முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 21

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்

இந்தியா சுதந்திரமடைந்த 1947-ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை எதிர்ெகாண்ட தேசமாக நம் நாடு திகழ்ந்தது. தேசப் பிரிவினை, உள்நாட்டுப் போருக்கு இணையான மதக் கலவரங்கள், அகதிகள் பிரச்சினை, பெரும்பாலும் எழுத்தறிவில்லாத, பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்கள், நிலச் சீரமைப்பு, ஜமீன்தார் முறை ஒழிப்பு, சிற்றரசர்கள் அதிகாரம் நீக்குதல், கல்விச் சீரமைப்பு, விவசாயம், தொழில் கட்டமைப்புகளில் பின்தங்கிய நிைல என்று நீண்டு செல்லும் ஒரு மாபெரும் இக்கட்டான சூழ்நிலையில் தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திய தேசத்தின் முதல் பிரதமராகப் பதவியேற்றார்.

“முப்பது கோடி முகமடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்- எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’’ என்று பாரதி பாடியிருந்தாலும், சிந்தனையில் ஒன்றுபட்ட தேசம் அன்று இல்லை. பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு மாபெரும் மக்கள் தொகை கொண்ட மற்றும் பல பிரிவினைகள் கொண்ட மாபெரும் தேசம் உலகில் இந்தியா மட்டுமே இருந்திருக்க முடியும்.

எல்லா நிலையிலும், எல்லாத் துறையிலும் பின்தங்கிக் கிடந்த ஒரு தேசத்தை, ஒவ்வொரு நாளும், பதினெட்டு மணிநேரம் உழைத்துக் கட்டமைக்க விளைந்த தலைவர் தான் நேரு. வேறுபாடுகளால் நிறைந்து காணப்பட்ட ஒரு நாட்டை, ஒற்றுமைப்படுத்தி, உலகளவில் உயர்த்திக் காட்டிய மிகப்பெரிய சாதனைக்குச் சொந்தமானவர் நமது முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றால், அது மிகையல்ல.

பிறப்பும் இளமையும்

அலகாபாத் நகரில் 1889-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 14-ஆம் தேதி, மோதிலால் நேரு, சொரூபராணி தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தவர்தான் ஜவஹர்லால் நேரு. ‘ஜவஹர்’ என்றால் ‘ரத்தினம்’ என்று பொருள். பின்னாளில் அவர் வைரமாக ஒளி வீசுவார் என்ற அளவில் அப்படிப் பெயர் வைத்தார்கள் பெரியவர்கள்.

மோதிலால் நேரு சிறந்த வழக்கறிஞராகவும், மிகுந்த சமூக அந்தஸ்து பெற்றவராகவும் திகழ்ந்தார். தன் செல்வாக்கால் ‘ஆனந்த பவனம்’ என்ற அழகிய மாளிகையைக் கட்டித் தன் அன்புப் பிள்ளைகளை வளர்த்து வந்தார்.

வீட்டிலிருந்த படியே பள்ளிக் கல்வியைப் பெற்றார் ஜவஹர்லால் நேரு. ப்ரூக்ஸ் என்ற ஆங்கிலேயே ஆசிரியர் நேருவின் கல்விக்காக ஆனந்த பவனிலேயே தங்கிக் கல்வி போதித்தார். மோதிலால் நேருவின் நண்பரான முபாரக் அலி ஜவஹரின் சிறு வயதில் இலக்கியம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைக் கற்றுத் தந்தார். சார்லஸ் டிக்கன்ஸ், ஏ.ஜி. வெல்ஸ், மார்க் ட்வைன், ருட்டார்ட் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்து ஜவஹரை வாசிக்கச் செய்தவர் முபாரக் அலி தான்.

