முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 17

 

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்            டாக்டர். மெ.ஞானசேகர்

1999-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ் (Fortune) இருபதாம் நூற்றாண்டின் தொழிலதிபர் என்று ஹென்றி ஃபோர்டை அறிவித்தது. தொழில்நுட்பம் என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்ற பார்வையை உடைத்து, எல்லா மக்களது வாழ்விலும் தொழில்நுட்பம் பயன்பெற வேண்டும் என்ற கொள்கையைக் கைக்கொண்டு, அதனை நடத்திக் காட்டியவர் தான் ெஹன்றி ஃபோர்டு.

ெஹன்றி ஃபோர்டு நிறுவனத்தில் பணிசெய்து ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் பாப் கேசி என்பவர், ஃபோர்டு தன் வாழ்க்ைகயை அணுகிய விதத்தில் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். ஆட்டோமொபைல் என்ற தொழில்நுட்பத் துறை அறியப்படாத காலத்தில், அதை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதை மனித வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு கண்டுபிடிப்பாக உருவாக்கிய பெருமை ெஹன்றி ஃபோர்ைடயே சாரும்.

1863-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30-ஆம் தேதி, மிக்சிகனில் உள்ள டியர் பார்னில், வில்லியம் ஃபோர்டு மற்றும் மேரி தம்பதியர்க்கு மூத்த மகனாகப் பிறந்தார் ெஹன்றி ஃபோர்டு. நான்கு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் முதல் மகன் ெஹன்றி ஃபோர்டு.

இயந்திர மோகம்

ெஹன்றி ஃபோர்டுக்கு பதிமூன்று வயது நடந்த போது அவரது பிறந்த நாளுக்கு ஒரு கைக்கடிகாரத்தை அவரது தந்தை வழங்கினார். குழந்தைப் பருவம் முதலே, இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த ஃபோர்டு அதைப் பிரித்தார். முழுமையாகப் பிரித்துப் பார்த்து, மீண்டும் அதனைச் சேர்த்தார். கைக்கடிகாரங்கள் அதன்பிறகு செயல்படவில்லையென்றால், அதைப் பிரித்துச் சரிசெய்யும் திறமையைப் பெற்றார்.

தனது அண்டைவீட்டார், ஊரில் யாரெல்லாம், தங்கள் கைக்கடிகாரம் ஓடவில்லை என்கிறார்களோ அவர்களுக்குச் சரிசெய்து கொடுத்து நற்பெயர் பெற்றார். தனது தந்தையின் விவசாயப் பண்ணையில் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். தந்தை விவசாயம் செய்ய வற்புறுத்திய போது, தனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்று கூறி மறுத்தார்.

வேறு வழியின்றி, வில்லியம் ஃபோர்டு ெஹன்றி ஃபோர்டை அவர் விரும்பிய வழியில் அனுப்பினார். டெட்ராய்ட்டில் ஜேம்ஸ் எஃப் ஃப்ளவர் அண்ட் பிரதர்ஸ் கடைகளிலும், டெட்ராய்ட் ட்ரைடாக் கம்பெனியிலும் இயந்திர இயக்குனராக இரண்டு ஆண்டுகள் பயிற்சிகள் பெற்றார். 1882-ஆம் ஆண்டு தெற்கு மிக்சிகனில், வெஸ்டிங் ஹவுஸ் நீராவி என்ஜின்களை அமைத்துப் பழுது பார்ப்பதில் ஒரு வருடம் பணிசெய்தார். 1891-ஆம் ஆண்டு டெட்ராய்டில் ‘எடிசன் இல்லுமினேட்டிங்’ நிறுவனத்தில் பொறியாளராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டார். இதனால் 1893-ஆம் ஆண்டு, தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் 1888-ஆம் ஆண்டு வெய்ன் கவுண்டியில் உழவுத் தொழில் செய்து வந்த மெல்வின் பிரையண்டின் மகள் கிளாராவை மணந்தார். ெஹன்றி ஃபோர்டு – கிளாரா தம்பதிகளுக்கு எட்சல் பிரையண்ட் ஃபோர்டு என்ற மகன் 1893-இல் பிறந்தார்.

