‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 19

 

றிஞர் கனிவான உள்ளம் படைத்தவர்; எப்போதும் புன்னகை தவழும் முகம் கொண்டவர்; நேர்மையின் நண்பர்; வஞ்சகத்தின் பகைவர்; அவர் அணியும் தூய்மையான ஆடைகள் அவரது தூய எண்ணங்களைக் காட்டுவதாக இருக்கின்றது; காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் கூறாதவர்; உண்மையாகவே உழைத்துப் பல புதிய செய்திகளை அறிந்து வந்து சொற்பொழிவுகள் மூலம் மாணவர்களுக்குத் தரும் திறமை கொண்டவர். இலாபத்தைக் கருதி எதையும் செய்கின்ற, வணிகமனம் இல்லாதவர்” என்று இந்த அறிவியல் அறிஞரின் மாணவர் ஒருவர் புகழ்ந்து மேற்கண்ட வரிகளைக் கவிதைகளாகப் படைத்துள்ளார். இந்த வரிகள் அனைத்தும் உண்மை மட்டுமல்லாமல், இந்த வரிகளையும் கடந்த பல வாழ்த்துகளுக்குச் சொந்தக்காரர்தான் மைக்கேல் ஃபாரடே என்னும் உழைப்பால் உயர்ந்த அறிவியல் அறிஞர்.

1791-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சர்ரே என்ற ஊரில், ஜேம்ஸ் பாரடே மற்றும் மார்க்ரெட் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை ஜேம்ஸ், கொல்லராக இருந்தவர், வறுமை மிகுந்த குடும்பம். வாரம் ஒரு பெரிய ரொட்டித் துண்டைத் தான் தன் குழந்தைகளுக்கு இத்தம்பதியரால் தரமுடிந்தது. அந்த ரொட்டித் துண்டை பதினான்கு பகுதிகளாக வெட்டி வைத்துக் கொண்டு, காலையும், இரவும் பிள்ளைகள் உண்டு வாழ்ந்தனர்.

ஆம், மைக்கேல் ஃபாரடே குழந்தைப் பருவத்தில் பல நாட்கள் மதிய உணவு உண்டதில்லை.
இப்படி வறுமையில் வாடிய குடும்பம், பிழைப்புத் தேடி இலண்டன் மாநகருக்கு அருகிலுள்ள புறநகர் பகுதியில் வாழ்ந்து வந்தது.

ஃபாரடேயின் மூத்த சகோதரர் பெயர் இராபர்ட். இருவரும் சர்ரே என்ற ஊரில் இருந்த தொடக்கப் பள்ளியில் பயின்று வந்தனர். அந்தப் பள்ளியை நடத்தி வந்தவர் ஒரு முது வயதுடைய பெண்மணி. கண்டிப்பானவர், மாணவர்களைச் சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டும் என்று தீவிர ஆர்வம் கொண்டவர்.

மைக்கேல் ஃபாரடேயால் ஆங்கிலத்தில் வரும் ‘R’ என்ற சொல்லை உச்சரிக்க முடியவில்லை. அந்தப் பள்ளியை நடத்திய பெண்மணி, மைக்கேல் ஃபாரடேயைக் கண்டித்தார். என்ன சொன்னாலும் ஃபாரடே வாயில் அந்த எழுத்து ‘O’ என்றுதான் வந்தது. ஃபாரடே ‘ROAD’ என்பது ‘OOAD’ என்றே வாசிக்க, கோபம் கொண்ட பெண்மணி, பணத்தைக் கொடுத்து ஃபாரடேயின் அண்ணன் இராபர்ட்டிடம், அவரை அடிக்க ‘தடி’ வாங்கி வரச் சொன்னார்.

இராபர்ட் இதை அவரது தாயிடம் சொல்ல, பள்ளிப் படிப்பு அவர்களுக்கு இச்சம்பவத்தோடு முடிந்தது. அதன் பிறகு வீட்டு வேலைகளைச் செய்வதிலும், இளைய சகோதரிகளைப் பார்த்துக் கொள்வதிலும் காலத்தைச் செலவிட்டார்கள். ஒரு சூழலில் அண்ணன் இராபர்ட் தந்தையின் கொல்லர் பட்டறைக்கு உதவியாகச் சென்றார்.

மைக்கேல் ஃபாரடேயும் தன் குடும்ப வறுமை காரணமாக, பதினாறு வயதில் பிளாண்ட்போர்ட் தெருவில் இருந்த ஒரு புத்தகம் சீர்செய்து கட்டும் (Book Binding Shop) கடைக்கு வேலையில் சேர்ந்தார். அந்தக் கடையின் உரிமையாளர் ஜார்ஜ் ரைபாவ் மைக்கேல் மீது அதிக அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். புத்தகங்களை பைண்டிங் செய்யும் போது, அவருக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மீது தனி ஆர்வம் உதித்தது. வேலையில்லாத நேரங்களிலும், வேலை முடிந்து செல்லும் போதும் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார் ஃபாரடே. இதனை அறிந்த ஜார்ஜ் ரைபாவ் அவரை வாசிக்க ஊக்கமூட்டினார்.

