வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகினில் சாதித்து தம்மின் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்ற உயிர்த்துடிப்பு என்பது இயல்பாகவே பெரும்பான்மையானவரிடத்து இருக்கும். உண்மையில் எண்ணியவர்களெல்லாம் சாதித்து இடம்பெற்றனரா? என்றால் வெகுசிலரே எண்ணியதை எண்ணியவாறு எய்தினர் என்பதுதான் வரலாறு. தற்போது பன்னிரெண்டாம் வகுப்புத்தேர்வுகள் நிறைவடைந்து தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்களுக்கு எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எந்தக் கல்லூரியில் சேர்ந்தால் சிறப்பாகப் படித்து வேலைக்கான வாய்ப்பும் கிட்டும்? என்பன போன்ற பல தேடல் சிதறல்கள் இருக்கும். பெற்றோருக்கும் தன்னைவிட தன் மக்கள் சிறப்பாகப் பயின்று உலகம் போற்ற சாதிக்க வேண்டும் என்ற ஆன்ற எதிர்பார்ப்பு இயல்பாக இருக்கும். இந்நிலையில் எதிர்பார்த்த துறை கிடைக்கவில்லை என்றாலோ, கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றாலோ, மனம் உடைந்து தன் எதிர்காலமே இருண்டு விட்டதாக சுருண்டு போகும் மாணவர்களையும் நம்மால் காணமுடியும்.
மதிப்பெண்களால் நிர்ணயிக்கப்படுகின்ற துறைகளால் மட்டுமே அறிவின் உச்சத்தையோ. சாதிக்கும் மனப்பான்மையையோ பெறமுடியுமா? என்ற வினாவினை ஒவ்வொரு மாணவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். கல்லூரிக்காலம் என்பது பள்ளி அளவில் வளர்க்கப்பெற்ற அறிவிற்கு ஊட்டம் சேர்க்கும் ஒன்றே தவிர, அடிப்படை அறிவைத் தரக்கூடிய அமுதசுரபியன்று. எந்தக் கல்லூரி என்பதைவிட. எந்தத் துறை என்பதைவிட. எந்த மனப்பான்மையில் ஒன்றைப் பார்க்கின்றோம் என்பதில்தான் ஒருவரின் எண்ணக்கரு செயல் உருவாக்கம் பெற்று பெருமிதத்தைக் கூட்டுகின்றது. இது மாணவருக்கு மட்டுமன்று, கல்வியை தரக்கூடிய கல்லூரிகளுக்கும் இவ்வுகந்த மனப்பான்மையை மாணவ மனங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்ய வேண்டிய கடமையிருக்கின்றது. இதனையே உலகத்தின் தலைசிறந்த பேச்சாளராக கருதப்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள்,
“ஒரு பல்கலைக்கழகத்தின் முதல் கடமையானது உண்மையான அறிவைக் கொடுப்பது, தொழிலை அல்ல, நல்ல குணத்தைக் கொடுப்பது, தொழில் நுட்பங்களை அல்ல” என்பார். எனவே குறிப்பிட்ட கல்லூரி எந்தத் தரநிலையில் இருக்கிறது. அங்குப் படித்தவர்கள் எல்லோரும் சிறந்த வல்லுனர்களாக உருவாக்கம் பெற்றுவிட்டார்களா? என்றெல்லாம் கணிப்பதில் நேரம் செலவிடாது, மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கும், உரிய துறைத்தேர்வுக்கும் பொருத்தமான இடம்தரக்கூடிய கல்விக்கூடத்தில் சேர்ந்து தரமுயர்த்திக்கொள்ளக்கூடிய உரிய முயற்சியில் ஈடுபடுவதே அறிவார்ந்த செயலாக அமைந்திடும். உண்மையான வெற்றி என்பது நல்ல குணவிழுமங்களை மேம்படுத்திக்கொள்வதில் தான் இருக்கின்றது. பெரும்பாலான கல்விக்கூடங்கள் கூட வியாபாரக்கூடங்களாக ஆகிவிட்ட நிலையில், பெற்றோருக்கும் இடரினை நிகழ்த்தாது, சாதிக்க வேண்டிய மனப்பான்மையை மட்டுமே துணையாகக்கொண்டு இடம்தரக்கூடிய கல்லூரியில் சேர்ந்து அறிவிற்கான தேடலை விரைவுபடுத்த வேண்டும்.
