முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 18
‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்
டாக்டர். மெ.ஞானசேகர்
கேசவன் நாயர் என்பவர் எழுதிய உயர்ந்த தலைமைத்துவத்தின் கூறுகள் (A Higher Standard of Leadership) என்ற நூலில் ‘காந்தியடிகள், என்றுமே அரசாங்கப் பதவிகளில் நீடிக்கவில்லை; அவரிடம் செல்வம் இல்லை; அவரிடம் இராணுவம் இல்லை; ஆனால், அவரால் இலட்சக்கணக்கானோரைத் திரட்ட முடிந்தது. அவருடைய குணம், முன்மாதிரித் தன்மை இலட்சக்கணக்கான மக்கள் தன்னாட்சி பெற, சுதந்திரம் அடைய, ஒன்றுபட்டுப் போராடச் ெசய்தது. பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அந்த இலட்சியம் அடையப்பட்டது’ என்று எழுதுகின்றார். இந்தக் கூற்றை உலகிலுள்ள எல்லா நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்; இன்றளவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் வரலாறு.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி, அன்பு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் சுதந்திரம் பெறலாம் என்று காந்தியடிகள் பேசிய போது, பெரியவர், ேஜ.பி. கிரிபலானி என்பவர் “காந்தி, உங்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. வன்முறை இல்லாமல் எந்தவொரு நாடும், சுதந்திரம் பெற்றதாக வரலாறு இல்லை” என்று கூறினார். அதற்கு காந்தியடிகள் “ஐயா, நீங்கள் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், கடந்த காலத்தில் ஒன்று நடக்கவில்லை என்பதற்காக, எதிர்காலத்திலும் அந்த ஒன்று நடக்காது என்று அர்த்தமில்லை” என்று பதில் சொன்னார். அதாவது, இதுவரை மென்முறைப் போராட்டம் வென்றதில்லை என்பதால், இனியும் சாத்தியமில்லை என்று எண்ண வேண்டாம் என்று கூறியதோடு, அதனை நிகழ்த்தியும் காட்டினார் மகாத்மா காந்தியடிகள்.
இளமையும் தொடக்கமும்
1869-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி கரம்சந்த் காந்தி, புத்லிபாய் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்தவர் காந்தி. தாத்தா ஓதா காந்தி என்ற உத்தம சந்திர காந்தி திவானாகப் பணிசெய்தவர். கரம்சந்த் காந்தியும் போர்பந்தர் என்னும் கடற்கரை நகரின் திவானாகப் பணிசெய்தவர். ராஜ குடும்பம். தாத்தா, தந்தை இருவரும் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், நேர்மையானவர்கள். தாயார் புத்லிபாய் சூரிய வழிபாடு செய்யாமல் உணவு உண்ணமாட்டார். ஒருவேளை சூரியனே உதிக்கவில்லை என்றால், “இன்று சூரிய பகவான் என்னைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றார்” என்று கூறி, உணவு உண்ணாதிருக்கும் திட மனம் கொண்டவர். இப்படி ஒழுக்கமும், தீரமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த காந்தியின் இளமைப் பருவம், எதிர்காலப் போக்கை நோக்கும் போது ஆச்சர்யமானதாக உள்ளது.
தனது 12 வயதில், கண்ணிழந்த தாய், தந்தையரைக் கண் போலக் காப்பாற்றிய சிரவணன் வாழ்வைச் சொல்லும் ‘பிதிர்பக்தி’ நூல் மூலம் அறிந்தார். இதன்மூலம் பெற்றோரை மதிக்க வேண்டும் என்பதை ஆழமாக மனதில் பெற்றுக் கொண்டார். அரிச்சந்திரன் நாடகம் பார்த்ததிலிருந்து உண்மை பேச வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். இதனால் தான், பள்ளி ஆய்வின் போது ஆசிரியர் ‘KETTLE’ என்ற வார்த்தையை மறைமுகமாகக் காட்டி, காந்திக்கு உதவிய போதும், அதைச் செய்யாமல், ‘தெரியாது’ என்பதை ஒத்துக் கொண்டார்.
