இளைஞர் உலகம்


பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

அசட்டை முகத்தவர் (Supine Temperament)

இதுவரை ஸ்வோட் ஆய்வில் (SWOT Analysis) நான்கு உளப்பாங்குகளை – சிரிமுகத்தவர், அழுமுகத்தவர், கடுமுகத்தவர், தூங்குமுகத்தவர் – உடையோரின் பொதுமைப் பண்புகள், பலம், பலவீனம், சீர்திருத்தம் பற்றிப் பார்த்தோம். இறுதியாக நாம் அசட்டை முகத்தவரைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அசட்டை முகத்தவர் என்பவர் சிரிமுகத்தவரும் அழுமுகத்தவரும் இணைந்த கலவையாகும் – அழுமுகத்தவரைப் போன்று சமூக வெட்கம் உடையவர் போல், சமூக உறவு வேண்டாதவர் போல் காணப்படுவார்; ஆனால் அதேவேளையில் சிரிமுகத்தவரைப் போல் சமூக உறவுக்காக ஏங்குபவர் போல் இருப்பார்கள்.

பொதுமைப் பண்புகள்

  1. மனந்திறந்து பேசாதவர்கள் (Not Expressive) :

‘‘உரையாடல் இல்லாத உறவு தேய்பிறை போல் தேய்ந்து போகும்’’ என்பார் ஒரு கிரேக்க அறிஞர். அசட்டை முகத்தவர் தங்கள் உள்ளக் கிடக்கையை அடுத்தவரிடம் வெளிப்படையாகச் சொல்வதில்லை. மற்றவர்கள் இவர் மனதிலிருப்பதை தாங்களாகவே கண்டுபிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். சுருங்கச் சொன்னால் இவர்களது மன ஓட்டத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

இரஷ்ய நாடு, அமெரிக்க ஐக்கிய நாடு போன்று பல நாடுகளின் ஒன்றிப்பாக சோவியத் யூனியன் என்று இருந்த காலத்தில் அங்கு நடக்கும் அநியாயங்கள், அட்டூழியங்களை வெளி உலகத்தார் யாரும் அறிந்துகொள்ள முடியவில்லை. இதனால், சோவியத் யூனியனை “இரும்புத்திரை” (Iron Curtain) என்று அழைப்பார்கள். அதுபோல பல கவிதைகளில் இரட்டைத்தன்மை (ambivalence) இருப்பதைக் காணலாம். உலகமகா கவிஞர் ஷேக்ஸ்பியரின் கவிதை நாடகங்களில் எந்த பாத்திரத்தில் ஷேக்ஸ்பியர் தன்னைப் பற்றிய சுயசரிதையை வெளியிடுகிறார் என உலகத்தில் இதுவரை யாரும் நம்பத்தகுந்த விதத்தில் விளக்கியதில்லை. இதனால் டி.எஸ். எலியட் என்ற ஆங்கில கவிஞர் “ஷேக்ஸ்பியர் தனது ஆக்கங்களில் எங்கும் இருக்கிறார்; ஆனால் ஓர் இடத்தில் கூட அவரை காணமுடியவில்லை” (In his works Shakespeare is everywhere present and everywhere absent) என்பார். இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்ற மனவியல் ரீதியான நாவல்களும் (Psychological Novels) இவ்வாறு தான் உள்ளன. அறிவியல் ரீதியாக அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. பாரம்பரிய நாவல்கள் வழக்கமாக தெளிந்த நீரோடை போன்று இருக்கும். எனவே புரிந்துகொள்ள முடியாதபடி தங்களை மறைத்துக் கொள்ளும் அசட்டை முகத்தினர் பேரறிஞராக பெரிய அறிவாளிகளாக இருக்க முடியும். ஆனால் சொந்த வாழ்க்கையில் குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் ஒருவர் இத்தகைய அசட்டை முக உளப்பாங்கை கொண்டிருந்தால் பிரச்சினைதான்.

எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்

அசட்டை முகத்தினர் தொட்டால் சினுங்கி போன்ற இயல்புள்ளவர்கள். ஒரு சிறு எதிர்மறை வார்த்தையால் முடங்கிப் போவார்கள். இது இவர்களது அழுமுகத்தவரின் தாக்கமாகும். ஆனால் பல சமயங்களில் மனவெழுச்சியுடன் செயல்படுவார்கள். இதற்குக் காரணம் இவர்களிடமுள்ள சிரிமுகத்தவரின் தாக்கமாகும். அதாவது இவர் இப்படிப்பட்டவர்தான் என அறுதியிட்டுக் கூறமுடியாது. எப்போது பதுங்குவார்கள், எப்போது பாய்வார்கள் என யாருக்கும் தெரியாது. அழுமுக, சிரிமுக இயல்புகள் இணைந்திருப்பதால் மனச்சிதைவு நோய் உள்ளவர்போல் (Schizophrenia) காணப்படுவர். ஆனால் உண்மையில் இவர் நோயாளி அல்ல; மாறாக இரு உளப்பாங்குகளின் இணைப்பாகும். இவர்களோடு உறவாடுபவர்கள் இந்த புரிதலை கொண்டிருந்தால் இவர்களை சமாளிப்பது எளிதாகும்.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது மனைவியுடன் இத்தகைய போக்கைக் கொண்டிருந்ததால் விசயம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. விசயத்தைக் கேட்ட நீதிபதி மனைவியின் சார்பாக தீர்ப்பு வழங்கிவிட்டார். ஒரு குழந்தை இருந்த பிறகும் இருவரும் இணைந்து வாழ முடியவில்லை. ஆனால் இன்று குடிகார கணவன்மார் குடித்துவிட்டு ஒருவிதம், குடிபோதைக்கு அடிமையாகாமலிருக்கும் போது ஒருவிதம் என மாறி, மாறி செயல்படுவதை சகித்துக் கொண்டு, பல்லை கடித்துக் கொண்டு வாழ்கின்ற மனைவிகள் நம் சமுதாயத்தில் நிறைய உண்டு. சொல்லப் போனால் எல்லா மனிதருக்கு ஒரு ஒளிரும் பக்கம் உண்டு என்றால், இருளான பக்கம் (Dark side) ஒன்றும் உண்டு என்பதை மறக்கக்கூடாது.

(தொடரும்)