சமூகப் பார்வை – 24

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் 

ருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்” என்ற அர்த்தம் தொனிக்கும் பாடல் வரிகளை நாம் கேட்டிருக்கிறோம். கருணை என்பது என்ன?. பிறரின் துன்ப நிலை கண்டு வருந்தி, அதனை அகற்ற எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்குபவர் கருணையுள்ளவராகக் கருதப்படுகிறார்.

இது இரக்கம் மற்றும் அன்பின் வழிநிலைதான். கருணையினை இரக்கத்துக்கும் மேலாகக் கருதலாம். அதாவது, இரக்கப்படுதல் என்பதில் செயல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் கருணையில் செயலிருக்கவேண்டும். அதுவும் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.

பசியினால் வாடுகின்ற ஒரு மனிதனுக்கு உணவளித்தல், தாகத்தில் தவிப்பவனுக்குத் தண்ணீர் கொடுப்பது, வலியில் துடிப்பவனுக்கு மருந்து கொடுத்து உதவுதல், ஏழ்மையில் வாழ்பவனுக்கு உதவி செய்தல், அச்சத்தில் வாழ்பவருக்குத் தைரியம் கொடுப்பது, துன்பத்தில் வாடுபவர்களுக்கு ஆறுதலாய் இருத்தல். அடுத்தவர்களின் துன்பங்களில் உடனிருந்து உதவுதல் போன்றவை கருணை வடிவானதாக அறியப்படுகிறது. கருணை என்பது முக்கியமான பண்புகளில் ஒன்று.

இந்த சம்பவம் 1980களில் நடந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் என்ற முறையில் நான் அருகிலிருந்தேன். ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரிடம் தனது மூக்குக்கண்ணாடி உடைந்து விட்டது. அதனால் பாதைகூட சரியாகத் தெரியவில்லை. நடக்கவே சிரமப்படுகிறேன். புதுக் கண்ணாடி வாங்கப் பணம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.  ஏதும் கிடைக்கவில்லை என்றார். உடனே அருகிலிருந்த அமைச்சரை நோக்கி, அந்த மூதாட்டிக்குப் பணம் கொடுக்குமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

உடனே அந்த அமைச்சர் 500 ரூபாயோ, ஆயிரம் ரூபாயோ எடுத்து அந்த மூதாட்டியிடம் நீட்டினார். அந்தப் பணம் அந்த மூதாட்டியின் கையினை எட்டுமுன் எம்.ஜி.ஆர். அந்த பணத்தை வெடுக்கெனப் பறித்துக்கொண்டார். அருகிலிருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. அதிகப் பணம் கொடுப்பதாக எம்.ஜி.ஆர். கருதுகிறாரோ என்ற எண்ணமெல்லாம் எழுந்தது.

ஆனால், எம்.ஜி.ஆரோ, அந்த அமைச்சரிடம், “இப்படி ஒரே நோட்டாக (ரூபாய்) கொடுத்தால் இந்த மூதாட்டி எப்படி அதை மாற்றுவார்? யாராவது ஏமாற்றிவிடமாட்டார்களா? இந்த மூதாட்டியிடம் இந்த பணம் ஏது என சந்தேகப்படமாட்டார்களா?  அதனால் சில்லறையாக மாற்றிக் கொடுங்கள்” என்றார். ரூபாய் கொடுக்கச் சொன்னது இரக்கம் என்றால், அதன் பயன்பாடு சிரமமின்றி அவருக்குக் கிடைக்கவேண்டும் எனக் கருதியது கருணையின் பாற்பட்டதாகக் கருதலாம்.

இன்றைய தேவை

இன்றைக்குக் கருணை அனைத்துத் தளங்களிலும் தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட மூத்தோர், சிங்கிள் பேரன்ட், கைம்பெண்கள் போன்றோர் கருணைக்கு ஆட்பட்டவர்கள். இவர்களைத் தாண்டி உலக அளவில் கருணைக்குரியவர்கள் குறித்துப் பேசவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உலகத்தில் ஆங்காங்கே, நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், பலியாவோர் ஒருபுறம் இருக்கப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரை மட்டுமே சுமந்து அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக நுழைகின்றனர்.