ஐசக் வாட்ஸ் எழுதிய ‘தி இம்ப்ரூவ்மெண்ட் ஆப் மைண்ட்’, ஜேன் மார்கெட் எழுதிய ‘வேதியியலில் உரையாடல்கள்’ ஆகிய நூல்கள் அவரிடம் வேதியியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘பிரிட்டிஷ் கலைக்களஞ்சியம்’ படித்த போது மின்சாரம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வ மிகுதியால் தனது புத்தகக் கடைக்குப் பின்னே இருந்த இடத்தில் சில ஆய்வுகளையும் செய்து பார்த்தார் நமது இளம் விஞ்ஞானி. அண்ணன் இராபர்ட் தம்பிக்குப் பொருட்கள் வாங்கப் பணம் கொடுத்தார். கடை உரிமையாளர் ஜார்ஜ் ரைபாவ் இடமும், ஊக்கமும் தந்தார்.

அப்போது டாட்டம் என்ற ஒரு அறிஞர் இலண்டனில் தொடர் சொற்பொழிவு நடத்த இருக்கும் அறிவிப்பைக் கண்டார். அதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளதை தன் அண்ணனிடமும், முதலாளியிடமும் சொன்னார். அண்ணன் பணம் கொடுத்தார். முதலாளி வேலையிலிருந்து விடுப்புக் கொடுத்தார். ஃபாரடே சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். அறிவியல் என்ற உலகில் பல அற்புதங்கள் உள்ளது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார்.

புதிய தொடக்கம்

ஆறு ஆண்டுகள் ஜார்ஜ் ரைபவ்விடம் வேலை பார்த்து பலவற்றைக் கற்றுக் கொண்டார் ஃபாரடே. ஆறு வருடம் முடிந்ததும் அவரது முதலாளி ஃபாரடேயை அதிக ஊதியம் கிடைக்கும் டி-லா-ரோச் என்ற புத்தகம் கட்டும் முதலாளியிடம் அனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். கடுகடு என்று இருப்பவர். ஃபாரடே மற்ற விஷயங்களில் ஈடுபடுவதை விரும்பாதவர்.

ஆயினும் வேறு வழியின்றி, குடும்பச் சூழல் காரணமாக அங்கே பணியில் சேர்ந்தார் ஃபாரடே. அப்போது அந்தப் புதிய கடைக்கு வந்த அறிவியல் அறிஞர் டேன்ஸ் என்பவரின் பழக்கம் கிடைத்தது. அறிவியல் ஆர்வம் மைக்கேலிடம் உள்ளதைத் தெரிந்துகொண்ட அவர் இலண்டனில் நடைபெற்ற சர் ஹம்பரி ேடவியின் சொற்பொழிவுகளுக்கு ஃபாரடேயை அறிமுகப்படுத்தினார்.
அக்காலத்தில் வேதியியலில் புகழ்பெற்று விளங்கியவர் சர் ஹம்பரி டேவி. ஹம்பரி டேவியும் ஒரு ஏழைத் தச்சரின் மகன். வறுமை காரணமாக ஒரு மருந்துக் கடையில் வேலை செய்தவர். அந்த மருந்துக் கடைக்காரர் நிறையப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

அப்புத்தகங்களில் ஒன்றான வில்லியம் நிக்கல்சன் எழுதிய அறிவியல் புத்தகமே ஹம்பரி டேவியை அறிவியலின் பக்கம் ஈர்த்தது. லவாஸ்யர் போன்ற அறிஞர்களின் நூலைப் படித்தார். ‘நைட்ரஸ் ஆக்ஸைடு’ என்னும் சிரிப்பு வாயுவைக் கண்டறிந்தார். இது வலி நீக்கியாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் உலகப் புகழ்பெற்றார் ஹம்பரி டேவி.

மின்சாரம் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்த டேவியும், முறையாகக் கல்வி கற்காதவர். ஆனால், கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு உயர்ந்தவர். சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பிரித்து எடுத்தார். இதே முறையில் போரான், கால்சியம், லித்தியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார் டேவி.