ஆயினும் கூடாநட்பால் சில தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டார். பதிமூன்று வயது நடந்த போது கஸ்தூரிபாய் அம்மையாருடன் திருமணம் நடந்தது. மனைவிக்குத் தெரியாமல், தாய், தந்தையருக்குத் தெரியாமல் சில தவறுகளைச் செய்தார். பின்பு, குற்ற உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, தன் தவறுகளைத் தந்தைக்குக் கடிதமாக எழுதிக் காட்டினார். அதனை வாசித்த காந்தியின் தந்தை, கண்ணீர் வடித்ததோடு, ‘இனி இவ்வாறு செய்யாதே’ என்று கூறியதை வேத வாக்காகக் கொண்டு தன் தவறுகளிலிருந்து திருந்தினார். பலமுறை வாழ்வில் சோதனைகள் வந்த போதும், அவற்றைக் கடந்து நற்பண்புகளைக் கைக்கொண்டார் காந்தி.
அன்னையின் ஆசைக்கு ஏற்ப, இங்கிலாந்து சென்று, பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராகத் திரும்பினார் காந்தியடிகள். இப்படிப்புக் காலத்தில் தன் அன்னையை இழந்தார். குடும்பச் சூழல் காரணமாக வழக்கறிஞர் வேலைக்குச் சென்றார். முதல் வழக்கில் வாதாட முடியாமல், கைகால் நடுங்கிட, அடுத்தவரிடம் வழக்கை ஒப்படைத்துவிட்டு வந்தார். வழக்குகளே இல்லாத, வாதாடத் தெரியாத வழக்கறிஞர் என்று பெயர் ெபற்றார்.
இளமைப் பருவம் முதலே பயந்த குணம் கொண்டவர் காந்தி. படிப்பில் ஒன்றும் கெட்டிக்காரத்தனம் இல்லை. இரவு நேரங்களில் கூட விளக்கை ஏற்றிக்கொண்டு தூங்கும் குணம் கொண்டவர். இப்படி வளர்ந்த காந்தியடிகள் ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்று வந்ததே சாதனைதான். வழக்காட முடியாத சூழலில் மனு எழுதித்தரும் தொழிலைச் செய்தார். அச்சமயம், தென் ஆப்பிரிக்காவில், ஒரு வழக்குக்கு உதவியாக காந்தியை அனுப்பினார் காந்தியின் சகோதரர். எப்படியோ, ஒரு வேலை கிடைத்ததே என்று, சட்ட நுணுக்கங்களை மீண்டும் படித்துத் தெளிந்தார் காந்தி.
தென் ஆப்பிரிக்கப் பயணம்
‘தாதா அப்துல்லா’ என்பவரின் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒரு வழக்குக்கு உதவி செய்ய, கப்பல் பயணமாக வந்து சேர்ந்தார்.
வழக்காடு மன்றத்தில் தலைப்பாகையோடு காந்தி சென்றதை, அங்கிருந்த நீதிபதி ஏற்கவில்லை. வெள்ளையர்கள் மற்றும் மதக் காரணங்களுக்காக இசுலாமியர்கள் மட்டுமே தலைப்பாகை அணியலாம் என்பது எழுதப்படாத சட்டம். இந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்ற முதல் புறக்கணிப்பை காந்தி கண்டு வெறுப்புற்றார்; எதிர்ப்பைக் காட்டினார்.
தொடர்ந்து பிரிட்டோரியாவுக்குச் செல்ல இரயிலில் பயணிக்க, முதல் வகுப்புச் சீட்டுடன் வந்தார். ஆனால், அங்கு பயணித்த வெள்ளையர் அதை ஏற்கவில்லை. ‘நீ மூன்றாம் வகுப்பில்தான் பயணிக்க வேண்டும்’ என்று கூறிக் காந்தியை இரயிலிலிருந்து கீழே தள்ளியதோடு, அவரது உடைமைகளையும் நடைபாதையில் வீசிச் சென்றார். இரண்டாவது அவமானம்.