சமீபத்திய ரஷ்யா – உக்ரேன் போர் சூழலில் உக்ரேன் நாட்டை விட்டு தனது குழந்தைகளோடு வெளியேறியவர்கள் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர். இவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்புத் தெரிவித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வு பிரச்சனையாக இது பார்க்கப்படுகிறது. முன்பின் தெரியாத இந்த மக்களைக் கருணையோடு அண்டை நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. நம் தமிழகமும் அகதிகள் வருகையை எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இலங்கையிலிருந்து தமிழர்கள் சட்டவிரோதமாகக் கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்துப் படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் துவங்கி உள்ளனர். அகதிகளுக்கு உரிமைகள் அளிப்பது தொடர்பான ஐ.நா.வின் உடன்படிக்கையில் இன்று வரை இந்தியா கையொப்பம் இடவில்லை. அகதிகளாக வருபவர்களிடம் கருணை காட்டவேண்டியது நமது கடமை.

அடுத்து, ஏழ்மை மற்றும் பட்டினியால் வாடுகிறவர்கள் நம் கருணைக்கு உட்பட்டவர்கள். உலக அளவில் நிலவும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, `உலகப் பட்டினிக் குறியீடு பட்டியலை’ (குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்) அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்’ அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த `வேல்ர்ட் ஹங்கர் ஹில்ஃப்’ என்ற அமைப்பும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான (2022) 121 நாடுகள் அடங்கிய உலகப் பசி குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 107ஆவது இடத்திலுள்ளது. இந்தியாவில் பசியுடன் தூங்கச் செல்பவர்கள் பலகோடி பேர். சில நாட்களுக்கு முன் வந்து போன தீபாவளிக்கு நாம் வீணாக்கிய உணவுப் பொருட்களை யோசித்துப் பாருங்கள். கருணையுடன் அதனை அருகிலுள்ள ஒரு சிலருக்கு வழங்கியிருக்கலாமே?

“ஒவ்வொரு தனி மனிதனும் சகமனிதனின் வறுமையைப் போக்கத் தீவிரமான கருணையுடன் பணியாற்ற வேண்டும்” என்றே காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையரிடமிருந்து விடுதலை என்பதைவிடப் பசியிடமிருந்து விடுதலை என்பதே காந்தியடிகளின் முழக்கமாக இருந்தது. “வன்முறையின் மிக மோசமான வடிவமே வறுமை” என்றார் காந்திஜி.

பழங்குடி மக்களின் நிலை

கண்டுகொள்ளப்படாதவர்கள் மீது கருணை கொள்ளுதல் அவசியம். குறிப்பாக இன்றைக்குப் பழங்குடிமக்களின் தேவை குறித்து பலர் அறியவில்லை. அல்லது அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடி மக்களுக்கு ரேஷன்கார்டு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள்கூட கிடைக்கவில்லை. பழங்குடி மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகத்தில் ஒரு சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவர்களின் மக்கள் தொகை 1 சதவிகிதத்துக்கும் குறைவு. ஆறு மாவட்டங்களில் 1முதல் 2 சதவிகித பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். பழங்குடிகள் செறிவாக வசிக்கும் மாவட்டங்கள் எனில், தருமபுரி (4.2%), நீலகிரி (4.5%), திருவண்ணாமலை (3.7%), சேலம் (3.4%), விழுப்புரம் (2.2%), வேலூர் (1.9%) ஆகியவையே.  ஏன் இந்தப் புள்ளிவிவரப் பரிசீலனை எனில், 575 பேர் வாழும் கரூர் மாவட்டத்தில் படிக்கும் பழங்குடி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ஒரு சதவிகிதம். பழங்குடியினர் 4%க்கு மேல் இருக்கும் தருமபுரி, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கும் அதே ஒரு சதவிகித ஒதுக்கீடுதான்.