இப்படிப் புகழ்பெற்ற விளங்கிய சர் ஹம்பரி டேவியின் உரையைக்கேட்கச் சென்றார் ஃபாரடே. ஒவ்வொரு நாளும் டேவி பேசியதைக் குறிப்பெடுத்துக் கொண்டார். இவற்றை முன்னூறு பக்கங்களுக்கு எழுதினார். சொற்ெபாழிவு மூலம் வேதியியல் பாடத்தில் ஆர்வம் உருவானது. மேலும் எப்படியாவது ஹம்பரி டேவி போன்ற ஒரு அறிவியல் அறிஞருடன் சேர்ந்து ஆய்வு ெசய்ய வேண்டும், பலவற்றைக் கண்டறிய வேண்டும் என்ற ஆசை மனதில் ஆழமாக வேரூன்றியது.
தான் எழுதிய அந்த முன்னூறு பக்கக் கட்டுரையை சர் ஹம்பரி டேவிக்கு அனுப்பி, அவரது ஆய்வகத்தில் வேலை தருமாறு கடிதம் எழுதியிருந்தார் மைக்கேல் ஃபாரடே. அப்போது அவருக்கு வயது இருபது. இந்த இளைஞனின் ஆர்வத்தையும், கட்டுரைத் தொகுப்பில் தெரிந்த அறிவியல் ஞானத்தையும் கண்டு மகிழ்ந்தார் டேவி. அப்போது அங்கே வேலை எதுவும் காலி இல்லை என்பதால், தனக்குச் செயலராக நியமித்துக் ெகாள்ள விரும்புவதாக ஃபாரடேக்குப் பதில் தந்தார் டேவி.

குருவும், சீடரும்

கிடைத்த வாய்ப்பை, அதுவும் தலைச்சிறந்த வேதியியல் அறிஞருக்குச் செயலராக என்ற சந்தர்ப்பத்தை உடனே ஓடிச்ெசன்று ஏற்றுக்கொண்டார் ஃபாரடே. சர் ஹம்பரி ேடவி ஆய்வு மேற்கொண்டிருந்த, இலண்டன் ராயல் சொசைட்டி ஆய்வகத்தில், மேல் மாடியில் ஃபாரடே தங்க ஒரு அறை தரப்பட்டது. சரியான நேரத்தில் ஆய்வகத்துக்கு வந்து, ஆர்வமாக ஹம்பரி டேவிக்கு உதவி வந்தார் ஃபாரடே. ஹம்பரி டேவி அப்போது நைட்ரஜனுடன், குளோரின் வாயுவைச் சேர்த்து நைட்ரஜன் ட்ரைகுளோரைடைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் குருவும் சீடரும் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், சுரங்கத் தொழிலாளருக்கு உதவும் ஒரு விளக்கை வடிவமைப்பதிலும் டேவி ஈடுபட்டிருந்தார்.

டேவியின் ஆய்வகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே தன் திறமையையும், அறிவினையும் வெளிப்படுத்தினார். அங்கிருந்த பல மாணவர்களைவிட வேதியியலில் அதிகம் தெரிந்தவராகத் தன்னை மாற்றிக் கொண்டார். ஆய்வைக் கண்காணிப்பது, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களைக் கண்காணிப்பது என்று உயர்ந்தார்.

இதற்கிடையில் டேவியின் ஆய்வக உதவியாளர்களாக இருந்தவர்களில் ஒருவரான ஜான் பெய்ன் என்பவர் சக உதவியாளரை அடித்துவிட்டார். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த இடத்தில் மைக்கேல் ஃபாரடே ஊதியம் பெறும் ஊழியராக நியமிக்கப்பட்டார்.

இச்சூழலில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பதினெட்டு மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஹம்பரி டேவி. ஃபாரடேயை இப்பயணத்தில் தன் தனிச் செயலராக அழைத்துச் சென்றார். அப்போது ஹம்பரி டேவியின் மனைவியும் உடன் சென்றார். ஹம்பரி டேவி ஃபாரடேயை தன்னோடு இணையாக அமரச் செய்வது, உணவு உண்ண அழைப்பது போன்றவற்றை ஹம்பரியின் மனைவி வெறுத்தார். டேவி ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரது மனைவி அப்ரீஸ் பெரும் பணக்காரர். எனவே ஃபாரடேயைக் கீழ்த்தரமாக நடத்தினார். அறிவியல் ஆர்வத்திலும், தன் குரு டேவி மேல் இருந்த மரியாதையிலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டார் ஃபாரடே.

அதேசமயம் இந்த ஒன்றரை ஆண்டுப் பயணத்தில் பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஆண்ட்ரே-மேரி-ஆம்பியர் மற்றும் மிலனில் அலெக்ஸாண்ட்ரோ வோல்டா போன்ற விஞ்ஞானிகளைச் சந்தித்தது பெரும் உதவியாகவும், உத்வேகமாகவும் அமைந்தது. பயணம் முடிந்து வந்ததும் மீண்டும் ஹம்பரி டேவியுடன் இணைந்து ஆர்வமாகத் தன் ஆய்வில் ஈடுபட்டார்.