தொடர்ந்து அடுத்த இரயிலில் பயணித்துச் ெசன்ற போது, கோச் வண்டியில் ‘ஜோகன்னஸ்பர்க்’ செல்ல முயல்கையில், மீண்டும் வெள்ளையரால் அவமதிப்பு, தங்கும் விடுதியிலும், முடிவெட்டும் இடத்திலும் என்று எங்கு சென்றாலும் இந்தியர்கள் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார் காந்தியடிகள்.
தனக்கும், அங்கிருந்த மக்களுக்கும் நேர்கின்ற அவமானங்களை எதிர்க்க ஆரம்பித்தார். சாத்வீகமான முறையிலும், சட்ட ரீதியிலும் மக்களின் உரிமைக்காகப் போராடினார். தென்னாப்பிரிக்கா, செல்லுகின்ற வரை, பயந்து வாழ்ந்த காந்தியின் வாழ்வில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. வெள்ளை அரசின் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்று மக்களைத் திரட்டினார்.
இதற்கிடையில் தான் வழக்காட உதவிடச் சென்ற வழக்கைத் தீவிரமாகப் படித்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து சமாதானம் செய்து, வழக்குக்கான நீதிமன்றச் செலவைக் குறைத்து, சமரசமாக வழக்கை முடித்து வைத்தார். அதன் பிறகு இதுபோன்ற பல வழக்குகளைச் சாதுர்யமாக முடித்துக் கொடுத்தார்.
காந்தியடிகளின் புகழ் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களிடம் அதிகம் பரவியது. தங்களது கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தலைவராக அவரைப் பார்த்தார்கள். விளைவாக ‘நேட்டால் இந்திய காங்கிரஸ்’ என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கின்றார். இந்த இயக்கத்தின் மூலம் பல போராட்டங்களை மேற்கொண்டார். பல நேரங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டும் பிரச்சினைகளைத் தீர்த்தார். இச்சூழலில் ஓரளவுக்கு அங்கு வாழ்ந்த மக்களுக்கு உரிமை கிடைத்தது.
இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் காந்திக்கு இருந்தது. தென்னாப்பிரிக்க மக்கள் அவரை ஒரு நிபந்தனையுடன் இந்தியா அனுப்பினார்கள். அதாவது, மீண்டும் தென்னாப்பிரிக்காவில் பிரச்சினை எழுந்தால் காந்தியடிகள் வரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.
காந்தியடிகள், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள், மக்களிடம் வசூலித்த நன்கொடைகள், நகைகள் அனைத்தையும் முறையாக ஒப்படைத்துவிட்டு வந்தார். இச்சமயம், கஸ்தூரிபாய் அம்மையாருக்கு அன்போடு மக்கள் வழங்கிய பொன் நகைகளை அவர் வழங்கிட மறுத்தார். காந்தியடிகள் அதை ஏற்கவில்லை. பொதுப் பணிக்குத் தரப்படும் எந்தப் பொருளும், அதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். அனைத்தையும் பொறுப்புடன் ஒப்படைத்துவிட்டு, இந்தியா திரும்பினார்.
காந்தியடைந்த இந்தியா
ஏறக்குறைய இருபத்து ஐந்து ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் பயணித்த காந்தியடிகள் இந்தியா வந்தடைந்தார். இந்திய மண்ணில் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளதைக் கண்டு வருத்தப்பட்டார்.
ஆலயங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் மாநாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தூய்மையின்றி மக்கள் வாடுவதைக் கண்டு ‘சுகாதாரம் பேணுதலே முதல் பணி’ என்று அறிவுறுத்தினார்.
