வாழ்வியல் திறன்கள்

முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

லகியல் வாழ்க்கையில் எண்ணியதை எண்ணியவாறு அடைவது எவ்வளவு சிறப்போ, அதைவிட சிறப்புமிக்கது, எண்ணியவொன்றை எய்வதற்கு மேற்கொண்ட தூய வழிமுறைகளாகும். எந்தத் துறையிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்பது அந்தந்தத் துறை சார்ந்தவர்களின் ஒரு இலட்சியக் கனவாக இருக்கும் அவ்வாறு இருப்பதுதான் அவர்களின் வளர்ச்சிக்கும் அத்துறையின் பெருமிதத்திற்கும் உகந்ததாக அமைந்திடும். ஆனால் அந்த முதன்மையைப் பெறுவதற்காக குறுக்குவழியைக் கடைப்பிடிப்பது உகந்ததாகுமா? என்பதனை முயற்சி மேற்கொள்ளும் அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

“கடிந்த கடிந்து ஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்” (குறள். 658)

என்ற வினைத்தூய்மைக்கான குறள் நல்வழிப்படுத்துகிறது. வெற்றி பெறுவது எவ்வளவு சிறப்பானதோ, அதனைவிட அதனைப் பெறுவதற்காக உட்படுத்துகின்ற நெறிமுறைகள் மிகவும் இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்பதே உலகப்பொதுமறை தரக்கூடிய புனிதக்கூற்று எனலாம். அண்மையில் ஒரு முதன்மை நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி, இந்தியாவில் தடகளத்தில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் மிகச் சிறப்பாக ஓடி இந்திய, ஆசிய அளவில் சாதனைப் புரிந்த பெண்மணியைப் பற்றியது. அவரின் சிறப்பான சாதனைக்காக மாநில அரசும் அவரை ஒரு துறையில் அதிகாரியாக நியமித்தது. அதாவது விளையாட்டுத் துறையில் சிறப்பாக மிளிர்பவர்களுக்கு (Sports Quota) நல்கக்கூடிய பணியமர்த்துதலாகும். சமீபத்தில் அவரின் மாதிரிகளைச் சோதித்தபோது, அவர் ஊக்கமருந்தினைச் செலுத்திக்கொண்டு சாதனை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பெற்றுள்ளது. அதனை அவரும் ஒப்புக்கொண்டதால் 4 வருட காலத்தடையானது 2 வருடமாக குறைக்கப்பெற்றது. ஏன்? இந்த குறுக்குவழி முயற்சி என்பதுதான் வருத்தத்திற்குரியதாக உள்ளது. உயர்ந்த இலக்கினை வைப்பது சிறந்ததுதான், ஆனால் அந்த இலக்கினை அடைவதற்காக நம்பிக்கையை தம்மீது வைக்காமல் ஊக்கமருந்துகளின் மேல் வைப்பதுதான் தவறானது. ஊக்கமென்பது உள்ளிருப்பது. இதனையே, நம் திருவள்ளவர்,

“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று –  (குறள் 591)

என்ற வினாவினை எழுப்பி சிந்திக்கத் தூண்டுகின்றார். முதலில் எந்தச் செயலை மேற்கொள்ளும் போதும் நம்மிடையே இயல்பாக இருக்கவேண்டிய ஒரு அருங்குணமானது தன்னம்பிக்கை. இந்த அரிய நிலையானது உள்ளத்தில் ஊக்கத்தை உடைமையாக்கியவருக்கே வயப்படுகின்றது. பயிற்றுவிப்பரும், பயிற்சி மேற்கொள்பவர்களும் முதலில் தங்களை நம்பத்தொடங்கவேண்டும்.