பள்ளிக் கல்வியை முடித்த ஜவஹர்லால் நேரு இங்கிலாந்துக்கு அழைத்துச் ெசல்லப்பட்டு ஹாரோ பொதுப் பள்ளியில் உயர்கல்வி பயின்றார். இங்கு பல புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தையும், மேலாக சிந்திக்கும் பழக்கத்தையும் பெற்றார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்லூரிப் படிப்பை முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணா என்னும் தன் இரண்டு தங்கைகள் சூழ்ந்த ஆனந்த பவனத்தில் வாழ்க்கை மகிழ்வாகச் சென்றது.

இச்சூழலில் மோதிலால் நேரு காந்தியடிகளின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்வதை ஆதரித்து வந்தார். ஜவஹருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வந்தது. மோதிலால் நேரு மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்து, ஆங்கிலேயரை வெல்ல வேண்டும் என்று எண்ணினார். ஜவஹரோ, தீவிரவாதப் போக்கைக் கைக்கொண்டால் மட்டுமே தேசம் விடுதலை பெறும் என்று தீவிரம் காட்டிப் பேசினார்.

தன் மகன் மிகத் தீவிரமாகப் போராட்டத்தில் இறங்கிவிட்டால் அவனது வாழ்வு கடினமாகிவிடும் என்று மோதிலால் நேரு பயந்தார். எனவே, காந்தியிடம் ஜவஹரை தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபடச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். காந்தியடிகளும் ஆரம்பத்தில் இந்த அறிவுரையை ஜவஹருக்குச் சொன்னார்.

போராட்டக் களத்தில்…

ஆனால், காலங்கள் சென்ற போது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்பு மோதிலால் நேருவும் ஆங்கியேருக்கு எதிராகப் போராடத் தீவிரமானார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட அதிகத் துணிவும், தீரமும் கொண்டு முனைந்த தன் மகன் ஜவஹரை ஒரு காலக்கட்டத்துக்கு மேல் மோதிலால் நேரு தடுக்கவில்லை. தன் மகனும் போராடி இந்தத் தேசம் வெல்லட்டும் என்று ஊக்கமளித்தார்.

1916-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாளன்று கமலா அம்மையாரை மணந்தார் ஜவஹர். ஒருமுறை அமர்நாத் கோயிலுக்குச் சென்ற போது பனிச்சறுக்குகளில் சிக்கி விழுந்துவிட்டார் ஜவஹர். ஆனால் இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிற்றால் தப்பித்தார். இளம் வயது முதலே, குதிரைச் சவாரி செய்வதிலும், நீச்சல் அடிப்பதிலும் ஜவஹருக்கு விருப்பம் இருந்தது. இதற்கான பயிற்சிகளையும் பெற்றிருந்தார். ஆயினும் அவ்வப்போது சில ஆபத்துகளைச் சந்தித்துக் காப்பாற்றப்பட்டார். இந்த நிகழ்வுகள் எல்லாம் இளம் வயது முதலே அவரது துணிவையும் ஆர்வத்தையும் நமக்குச் சொல்லுகின்றது.

வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட ஜவஹர் ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றார். அப்போது துப்பாக்கியால் சுட்ட போது ஒரு மான் அந்தக் குண்டால் அடிபட்டு கண்ணீர் வடித்துத் துடித்தது. இதனைக் கண்ட ஜவஹர் வேட்டையாடுவதையும், துப்பாக்கி எடுப்பதையும் நிறுத்தினார்.

1915-ஆம் ஆண்டு அலகாபாத்தில் சாப்ரூ தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு சுருக்கமாகப் பேசினார் ஜவஹர். இதுவே, அவரது முதல் மேடைப் பேச்சாகும். அனைவரும் பாராட்டினர். பின்பு 1916-இல் லட்சுமணபுரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். 1919-ஆம் ஆண்டு ஏப்ரல், ஆறாம் நாள் இந்தியாவெங்கும் கடையடைப்பு நடத்தி சத்தியாகிரகம் நடத்திட காந்தி அழைத்தார். அப்போது வந்த ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டமாகவும் இது அமைந்தது. அச்சமயத்தில் மோதிலால் நேரு, ஆங்கில ஆட்சியை எதிர்க்கும் வண்ணம் ‘சுயராஜ்யம்’ என்ற இதழைத் தொடங்கினார். அதன் நிர்வாகிகளில் ஒருவராக ஜவஹரும் திகழ்ந்தார்.