ஒரு சமயம் கஸ்தூரிபாய் அம்மையாரிடம், “நீ ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்தலாமே” என்று கூறினார். அதற்கு கஸ்தூரி பாய் “எனக்கு பள்ளி நடத்தும் அளவுக்கு மொழியறிவு, கல்வித் தகுதியில்லையே” என்று கூறினார். அப்போது காந்தியடிகள் “பள்ளியில் நீ பிள்ளைகளுக்கு சுகாதாரமாக இருப்பதைக் கற்றுக் கொடுக்கலாம், ஒழுங்காக பற் துலக்குவதைச் சொல்லித் தரலாம், சுற்றுப்புறத்தைப் பேணுதலை எடுத்துரைக்கலாம், இதுவே அடிப்படைக் கல்வி” என்று கூறினார். அந்த அளவிற்கு, சுகாதாரத்தை மேம்படுத்த காந்தியடிகள் முதலில் விரும்பினார்.
ஒரு சமயம் ஒரு செய்தியாளர் காந்தியடிகளிடம், “நீங்கள் சர்வாதிகாரியாக ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். காந்தி அவரிடம், “நான் ஒரு போதும் சர்வாதிகாரியாக இருக்க மாட்டேன். ஒருவேளை என்னை அப்படி வைத்துவிட்டால், நான் கவர்னர்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும், தூய்மைப் பணியாளர்களின் வீட்டுக்குச் சென்று, அவர்களது கழிப்பறைகளைத் தூய்மை செய்வேன்” என்று கூறினார். அதாவது, முதலில் கழிப்பறைகள் தூய்மையாக இருக்க வேண்டும். புறம் தூய்மையாக இருப்பது, அகம் தூய்மையுற உதவுகிறது என்பதே காந்தியின் கோட்பாடாக இருந்தது.
1915-ஆம் ஆண்டில், தனது 45-ஆம் வயதில் இந்தியா வந்தடைந்த காந்தியடிகள், அதிக நிலவரி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாகத் தன் போராட்டத்தைத் தொடங்கினார். 1921-ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மிதவாதத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் என்று இரண்டு நிலைப்பாடு கொண்ட தலைவர்களை அரவணைத்து, வழிகாட்ட வேண்டிய சூழல் காந்திக்கு இருந்தது.
1930-ஆம் ஆண்டு 250 மைல் தொலைவான தண்டி யாத்திரையை மேற்கொண்டார். உப்பு வரியை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்தது. 1942-ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை மேற்கொண்டார். இதற்கிடையில் பட்டியலின மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடினார்.
1930-ஆம் ஆண்டு முதல் வட்டமேஜை மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் காந்தியடிகளும், அண்ணல் அம்பேத்கரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டமன்றங்களில் தனிப்பட்ட வாக்குரிமை வேண்டும் என்று அம்பேத்கர் கேட்டார். இதனை அப்போதைய ஆங்கில அரசு ஆமோதித்தது. காந்தியடிகள் இது இந்துக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் பிரிக்கும் சூழ்ச்சி என்றார். பின்பு உண்ணாவிரதம் மேற்கொண்டார். அம்பேத்கர் தன் கோரிக்கையை கைவிட்டார்.
இதன்பிறகு பட்டியலின மக்கள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்ட காந்தியடிகள் அவர்களைக் ‘கடவுளின் மக்கள்’ என்று அழைத்தார். ஹரிஜன மக்கள் மேம்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்ய நாடு முழுவதும் பயணித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களிடம் நன்கொைட, நிலம் என்று பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதியை உருவாக்கிட உழைத்தார். ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லா இன மக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் வெள்ளையர்களுக்கு எதிராகத் தன் போராட்டங்களைத் தொடர்ந்தார். தேசியக் கொடியை வடிவமைத்த போதும் முதலில் மிகவும் குறைந்த அளவிலுள்ள மதங்களைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் வெண்ைம நிறமும், பின்பு பச்சை நிறமும், இறுதியில் இம்மக்களுக்கு அரணாக இருக்கும் காவி நிறமும் வரவேண்டும் என்று எழுதினார் காந்தியடிகள். இவ்வாறு சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து இந்திய தேசம் பயணிக்க வேண்டும் என்று பேராவல் கொண்டு இயங்கினார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம், ஒருபுறம் தொடர, நாட்டுக்குள்ளேயே வெடித்துக் கொண்டிருந்த சாதி, சமயப் போராட்டங்களையும் கவனிக்க வேண்டிய, சரிசெய்ய வேண்டிய தேவை காந்தியடிகளுக்கு ஏற்பட்டது. தன் இறுதி மூச்சு நிற்கும் வரை இதற்காகப் பாடுபட்டார்.