டெட்ராய்டில் ஃபோர்டு வாழ்ந்த, எண்.58, பாக்லி அவென்யூவில் அமைந்த அவரது வீட்டின் சமயலறை தான் முதல் ஆய்வகம். அங்கிருந்த ஒரு மர மேசையில் தான் ஃபோர்டு இயந்திரம் உருவானது. இதனுடைய மேம்பட்ட ஒரு வடிவமைப்பே பின்னாளில் ‘ஆட்டோமொபைல்’ என்று கூறும் போக்குவரத்துத் தொழில்நுட்பமாக உருவெடுத்தது. காரணம், அக்காலத்தில் கார்களை குதிரைகள் தான் இழுத்துச் சென்றன. குதிரைகள் இல்லாமல், தானே இயங்கும் தொழில்நுட்பம் உலகில் தேவைப்பட்டதை ெஹன்றி ஃபோர்டு உணர்ந்திருந்தார்.

எனவே, அவரது வீட்டுச் சமயலறையில் உருவான அந்த இயந்திரம், நான்கு சைக்கிள் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டது. இதுதான் ஃபோர்டு உருவாக்கிய முதல் கார். ‘குவாட்ரி சைக்கிள்’ என்றழைக்கப்பட்ட இந்த கார் 1896-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்டது. ெஹன்றி ஃபோர்டின் தொழில்நுட்ப அறிவையும், ஆர்வத்தையும் அவரை அறிந்தவர்களும், தொழில்நுட்பத்தை வளர்க்க விரும்பியவர்களும் புரிந்துகொள்ளக் காரணமானது.

எடிசனின் நிறுவனத்தில் நீராவி இயந்திரங்களையும், ஜெனரேட்டர்களையும் கவனித்துக் கொள்ளும் வேலையை ஃபோர்டு செய்து வந்தார். அச்சமயம், ஒரு நாள் ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது. அதனைச் சரிசெய்திட அந்த இயந்திரம் வாங்கிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது, அதற்கு நிறையச் செலவாகும், பேசாமல் புதியதையே வாங்கிவிடலாம் என்றார்கள். இதைக் கவனித்த ெஹன்றி ஃபோர்டு அந்த இயந்திரத்தை அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்தார். ஆய்வு ெசய்த போது, பழுதைக் கண்டுபிடித்தார். இயந்திரம் மீண்டும் இயங்கியது. பெரும் நஷ்டம் தவிர்க்கப்பட்டது. இச்செய்தி ஆங்காங்கே பரவியது. ஆகவே, டெட்ராய்ட் நகரில் இயந்திரங்கள் பழுது என்றால் ெஹன்றி ஃபோர்டால் முடியும் என்று சொல்லக்கூடிய வண்ணம் அவரது இயந்திர அறிவும் ஆர்வமும் இருந்தது.

தொழில் தொடங்கிய ஃபோர்டு

1896-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4-ஆம் தேதி தான் தயாரித்த குவாட்ரி சைக்கிள் என்ற காரில் ெஹன்றி ஃபோர்டு பயணித்த போது காரிலிருந்து பெரிய சத்தம் கேட்டது. குதிரைகள் கூட வெறித்தன. ெஹன்றி ஃபோர்டின் மனைவி மற்றும் சில நண்பர்கள் தவிர எல்லோரும் ‘இது வீண்வேலை’ என்று கூறினார்கள்.

ெஹன்றி ஃபோர்டு மனம் தளரவில்லை. தனக்கு சாலையில் காரை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்று டெட்ராய்ட் நகர மேயரைக் கேட்டார். உலகிலேயே முதன்முதலாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர் ஆனார் ெஹன்றி ஃபோர்டு.

இன்று எத்தனை ஆயிரம் வாகனங்கள், எத்தனை கோடி மனிதர்கள் ஓட்டுநர் உரிமை வைத்துள்ளோம். ஆனால், இதற்கான தொடக்கப்புள்ளி ெஹன்றி ஃபோர்டால் உருவானது என்பதை நாம் புரிந்து கொண்டால், ஆட்டோ மொபைல் தொழிலின் வளர்ச்சிக்கு ெஹன்றி ஃபோர்டு போட்ட விதையும், உரமும், அதன் பிரம்மாண்டமும் நமக்கு விளங்கும்.