1921-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்ததை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி நடந்தது. இக்கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக மோதிலால் நேருவும், ஜவஹரும் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜவஹர் அனுபவித்த முதல் சிறைத் தண்டனை இதுவாக அமைந்தது.

ஜவஹர் கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்களிடம் பேசினார். அவர்களது அறியாமை பற்றி எடுத்துரைத்தார். இக்காலங்களில் மிகச்சிறந்த பேச்சாளராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒரு அறியப்படும் நபராகவும் வளர்ந்திருந்தார். இச்சூழலில் அலகாபாத் நகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. நகராட்சித் தலைவராக ஜவஹர் முன்மொழியப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்தார். இதுவே, ஒரு நிர்வாகியாகத் தன்னை அவர் வெளிக்காட்டிய முதல் பொறுப்பாகும்.

தொடர்ந்து 1923-ஆம் ஆண்டு மாகாண காங்கிரஸ் மாநாடு ஜவஹரின் தலைமையில் நடந்தது. பத்திரிகைகள், செய்தித்தாள்களில் விடுதலையின் முக்கியத்துவம் பற்றி நீண்ட கட்டுரைகளை இக்காலக்கட்டத்தில் எழுதி வந்தார் ஜவஹர்.

1927-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் பத்தாவது ஆண்டு விழாவிலும் தன் குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்தக் கூட்டங்களில் பெற்றுக்கொண்ட கருத்துகள், ஜவஹருக்கு ஜனநாயகத்தின் வேர்களைக் காட்டி நெறிப்படுத்தியது.

1928-ஆம் ஆண்டு மோதிலால் நேரு தலைமையில், கொல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. ‘பூரண சுதந்திரமே நமது மூச்சு’ என்று முழங்கினார் மோதிலால் நேரு. தொடர்ந்து 1929-ஆம் ஆண்டில் லாகூரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்குத் தலைவராக ஜவஹர்லால் நேருவைக் காந்தி முன்மொழிந்தார். தொடர்ந்து 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியா சுதந்திரம் பெற்ற நாளாகக் கொண்டாடும்படி காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை இந்திய தேசமெங்கும் மக்கள் ஆவலோடு ஏற்றுக்கொண்டாடினர். இது ஆங்கில அரசுக்கு அச்சம் தந்தது. பின்னாளில் இதன் காரணமாகத் தான் ஜனவரி 26-ஆம் தேதி நமது தேசத்தின் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது.

இக்காலத்தில் காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தை தண்டி நோக்கி யாத்திரையாகத் தொடங்கினார். இது நாடெங்கும் கலவரத்தை உருவாக்கியது. இதனால் ஜவஹர் நைனியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மோதிலால் நேரு, சொரூப ராணி, கமலா நேரு மற்றும் ஜவஹரின் தங்கை கிருஷ்ணா என்று எல்லோரும் சிறை சென்றனர். 1931-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று காந்திஜி, ஜவஹர், கமலா நேரு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம், 1931-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்காற்றிய ஜவஹரின் தந்தை மோதிலால் நேரு மரணமடைந்தார். நாடே அஞ்சலி செலுத்திக் கண்ணீர் வடித்தது.