காந்தியடிகளும், தமிழ்நாடும்
1896-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி மிடுக்கான உடையணிந்து முதன்முதலில் காந்தி சென்னை வந்துள்ளார். ஜார்ஜ் டவுனில், ஆங்கிலேயர் நடத்திய ‘பக்கிங்ஹாம்’ விடுதியில் சொகுசான அறையில் தங்கியுள்ளார். அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து 1916-இல் சென்னை வந்த போது, முதல் வகுப்புப் பெட்டியில் காந்தியைத் தேட, அவர் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கினார். அவரது தோற்றம் எளிமையாக இருந்ததாம்.
1921-ஆம் ஆண்டு மதுரை வந்த காந்தி ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது, மேற்குமாசி வீட்டில் தங்கினார். அப்போது, மக்கள் பலரும் கோமணத்துணியோடு அங்கு வந்ததைக் கண்ேட தனது ஆடையை மாற்றிக் கொண்டார். ஆடை மாற்றத்திற்குக் காரணமே தமிழகத்தில் கண்ட காட்சிதான்.
1932-ஆம் ஆண்டில் இந்திய ேதசிய காங்கிரசின் உயர் ஜாதியினர் இந்திய தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார்கள். 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த காந்தி ‘ஹரிஜன மக்களுக்குச் சேவை செய்வதே தன் முதல் பணி’ என்று அறிவித்தார். நிதி திரட்ட நாடு முழுவதும் பயணித்தார். தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாயிரம் மைல் தொலைவு பயணித்து நிதி திரட்டினார் என்கிறது வரலாறு.
வரலாறு புகழும் மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் சென்று மக்களைச் சந்தித்துள்ளார். 1934-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி கன்னியாகுமரியில் அவர் தன் பயணத்தைத் தொடங்கினார். கன்னியாகுமரி, திருவிதாங்கூர், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, இராஜபாளையம், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை என்று தொடர்ந்தது.
செட்டிநாடு, காரைக்குடி, செட்டிபாளையம், கரூர், கோவை, திருச்சி, மேட்டுப்பாளையம் என்று தொடர்ந்து பயணித்துள்ளார். கரூர் நகராட்சிப் பள்ளியில் புகழ்பெற்ற பாடகர் கே.பி. சுந்தராம்பாள் வழங்கிய தங்க டம்ளரை ஏலம் விட்டுப் பணம் சேர்த்தார். பின்பு தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம் என்று பல பகுதிகளிலும் சென்று, மக்களைச் சந்தித்துப் பேசி நிதி திரட்டியுள்ளார்.
காந்தியடிகளின் நெகிழ்வான வாழ்க்கைப் பயணங்களை “காந்தி 150” என்ற நூலில் குமரி. எஸ். நீலகண்டன் அருமையாகத் தந்துள்ளார். ஒரு மகானாக, மாண்புமிகு மனிதராக காந்தியடிகளின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நீலகண்டன் அவர்கள்.
காந்தியடிகளும், பண்புகளும்
ஒரு சமயம் ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய ஐரோப்பிய நிருபர் “காந்தி எங்களது நாட்டு மக்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். காந்தி அப்போது மௌன விரதம் இருந்த நேரம். எனவே ஒரு தாளில் “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று எழுதிக் காட்டினார்.