நிச்சயமாக போக்குவரத்தை எளிதாக்கவும், எல்லா மக்களும் கார் போன்ற வாகனத்தைப் பயன்படுத்தவும் தன்னால் கண்டுபிடிப்புகளை வழங்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை ெஹன்றி ஃபோர்டு கொண்டிருந்தார். எனவே, 1899-ஆம் ஆண்டு எடிசனின் நிறுவனப் பணியை விட்டு வெளியேறினார். நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, டெட்ராய்ட் ஆட்டோமொபைல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இச்சூழலில் ெஹன்றி ஃபோர்டு வியாபார ரீதியிலும், உதவிகள் பெற வசதியாகவும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பந்தயக் கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். பந்தயக் குதிரை போலப் பாய்ந்து செல்லும் ஒரு காரை உருவாக்கினார். ஆம், அந்தக் கார் சிறப்பாக அமைந்தது. ஆயினும் அதனை உருவாக்கி விற்பதில் அதிக இலாபத்தினை உடன் நிறுவனப் பங்குதாரர்கள் எதிர்பார்த்தனர். ஆகவே, அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கவில்லை.

அதன் பிறகு ெஹன்றி ஃபோர்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 1904-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12-ஆம் தேதியன்று தான் உருவாக்கிய பந்தயக் காரில் ஒரு மைல் தூரத்தை 39.4 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். ஒரு மணிநேரத்திற்கு 91.3 மைல்கள். அதாவது ஏறக்குறைய 150 கிலோ மீட்டர் கடந்து இந்த ‘புதிய நில வேகச் சாதனை’யை அவர் நிகழ்த்தினார். இந்தச் சாதனையை பந்தயக் கார் ஓட்டுநர் பார்னி ஓல்டுஃபீல்டு என்பவர் புகழ்ந்து பேசினார். ஃபோர்டின் இந்த மாடல் காருக்கு ‘999’ என்று பெயரிட்டார். அமெரிக்காவெங்கும் இந்தக் காரை ஓட்டிச் சென்று ஃபோர்டின் கார் மாடலுக்கான ஒரு பெரிய விளம்பரத்தை உருவாக்கிக் கொடுத்தார். ஃபோர்டின் புகழும், அவரது காரின் வேகமும், அது தொடர்ந்து நிகழ்த்தப் போகும் சாதனையும் உலகளவிலும் தெரிய ஆரம்பித்தது.

இந்தக் காலக்கட்டத்தில் ஜெர்மனியில் பென்ஸ் என்பவரும், பிரான்சில் எமிலி என்பவரும் சக்தி வாய்ந்த மோட்டர்களைப் பயன்படுத்தி ஒரு காரை வடிவமைத்திருந்தார்கள். ஆனால், இவற்றின் விலையோ அதிகம். ெஹன்றி ஃபோர்டின் மனதில் எப்போதுமே குறைந்த விலையில் கார்களைக் கொண்டுவர வேண்டும், எல்லோரும் காரை வாங்கும் திறன் பெற வேண்டும், பயணம் எளிதாகி வியாபாரம், தொழில் செழிக்க வேண்டும் என்ற பொது நல நோக்கம் அதிகம் இருந்தது.

இந்த எண்ணத்தில், முயற்சியில் தொடர்ந்து உழைத்தார் ெஹன்றி ஃபோர்டு. 1908-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ஆம் தேதி மாடல் டி (The Model T) என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. முழு என்ஜின், எரிபொருள் பரிமாற்றம் ஆகியவை பாதுகாப்பாக மூடப்பட்ட பகுதியில் வடிவமைக்கப்பட்டன. நான்கு உருளைகளும், இரண்டு அரை நீள்வட்ட ஸ்பிரிங்குகள் கொண்ட, மென்மையான பயணக் கருவிகளும் இணைக்கப்பட்டதாக இது அமைந்தது. ‘மாதிரி டி’ கார் ஓட்டுவதற்கு எளிதாகவும், மேடு, பள்ளங்களில் பயணிப்பதற்கு இலகுவாகவும் இருந்தது.

மலிவான விலையில் விற்கப்பட்டதால், அமெரிக்காவில் நிறைய ஓட்டுநர்களும் உருவாகிவிட்டார்கள். ெஹன்றி ஃபோர்டு அமெரிக்காவில் வெளிவந்த அனைத்துப் பத்திரிகைகளிலும் தனது கார் பற்றிய விளம்பரம் மற்றும் பகிர்தல்கள் இருக்குமாறு தொடர்ந்து கவனித்துக் கொண்டார்.

