்வோம்.
மென்மையான சுபாவம் கொண்டவர்
அசட்டை முக உளப்பாங்கை கொண்டவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகள் இவர்கள் வாயிலிருந்து வருவதில்லை. கடுஞ்சொல் சொல்வதை தவிர்ப்பார்கள். வன்சொல் இவர்கள் வாயிலிருந்து வருவதில்லை. வாழ்வின் சோகங்கள் இவர்களை ஆழ் துயரில் அமிழ்த்திவிடும். சோகக் கதைகளை படிப்பதை, சோகக் காட்சிகள் பார்ப்பதை தவிர்க்க விரும்புவார்கள். சோகக் காட்சிகள் பார்ப்பதைத் தாங்கிக் கொள்ளாதவர்கள்.
ஆங்கில அகராதிக்கு வித்திட்டவர் டாக்டர் ஜான்சன் ஆவார். சிறந்த கட்டுரையாளரும் விமர்சனம் செய்பவருமான (Critic) இவர் ஆங்கில மஹாகவி ஷேக்ஸ்பியரது நாடகங்களைத் திறனாய்வு செய்து அவற்றை வெளியிட்டுள்ளார். இவருடைய திறனாய்வு “ஷேக்ஸ்பியருக்கு ஒரு முன்னுரை” (Preface to Shakespeare) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. பெரும்பான்மையான திறனாய்வாளர்கள் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள்தான் (Tragedies) அவரது மகிழ்ச்சியான முடிவு நாடகங்களை (Comedies)விட சிறந்தவை என்பார்கள். ஆனால் டாக்டர் ஜான்சன் ேஷக்ஸ்பியரது துன்பியல் நாடகங்களைவிட, மகிழ்ச்சியாக முடியும் நாடகங்களே சிறந்தவை என கருத்துத் தெரிவித்தார் (His tragedy is his skill; his comedy his instinct) அதாவது ‘‘அவரது (ஷேக்ஸ்பியரது) துன்பியல் நாடகங்கள் அவரது திறமையைக் காட்டுகின்றன; ஆனால் அவரது மகிழ்ச்சியாக முடியும் நாடகங்கள் தான் அவரது உள்ளுணர்வை வெளிப்படுத்துகின்றன’’ எனக்கூறினார்.
டாக்டர் ஜான்சன் இப்படி கூறுவதற்குக் காரணம் இவர் மென்மையான சுபாவம் கொண்டவர். சோகக் கதைகள், துன்பியல் நாடகங்களை இவர் ரசிக்கமாட்டார். அவற்றை வாசித்தால் இவரால் சோக நிகழ்வுகளைத் தாங்கிக்கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகமான ஒத்தல்லோவை (Othello) இவரால் ஒரு தடவைக்குமேல் வாசிக்க முடியவில்லை. அதிலும் நல்லவர்கள் கொடியவர்களால் துன்புறுவதை இவரால் காண சகிக்க முடியாது.
அசட்டு முகத்தினரின் இந்த மென்மையான சுபாவம் பிறரால் இவர்கள் எளிதாக காயப்படுவதற்கும், துன்புறுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். ஆனாலும் இவர்கள் அநியாயமாக துன்புற்றாலும் திருப்பித் தாக்கும் திராணி இல்லாதவர்கள். சொல்லப்போனால் பிறர் தன்னை காயப்படுத்தினால் தன்னையே நொந்து கொண்டு காயப்படுத்தியவர்களை நியாயப்படுத்துவார்கள். இத்தகைய உளப்பாங்கு ஜப்பான் நாட்டினரிடையே அதிகம் காணப்படுவதாகக் கூறுவார்கள். அதாவது ஒருவர் நம்மைப் பழித்துரைத்தால், “இவர் இப்படி என்னைப் பழித்துரைக்க நான் தானே காரணம்” என்று தன்னைத்தானே பார்த்து சொல்லிக் கொண்டேயிருப்பாராம். இந்த குற்ற உணர்வு இவர்களை தற்கொலைக்குத் தூண்டுமாம். இதனால் புள்ளிவிவரப்படி ஜப்பானில் தற்கொலைகள் அதிகமாக உள்ளன.
நம்பகத் தன்மையுடையவர்
இன்று நம்பகத்தன்மை அரிதாகவே உள்ளது. போலிகளின் சாம்ராஜ்யம்தான் அனைத்து துறைகளிலும் கோலோச்சுகின்றது. வாக்கு நாணயம் என்பது பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். இதற்கு நல்ல உதாரணம் 1962-இல் நடந்த சீன-இந்திய போராகும்.