உலகில் உயர்ந்த பல மனிதர்களின் குணங்களை ஆராய்ந்து பார்த்தால் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக நெருக்கம் உள்ளவர்கள் தான் புகழ் பெற்றுள்ளார்கள். காந்தியடிகள் எதைச் சொன்னாரோ, அதைத்தான் செய்தார்.
தனது போராட்ட காலத்தில் ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார் காந்தியடிகள். சிறைக் காவலராக இருந்த ஜெனரல் ஜான் ஸ்மட்சுக்கு சிறையில் இருந்த போது ஒரு ஜோடி செருப்பைத் தைத்துக் கொடுத்தார் காந்தியடிகள். அதைப் பத்திரமாகப் பெற்றுக் கொண்ட ஸ்மட்ஸ், அதனை அணிந்து கொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்று கூறினார். காரணம், காந்தி என்னும் உயர்ந்த மனிதர், ஒப்புமைக்கு அப்பாற்பட்டவர் என்பது அவரது கருத்தாக இருந்தது.
இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹலிஃபேக்ஸ் என்ற பிரபு “தனது பண்பால் முன்னுதாரணத்தால் தங்களது தலைமுறையைக் கவர்ந்த தலைவர்கள் மிகச் சிலரே வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் முதலானவர் காந்தியடிகள்” என்று கூறினார்.
1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய நாள், இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் இந்திய தேசத்தைப் புணரமைத்த சிற்பி ஜவஹர்லால் நேரு இவ்வாறு பேசினார் :
“இந்த நாளில், நாம் சுதந்திரம் அடைவதற்கு வழிவகுத்த நமது நாட்டின் தந்தையை, அதாவது காந்தியடிகளை நாம் நினைக்கின்றோம். அவரே, நமது நாட்டின் சுதந்திரச் சுடரை ஏற்றி நம்மைச் சுற்றியிருந்த இருளைப் போக்கினார். பனி மூடியிருக்கும் இந்த நள்ளிரவில் உலகம் தூங்கிக் கொண்டிருக்கும் போது, இந்தியா உயிர்பெற்று சுதந்திரமாக எழும். மேலும் இந்தச் சுதந்திரமும், சக்தியும் நமக்குப் பொறுப்பைக் கொண்டு வரும்” என்று முழங்கினார். ஆம், ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள், வெறும் ரூபாய் நோட்டுக்களில் வாழும் சின்னமாக இல்லாமல், நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகப் பேணப்பட வேண்டும். 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இத்தருணம் இச்சிந்தனைகள் நம்மை உயிர்த்தெழச் செய்ய வேண்டும்.
மக்கள் தன்னிறைவு பெற்று வாழவேண்டும் என்பது காந்தியின் கனவாக இருந்தது. கிராம சுயராஜ்யம், கிராமப் பொருளாதார மேம்பாடு காந்தியின் ஆவலாக அமைந்தது.
இன்று மக்கள் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டார்கள். உடல் உழைப்பு குறைந்துவிட்டது. ஆடம்பரத் தேவைகள் அதிகமாகியுள்ளது. காந்தியடிகள் விரும்பிய முக்கியமான பண்பு, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, நிறைவான வாழ்வு வாழவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இதனை அவர் “சுயசார்பு வாழ்வு” என்றும் குறிப்பிட்டார். தேவைகள் குறையும் போது, நாம் இயற்கையை செயற்கையாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது என்பது காந்தியின் வாதம்.
நெல்சன் மண்டேலா போன்ற பல எண்ணற்ற தலைவர்களுக்கு காந்தி ஒரு மாபெரும் முன்மாதிரியாக இருந்துள்ளார். காந்தியடிகளைப் பொறுத்தவரையில், வன்முறை என்பது மிகவும் நுட்பமானதாகும். கோபத்துடன் ஒருவரை முறைத்துப் பார்ப்பதே வன்முறை. பல்லைக் கடிப்பதும், மனதிற்குள் ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதும் வன்முறை. மற்றவர்களுக்குத் தீங்கு நிகழ வேண்டுமென்று எண்ணுவதும் வன்முறை என்பதே காந்தியின் சித்தாந்தமாக இருந்தது.