காந்திஜி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதனால் ஜவஹர்லால் நேரு மீண்டும் கைது செய்யப்பட்டார். அதேசமயம் தாய் சொரூப ராணியும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்றார். அப்போது ஏற்பட்ட தடியடியில் மண்டை உடைந்து, தலையில் கட்டுடன் ஜவஹரைப் பார்க்க நைனியில் சிறைக்கு வந்தார் சொரூப ராணி. இக்காலத்தில் கமலா நேருவின் உடல்நலமும் மோசமடைந்தது. 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமலா நேரு மரணமடைந்தார். தொடர்ந்து போராட்டம், சிறை வாழ்வு என்று ஜவஹர்லால் நேருவின் சுதந்திரத் தாகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

1938-இல் தாய் சொரூபராணியார் மரணமடைய, ஆனந்த பவனில் மகள் இந்திராவுடன் தனித்துவிடப்பட்டார் ஜவஹர்லால் நேரு. விடுதலைப் போராட்டத்தில் தந்தை, தாய், மனைவியை இழந்த ஜவஹர்லால் நேரு மனத்துணிவுடன் தன் பயணத்தைத் ெதாடர்ந்தார். 1942-ஆம் ஆண்டு மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கும், ஃபெரோஸ் காந்திக்கும் திருமணம் நடைபெற்றது. ராஜீவ்காந்தி, சஞ்சய் காந்தி என்ற இரண்டு பேரப் பிள்ளைகளைப் பெற்றார் நேரு.

பலமுறை காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணி செய்தார் ஜவஹர்லால் நேரு. மூன்றாவது முறை தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்ற வேளையில், பத்திரிகைகளில் ‘சாணக்கியன்’ என்ற பெயரில் ஒரு விமர்சனம் வந்திருந்தது.

அந்த விமர்சனத்தில் நேரு பதவி வெறி பிடித்தவர்; தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருக்கத் தகுதியில்லாதவர் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. இந்த விமர்சனத்தைக் கண்டு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கொதித்து எழுந்தனர். ஜவஹர்லால் நேரு மீண்டும் தலைவராக வரத் தகுதியுள்ளவர் என்றும், அவரை விமர்சித்த ‘சாணக்கியன்’ வெளிப்படையாகத் தன்னை யார் என்று தெரிவிக்க வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தது. அந்த விமர்சனத்தை புறக்கணித்து ஜவஹர்லால் நேரு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு தான் அந்த ‘சாணக்கியன்’ என்ற பெயரில் எழுதியவர் ஜவஹர் தான் என்றும், மற்றவர்கள் மன நிலைமை அறிந்து கொள்ள அவர் இந்தச் செயல் செய்தார் என்பதும் தெரிய வந்தது.

1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காந்திஜி தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி ‘வெள்ளையனே வெளிேயறு’ முழக்கம் இந்தியாவெங்கும் ஒலித்தது. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஜவஹர்லால் நேருவும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஆயிரம் நாட்கள், அதாவது ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அச்சமயம் தான் தனது உலகப் புகழ்பெற்ற ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’  என்ற நூலை ஜவஹர் எழுதினார். இவ்வாறு விடுதலைப் போரில் ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒப்பற்ற தலைவர் ஜவஹர்லால் நேரு.

பிறகு 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்குச் சுதந்திரம் தர கொள்கையளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. அதன் ஒரு விளைவாக 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் நாள், இந்தியாவில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசியல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். தொடர்ந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற பாரதத்தின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.

ஜனநாயகமும், சட்டமும்

சுதந்திர தேசத்தை மக்களால் ேதர்வு செய்யப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல்வேறு சட்ட, திட்டங்களைக் கொண்டு வந்தார் நேரு. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, தேசத்தின் முதல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆங்கிலேயர் காலத்தில் ‘வைஸ்ராய்’ என்ற தலைைம ஆட்சியர் இருந்த மாளிகை குடியரசுத் தலைவர் மாளிகை ஆனது. ஆங்கிலேயர் காலத்தில் வைஸ்ராய்க்கு அடுத்த அதிகாரம் இராணுவத் தலைமைத் தளபதிக்கு இருந்தது. அவரது இல்லம் தீன்மூர்த்தி பவன் பகுதியில் இருந்தது. இதனைப் பிரதமர் இல்லமாக மாற்றினார் நேரு. காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு அமைப்பவர்கள், ஜனநாயக நாட்டில் வலுவாக ஆட்சி செய்யும் அதிகாரம் பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஒரு மிகச்சிறந்த முடிவாகும். இராணுவத்தின் அதிகாரம் ஓங்கும் போது, அது மக்களாட்சிக்கு எதிராகவும் எதிர்காலத்தில் திரும்பி விடலாம் என்பதால் ஆட்சி செய்பவர்கள் கட்டுப்பாட்டில் இராணுவத்தைக் கொண்டுவர இந்த முடிவு தேவைப்பட்டது.