ஃபாரடே ஒரு பண்பாளர்

தொடர்ந்து ஃபாரடே டேவியுடன் இணைந்தும், தனித்தும் தன் ஆய்வுகளை மேற்கொண்டதோடு, அவற்றை அறிவியல் இதழ்களிலும் வெளியிட்டார். ஃபாரடேவின் வளர்ச்சி டேவிக்கே பொறாமை தந்தது. இச்சமயம் ஹம்பரி டேவி உருவாக்கிய சுரங்க ஊழியர்களுக்கான விளக்கை அறிமுகம் செய்யும் விழாவிற்கு ஃபாரடே அழைக்கப்பட்டிருந்தார். அன்று ஹம்பரி டேவியால் செல்ல முடியவில்லை.

அந்த நிகழ்வில் இருந்த சுரங்க அதிகாரிகள் ஃபாரடேயிடம் இந்த விளக்கு எப்போதும் ஆபத்தில்லாததா? என்று கேட்டார்கள். இது ஒரு தர்ம சங்கடமான சூழலை ஃபாரடேக்கு உருவாக்கியது. காரணம், ேடவி அந்த விளக்கு நூறு சதவீதம் ஆபத்தில்லாதது என்று கூறியிருந்தார். ஆனால், அந்த விளக்கு சில சமயங்களில் ஆபத்தானது என்பது ஃபாரடேக்கும், ஹம்பரி டேவிக்கும் தெரியும்.

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் தன் குருவுக்கு எதிராக பதில் கூறுவதா? அல்லது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றப் பதில் கூறுவதா? என்று சிந்தித்தார். ஃபாரடே தீவிர பக்திமான். நேர்மையானவர். பொய் சொல்லக் கூடாதே என்று “இந்த விளக்கு சில சமயங்களில் ஆபத்தானது” என்று உண்மையைச் சொல்லிவிட்டார். அதுமுதல் டேவிக்கு ஃபாரடே மீது கோபம் அதிகரித்தது. அவர்களது உறவிலும் சிறிது சிறிதாக விரிசல் ஏற்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் ராயல் சங்கத்தின் உறுப்பினர் பதவிக்கு ஃபாரடே நிற்க வேண்டும் என்று சக அறிஞர்கள் வேண்டினர். வற்புறுத்தலுக்காக ‘சரி’ என்று மனுவைத் தாக்கல் செய்தார் ஃபாரடே. அப்போது ராயல் சங்கத் தலைவராக இருந்தவர் ஹம்பரி டேவி. ஃபாரடே உறுப்பினராவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஃபாரடேவை அழைத்து “உனக்கு வாக்கு எதுவும் கிடைக்காது, வாபஸ் வாங்குவது நல்லது” என்றார். ஹம்பரி டேவியின் உள்ளெண்ணத்தைப் புரிந்து கொண்ட ஃபாரடே “நான் வெற்றி பெற வேண்டும் என்று நிற்கவில்லை; நண்பர்கள் வேண்டுதலுக்காக நிற்கிறேன்; விலகிக் கொண்டால் அவர்களை அவமதிப்பது போல ஆகிவிடும்” என்று நாசூக்காகச் சொல்லிவிட்டார்.

தேர்தலில் ஒரு வாக்கைத் தவிர அனைத்து வாக்கையும் பெற்று ஃபாரடே உறுப்பினரானார். அந்த ஒரு எதிர் வாக்கு டேவியுடையது என்பதை நாம் அறியலாம். ஆனால், பிற்காலத்தில் டேவி, ஃபாரடேக்கு மதிப்பளித்தார். நல்லதொரு பதவி அவருக்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். மைக்கேல் ஃபாரடே என்றுமே தன் குருவை நன்றியோடு மதித்தார்.

பலவற்றைக் கண்டுபிடித்த ஹம்பரி டேவி அடிக்கடி “என் சிறந்த கண்டுபிடிப்பு மைக்கேல் ஃபாரடே” என்று கூறினார். அந்த அளவுக்கு குணத்திலும், அறிவிலும் உயர்ந்து விளங்கினார் மைக்கேல் ஃபாரடே.

“உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்பதே மைக்கேல் ஃபாரடேயின் தாரக மந்திரமாக இருந்தது. இவர் சாரா பர்னார்ட்டை, 1821-இல் தனது 20-ஆம் வயதில் மணந்தார். இந்தத் தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை. ஆயினும், அன்பான தம்பதிகளாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள். அறிவியலை பணம் சேர்க்கும், பணம் சம்பாதிக்கும் ஒன்றாக ஃபாரடே இறுதி வரை பயன்படுத்தவில்லை. எனவே, வாழ்நாள் முழுவதும் குறைந்த வசதி மற்றும் வறுமையோடு தான் வாழ்ந்தார். ஆய்வுகள் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும்; மேலும் ‘பணம் சேர்ப்பது பாவம்’ என்ற எண்ணம் ஃபாரடேக்கு இருந்தது.