பழங்குடிகள் அதிகமாக வாழும் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு போதுமான அளவுக்கு இல்லை. அந்த மாவட்ட கல்வி நிலையங்களில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக வேறு மாவட்டத்திற்கு செல்லவும் பழங்குடியினர் தயங்குகிறார்கள். அப்படிச் செல்வதற்கான வசதியற்றவர்கள் அவர்கள். இதற்கு எளிய மாற்றாக உயர் கல்விச் சேர்க்கை இட ஒதுக்கீட்டை மாவட்டம் அல்லது மண்டல வாரியாக மறுபங்கீடு செய்யலாம். பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் அவஸ்தை, பட்டியல் இனத்தவரில் அருந்ததியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம் ஆகியோருக்கும் உள்ளது. இதனையும் கருணையுடன் அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

நம்பிக்கை தரும்..

கருணை காட்டும்போது, அவர்கள் மனதில் நம்பிக்கை பிறக்கிறது, ஆறுதல் ஏற்படுகிறது. நம்மீது மற்றவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும்போது, இதயத்தில் நன்றியுடன் தைரியமும் எழுகிறது. அதேபோல, கருணை காட்டுதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது என்றாலும் கருணை காண்பிப்பவரும் பயனடைகிறார். காரியாசான் என்பவர் எழுதிய சிறுபஞ்சமூலம் என்ற தமிழ் இலக்கிய நூலில் அவர்..

“நாண் எளிது, பெண்ணேல்;
நகை எளிது, நட்டானேல்;
ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;-
கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது
அம்பு பறத்தல் அரிது.”

என்கிறார். அதாவது, பெண்ணாயின் நாணுதல் எளிது. ஒருவனோடு நட்பு கொண்டால் சிரிப்பது எளிது. சேவகனாயில் வலிமை எளிது. பெரியாராயின் பிறரைப் பேணுதல் எளிது. ஆனால் கருணையுடையவன் மேல் அம்பு எய்தல் என்பது அரிது என்கிறார். கருணை கேடயமாகிறது. உயிரைக் காப்பாற்றும் கருவியாகிறது.

‘‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை’’ வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (245). “கருணையுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்” என்கிறார் வள்ளுவர்.

இந்த உலகத்தில் எல்லா விழுமியங்களிலும் கருணை என்பது முதல் நிலை பெறுகிறது. கருணை ஒரு மனிதனின் உள்ளத்தில் இருக்குமானால் அவனிடத்து எல்லா உயர்ந்த குணங்களும் தானாகவே வந்து சேரும். கருணை உள்ள மனிதர் உயர்ந்த நிலையினை அடைவார்.

“கடவுளுடைய அளவற்ற கருணையால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரணமடைந்தார். அதனால், அவருக்கு ‘மகிமையும் மாண்பும் கிரீடமாகச் சூட்டப்பட்டிருக்கிறது’ என்று புனித  பவுல் சொன்னார். ‘‘ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.. அன்பு, நன்றி, கருணை உள்ளவன் மனித வடிவில் தெய்வம்” என்றார் கவியரசு கண்ணதாசன். கருணைக்கான ஆழ்ந்த அர்த்தத்தைத் தருபவை இவை.

கருணை காட்டுபவர் அன்பான வார்த்தைகளாலும், செயல்களாலும் அதைக் காட்ட வேண்டும். வெறுமனே சாந்தமாக நடந்துகொள்வதும், மரியாதை காட்டுவதும் கருணை அல்ல. உண்மையான கருணை, ஆழமான அன்பிலிருந்தும் அனுதாபத்திலிருந்தும் பிறக்கிறது.

உலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலக கருணை தினம் என்பது ஒரு புதிய வழக்கத்தை உருவாக்கத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த நாள் எனலாம். அதாவது இரக்கம், சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களை உள்ளடக்கியது இந்நாள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை முன்வைத்து இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் உலக கருணை தினத்தின் கருப்பொருள் “முடிந்த போதெல்லாம் கருணையோடு இருங்கள்.” என்பதாகும். அன்றாட வாழ்வில் கருணை மற்றும் இரக்கத்தைக் கடைப்பிடிக்கத் தனிமனிதனின் பொறுப்புணர்வை இது தூண்டுகிறது. “வாடிய பயிரைக் காணும் போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். கருணையின் உச்சமிது. இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட சக மனிதர்கள் மீது கருணை உள்ளவர்களாக இருப்போம். கருணை இருக்கும் இதயமே கடவுளின் இல்லம்..