வன்முறை பற்றிச் சொல்லும் போது காந்தியடிகள் பின்வருமாறு கூறுகின்றார் : “கண்ணுக்குக் கண் என்ற கருத்து உலகம் முழுவதையும் குருடாக்கிவிடும்”, “முதலில் வெற்றி கொடுப்பதைப் போல தோன்றினாலும், நீங்கள் வன்முறையில் ஈடுபடாதீர்கள். பலன் கிடைப்பது அரிது அல்லது கிடைக்காது என்று தெரிந்தாலும், அன்பு மற்றும் மரியாதை வழிகளைப் பின்பற்றுங்கள். இந்தக் கொள்கைகளை நம்மால் பின்பற்ற முடிந்தால் இந்தியாவின் சுதந்திரம் உறுதியானது. காரணம், நான் இந்த பூமியில் யாரையும் வெறுக்க முடியாதவனாக இருக்கிறேன். ஆனால், தீமையை நான் வெறுக்கிறேன், ஆங்கிலேயர் இந்திய மக்களைச் சுரண்டுவதை நான் வெறுக்கிறேன். ஆனால் அவர்களை அன்பான வழியில் மாற்ற முனைகிறேன்” என்று கூறினார், எழுதினார்.
1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அவர் ராஜகுமாரி அம்ரித் கெளர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் “நான் ஒரு முட்டாள் சுடும் குண்டுகளால் சுடப்பட்டால், நான் புன்னகைப்பேன். அந்த முட்டாள் என்னைக் கோபத்தால் சுடவில்லை… என்று எண்ணுவேன்” என்று எழுதினார். என்ன நினைத்து இப்படி எழுதினாரோ, தெரியாது. ஜனவரி 30 அன்று வழிபாட்டு நேரத்தில் சுடப்பட்டு இறந்தார். ஐம்பது கோடி மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்த மென்முைற நாயகர், தேசப்பிதா, வன்முறைக்குப் பலிகடா ஆகினார். ஆயினும், அவர் தன் உயரிய பண்பால் ‘மகாத்மா’ என்று வசீகரமாக அழைக்கப்படுகின்றார்.
உலக வரலாற்றில் முதன்முறையாக எல்லா நாடுகளும் அரசு அதிகாரத்தில் இல்லாத ஒரு மனிதருக்கு, தங்கள் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தின. மக்களின் தொண்டராகத் திகழ்ந்த மகாத்மா காந்தி என்ற தனிமனிதருக்கு இந்த மரியாதை முதன்முதலில் தரப்பட்டது. சம்பிரதாயங்களைவிட சாதனை படைத்த, சரித்திரம் படைத்த மாபெரும் தலைவராக ‘காந்தியடிகள்’ உயர்த்தப்பட்டார். இந்தியாவின் சுதந்திரத்தை சுவாசிக்கும் ஒவ்வொருவரும், காந்தி என்னும் ஒப்பற்ற ஆத்மாவின் கொள்கையால் சுவாசிக்கிறோம் என்பதை உணரவேண்டும். மென்முறை மட்டுமே மனிதத்தை வளர்க்கும்; மென்முறை மட்டுமே ஜனநாயகம் காக்கும் என்பதை உணர்ந்தால், போரில்லாத பொன்னுலகம் காந்தியின் கனவாக விடியும்.
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
- உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும்.
- நாளை இறக்கப்போவது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போலக் கற்றுக் கொள்ளுங்கள்.
- மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும்.
- வலிமை என்பது உடலின் திறமையால் வருவதில்லை, அது அடக்க இயலாத பெருவிருப்பத்தால் வருகின்றது.
- அன்பு எங்கே இருக்கின்றதோ, அங்கே வாழ்க்கை இருக்கின்றது.