இரண்டு முறை ராயல் சங்கத்தின் தலைவராகும் வாய்ப்பு வந்தது. அதை ஃபாரடே ஏற்கவில்லை. “எப்போதும் எளிமையான ஃபாரடே” என்று அடிக்கடிக் கூறினார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ‘நைட்ஹுட்’ என்ற பட்டத்தையும் ஏற்கவில்லை. எளிமையை விரும்பினார். இவரின் இந்தக் குணத்தைப் புரிந்து கொண்டு இவரது மனைவியும் வாழ்க்கையில் இவருக்குத் துணை நின்றார்.

ஃபாரடே வறுமையில் வாடுவது கண்ட செய்தியை அறிந்த இங்கிலாந்து மன்னர் ஆறாம் வில்லியம், அவருக்கு ஆண்டுதோறும் முன்னூறு பவுன் நிதியுதவி வழங்கினார். தொடக்கத்தில் இவற்றை வேண்டாம் என்று சொல்ல ஃபாரடே திட்டமிட்டிருந்தார். அப்போது சாராவின் தந்தைதான் ஃபாரடேக்கு குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி, அரசு உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொன்னார். ஃபாரடே வருமானத்தைக் கொண்டே அவரது தாய் மற்றும் சகோதரிகளின் குடும்பத்துக்கும் உதவி வந்தார் சாரா அம்மையார்.

உழைப்பின் மறுபெயர் ஃபாரடே

சர் ஹம்பரி டேவியுடன் இணைந்து பயணித்ததில் வேதியியல் ஆர்வம் கொண்டிருந்தார் ஃபாரடே. கார்பன் மற்றும் குளோரின் வாயு பற்றிய ஆய்வுகளில் முத்திரை பதித்தார். குளோரின் வாயுவைத் திரவமாக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். கார்பன் மற்றும் குளோரினைச் சேர்த்துப் பல சேர்மங்களையும் ஃபாரடே கண்டுபிடித்தார்.
திமிங்கிலத்தின் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யிலிருந்து 1820-ஆம் ஆண்டு பென்சீனைப் பிரித்து எடுத்தார். உலக வரலாற்றில் ஆய்வகத்தில் முதலில் பென்சீனைப் பிரித்து எடுத்தவர் ஃபாரடே.

காந்த சக்தியை, மின்சக்தியாக மாற்றும் ஆய்வில் பல ஆண்டுகள் ஈடுபட்டார். இந்த ஆய்வு ஒன்பது வருடங்கள் சென்றது. ஃபாரடேக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால் உடனுக்குடன் நோட்டில் குறித்து வைத்துக் கொண்டே வந்தார். நீண்ட காலம் அவர் ஆய்வில் ஈடுபட்டும் ஒரு விளைவும் ஏற்படாததால், “ஃபாரடே நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளார்” என்று அவர் காதுபடப் பேசினார்கள். பிரிட்டிஷ் நிதி அமைச்சர் கிளாஸ்ட்டோன் ஃபாரடேயிடம் “இப்படி தேவையற்ற ஆராய்ச்சி செய்து என்ன பயன்?” என்று நக்கலாகக் கேட்டார்.

அச்சமயம் ஃபாரடே அவரிடம், “நாங்கள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தால் நீங்கள் வரி வசூல் செய்யலாமே” என்று கூறினார். ஆனால், இதுபோன்ற கேள்விகள் கண்டு மனம் தளரவில்லை.
தனது, நாட்குறிப்பில் தீராத ஆய்வுகள் பற்றிப் பின்வருமாறு எழுதியிருந்தார் ஃபாரடே. “நான் மின்காந்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். நான் ஏதோ ஒன்றை இறுகப் பற்றிக் கொண்டு செயல்படுகின்றேன். ஆனால், இதன் விளைவு பற்றி ஒன்றும் இப்போது சொல்ல முடியவில்லை. நான் பற்றிக் கொண்டிருப்பது மீனோ அல்லது அவை ஒளிந்து கொள்ளும் புல்லோ தெரியவில்ைல. ஆனால், என் கடும் உழைப்பின் காரணமாக, நான் நிச்சயம் மீனைப் பிடித்து விடுவேன்” என்று எழுதியிருந்தார். அவ்வப்போது தன் ஆய்வுகள் தோல்வியுறும் போது “விடை கிடைக்கவில்லை” என்று பல நாட்கள் எழுதியிருந்தார்.
இப்படி அவரது ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருந்த

