வழிகாட்டும் ஆளுமை – 12


திரு. நந்தகுமார் IRS

வாழ்க்கையில் பலர் இது கிடைக்க வேண்டும், நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பின் அது அனைத்தும் நடக்கவில்லை என்றால் பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். இதைப்பற்றி நான் அடிக்கடி தீவிரமாக யோசிப்பதுண்டு. ஏன்? இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று. அப்படி யோசிக்கும்போது பேராசை என்பது ஒன்றுமல்ல பெரிய ஆசைதான். அது அனைவருக்கும் வரும் இயல்பு தான். ஆனால், அந்தப் பெரிய ஆசைகள் எல்லாம் நாம் அடைவதற்கான ஆளுமையைப் பற்றி யோசிக்கும் போதும், அதற்கான செயல் திறமை பற்றி சிந்திக்கும் போது தான், அந்தப் பேராசை நிறைவேறுகிறதா? இல்லை நிராசையாக நிராகரிக்கப்படுகிறதா? என்று புரிய வரும்.

உதாரணமாக நான் ஐந்து அடி இருக்கிறேன் எனக்கு 10 அடி தூரத்தை தாண்ட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது, உண்மையில் என்னால் முடியுமா என்றால் இல்லை, அதற்கான திறனும் என்னிடம் இல்லை. ஆனால் நான் ஆசைப்பட்டுவிட்டேன்; அதற்காக நான் என்ன செய்ய வேண்டும். நான் ஒரு குச்சியை கையில் எடுக்கிறேன். நிச்சயமாக அந்த குச்சியின்  உதவியுடன் என்னால் அந்த பத்து அடிப் பள்ளத்தை தாண்ட முயல முடியும்.

நம் அனைவரிடத்திலும் ஆசைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கான திறமையையும் பயிற்சியையும் நாம் வளர்த்துக் கொள்வதில்லை. ஒரு பெட்டிக் கடைக்காரர் இருக்கிறார். அவரின் கடையில் உள்ள மொத்த சரக்கு ரூபாய் 10,000 தான் என்றால் அவர் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அது தான் பேராசை. ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்க வேண்டும், இதனை அடைய வேண்டும் என்றால் அதற்கான சிந்தனையும், பயிற்சியும், திறனும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்குமே படித்து முடித்தவுடன் சம்பாதிக்க வேண்டும், பெரிய பணக்காரராக வேண்டும் என்று ஆசை இயல்பாகவே இருக்கும். உண்மையில் நம் படிப்புக்கும், நம் சம்பாத்தியத்திற்கும் அந்த அளவுக்கு சம்மந்தம் இருக்காது. நீங்கள் பெரிய, பெரிய தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்களையும் பாருங்கள். இவர்கள் அனைவருமே சிறிய ஆசைகளை வளர்க்கவில்லை, ஆரம்பத்திலேயே ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், எனக்கு என்று ஒரு வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தரமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்று பெரிய ஆசைகளை வளர்த்து, அதற்காக சிந்தித்து, உழைத்து நினைத்த இலக்கை அடைந்தவர்கள் தான். நாம் இன்று பார்த்து வியந்துக் கொண்டிருக்கின்ற அனைத்து  உயர்நிலைத் தொழிலாளர்களும், பணக்காரர்களும். இப்படி உயர்ந்தவர்கள் தான்.

இதுவாக வேண்டும், இதனை அடைய வேண்டும் என்று ஆசைகளுடன், அதனை அடைவதற்கான திறனும், சிந்தனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பலரின் ஆசைகளில் நிலைத்தன்மை இருப்பதில்லை. எனக்கும் சின்ன வயதில் பெரிய பாடகராக வேண்டும், பெரிய ஓவியராக வேண்டும் என்ற ஆசைகள் இருந்தன. ஆனால் நான் ஒரு பாடகராகவோ, ஓவியராகவோ முடியவில்லை.  என்னதான் பல ஆசைகள் இருந்தாலும் நாம் அந்த ஆசையில் உறுதியாக, நிலைத்தன்மையுடன் இருந்து ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

ஒருவர் மெக்கானிக் பொறியாளர் படிப்பைப் படித்துவிட்டு சிவில் எஞ்சினியராக முடியுமா? அது போல நம் ஆசைகளில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும். மருத்துவம் படித்துவிட்டு நான்  பொறியாளராக வேண்டும் என்று பேராசைப் படலாமா? எனவே யார் ஒருவருடைய ஆசைகளில் தொடர்ச்சி இருக்கிறதோ, நிலைத்தன்மை இருக்கிறதோ அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

ஆசைகளின் தொடர்ச்சி இல்லாததால் தான் பலருக்கு அது நிராசையாகப் போய்விடுகிறது. நான் ..எஸ் தேர்வுக்கு தயார் செய்யும் போது என்னுடன் பலர் சேர்ந்து தயாரித்தார்கள். என்னைவிடத் திறமையான, அதிபுத்திசாலியான பலர் என்னுடன் சேர்ந்து போட்டி தேர்வுக்கு தயாரித்தார்கள். அதில் பலர் எல்லா தேர்வுகளையும் எழுதுவார்கள். எந்த தேர்வு வந்தாலும் அதை எழுதி, எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் நுழைந்து விட வேண்டும் என்று இருந்தார்கள். ஆனால் என்னுடைய ஆசையில் ஒரு தொடர்ச்சி தான் இருந்தது.

நானும் மற்ற தேர்வுகளையும் எழுதி வந்தேன். ஆனால், என்னுடைய தயாரிப்பை ஒரே மாதிரியாக வடித்துக் கொண்டேன். சிவில் சர்வீஸ் தொடர்புடைய தேர்வுகளை எழுதுவது, அது குறித்து தயாரிப்பது என்றே நான் கொண்ட ஆசையில் நிலைத்தன்மையுடன், தொடர்ச்சியாக உழைத்தேன். அதேபோல உங்களின் ஆசை நிறைவானதாகவும்,  நிலையானதாகவும் இருக்க வேண்டும். எனக்கும் அதுபோன்று தான் நிறைவான ஆசையை வைத்திருந்தேன்.

விவேகானந்தர் கூறுவார் ‘‘நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகுகிறீர்கள்” ஆம் ஆசைப்படுங்கள், சிறிய சிறிய ஆசைகளாக இல்லாமல் பெரிய பெரிய விஷயத்திற்கு ஆசைப்படுங்கள். மேலும் உங்களின் ஆசையில் தொடங்கி, அந்த ஆசையை அடைவதற்கான செயல் திறன், அதற்கான ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்ட ஆசையில் நிலைத்தன்மையுடனும் இருங்கள், நிறைவான ஆசைகளாக வைத்திருங்கள். அப்படி இருந்தால் நிச்சயம் உங்கள் ஆசைகள் அனைத்தும் உலகத்தின் முன் நிறைவேறிக் கொண்டே இருக்கும். உங்களின் ஆசைப்படி உங்கள் வாழ்வு வெற்றி பெறட்டும்! வசந்தம் வீசட்டும்! வாழ்த்துகள்!!