இளைஞர் உலகம்

உறவு
பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

சென்ற இதழில் அசட்டை முகத்தவர் மனம் திறந்து பேசாதவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள்- அனிச்சமலர் போல் வாட்டமுறுபவர்கள்- தொட்டால் சிணுங்கி போன்றவர்கள் என இரண்டு பண்புகள் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அசட்டை முகத்தவரின் இன்னும் சில பண்புகளைக் காண்போம்.

3.மற்றவர்களை தன்னைவிட உயர்வாக கருதுபவர்கள்

மற்றவர்களை தன்னைவிட உயர்வாக மதிப்பது என்பது ஒரு நல்ல பண்பு தான்- அதாவது அது மனித மாண்பை மதிக்கும் செயலாக இருக்கும் போது.

நாங்கள் இலங்கைக்கு கருத்தரங்கு நடத்த சென்றபோது அங்குள்ளவர்களது சில சமூக குணங்கள் பற்றி வியந்தோம். குறிப்பாக அடுத்தவர் யாராக இருந்தாலும், ஏன் ஒரு குழந்தையாக இருந்தாலும் ‘அவர்’ என்ற வார்த்தையைத் தான் அங்கு பயன்படுத்துகிறார்கள். இங்கு நாம் செய்வதுபோல் வயது குறைந்தவர்களை, நன்கு தெரிந்தவர்களை, குறிப்பாக வகுப்புத் தோழர் தோழிகளை ‘நீ’,‘அவன்’,‘அவள்’ போட்டு பேசியதை நாங்கள் அங்கு காணவில்லை. இதேபோன்று நமது தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு கொள்கையுடைய ஈ.வே.ரா. போன்றவர்களும் இலங்கை தமிழர் பாணியில் தான் சமூக உறவு கொள்கின்றனர் எனக் கேள்விப்படுகிறோம். இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட நாம் இதைச் செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். உண்மையில் மனித நேயம் தான் இந்தியர்களாகிய நம்மை ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து ‘இந்தியர்’ என பன்மையில் பெருமையுடன் வாழ வைத்துள்ளது. ஏன், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உயர்ந்த நோக்குடன் மனித இனத்தை நோக்க வைத்துள்ளது.

ஆனால், இத்தகைய உயர்நோக்குடன் அசட்டை முகத்தவர் மற்றவர்களை நோக்குவது இவர்களது பண்பட்ட மனப்பாங்கின் வெளிப்பாடா என்பது சந்தேகத்துக்குரியது. காரணம் இவர்களது உளப்பாங்கு அழுமுகத்தவரின் உளப்பாங்கைக் கொண்டது. அழுமுகத்தவரின் உளப்பாங்கில் ஒன்று தாழ்வு மனப்பாங்காகும். எனவே இவர்கள் தங்களை தரம் தாழ்த்துவதாலையே பிறரை தங்களை விட உயர்வாக மதிக்கலாம். இத்தகைய செயல்பாடு தவிர்க்கப்பட வேண்டியது, சரிப்படுத்தப்பட வேண்டியது- போற்றப்பட வேண்டியது அல்ல.

  1. அடிமை வேலை செய்வதில் ஆட்சேபமில்லை

“அதிகாரம் வேண்டும் என்ற விருப்பமில்லாதவர் யாரும் இல்லை” என்பார் ஜெர்மனியின் தத்துவ ஞானி நீ்ட்சே (“I  have not come across any man who has hot the will to power” Nietsche) இப்படி பதவியை, அதிகாரத்தை தன் வயப்படுத்த அலறியடித்துக் கொண்டிருப்போர் மத்தியில், நான் இன்னொருவருக்கு வேலையாளாக, ஏவல் புரியவனாக, அடிமையாக இருந்து கொள்கிறேன் என்பவரிடம் அசட்டை மனப்பாங்கு உள்ளதென அறிந்து கொள்ளலாம்.

உண்மையில் இப்படி பணியாள் வேலை செய்வதை இவர்கள் துய்த்து மகிழ்வார்கள்.

ஒருமுறை காதலில் விழுந்த வாலிபன் ஒருவன் ஆற்றுப்படுத்துனரிடம் ஆலோசனை பெற வந்தான். அவர்களது உறவு பற்றி தெரிந்து கொண்ட ஆற்றுப்படுத்துனர்,“நீ அவளை மணந்தால் காலமெல்லாம் அவளுக்கு நீ அடிமையாகவே இருக்க நேரிடும்” எனக் கூறிய போது வாலிபன் ஆற்றுப்படுத்துனரிடம்,“அவ்வாறு அவளது ஆதிக்கத்திற்கு அடிபணிவதில் எனக்கு மகிழ்ச்சி தான்” எனக் கூறிவிட்டு,“எங்கள் வீட்டிலும் எங்கள் அப்பாவும், அம்மா சொற்படிதான் நடக்கிறார்” என்று கூறியபோது ஆற்றுப்படுத்துனர் வாயடைத்துப் போனார்.