போது ஒரு நாள், ஃபாரடே திடீரென “ஆஹா, இங்கே பாருங்கள், இங்கே வாருங்கள்” என்று தன்னையறியாமலேயே கத்தினார். எல்லோரும் ஓடோடி வந்தார்கள். அப்போது காந்த சக்தியை மின்சக்தியாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டிருந்தார். இதன் மூலம் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் மின்சாரம் மூலம் இயங்கலாம் என்பதற்கு வழிகாட்டினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1926-ஆம் ஆண்டு, வேல்ஸ் இளவரசர் விண்ட்ஸர் பிரபு ஒரு உரை நிகழ்த்தினா். அப்போது “கிரேட் பிரிட்டனில் மட்டும் இருபது இலட்சம் தொழிலாளர்கள் மின்சாரத்தின் உதவியால் இயங்கும் தொழிற்சாலைகளில் பணி செய்கிறார்கள். இதற்கு வழி செய்து கொடுத்தது மைக்கேல் ஃபாரடேயின் ஆற்றல்தான்” என்று புகழாரம் சூட்டினார். ஆம், இன்று உலகமெங்கும் மின்சாரத்தின் உதவியால், கோடான கோடி ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வாதாரம் அமையக் காரணமானவர் ஃபாரடேஎன்பதில் ஐயமில்லை.

17-ஆம் நூற்றாண்டில் ‘வேதியியல்’ என்ற பிரிவு லவாய்சியர், ஜோசப் பிரீஸ்ட்லி ஆகியோரால் முன்மொழியப்பட்டது. அதன் வளர்ச்சியில் ஹம்பரி டேவி போன்றோர் உழைத்தார்கள். 19-ஆம் நூற்றாண்டில் ‘இயற்பியல்’ என்ற அறிவியல் பிரிவு புழக்கத்தில் வந்தது. மைக்கேல் ஃபாரடே வேதியியல், இயற்பியல் இரண்டிலும் பங்குபெற்றார், தன் பங்களிப்பைத் தந்தார்.

மாபெரும் கண்டுபிடிப்பாளர்

மின்னாற்பகுப்பு விதிகளை உலகிற்கு வழங்கினார். ஃபாரடேயின் காந்த விதிகள், மின்னாற்பகுப்பு விதிகள் உலகப் புகழ்பெற்றவை. மின்சாரம் பாயும் உப்புகளுக்கு ‘எலக்ரோலைட்’ (Electrolyte) என்ற பெயரையும், எதிர் அயனி (Anion), நேர் அயனி (Cation), அயனி (Ion), நேர்மின் வாய் (Anode), எதிர்மின் வாய் (Cathode) போன்ற சொற்றொடர்களை உலகிற்கு அறிமுகம் செய்து, அதனைப் பழக்கத்தில் கொண்டுவரக் காரணமானவர் ஃபாரடே. அதனால் தான் மின்சாரத்தின் கொள்ளளவை அவரது பெயரால் SI அலகாக ‘ஃபாரடே’ (Faraday)என்று குறிப்பிடுகின்றார்கள். உலகளவில் தன் பெயரில் ஒரு அலகினைக் கொண்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர் ஃபாரடே. வேதியியல் ஆய்வுக் கூடங்களில் பயன்படும் பன்சன் அடுப்பைக் (Bunsen Burner) கண்டறிந்தவர் ஃபாரடே தான்.

1824-இல் மின் தூண்டலைக் கண்டறிந்தார். 1831-இல் டைனமோ என்ற உலகப் புகழ்பெற்ற மின் சாதனத்தைக் கண்டறிந்தார். 1831 – மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தார். 1845-இல் வெவ்வேறு பக்கங்களில், வெவ்வேறு காட்சிகளைத் தோன்றச் செய்யும் காந்த விசையின் சுழற்சியைக் கண்டறிந்தார். 1862-இல் கலங்கரை விளக்கங்களில் விளக்கு எரிய மின்சாரத்தைப் பயன்படுத்திடக் காரணம் ஆனார். அவரது காலத்துக்குப் பின்பும் அவரது ஆய்வுகள், தரவுகள் பல அரிய கருத்துகளை மின்னியல், காந்தவியலில் கொண்டு வந்தன.

இயற்பியல் என்ற தனிப்பிரிவு அறிவியலில் வந்த பின்பு, மின்னியல், மின்காந்தவியல் என்ற தலைப்புகள் தோன்றிட மூலமாக அமைந்தவர் ஃபாரடே. இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற அறிஞர் மேக்ஸ்வெல், “ஃபாரடேயின் தத்துவங்கள் இன்னும் பல்லாண்டுகள் உயிர்ப்புள்ளதாக இருக்கும். மேலும் அவர் தலைச்சிறந்த கணிதவியலார்” என்று புகழ்கின்றார்.
அவரது அறிவியல் பங்களிப்புக்காக 1835-இல் ஓய்வூதியம் தரப்பட்டது. விக்டோரியா மகாராணி மூலம் “ஹேம்ப்டன் கோர்ட்” என்ற ஒரு வீடு அவருக்கு வழங்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறையில் ஆர்தர் ஸ்கோபன்ஹவுர், ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் படத்துடன் ஃபாரடேயின் படத்தையும் வைத்திருந்தார்.

