வழிகாட்டும் ஆளுமை – 15
திரு. நந்தகுமார் IRS
நல்லதைக் கேள், நல்லதைப் பார், நல்லதையே பேசு என்பார்கள். அதுபோல நல்லவற்றையே நாம் நுகர வேண்டும். மனிதனுக்கு இயல்பாகவே ஐந்து உணர்வுகள் உண்டு. அதில் இங்கு ஒரு முக்கியமான உணர்வைப் பற்றி பார்க்க இருக்கிறோம். ஒருமுறை என் நண்பனின் வீட்டிற்கு நான் சென்றிருந்த பொழுது என் நண்பனின் அம்மா “டீ சாப்பிடுறியா அல்லது காபி குடிக்கிறியா?” என்று கேட்டார்கள். “எதுனாலும் ஓகே அம்மா” என்றேன். நான் இங்கே குறிப்பிட வருவது சுவை உணர்வைப் பற்றி அல்ல. நான் என் நண்பன் அறையில் உட்கார்ந்திருந்தேன். என் நண்பனின் அம்மா சமையல் அறையில் காபி போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனடியாக இங்கிருந்து கேட்டேன் “என்னம்மா காப்பி தானே போடுறீங்க?” என்று.
அதற்கு அவர்கள் “எப்படி நீ கண்டுபிடித்தாய்” என்று கேட்டார்கள். “அந்த காப்பியின் வாசனை நன்றாக வருகிறதம்மா” என்றேன். “ஓ அப்படியா நல்லது” என்றார்கள்.
அதேபோல் ஒரு முறை ஹோட்டலுக்கு குடும்பமாகச் சென்றிருந்தேன். அப்போது என்னுடைய மகன் என்னிடம் “ஏன் அப்பா எப்போதும் நுரையுடன் காப்பியை ஆற்றிக் கொடுக்கிறார்கள்?” என்று கேட்டான். உங்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம். ஏனென்று நிறையப் பேருக்கு தெரியாது. ஏனென்றால் மிதக்கக் கூடிய நுரை என்பது வெடிக்கும் போது அந்த மனம் காற்றில் கலந்து, நமக்கு அந்த நுகர் உணர்வை நன்றாக கொடுக்கும். நிறைய உணவு இவ்வளவு சுவையாக இருப்பதற்கு காரணம் நுகர் உணர்வு தான்.
‘அடடா! என்ன பிரியாணி’ இது என்று அந்த பிரியாணியை மூக்கை மூடிக்கொண்டு சாப்பிட முடியுமா. பிரியாணி எந்த அளவிற்கு நன்றாக இருந்தாலும் அதனை வாயினால் தான் நாம் சுவைக்கப் போகிறோம். எனவே நுகர் உணர்வு என்பது மிக முக்கியமானது. இந்த நுகர் உணர்வு என்பது நம்மை அறியாமலே நம்முடைய சிந்தனைகளை அதன்படி வழிநடத்தும். வெற்றிக்கான பாதைக்கு இட்டுச்செல்லும் வழியை செம்மையாக்கும்.
நமக்கு சளிப் பிடிக்கும் போது சரியாக மூச்சு விட முடிவதில்லை என்பார்கள். அந்த நேரத்தில் அந்தளவுக்கு நமக்கு உணர்வுத் திறன் இருக்காது.
அந்த காலத்திலே நாம் நிறையப் பார்த்திருப்போம். நிறைய வாசனைத் திரவியங்கள் மூலமாக பல உணர்வுகளைத் தூண்ட முடிகின்றது. அது நம்முடைய மூளைக்கு ஒரு அமைதியை கொடுக்கக்கூடிய ஒரு திறனையும் பெற்றிருக்கிறது. அந்த காலத்திலேயே அறிந்து வைத்திருக்கிறார்கள். நம் வீட்டிலும் கூட அகர்பத்தி, சாம்பிராணி என்று பல வாசனை திரவியங்களை எல்லாம் போடுவோம். ரொம்ப நாள் வீடு மூடப்பட்டு இருந்த பிறகு திறந்து பார்த்தால் ஒரு மோசமான வாசனை வரும். அதேபோல வாசனை உணர்வு அல்லது நுகர் உணர்வு என்பது வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு விஷயம், பலர் நிறைய வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். ஒருவர் அணிந்து கொண்டு வந்த வாசனைத் திரவியங்களின் மூலமே அவர் யார் எப்படிப் பட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பல மேலை நாடுகளில் இந்த வாசனைத் திரவியங்கள் தான் அவர்களுடைய அந்தஸ்தையும் தீர்மானிக்கின்றது. கணவன்மார்கள் மல்லிகைப்பூ வாங்கி கொண்டு செல்வார்கள். அது நல்ல ஒரு புரிதலை அவர்களுக்கு இடையில் உருவாக்கும். ஒரு மிளகாயை நுகர்ந்து பாருங்கள் நிச்சயமாக ஒரு கோபமான உணர்வை அது உண்டாக்கும். மாறாக ஒரு பூவை முகர்ந்து பாருங்கள் நிச்சயமாக அது ஒரு நல்ல உணர்வை, மன அமைதியை உங்களுக்கு ஏற்படுத்தும்.
இந்த நுகர் உணர்வு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் நேர்காணல்களில் பலர் அழகாக, சீரான உடை அணிந்து வருவார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு மோசமான வாசனை அவரிடமிருந்து வருகிறது என்று சொன்னால் நிச்சயமாக அது தவறான எண்ணத்திற்கு அழைத்துச் செல்லும்.
‘நல்ல வாசனை’ நிறைய விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளவும், ஒரு உந்து சக்தியாகவும் இருக்கும். எனவே நீங்கள் இருக்கும் இடத்திலும் சரி, வீட்டிலும் அல்லது நீங்கள் இருக்கும் எல்லா இடங்களில் அனைத்திலும் எவ்வளவு நல்ல நுகர்வுணர்வை வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு மிகவும் முக்கியமான பல விஷயங்களை நாம் அடையாளம் காண்பதற்கும் இது உதவும். ஓரிடத்தில் நெருப்பு பற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் உடனடியாக நாம் அதனை உணர்ந்து கொள்ள முடியும். அதேபோன்று தான் நமக்கும் பல நல்லவை, கெட்டவைகளை அறிந்து கொள்வதற்கும், அவைகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும், இந்த நுகர் உணர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த நுகர் உணர்வு நிச்சயமாக நாம் சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், மேலும், பல நல்ல விஷயங்கள் மூலமாக பலவற்றை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். எனவே வாழ்க்கையில் இந்த நுகர் உணர்வை நல்வழியில் பயன்படுத்தி உங்களை, உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இந்த நுகர் உணர்வு ஒரு நல்ல ஆளுமை நாயகனாக உங்களை உருவாக்கும். வாழ்த்துகள்!!!