வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் தோன்றிய அனைத்து மனிதகுலத்தினரும் தனித்துவம் நிரம்பியவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பான ஆற்றல் என்பது இயற்கையாக இருக்கக்கூடும். ஆனால் பெரும் சோதனை என்ன என்றால் இதனை அறியாமலேயே பலர் இறுதிவரை வாழ்ந்து முடிந்துவிடுகின்றனர் என்பதுதான். வாழ்க்கையில் உச்சகட்ட சோகம் இறப்பதில் இல்லை, ஆனால் வாழ்கின்ற காலத்தில் தம்முள் இருக்கும் திறன்களை அறந்திடாமலே வாழ்கின்ற பேதைமை எனலாம். நம்முள் இருக்கும் திறன்களை முழுவதும் அறிந்துக்கொள்ளக்கூடிய நுட்பங்களை கல்விமுறைகள் வழி அறிந்திட முடியுமா? என்றால் “இல்லை” என்பதுதான் பெரும்பான்மையினரின் வெளிப்பாடாக உள்ளது.
ஏனெனின் அண்மையில் வெளிவந்த 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளால், மனம் சோர்ந்து வாழ்க்கையை இறுதி செய்தி கொண்ட மாணவச் செல்வங்களைப் பற்றி நாளிதழ்களின் வாயிலாக அறிய நேர்ந்தபோது நெஞ்சம் பதறியது. வெற்றி என்றால் என்ன? தோல்வி ஒருவரின் இறுதி முடிவா? என்ற சிக்கலிற்கு தீர்வு இன்றி வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்களே அதிகம். உயிரை மாய்த்துக் கொள்ள அஞ்சாமை உள்ள அவர்களுக்கு எதனையும் சாதிக்க முடியும் என்ற வைராக்யத்தை நம் கல்விமுறை ஏன் நல்கவில்லை என்பதுதான் நம் எழுச்சி வினாவாக உள்ளது. பக்குவப்பட்ட மனங்கள் பொறுமையில் நிலைக்கின்றது. பொறுமை மனங்களே எண்ணியதை எண்ணியவாறே பெறுகின்றது. வெற்றி என்பதனை, உலகின் தலைசிறந்த பேச்சாளர் என்று போற்றப்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில்,
“Success is nothing but moving from failure to failure without loosing enthusiasm”
“மனக் குதூகலத்தை இழக்காது, ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலே வெற்றி”
இங்கு வெற்றி என்பது எதோ ஒன்றை அடைந்துவிடுவதைப் பற்றி குறிப்பிடவில்லை, தோல்வி என்பது முடிந்தவொன்றாகவும் கருதப்படவில்லை. ‘‘மனக் குதூகலம் என்ற உந்து சக்தியே எண்ணியதை அடைவதற்குண்டான மந்திரச் சொல்லாக சிந்திக்கத் தூண்டுகின்றது. எனவே இன்றைய மாணவர்களுக்கு தன்னம்பிக்கைத் தரக்கூடிய கல்விச் செல்வத்தை மிக நுண்ணிதின் பயிற்றுவிக்க வேண்டிய போர்க்கால் அவசியம் அனைத்து கல்வியாளருக்கும் தலையாயக் கடமையாக உள்ளது.
தேர்வில் தோல்வியைத் தழுவும் ஒவ்வொரு மாணவருக்கும், தன்னுடைய தவறு எங்கே? என்று சிந்திப்பதைவிட, எல்லோரும் நகைப்பார்களே, நையாண்டி பேசுவார்களே, பெற்றோர்கள் வசைபாடுவார்களே என்ற பலவித எண்ணக்கசடுகள்தான் அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்குத் தள்ளிவிடுவதை உணரமுடிகின்றது.
எனவே, இதனை அறியவல்லார்கள் பலரும் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ மாணவர்களின் அரிதான இழப்பை சில காலம் சோகமாகப் பதிவிட்டு பின்னர் காலப்போக்கில் மறந்து விடக்கூடிய தற்காலிக நடைமுறைகளையே அனைவராலும் அறிந்துகொள்ள முடிகின்றது. இதற்கு திண்ணமான தீர்வு என்ன? கல்வியாளரும், சான்றோரும், அரசின் உறுப்புகளும் உடனே தீர்வாக ஆற்றவேண்டிய கடமைகள் என்னென்ன என்பதனை உடனே உணர்ந்து வழிமுறைகளை வகுத்திட வேண்டும். ஒவ்வொரு மாணவரின் உயிரும் எதிர்கால இந்தியாவின் பெருமிதம் என்றுணர்ந்து அவனுக்கு அவனின் அருந்திறனை முழுவதுமாய் அவனளவிலேயே அறிந்து கொள்ளக்கூடிய நிகழ்வியல் தன்னம்பிக்கை திரட்சிகளை உருவாக்கம் செய்திட வேண்டும்.
வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதற்கே, போக்கிக் கொள்வதற்கன்று என்றும், ஒவ்வொரு பின்னடைவும் கூர்ந்து நோக்கிச் செயல்பட்டால் அதன்வழி இமயமனைய சாதனைகள் இயல்பாகிடும் என்ற ஆள்வினைக்கோட்பாட்டை மையமாக்கிய கல்வி முறைகள் அணுக்கம் பெறவேண்டும். இதன்வழி,
- மனிதனாகப் பிறப்பெடுப்பதே ஒரு வரம் என்பதனையும்
- அனைவரும் ஒரு பெரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம் என்பதனையும்
- தேர்வுகள் என்பது அஞ்சுவதற்கல்ல நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கான களம் என்பதனையும்
- வெற்றி என்பது முடிவில்லாதது என்பதனையும்
- தோல்வி என்பது இறுதிநிலை இல்லை என்பதனையும்
- உடன்மறைச் சிந்தனைகள் மட்டுமே அடுத்த கட்ட மேன்மைக்கு உறுதி பயக்கவல்லது என்பதனையும்
- பலமுறை தோல்விகண்டும் இறுதியில் உலகின் கண் மகத்தான சாதனைகளைப் படைத்து உலகம் உள்ளளவும் பேசப்படும் சாதனையாளர்களின் வரலாறுகளை அனைத்து மாணவமாண்புகளும் தப்பாது வாசித்து மனங்களில் இருத்திக்கொள்வதற்கான சூழல்களை உருவாக்கம் செய்திட வேண்டும் என்பதனையும்,
ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு திட்பமான கல்விப்புதுமைகளை நடைமுறையாக்கும் போது மாணவர்களிடையே ஒரு புத்தெழுச்சி எழுவது இயல்பாகும். மேலும், கல்வி பயில்வது ஒரு சுகமான அனுபவம் என்ற இயல்நோக்கு வலிமை பெறுவது உறுதியாகும்.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திடபம்” (குறள். 661) என்ற குறள்வழி மனவுறுதி பெற்ற மாணவச்செல்வங்கள் வாழ்வியலையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு,
“வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்” என்ற திரைவரிகளைப் போல அவனுள் சவால் மனப்பான்மையை எழுச்சி பெறச் செய்து, சாதிக்கும் வரை தீயைப் போல் போராட வேண்டுமேயன்றி உயிரைத் தீக்கிரையாக்கக்கூடாது என்ற பெருநோக்கானது முழுமை பெறும்.