1954-ஆம் ஆண்டு, அன்று சீனப் பிரதமராக இருந்த சூ-என்-லாயும், அன்றைய இந்திய பிரதமர் நேருவும் 5 கொள்கைகள் கொண்ட பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் சீனாவும்
- பரஸ்பரம் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்.
- ஒரு நாடு மற்ற நாட்டை ஆக்கிரமிக்கக் கூடாது.
- ஒருவர் மற்றவருடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது.
- சமத்துவம் நிலவவும், பரஸ்பர நன்மைக்காகவும் ஒத்துழைக்க வேண்டும்.
- அமைதியான சகவாழ்வு வாழவேண்டும்.
இந்திய பிரதமர் இந்த பஞ்சசீலக் கொள்கையை மலைபோல் நம்பி இருந்தார். தான் அதை மதிப்பதுபோல் சீனாவும் மதிக்கும் என நம்பியிருந்தார். இந்நிலையில் சீனா இந்தியாவை தாக்கக்கூடும் என நேருவிடம் கூறியபோது அவர் “ஒரு சோசலிச நாடு, அயல்நாட்டை முதலில் தாக்காது” என்று கூறி பஞ்சசீல ஒப்பந்தத்தை நம்பியிருந்தார். ஆனால் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். 1962-ஆம் ஆண்டு சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது. அது கைப்பற்றிய இந்தியாவின் சில பகுதிகளை இன்னும் நமது நாடு திரும்பப் பெறவில்லை. இப்படி உலகளவில் நம்பகத்தன்மை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அசட்டைமுகத்தினர் நம்பகத்தன்மை கொண்டவர்கள்.
சுயமாகத் தீர்மானம் செய்ய முடியாதவர்கள்
அசட்டைமுகத்தினரால் சுயமாக சிந்தித்து யோசித்து ஒரு தீர்மானம் செய்ய முடியாது. எப்போதும் இவர்கள் இன்னொருவரின் ஆலோசனையை கேட்டுத்தான் எந்த முடிவையும் எடுப்பார்கள். தன்னம்பிக்கை குறைவதால் ஒரு சிறு முடிவைக்கூட சொந்தமாக எடுக்க பயப்படுவார்கள்; இது அழுமுகத்தினரின் பண்பாக இவரிடம் தொற்றிக் கொண்டிருக்கும் ஒன்றாகும். இதற்கு ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தில் வரும் நாடகத்தின் ஹீரோ நல்ல எடுத்துக்காட்டு. கதாநாயகனான ஒத்தல்லோ தனது கூட்டாளியாக இயாகோ என்பவனை வைத்துக்கொள்கிறான். உண்மையில் ஒத்தல்லோவின் வாழ்வை சீரழிக்க முயலும் வில்லன் தான் இந்த இயாகோ. ஒத்தல்லோவின் மனைவி டெஸ்டிமோனா மீது அபாண்டமாக பழியைச் சுமத்தி இருவரையும் பிரிக்க எல்லா யுத்திகளையும் பயன்படுத்துகிறான். கடைசியில் டெஸ்டிமோனா கள்ள உறவு வைத்துள்ளாள் என ஒத்தல்லோவை நம்ப வைத்துவிடுகிறான். இப்போது அவளை எப்படி கொல்ல வேண்டுமென இயாகோவிடம் ஆலோசனை கேட்கிறான் ஒத்தல்லோ. படுக்கையில் வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிடு; ஏனென்றால் மணவறை மஞ்சத்தை அவள் மாசுபடுத்திவிட்டாள் என்கிறான் இயாகோ.
Strangle her in bed; for the very bed she has contaminated.
இதனால் ஒத்தல்லோ மாசற்ற தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொல்கிறான். அதன் பிறகுதான் அவனுக்கு இயாகோவின் சதி தெரிய வருகிறது. குற்றப்பழி உணர்வால் தானும் தற்கொலை செய்து கொள்கிறான்.
சுயமாக சிந்தித்து, உணர்ச்சியைத் தாண்டி முடிவெடுக்க முடியாதவர்கள் இப்படி எப்போதும் அனைத்து முடிவுகளுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கும் பட்சத்தில் இத்தகைய அவலங்களை வாழ்வில் சந்திக்க நேரிடும். எனவே அசட்டை முகத்தினர் இந்த விசயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.