ஒருவர் தன்னின் மனப்பான்மையை நிறை செய்துகொள்வதன் வாயிலாக தங்களை நினைத்தவாறு மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் மெய்யான வரலாற்று உண்மைகள்.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்”
(குறள். 661)
எனவே,
- மாணவர்கள் தங்களின் மெய்யான திறன் எதிலுள்ளது என்பதில் தெளிவு காணவேண்டும்
- தேர்ந்தெடுத்த துறையில் சாதித்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் வெற்றிக்கான நுட்பங்களை கண்டறிய வேண்டும்
- எதைப் படிக்கின்றோம் என்பதைவிட, எடுத்த துறையினில் நிபுணத்துவம் பெறுவதற்கான முயற்சிகளை முழுநேரப்பணியாகக் கொள்ள வேண்டும்
- அசாதரண முயற்சியுடையவர்களால், அறியப்படாத துறைகள்கூட துலக்கம் பெற்றதை நித்தமும் சிந்தையில் கொண்டு செயலாற்ற வேண்டும்
- எவருடனும் தங்களை ஒப்பிடாது, தங்களின் கணிப்பினால் மட்டுமே வாழக்கூடிய தன்மதிப்புணர்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் தங்களைப் பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த நன்றியினை அர்ப்பணிக்கக்கூடிய புனிதவுணர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும்
- மற்றவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும் என்ற விட்டகலா மனப்பான்மையுடன் அன்றன்று செயலினை நிதம் புரிய வேண்டும். என்றவழி மனப்பான்மை செறிவுடன் மாணவர்கள் தேர்ந்திட்ட துறைகளில் செயலாக்கம் நிகழ்த்தும் போதும் அனைத்தும் மகிழ்ச்சியான அனுபவங்களாகவே அமைந்திடும்.
“நீங்கள் மிகவும் நேசிக்கும் வேலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் வாழ்வில் ஒருநாள்கூட வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது” என்பார் கன்பூசியஸ், இக்கூற்றின்வழி, உள்ளார்ந்த தேடலில் எழுச்சிப்பெறும் எந்தச் சிந்தனையும் ஒருவர் எதிர்பார்த்ததைவிட மேலான வெற்றியைத் தரும் என்பதுதான் சாதித்தவர்களின் வரலாறாக இருப்பதையும் அறியமுடிகின்றது. எனவே மனதின்கண் உள்ளும் சிந்தனைகளை எல்லாம் உடன்மறை விழிப்புணர்வுடன் நோக்கி அதனை செயலாக்கத் துணிபவர்களுக்கு இயலாதது என்பது ஒன்றும் இல்லை. ஏனெனின் அவர்கள் புலம்புவதில்லை மாறாக இருப்பதைக் கொண்டு மனதில் இருக்கைக் கொண்ட இலக்குகளுக்கு வினைபுரிகின்றார்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக,
“அறிவுடையார் எல்லாம் உடையார்” (குறள் 430) என்றவழி, கையில் என்ன இருக்கிறது, என்பதைவிட இருப்பதைக் கொண்டு இவ்வையத்தில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் அறிவார்ந்த முறையில் செயலாற்றுபவர்களே செகத்தின் செவ்வியர்களாக சான்றோர்களால் எண்ணப்படுகின்றார்கள். எனவே மாணவ மாண்புகள்,
- உரிய துறையை தேர்ந்தெடுத்தல்,
- கிடைக்கும் கல்லூரியில் சேருதல்,
- அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல்
- பெற்றோர்களையும், ஆசிரியப் பெரு மக்களையும் நித்தமும் நன்றியுடன் எண்ணுதல்
- கனிந்த உள்ளத்தையும் கடின முயற்சியும் முதன்மையாக்குதல்
- எய்த வேண்டிய இலக்குகளை நித்தமும் ஊக்கமுடன் எண்ணிப்பார்த்தல்
- இறுதியில் கிடைக்கக்கூடிய பலன்களை உள்வாங்கி உற்சாகமுடன் செயலாற்றுதல்.
என்றவழி தொழிலாற்றி கலங்குபவர்களாக இலங்காது, உலகத்தையே தங்களின் புத்தாக்க மனப்பான்மை வழிமுறைகளால் “கலக்குபவர்களாக” வீறுபெற வேண்டும்.