1951 – சுரங்கங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கனிம வளங்கள் அரசுடைமையானது.

1952 தேசிய வனக்கொள்கை வெளியிடப்பட்டதன் மூலம் அரசு காடுகளின் மீது தன் ஆதிக்கத்தைப் பெற்றது.

1953 –- தீண்டாமைக் குற்றச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் தீண்டாமை கொடுமை களையப்பட வழி கிடைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை அதிகரித்தது.

1954 – சாதி மறுப்புத் திருமணச் சட்டம் மற்றும் விவாகரத்துப் பெறும் உரிமைச் சட்டம் வந்தது.

1955 – குடியுரிமை மசோதா மற்றும் இந்து திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒருவருக்கு ஒரு மனைவி/கணவன் என்பது சட்டமாக்கப்பட்டது. திருமண வயது கட்டாயமாக்கப்பட்டதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது.

1956 – பெண்கள் கடத்தப்படுதலைத் தடுத்தல், மற்றும் விபச்சாரத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1956 – காலிப் பணியிடங்களைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்ற சட்டம் மூலம் தொழிலாளர் பணியுரிமை காக்கப்பட்டது.

1960 – தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது.

1961 – பெண்களுக்கு மகப்பேறு விடுப்புப் பெற சட்டம், தேயிலை, காபி தோட்டப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புச் சட்டம், வரதட்சணைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டது.

1956-இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் மூலம், பெண்கள், தாய், விதவை, மனைவி என்று அனைவருக்கும் சொத்தில் உரிமையுண்டு என்ற சட்டம் அமலாக்கப்பட்டது.

இப்படி மக்கள் நலன் சார்ந்த, மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க வழி செய்யும் பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

கோவா, புதுச்சேரி, இமாச்சாலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா மாநிலங்கள் உருவாகின. பரந்த தேசத்தை தனது சிறப்பான ஆளுகையால் பொலிவு பெற வைத்தார் ஜவஹர்லால் நேரு.

விவசாயமும், தொழிலும்

விவசாயமும், தொழிலும் மிகவும் பின்தங்கி வறுமைப்பிடியில் தவித்த சூழலில் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஏழை நாடுகளில் ஒன்றாகத் தான் அன்று விளங்கியது. எனவே, ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்து அணைகள் பலவற்றைக் கட்டியதோடு, தொழிற் கொள்கைகளை மாற்றியமைத்து, பல புதிய தொழிற்சாலைகள் கட்டமைக்கப்பட வழிகாட்டியவர் ஜவஹர்லால் நேரு ஆவார். ஆகவே தான் அவரை ‘நவ இந்தியாவின் சிற்பி’ என்று அழைத்தார்கள்.

1957-ஆம் ஆண்டு மத்திய பொருள் கிடங்குக் கழகம் கொண்டுவரப்பட்டதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் பாதுகாப்பது தொடங்கியது.

1964-ஆம் ஆண்டு இந்திய உணவுக்கழகமும் இதன் தொடர்ச்சியாக உருவானது.

அமெரிக்காவிலுள்ள டென்னசி பள்ளத்தாக்கு போல 1948-இல் தாமோதார் பள்ளத்தாக்கு கழகம் உருவாக்கப்ப்டடது. வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க ஹிராகுட் அணை உருவாக்கப்பட்டது. 1954-இல் உலகின் மிகப்பெரிய பக்ராநங்கல் கால்வாய் கட்டமைப்பை நேரு தொடங்கி வைத்தார். அப்போது அவர், “அணைகள் வழிபட வேண்டிய ஆலயங்கள்” என்று அணைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னார். 1955-இல் தாமோதார் பள்ளத்தாக்கின் திட்டமான கொணார் அணையை நேரு திறந்து வைத்தார்.