  1. 1. ஓர் உயர்ந்த இலக்கினை முன்வைப்பது
  2. அந்த இலக்கினை உறுதியாக அடைய இயலும் என்று அழுத்தமாக நம்புவது
  3. அந்தத் துறையில் உள்ள அனைத்து நுட்ப அறிவினையும் ஆய்ந்து அறிவது
  4. முறையான திட்டமிடுதலை மிக நுண்ணியமையாக வடிவமைப்பது
  5. எவ்விதச் சோர்வுமின்றி திட்டமிட்டப்படி அன்றன்று முயற்சியை மேற்கொள்வது
  6. தற்காலிகத் தோல்விகளில் மனம் தளராது போராட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது
  7. இலக்கினை அடைவது எவ்வளவு முக்கியமானதோ, அதனை அடைவதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளும் முதன்மையானது

என்ற தூய வினைக்கொள்கையோடு உறுதியாகத் திகழ்வது. மேற்குறித்த தூயநெறிக் கோட்பாடுகளை வாழ்வியலாக்கி முயல்பவருக்கு ஒருவேளை அவர்களின் இலக்குகள் எண்ணியவாறு கைக்கூடாமல் இருப்பினும், அவர்களின் துறைசார்ந்த வேட்புணர்வும், முயற்சி முறைகளும் (Passion & Strive towards goals) உறுதியாக சான்றோரால் எண்ணப்படும், போற்றப்பெறும். “வெற்றி என்பதே பெறுவதில் மட்டும் இல்லை, பெறுவதற்காக ஒருவர் மேற்கொள்ளும் கண்ணியமான முயற்சிகளிலும், அவரின் வெற்றியை மற்றவர்கள் தத்தமது வெற்றியாக எண்ணக்கூடிய பெருமிதத்தில்தான் உள்ளது. இவ்வாறான தூயநெறிக் கோட்பாடுகளை அனைத்துத் துறைசார்ந்த வல்லாரும் செயல்படுத்தும்போது, அந்தத்துறைகள் மேன்மைப்படுகின்றது. “மனத்தில் சலனமில்லாமல்….

மதியில் இருளே தோன்றாமல்… என்ற பாரதி,

“எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்!
தெளிந்த நல்லறிவு வேண்டும்!”

என்ற திடமுடைய மனத்திற்கு பாதை சமைத்துத் தருகின்றார். ஏனென்றால் திடமுடைய மனத்தினால் மட்டுமே கொள்கைகளோடு வாழக்கூடிய சான்றாண்மை நிலை வாய்த்திடும். எல்லாச் சிக்கல்களுக்கும் அடிப்படையானது ஒருவருக்கு தன்னம்பிக்கையின்மையால் ஏற்படுகின்றது. நம்மால் நினைத்தவாறு பெறமுடியாதோ? என்ற பயனற்ற பயமே! அனைத்துக் குறுக்குவழிகளுக்கும் அடிகோலுகிறது எனலாம்.

“அருமை உடைத்தென்று அசாவாமை
 வேண்டும் பெருமை முயற்சி தரும்”   (குறள். 611)

என்ற விடாமுயற்சி தரக்கூடிய நம்பிக்கை வரிகள் வாழ்க்கையில் நடைமுறையாகும் போது, அவரவர் சாதனைகளை அடைவது என்பது இயல்பானதாகும். ஆனால் தூயவழி முறைகளை மேற்கொள்ளாது எய்தப்பெறும் எந்த வெற்றிகளும் தற்காலிகப் பலன்களைத் தருமேயன்றி உயிர் உள்ளவரை உணர்ந்து பெருமிதப்படக்கூடிய நிறையுணர்வினைத் தராது. மேலும் ஊக்கமருந்து உட்கொண்டு மிக மோசமான பின்விளைவுகளை உடல் உள்ளம்’ சார்ந்து பாதிக்கப்பட்டவர்களை உலகமறியும்.

எனவே குறுக்குவழிகளுக்கு மனத்தில் இடம்தராது, நேரிய தூயவினைக்கோட்பாடுகளுடன் முனைபவருக்கு அனைத்தும் வசப்படும். அவர்களின் புகழ் சான்றோரால் போற்றி வணங்கப்பெறும்.

“என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை” (குறள். 652)

எனவே நற்புகழையும், நன்மையும் தராத குறுக்குவழிகளுக்கு இடந்தராது, உன்னதத்தை மட்டுமே தரக்கூடிய நன்முறைக் கோட்பாடுகளை வாழ்வியலாக்கி நம்முடைய சாதனைகளை பரிசுத்தமாக்குவோம்.