சமூகப் பார்வை – 22
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
இந்த தேசம் தான் நம் அடையாளம். உலக அரங்கில் நம்மை இந்தியன் என அடையாளப்படுத்திக் கொள்ளும்போது நம் சாதி, மதம், மொழி, இனம் எல்லாம் தொலைந்து போகும். பண்பாடும் கலாச்சாரமும் நிறைந்த, வேகமாக வளரும் ஒரு நாட்டின் பிரஜை என்ற அர்த்தமுள்ள கர்வம் நம் மனதில் சட்டென வந்து உட்காரும். சுதந்திரம் பெற்றுக் கடந்த 75 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறோம். இன்றைக்கு உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அறநெறியில் செயல்பட்டுவரும் ஜனநாயக நாடாகத் திகழ்கிறோம்.
அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம். சுதந்திரம் பெற்ற நாட்டில் வளர்ச்சி என்பது இவை மட்டும் தானா? நிச்சயமாக இல்லை. எல்லோருக்குமான நல்வாழ்வைச் சாத்தியப்படுத்துவது தான் சுதந்திரத்தின் அடிப்படையாக இருக்கமுடியும். அதை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்றாலும் அதனை வேகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், கல்வி, வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
பெண்களின் நிலை
பெண்தான் சமுதாயத்தின் ஆணிவேர். பெண்தான் இந்த சமுதாயத்தையே உருவாக்குபவள். சமுதாயம் சிறப்பானதாக அமையப் பெண்ணே காரணமாவாள். அதனால், பெண்ணின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக அமைகிறது. அதற்குப் பெண் அனைத்துத் தளங்களிலும் சுதந்திரம் பெற்றவளாக இருத்தல் வேண்டும். பெண்ணுக்கு அதிகாரமளித்தல் மிக அவசியமானதாகும்.
அதிகாரமளித்தலுக்கு அடித்தளம் கல்வி. ஆனால், நம் தேசத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வயதில் அந்த சிறுமியைத் திருமண வாழ்வுக்குத் தயார் செய்வதுதான் குடும்பத்தின் பிரதான பணியாக உள்ளது. அதையும் தாண்டி ஒரு பெண் படித்து நல்ல வேலைக்குச் சென்றாலும் திருமணத்துக்குப் பிறகு, குழந்தை வளர்ப்பைக் காரணம் காட்டி வேலைக்குச் செல்வது தடை செய்யப்படுகிறது. சரி, இதையும் கடந்து வேலைக்குச் சென்றால் பணியிடத்தில் பாலினப் பாகுபாட்டினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில்தான் பெண்கள் பணியிடங்களில் அதிகப் பாகுபாட்டை எதிர்கொள்வதாக “லிங்டு இன்” ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் பாலினப் பாகுபாடு காரணமாக 85 சதவிகிதப் பெண்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை இழக்கின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7 சதவிகிதம் தான்.
இந்திய மக்கள் தொகையில் 48 சதவிகிதம் பெண்கள். தற்போது பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்கள் எண்ணிக்கையைவிடப் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய குடும்ப நல சர்வே-5 தெரிவிக்கிறது. ஆனால், இந்திய வேலைசார் பங்களிப்பில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் மட்டுமே.
2017 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், சுமார் 2.1 கோடி பெண்கள் நிரந்தரமாக தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். அதாவது, அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அல்லது வேலை தேடாமலே இருக்கிறார்கள். சி.எம்.ஐ.இ (சென்டர் ஃபார் மானிட்டரிங் எக்கானமி) தரவுகள் குறிப்பிடுவதைப் போல், தொழிலாளர்களில் பெண்களின் பங்கு பல ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. 2004-05 ஆம் ஆண்டில், இளம் (15 வயது முதல் 29 வயது வரை) கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 42.8 சதவிகிதமாக இருந்தது. இது இன்று 15.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
கணவர், குழந்தைகள், முதியோர் ஆகியோர்களைக் கவனித்துக் கொள்வது, சமைப்பது மற்றும் சுத்தம் செய்வது என, சுமார் 4 மணிநேரம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியமில்லாத சேவைகளைச் செய்கிறார்கள் நம்நாட்டுப் பெண்கள். ஆனால், ஆண்கள் வெறும் 25 நிமிடங்களே ஊதியம் செலுத்தப்படாத வேலைகளைச் செய்கிறார்கள் என்கிறது புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை. பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம் குடும்பத்தை நிர்வகிப்பதிலேயே பெருமளவு நேரத்தைச் செலவிடுவதால்தான் என்பதனை இதன்மூலம் உணரமுடிகிறது. கிராமப்புறங்களில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்குமே வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில், வேலையின்மை விகிதம் பெண் தொழிலாளர்களிடையே உயர்ந்து வருகிறது.