1960-ஆம் ஆண்டு கிருஷ்ணா நதி மீது நாகர்ஜூனா சாகர் அணை, 1963-இல் ரிஹந்த அணை ஆகியன குறிப்பிடத்தக்கதாகும். 1960-இல் சிந்து நதி நீர் ஒப்பந்தம், மிகப்பெரிய நீர்பாசனத் திட்டமாக அமைந்தது. 1963-இல் 740 அடி உயர பக்ராநங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் நேரு.

1948 – ஆம் ஆண்டு தொலைபேசிச் சாதனங்களைத் தயாரிக்க இந்திய தொலைபேசித் தொழிலகம் பெங்களூருவில் அமைக்கப்பட்டது. ஒரிசாவில் டால்மியா சிமெண்ட் ஆலை அமைந்தது.

1950 – இல் சித்தரஞ்சன் இரயில் எஞ்ஜின் தொழிற்சாலை.

1950 – இல் இந்தியாவின் முதல் பொதுத்துறைக் கப்பல் கழகம் உருவாக்கப்பட்டது. கடல் போக்கு வரத்து மூலம் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

1951 – தொழில் வளர்ச்சி ஒழுங்குமுறைச் சட்டம் அமலானது.

1952 – இல் சென்னை, பெரம்பூரில் ஒருங்கி ணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலை அமைந்தது.

1952 – சிந்திரி உரத் தொழிற்சாலை.

1953 – ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் ஆலை உருவாக்கப்பட்டு பல தொழிற்சாதனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டது.

1955 – இந்திய இரும்பு எஃகு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மேலும் மத்திய பிரதேசம் நேபா நகரில் முதல் பத்திரிகை காகித ஆலை தொடங்கப்பட்டது.

1956 – இல் போபாலில் பாரத மிகு மின்நிலையம் (BHEL) இலண்டன் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

1958 – இல் கனரகப் பொறியியல் கழகம்.

1959 – இல் ரூர்கேலா, பிலாய், துர்காபூரில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடங்கப்பட்டது. இந்திய எண்ணெய் கழகம் (IOC) தொடங்கப்பட்டது.

1960-இல் ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்ப்டடது. 1962-இல் கோலார் தங்கச் சுருங்கம் அரசுடைமையானது. கொச்சினில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்று புதிய பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இந்திய அரசால் ெதாடங்கப்பட்டு, தொழில் முன்னேற்றம் வலுப்பெற்றது.

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த இந்திய தேசத்தைப் புணரமைக்கும் முயற்சியில் நேரு இறங்கினார். கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் என்று ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது.

பஞ்சாப், இராஜஸ்தான், குஜராத், பீஹார், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு (University Grant Commission – UGC) என்ற உயர்கல்வி வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது.

1955-ஆம் ஆண்டு இடைநிலைக் கல்விக்கான குழு அமைக்கப்பட்டு, கிராமங்கள் தோறும் பள்ளிக் கட்டமைப்பை வளர்க்க ஆவணம் செய்யப்பட்டது. இதே ஆண்டில் சர்தார் படேல் மற்றும் ஜாதப்பூர் பல்கலைக்கழகங்கள் ெதாடங்கப்பட்டன.