வாழ்நாளின் இடையில் ஐந்து ஆண்டுகள் கட்டாய ஓய்வுக்கு ஃபாரடே தள்ளப்பட்டார். மருத்துவர்கள் அறிவுரைப்படி அதை ஏற்றுக்கொண்டார். ஸ்விட்சர்லாந்து சென்று தன்னைத் தேற்றிக் கொண்டார். அவரது அன்பு மனைவி துணையாகி நலம்பெற உதவினார்.
1832-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கியது. 1824 முதல் இறுதி வரை ராயல் சங்க உறுப்பினராக இருந்து ஆய்வு மேற்கொண்டார். ராயல் நிறுவனத்தில் விரிவுரை நிகழ்த்தத் தேவையில்லாத புல்லேரியன் பேராசிரியராக 1833-லிருந்து முப்பது ஆண்டுகள் பணி செய்தார். ஆயினும் சமயம் கிடைத்த போதெல்லாம் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

ஃபாரடே ஒரு முன்மாதிரி

அடிப்படைக் கல்வியை மட்டுமே பெற்ற, உயர்கல்வியைப் பெறாத ஒரு மனிதர் இயற்பியல், வேதியியலில் செறிவு மிக்கவராக இருந்தார். இவரது கிறிஸ்துமஸ் சமய சொற்பொழிவுகளும் உலகப் புகழ்பெற்றது. அவரது ஆய்வு முழுவதும் எளிமையான கோட்பாடுகளால் எழுதப்பட்டது. காரணம், உயர் கணிதத்தை ஃபாரடே படிக்கவில்லை. அவற்றின் பயன்பாடு பற்றியும் அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அதைக் கற்றிருந்தவர்கள் சாதிக்காக, கண்டுபிடிக்காத விஷயங்களை எல்லாம் தன் எளிய வார்த்தைகளால், அறிவியலால் உலகிற்கு வழங்கினார் மைக்கேல் ஃபாரடே. அதனால் தான் உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதராகப் போற்றப்படுகின்றார். எந்த இடத்திலும் உயர்ந்த கணிதக் கோட்பாடுகளை அவர் பயன்படுத்தவில்லை என்பதே அறிஞர்கள் மத்தியில் அவரை உயர்த்திக் காட்டியது. தன்னிடமுள்ளவற்றை, தான் அறிந்தவற்றை வைத்தும் உலகில் சாதனை படைக்கலாம் என்பதற்கு ஃபாரடே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

1867-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதியன்று தனது 75-ஆம் வயதில் இயற்கை எய்தினார். உயர்குடி மக்களுக்கு கல்லறை தரப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அவருக்கு இடம் தரப்பட்டாலும், அதை அவர் உயிருள்ளபோதே நிராகரித்தார். “ஃபாரடேக்கு எளிய இடம் போதும்” என்று கூறியிருந்தார். அதன்படி அவரது இறுதி உறைவிடம் அமைந்தது.

வறுமை, வசதியின்மை, கல்வியின்மை என்று எத்தனை இல்லாமைகள் இருந்தாலும், மனமிருந்தால், முயற்சியிருந்தால், கடும் உழைப்பு இருந்தால் உலகில் சாதிக்கலாம் என்பதற்குத் தலைச்சிறந்த எடுத்துக்காட்டு மைக்கேல் ஃபாரடே. படிக்கத் தயங்கும் மாணவர்கள், உழைக்கத் தயங்கும் இளைஞர்களுக்கு ஃபாரடேயின் வாழ்வு மாபெரும் உந்துதலாக அமையும். மிகக் குறைந்த பள்ளிக் கல்வியிருந்தாலும், கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, பல நூற்றாண்டுச் சாதனைகளை நிகழ்த்திய, எளிய வாழ்வில் இன்பம் கண்ட மைக்கேல் ஃபாரடே மிக உயர்ந்த மனிதராக மின்காந்த ஒளியில், அறிவியல் ஆய்வில் மின்னுகின்றார்.

மைக்கேல் ஃபாரடே பொன்மொழிகள்

அறிவியல் ஆய்வில் வெற்றி பெறுவதன் இரகசியம் மூன்று வார்த்தைகளில் அடங்கியுள்ளது. அவை, வேலை, முடிவு மற்றும் வெளியீடு ஆகும்.

உண்மையாக இருப்பது போல, அற்புதமானது ஒன்றும் இல்லை.

மனதை, அதன் ஆசைகள் மற்றும் விருப்பங்கள் சரியென நிரூபிக்கும் வரை, அவற்றை எதிர்க்கக் கற்றுக்கொடுக்கும் சுயகல்வி என்பது, இயற்கையான தத்துவத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் முக்கியமானது என்பது என் நம்பிக்கையாகும்.