பணியிடத்திற்குச் சென்று திரும்புவது நகர்ப்புற பெண்களுக்கு இருக்கும் பல தடைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தினுடைய ஓர் ஆய்வறிக்கையின்படி, பெரும்பாலான திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று வர ஏதாவது ஒருவகையில் தங்கள் கணவர் அல்லது மாமனாரை நம்பியுள்ளனர் என்கிறது. இதுவும்கூட வேலைக்குச் செல்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டால், 2025இல் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை விட 60 சதவீதம் உயரும் என்று ‘மெக்கென்சி க்ளோபல் இன்ஸ்டிடியூட்’ ஆய்வறிக்கை கூறுகிறது. அதை நோக்கியான திட்டங்கள் அவசியம்.
பெண்களுக்கு எதிரான வன்முறை
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, குழந்தைத் திருமணம் எனப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, “கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,71,503 குற்றங்கள் பதிவாகியுள்ளன” என்றார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையின்படி 2020இல் நாடு முழுவதும் சுமார் 29 ஆயிரம் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து 153 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் 25,498 பேர் 18 வயதைத் தாண்டியவர்கள், 2,655 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர். சராசரியாகத் தினசரி 77 பலாத்கார வழக்கு என்ற வீதத்தில் பதிவாகி உள்ளது. இந்நிலை மாறவேண்டும்.
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகத் தமிழகக் காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குழந்தைகள் நிலை
2020இல் நம் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவானதாகத் தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் தெரிவிக்கிறது. நம் நாட்டில், கிட்டத்தட்ட 30 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் கூறியிருக்கிறது. இதில் 4.70 லட்சம் குழந்தைகள் அரசின் காப்பகங்களில் இருக்கிறார்கள் என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் படி, 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவிகிதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
இதுபற்றி குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்பான “கிரை” அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா கூறுகையில் “ஆன்லைனில் இருக்கக்கூடிய ஆபத்துகள் குறித்துச் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்படாததால் அவர்கள் இது போன்ற சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர், குழந்தைகள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறல்களைத் தடுப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் கவனத்துடன் இருந்து கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும் என்கிறார். பெண் குழந்தைகளுக்கு எதிரான 95 சதவிகித பாலியல் கொடுமைகளை பாலியல் கல்வி மூலம் சரி செய்யமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
கல்வி
ஒரு தனிநபருக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் கல்வி உதவுகிறது. 2011ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர்.
இந்தியப் பள்ளிக் கல்வி (தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை) உலகத்திலேயே மிகவும் பெரியது ஆகும். இந்தியாவில் 2019-20ஆம் ஆண்டுக் கணக்கின்படி 15 லட்சத்திற்குமேல் பள்ளிகளும், 95 லட்சம் ஆசிரியர்களும், 26.5 கோடி மாணவர்களும் பயில்கின்றனர். இதில் 16.6 சதவிகித பள்ளிகளில் மின்சார இணைப்பு இல்லை, 3.1 சதவிகித மாணவியர்களுக்கும், 4.1 சதவிகித மாணவர்களுக்கும் கழிப்பிட வசதியில்லை. பள்ளிக் கல்வியில் பல்வேறு நிலைகளில் பீகார், ஜார்க்கண்ட், ஆகிய இரண்டு மாநிலங்கள் தேசிய அளவில் மிகவும் பின்தங்கியுள்ளன. கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்கள் சிறந்த நிலையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் தொடக்கப் பள்ளிக் கல்விக்கான ஆசிரியர் மாணவர் விகிதம் 1:55.4 ஆகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது 1:30.6 ஆகவும் உள்ளது. பல நிலைகளில் இவ்விரண்டு மாநிலங்களும் பின்தங்கிய நிலையில் உள்ளன. (GoI (2021): “Unified District Information System for Education Plus 2019-20,” Ministry of Education, New Delhi). இம்மாநிலங்களில் கல்வியை மேம்படுத்தல் அவசியமாகிறது.
ஏழ்மை, வறுமை
பசி, பட்டினி இல்லாத தேசமே அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கமுடியும். ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளைக் கொண்டு
Global Hunger Index எனப்படும் உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்திருந்தது.
ஏழ்மையினைப் வரையறுத்து, அதனை அகற்ற நிதி அயோக் தலைமையில் 11 அமைச்சகங்களை (1.புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம். 2.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, 3. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, 4. ஆற்றல், 5. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், 6. சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், 7. கிராமப்புற மேம்பாடு, 8. உணவு மற்றும் பொதுவிநியோகம், 9. பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு, 10. குடிநீர் மற்றும் கழிவுநீர், 11. நிதிச் சேவைகள்) ஒருங்கிணைத்து, பன்முக ஏழ்மை குறியீட்டெண்ணிற்கான கூட்டுக்குழுவை (MPICC) மத்திய அரசு அமைத்தது. இதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் பன்முக ஏழ்மை குறியீட்டெண் 2021 நிதி ஆயோகினால் 27.011.2021 அன்று வெளியிடப்பட்டது.