இந்தியக் கல்வி வரலாற்றில் மைல் கல்லாக 1958-ஆம் ஆண்டு மும்பையில் முதல் இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology – IIT) தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1959-இல் சென்னை கிண்டியில் ஐ.ஐ.டி. தொடங்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டு கான்பூரிலும், 1961-ஆம் ஆண்டு டில்லியிலும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் தொடங்கப்பட்டது. இன்று இந்திய தேசத்தின் முதல் தரமான கல்வி நிறுவனங்களாக இவை தொடர, வழிகாட்டி அடித்தளம் இட்டவர் ஜவஹர்லால் நேரு என்பது முக்கியமான வரலாற்றுச் சாதனையாகும்.பார்வையற்றோருக்கான தேசிய நூலகம் 1963-இல் டேராடூனில் அமைக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு பிலானியில் பிர்லா ெதாழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம் உருவானது.

1947-இல் மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் கொல்கத்தாவில் அமைக்கப்ப்டடது.

1950-இல் புனேயில், தேசிய வேதியியல் ஆய்வகம் திறக்கப்பட்டது. ஆய்வுப் பணிகளுக்கு இது மிகப்பெரிய அடித்தளமானது.

1952 – புதுடெல்லியில் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், 1953-இல் ரூர்க்கியில் மத்திய கட்டட ஆராய்ச்சிக் கழகம் அமைந்தது

1954-இல் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், 1956-இல் டிராம்பேயில் ஆசியாவின் முதல் அணு உலையகம், 1957-இல் பாபா அணு ஆராய்ச்சி நிலையம், 1960-இல் கனடா – இந்திய அணுஉலை மின் உற்பத்தித் தொடக்கம், 1963-இல் தும்பா ஏவுதளத்திலிருந்து முதல் ராக்கெட் பயணம் தொடங்கியது என்று கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டவர் ஜவஹர்லால் நேரு.

சமூக மற்றும் பொதுநலம்

1947-ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம், தொழிற்சாலை சட்டம், பணிநேர வரையறை என்று விரிவான வழிகாட்டுதல்கள் மூலம் பல கோடித் தொழிலாளர்களுக்கு நல்வழி காட்டினார் நேரு. 1956-ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தேசிய மயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1953-இல் விமானப் போக்குவரத்து வசதிக்காக ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் தொடங்கப்பட்டன. இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டு கப்பல்கள் கட்டப்பட்டன.

அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று அயராது உழைத்தவர் நேரு. இதனால் உலக நாடுகள் நேருவை மிகவும் மதித்துப் போற்றின. மனிதருள் மாணிக்கம், சமாதானப் புறா என்றெல்லாம் அழைக்கப்பட்டு மக்கள் மனதில் இடம்பெற்றார் நேரு. குழந்தைகளை அதிகம் நேசித்ததால் குழந்தைகள் அவரை “நேரு மாமா” என்று அன்போடு அழைத்தனர். ஆகவே தான், அவரது பிறந்த நாளான நவம்பர்-14, குழந்தைகள் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது.

இன்று நாம் காணும் இந்திய வளர்ச்சிக்கும், கல்விக்கும்  அடித்தளம் அமைத்தவர் நேரு. பன்முகம் கொண்ட ஒரு தேசத்தில், ஜனநாயகத்தை வளர்த்து, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில், மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியவர். நசுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என்று ஒவ்வொருவரும் தத்தமது உரிமைகளைப் ெபற்றிட, பாதுகாப்பை அடைந்திட வழிவகுத்தவர் ஜவஹர்லால் நேரு.

நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT’s), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIM) மற்றும்  தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT’s) இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது. இவற்றின் தொடக்கமே, இன்று இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமானது. அடிப்படைக் கல்வியை ஊக்கமூட்டிட, மதிய உணவுத் திட்டத்தை நேரு கொண்டு வந்தார். இந்தச் சத்துணவுத் திட்டம், இலவசப் பால் ஆகியவை ஊட்டச்சத்துள்ள குழந்தைகளை தேசத்துக்கு உருவாக்கியது. சரியான உணவின்றி, கல்வியின்றி தத்தளித்த குழந்தைகளைக் கண்டபோது கண்ணீர் வடித்தார் நேரு. அதற்கு விடிவு காணவே கல்வியகங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்.