‘மனமே மனிதன்’ என கூறினாலும் மனம் சொல்வதெல்லாம் நாம் செய்வதால் வம்பில் மாட்டிக்கொள்வோம். ஆகவே தான் “மனம் போன போக்கெல்லாம் மனிதன் போகலாமா” என பாடல் கூறுகிறது. மனதைப் பொறுத்தமட்டில் அது ஒரு நல்ல வேலையாளாக இருக்க முடியும் தவிர அது நல்ல எஜமானாக இருக்க முடியாது (Mind is a good servant but a bad master). மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத்தான் மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் உள்ளன. அசட்டை முகத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அவருக்கு கீழ் இருப்பவர்களின் கதி அதோகதிதான்- அடக்கி ஆளும் நபராக இருப்பார்.

5 திருப்திகரமாக கடமையை செய்வார்

அசட்டை முகத்தவர் தனது கடமையைச் செய்வதில் கருத்தாய் இருப்பவர். அடுத்தவர்களை மகிழ்விக்கும், திருப்திப்படுத்தும் அளவு தனது கடமையைச் செய்வார். சொல்லப்போனால் பிறரை திருப்திப்படுத்தி மகிழ்வித்து இன்பம் காண்பார்.

முன்பெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது,“நாங்கள் எங்கள் மேலதிகாரிகள் திருப்திப்படும் வகையில் எங்கள் கடமையைச் செய்வோம்” என எழுதிக் கொடுப்போம் (we will discharge our duties to the fullest satisfaction of our seniors).

ஒருமுறை ஒரு கணவனும் மனைவியும் ஆற்றுப்படுத்துனரிடம் ஒரு முறையீட்டோடு வந்தார்கள். மனைவியின் கையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. விசாரித்ததில் அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என தெரிய வந்தது. கையில் இரத்த காயம் எப்படி வந்தது என ஆற்றுப்படுத்துனர் வினவிய போது நடந்ததை கணவன் கூறினான்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இரண்டு மதங்களைச் சார்ந்தவர்கள். திருமணம் முடிந்த உடனே தங்கள் குடும்ப வாழ்க்கையில் மதம் ஒரு நாளும் பிரச்சனையாக வரவே கூடாது என தீர்மானம் செய்து கொண்டனர். அவள் தனது சமய சடங்குகளிலும் இவன் தனது மத ரீதியான சடங்குகளிலும் கலந்து கொண்டனர். ஒருவர் ஒருவரது சமயப் பற்றை மதித்து வாழ்ந்தனர்.

ஆனால், நாள்கள் செல்ல செல்ல கணவன் தனது அன்பு மனைவியிடம், தனக்காக அவள் தனது நெற்றியில் பொட்டு வைக்குமாறு கூறினான். ஆனால், மனைவிேயா அதற்கு உடன்படவில்லை. இவளது மத நம்பிக்கை இவளை நெற்றியில் பொட்டு வைக்க அனுமதிக்கவில்லை. திருமண ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி தனிப்பட்ட மனிதனின் மத நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்றாள். ஆனால், அவன் விடுவதாக இல்லை. ஒரு பொட்டு வைத்தால் என்ன என கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு நாள் இவனது தொந்தரவு தாங்காமல் அவள் “உங்களுக்கு பொண்டாட்டி முக்கியமல்ல; பொட்டுதானே முக்கியம்” எனக் கூறியவாறு அடுக்களைக்குச் சென்று ஒரு கத்தியை எடுத்து கையில் கீறிக் கொண்டாள். பீறிட்டு வந்த இரத்தத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து “இது போதுமா?” என கணவனிடம் கேட்டாள்.

அரண்டுபோன கணவன் ஆற்றுப்படுத்துனரிடம் அவளை அழைத்துச் சென்றான். ஆற்றுப்படுத்துனர் அவர்களது காதல் திருமணத்தின் நோக்கத்தைக் கேட்டார். அவர்கள் அடுத்தவர் தன்னை மகிழ்விப்பார், திருப்திப்படுத்துவார் என நம்பி திருமணம் செய்ததாகக் கூறினார்கள். அவர் அவர்களிடம் உங்கள் நோக்கத்தின் அடிப்படையே தவறானதாகும். ஒரு கணவன் தன் மனைவியை நான் எப்படி திருப்திப்படுத்த முடியும் என ஏங்க வேண்டும். இதேபோல மனைவி தன் கணவனை எவ்வாறெல்லாம் திருப்திப்படுத்த முடியும் என்று தான் சிந்திக்க வேண்டும். – அடுத்தவர் என்னை எப்படி திருப்திப்படுத்துவார் என நினைக்காதீர்கள். அப்படியானால் பொட்டு ஒரு பிரச்சனையாகவே இராது என்றார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட தம்பதியர் ஒப்புரவானார்கள். l