பன்முக ஏழ்மைக் குறியீடு கணக்கீடு படி, இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குடும்பங்கள் 19.9 சதவிகிதமாகவும், குழந்தைகள், பருவ வயதுடையோர் இறப்பு விகிதம் 1.88 சதவிகிதமாகவும் இருந்தது. மேலும், பள்ளிக் கல்வி எட்டாத குடும்பங்கள் 10.71 சதவிகிதமாகவும், பள்ளிக் கல்வி வருகை குறைபாடு உள்ள குடும்பங்கள் 5.23 சதவிகிதமாகவும், சமையல் எரிவாயு பெறாமல் உள்ள குடும்பங்கள் 23.13 சதவிகிதமாகவும், கழிவுநீர் வெளியேற்ற வசதியற்ற குடும்பங்கள் 21.32 சதவிகிதமாகவும், குடிநீர் வசதியற்ற குடும்பங்கள் 5.53 சதவிகிதமாகவும், மின்சார இணைப்பற்ற குடும்பங்கள் 8.29 சதவிகிதமாகவும், சரியான வீட்டு வசதி இல்லா குடும்பங்கள் 20.56 சதவிகிதமாகவும், சொத்துகளற்ற குடும்பங்கள் 8.37 சதவிகிதமாகவும், வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்கள் 5.37 சதவிகிதமாகவும் இருந்தன.
இதன்படி அதிக ஏழை மக்களைக் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களாகப் பீகார் (51.91 சதவிகித மக்கள்), ஜார்க்கண்ட் (42.16 சதவிகிதம்), உத்தரப் பிரதேசம் (37.79 சதவிகிதம்), மேகாலயா (32.7 சதவிகிதம்) அசாம் (32.67 சதவிகிதம்) மாநிலங்கள் உள்ளன. ஏழ்மை நிலையில் குறைவான மாநிலங்களில் கடைசி ஐந்து இடத்தை கேரளா (0.71 சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்), பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகியவை பெற்றுள்ளன.
தினசரி ஒருவர் 1.9 டாலர், அதாவது 145 ரூபாய்க்குக் கீழான வருமானத்தில் வாழும் நிலை இருந்தால் அவர் அதீத ஏழ்மை (தீவிர வறுமை) நிலையில் இருக்கிறார் என்பது உலக வங்கியின் வரையறை. “தனது மக்களை அதீத ஏழ்மை நிலையிலிருந்து இந்தியா ஏறக்குறைய மீட்டு விட்டது” என்கிறது ஐ.எம்.எஃப் அண்மை அறிக்கை. உலக வங்கியும் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், கடந்த 2011ஆம் ஆண்டு 22.5 சதவிகிதம் பேர் தீவிர வறுமையில் வாடிய நிலையில் 2019ஆல் அது 10.2 சதவிகிதம் ஆகக் குறைந்து உள்ளது” என்கிறது. “இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வறுமை குறையும் வேகம் நகர்ப்புறங்களைக் காட்டிலும் வியத்தகு முறையில் உள்ளது” என்கிறது உலக வங்கியின் அறிக்கை.
வேலையில்லாத் திண்டாட்டம்
இந்தியப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து கண்காணித்துவரும் மையத்தின் (சி.எம்.ஐ.இ. – சென்டர் ஃபார் மானிட்டரிங் எக்கானமி) தரவுகளின்படி, 2021 டிசம்பரில் இந்தியாவில் வேலை வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 5.30 கோடி. இவர்களில் 3.5 கோடிப் பேர் தீவிரமாக வேலை தேடுகிறவர்கள். 1.7 கோடிப் பேர் வேலை கிடைத்தால் பரவாயில்லை என்றிருப்பவர்கள். தீவிரமாக வேலை தேடும் 3.5 கோடிப் பேரில் 80 லட்சம் பேர் மகளிர். 1.7 கோடிப் பேரில் 90 லட்சம் பேர் மகளிர். இவர்கள் குடும்பச் சூழல் காரணமாகத் தீவிரமாகத் தேடவில்லை. ஆனால், அவர்களுக்கும் வேலை அவசியம். தமிழ்நாட்டில் 2020 பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக இருந்த வேலையின்மை 1.17 சதவிகிதம். 2021 பிப்ரவரியில் அது 2.7 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
2018ஆம் ஆண்டு சராசரியாகத் தினமும் வேலை இல்லாத 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனைத் தவிர்க்க தேசிய அளவில் காலியாக இருக்கும் வேலைகள், உலக அளவில் தேவைப்படும் பணியாளர்கள் ஆகியன குறித்து அறிந்து, துல்லியமாகக் கணக்கிட்டு அதற்கேற்ப பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களையும் மாற்றியமைக்கலாம். கல்வியானது வேலைவாய்ப்பையும் அளிப்பதாக இருக்கவேண்டும்.
குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்பது ஒரு வளர்ந்த நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. எனவே, பாலினப் பாகுபாடற்ற சமூகம் உருவாகி, அதில் குழந்தைகள் நலம் பேணப்பட்டு, அனைவருக்கும் ஏற்றத் தாழ்வற்ற கல்வி கிடைத்து, அந்த கல்வியானது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அந்த வேலைவாய்ப்பின் மூலம் வறுமையும் ஏழ்மையும் ஒழிந்தால் நாடு சீர்மிகு தேசமாகும். உலக அரங்கில் இன்னும் உற்று நோக்கப்படுவோம். இதனைச் சாத்தியமாக்க இந்த சுதந்திர தினத்தில் சூளுரைப்போம்..