நான் எந்த நேரத்திலும், எனது நேரத்தைப் பணமாக மாற்ற முடியும். ஆனால், தேவையான நோக்கங்களுக்குப் போதுமான பணத்தைவிட, அதிகம் அதனைச் சேர்க்க என் நேரத்தை தர விரும்பவில்லை.

எனது நினைவாற்றல் குறைந்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. அடுத்த வாரம் நான் எழுபது வயதை அடைகிறேன். இந்த எழுபது ஆண்டுகளில் நான் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்தேன். நம்பிக்கை மற்றும் மனதிருப்தி மூலமாக இன்னும் மகிழ்ச்சியோடு வாழ்வேன்.
சாத்தியமாகும் என்று உணர்வு தூண்டும் வரை முயற்சி செய்யுங்கள்.

எல்லாவற்றையும் அமைதியாக எடுத்துக்கொள்வதுதான் வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும்.
வேதியியல் ஒரு அவசியமான சோதனை அறிவியல். அதன் முடிவுகள் தரவுகளிலுமிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும், அதன் கொள்கைகள் உண்மையான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன.

மிக உயர்ந்த ஒன்று’ என்பது இரண்டாம் தர மக்களால் செய்யப்படும் முதல் தரமான வேலையாகும்.

மனிதர்களை எல்லா இடங்களிலும் வெறுப்பு உணர்வுகளுக்குத் தூண்டும் கூட்டத்திலிருப்பதைவிட, சண்டையிடுவதைவிட, அறிவியலைப் பின்தொடர்வதில் மகிழ்ச்சியும், அமைதியும், தத்துவ ரீதியாகச் செயல்படும் தன்மையும் நாம் பெற முடியும்.

நான் கவிஞன் இல்லை. ஆனால் நீங்கள் சிந்திக்கும் போது, நான் உணர்வதைப் போல, உண்மைகள் உங்கள் மனதில் கவிதைகளாக உருவாகும்.

நாம் படிக்க வேண்டிய இயற்கையின் புத்தகமானது, கடவுளின் விரலால் எழுதப்பட்டது.
இயற்கையின் அறிவுரைகளைப் பாரபட்சமின்றி நம் மனதில் விழ நாம் அனுமதித்தால், இயற்கையானது, நமது அன்பான நண்பராகவும் பரிசோதனை அறிவியலில் சிறந்த விமர்சகராகவும் இருக்கும்.

ஒரு அறிவியல் ஆய்வாளரின் மனதில் கடந்து வந்த எண்ணங்களும், கோட்பாடுகளும், அந்த ஆய்வாளரின் கடுமையான விமர்சனத்தாலும், பாதகமான பரிசோதனைகளாலும், மௌனத்தாலும், இரகசியத்தாலும் வெளியே அறியப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த உலகம் அறியாது.

கடவுளின் பரிசில் அமைதி மட்டுமே இருப்பதால், அதைக் கொடுப்பவர் கடவுள் என்பதால், நாம் ஏன் பயப்பட வேண்டும்?

ஒருமுகத் தன்மை, பாகுபாடு, ஒருங்கிணைப்பு, புதுமை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை வெற்றிக்கான ஐந்து தொழில் முனைவோர் திறன்கள் ஆகும்.

நான் சொல்வது தான் சரி என்று கூறுபவரைப் போல இவ்வுலகில் பயமுறுத்துபவர் எவருமில்லை.
இன்னும், இன்னும் முயற்சி செய்யுங்கள், ‘எது சாத்தியம்’ என்பது யாருக்குத் தெரியும்.
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் ஆறு நபர்களைவிட, மனதாலும், உடலாலும் உழைக்கும் ஒரு மனிதன் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.

பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஆராய்ச்சிப் பாடத்தை சோர்வடையச் செய்வதற்குப் பதிலாக, அழகும் பயனும் நிரம்பி வழியும். மேலும், மேலும் அறிவுக்கான கதவுகளைத் திறப்பது, நமது அறிவியலின் பெரிய அழகாகும்.

நமது கொள்கையில் நின்று செயல்படுவதே சரியானது. ஆனால், அவற்றை குருட்டுப் பிடிவாதமாக வைத்திருப்பது சரியல்ல. அவை தவறு என்று நிரூபிக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

நுட்பமான சோதனைகளில் பெரிய முன்னெச்சரிக்கைகள் தேவை. பொறுமை, பொறுமை என்பதே முக்கியமானது.

கவனிப்பு மட்டுமே நிகழும் இடத்தில் அறிவு வளர்ச்சி தவழும். ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்படும் இடத்தில், அறிவு முன்னோக்கிப் பாய்கிறது.
நான் ஒரு உண்மையை நம்பமுடியும் மற்றும் எப்போதும் ஒரு கூற்றைக் கேள்வியாக கேட்க முடியும்.