தேச விடுதலைக்குப் பாடுபட்ட அண்ணல் காந்திக்கு அடுத்த நிலையில், இன்னும் சொல்லப்போனால் அவருடைய அன்பில் அடுத்தவராக வழிகாட்டப்பட்ட பண்டிட் ஜவஹர்லால் நேரு இன்றைய பாரத தேசத்தின் சிற்பி. அவரால் வடிவமைக்கப்பட்ட இந்திய தேசம் நமக்கெல்லாம் வாழ்வு தருகின்றது. இந்திய தேச வளர்ச்சிக்குக் காரணமான பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்திய தேசம் உள்ளவரை மதிப்பு மிக்க தலைவராக, தேசத்தை வளர்த்த பிதாமகனாக, ஜனநாயகத்துக்கு அடிநாதமிட்ட மரியாதைக்கு உரியவராக என்றும் மக்கள் மனதில் வாழ்கிறார், வாழ்ந்திடுவார். =

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

  • குடியுரிமை என்பது நாட்டின் சேவையில் அடங்கியுள்ளது.
  • மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட, நாம் உண்மையில் என்னவாக இருக்கிறோம் என்பது முக்கியமானதாகும்.
  • ஜனநாயகமும், பொதுவுடைமைத்தனமும் தீர்விற்கான வழிமுறைகள்.
  • வாழ்க்கையில் பயத்தைப் போன்ற மோசமான ஆபத்து எதுவும் இல்லை.
  • நல்ல தார்மீக நிலையில் இருப்பதற்கு, நல்ல உடல் நிலையில் இருப்பதற்கு, குறைந்தபட்சம் பயிற்சி தேவை.
  • ஒரு முதலாளித்துவ சமூகத்தில் உள்ள சக்திகள், கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவுமே இருப்பார்கள்.
  • நெருக்கடிகள் மற்றும் முட்டுக்கட்டைகள் நிகழும் போது, அவை ஒரு குறைந்தபட்ச நன்மையையாவது கொண்டுள்ளன. அதாவது, நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
  • ஒரு பெரிய செயலில் காட்டப்படும் நம்பிக்கை மற்றும் திறமையான வேலை, உடனடியாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், இறுதியில் பயனைத் தரும்.
  • கொஞ்சம் அடக்கமாக இருப்போம், உண்மை ஒருவேளை, நம்மிடம் முழுமையாக இருக்காது என்பதையும் நினைப்போம்.
  • செயல், அது சரியான செயல் என்று நான் உறுதியாக நம்பும் வரை, எனக்கு திருப்தி ஏற்படுகின்றது.
  • வாழ்க்கை சீட்டாட்டம் போன்றது, நீங்கள் கையாளும் விதம் மற்றும் விளையாடும் விதத்தைப் பொறுத்து அது சுதந்திரமானது.
  • அழகும், வசீகரமும் நிறைந்த, ஒரு அற்புதமான உலகில் நாம் வாழ்கின்றோம். நமது கண்களைத் திறந்து தேடினால் மட்டுமே நாம் பெறப்போகும் சாகசங்களுக்கு முடிவில்லை என்பது புலப்படும்.
  • அமைதி இல்லாவிடில், மற்ற கனவுகள் அனைத்தும் மறைந்து சாம்பலாகிவிடும்.
  • காலம் கடந்த ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை. ஆனால், ஒருவர் என்ன செய்கிறார், எதை உணர்கிறார், எதை அடைகிறார் என்பதை வைத்தே கணக்கிடப்படுகின்றது.
  • நமது இலட்சியங்களையும், குறிக்கோள்களையும், கொள்கைகளையும் நாம் மறந்துவிட்டால் தோல்வியே வரும்.
  • அமைதி என்பது நாடுகளின் உறவு அல்ல. இது ஆன்மாவின் அமைதியால் ஏற்படும் மனநிலை.
  • ஒரு மக்களின் கலை என்பது, அவர்கள் மனதின் உண்மையான கண்ணாடி.