- உடல் ஆரோக்கியமே உண்மையான செல்வம், தங்கமோ, வெள்ளியோ அல்ல.
- பலவீனமானவர்களால் மன்னிக்க இயலாது, மன்னிப்பு என்பது வலிமை மிகுந்தவர்களின் பண்பாகும்.
- ஒரு மென்மையான வழியில், நீங்கள் உலகத்தை அசைக்க முடியும்.
- திருப்தி என்பது முயற்சியில் உள்ளது, அதை அடைவதில் இல்லை, முழு முயற்சியே முழு வெற்றி.
- மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதநேயம் ஒரு கடல், கடலில் சில துளிகள் அழுக்காக இருப்பதால் கடல் அழுக்காகிவிடாது.
- சக்தி இரண்டு வகையானது. ஒன்று தண்டனையின் பயத்தாலும், மற்றொன்று அன்பின் செயல்
களாலும் பெறப்படுகின்றது. அன்பின் அடிப்படையில் பெறப்படும் சக்தி, தண்டனை பயத்தில் பெறப்பட்டதைவிட ஆயிரம் மடங்கு பயனுள்ள
தாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கின்றது. - முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். பிறகு உங்களைப் பார்த்து சிரிப்பார்கள். பிறகு உங்களுடன் சண்டையிடுவார்கள். பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
- பிரார்த்தனை என்பது காலையின் திறவுகோல் மற்றும் மாலையின் சாவி.
- மனிதன் தன் சக மனிதர்களின் நலனுக்காக எந்த அளவு பாடுபடுகின்றானோ, அந்த அளவுக்குப் பெரியவனாகின்றான்.
- நீதிமன்றங்களைவிட, உயர்ந்த நீதிமன்றம் உள்ளது. அதுவே மனசாட்சி என்னும் நீதிமன்றம். இது எல்லா நீதிமன்றங்களையும் மிஞ்சிவிடக் கூடியது.
- நீங்கள் ஒரு சிறுபான்மையினராக இருந்தாலும், உண்மை, உண்மைதான்.
- ஒரு தேசத்தின் மகத்துவத்தை, அந்த தேசம் விலங்குகளை நடத்தும் விதம் கொண்டு மதிப்பிட முடியும்.
- செயல் முன்னுரிமைகளை வெளிப்படுத்துகின்றது.
- ஒரு மடங்கு பயிற்சி, பல ஆயிரம் மடங்கு பிரசங்கத்தைவிட மதிப்பு மிக்கது.
- மனிதனின் தேவைக்கே உலகில் போதுமான அளவு உணவு உள்ளது. மனிதனின் பேராசைக்கு இல்லை.
- எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றிருந்தால், நான் நீண்டகாலத்திற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பேன்.
- சூரியன் மறைவதன் அற்புதங்களையோ, சந்திரனின் அழகையோ நான் ரசிக்கும் போது, படைப்பாளியின் வழிபாட்டில் என் உள்ளம் விரிவடைகின்றது.
- ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களில் உள்ளது.
- அனைத்து மதங்களின் சாரம் ஒன்றுதான். அவர்களின் அணுகுமுறைகள் மட்டுமே வேறுபட்டவை.
- நாம் தடுமாறி விழலாம், ஆனால் மீண்டும் எழுவோம். நாம் போரிலிருந்து ஓடாமல் இருந்தால் போதும்.
- என்னை நீங்கள் சங்கிலியால் பிணைக்கலாம், சித்திரவதை செய்யலாம், இந்த உடலை அழிக்கலாம்; ஆனால் என் மனதை உங்களால் சிறைப்படுத்த முடியாது.
- நல்லவன் எல்லா உயிர்களுக்கும் நண்பன்.
நான் வன்முறையை எதிர்க்கின்றேன்; காரணம் அது செய்யும் நன்மை தற்காலிகமானது; ஆனால் அது செய்யும் தீமை நிரந்தரமானது.