கார் தொழிலதிபர்

காரின் தேவை அதிகரித்தபோது, கார் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அதேசமயம் வேலை செய்யும் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியமும் உருவாகிக் கொண்டிருந்தது. காருக்கு வேண்டிய ஒவ்வொரு பாகத்தையும், ெவவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு வருதல் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்தல் என்று பல இடங்களிலும் இதற்கான வேலைகள் நடந்தன.

இந்தச் சமயத்தில் தான் ெஹன்றி ஃபோர்டு மனதில் ஒரு அருமையான எண்ணம் உதித்தது. காரின் ஒவ்வொரு பாகத்துக்கும், அதைப் பொருத்துவதற்கும் பல்வேறு இடத்திலும் அலைவதற்குப் பதிலாக எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அமைக்கும் அசெம்பிளி லைன் (Assembly Line) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது, காருக்குத் தேவையான, அனைத்துப் பாகங்களும், அடுத்தடுத்துப் பொருத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கார் முழுவதுமாக கட்டமைப்புச் செய்யப்பட்டு வெளியே வரும் வகையில் அவற்றை அமைத்தார். இதன் மூலம் ஒரு கார் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியே வர 12 மணிநேரம் எடுக்கப்பட்டது குறைந்து, ஒரு மணி முப்பது நிமிடத்தில் இது சாத்தியம் என்ற நிலையை, சாதனையை நடத்திக் காட்டினார் ெஹன்றி ஃபோர்டு.

உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு வரலாறு படைத்த நிகழ்வாகும். தொழிற்சாலைகளின் பார்வையில் ஒரு மாபெரும் மாற்றத்தை இச்சிந்தனையும், செயலாக்கமும் உருவாக்கியது. இதுவே ‘இருபதாம் நூற்றாண்டின் தொழிலதிபர்’ என்று ெஹன்றி ஃபோர்டை அடையாளம் காட்டச் செய்தது. இந்த மாதிரியை உருவாக்கிட அவர் கடிகாரம் தயாரிப்பவர்கள், துப்பாக்கி தயாரிப்பவர்கள், சைக்கிள் தயாரிப்பவர்கள் மற்றும் இறைச்சியைப் பதப்படுத்துபவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தினார். இவர்களிடம் பல்வேறு ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் ‘அசெம்ளி லைன்’ சாத்தியமாயிற்று.

இந்தத் தொழில் நுட்பத்தால் கார்கள் தயாரிக்கும் வேகம் அதிகரித்தது. எனவே, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை இரு மடங்கு என்று உயர்த்தினார் ெஹன்றி ஃபோர்டு. தனது தொழிலாளிகளும் காரைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு அவர்களுக்கு ஊக்கம் தந்தார். ஒரு சமயம் அவர் வேறு ஒரு காரில் பயணித்த போது, “நீங்களே, ஃபோர்டு காரில் பயணிக்கவில்லையே?” என்று கேட்டார்கள். அதற்கு ெஹன்றி ஃபோர்டு, “எங்கள் நிறுவனத்தில், எங்களது கார்களுக்குத் தேவை அதிகமாக உள்ளதால், எனக்கே ஃபோர்டு கார் கிடைக்கவில்லை” என்று பதில் சொன்னார்.

1922-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இயங்கிய கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஃபோர்டு கார்களாக இருந்தது. இதற்கிடையில், பங்குதாரர்கள் சிரமங்கள் கொடுத்ததால் 1916-ஆம் ஆண்டு தன் ஒரே மகன் எட்செல் ஃபோர்டை நிறுவனத் தலைவராகக் கொண்டு வந்தார். அப்போது எட்செலுக்கு வயது 26 மட்டுமே. ஆனாலும், நிர்வாகத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும், முடிவு எடுப்பதையும் தனது கட்டுப்பாட்டில் தான் கொண்டிருந்தார் ெஹன்றி ஃபோர்டு. 1919-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு இறக்கும் வரை எட்செல், ஃபோர்டு நிறுவனத்தின் தலைவராகவே இருந்தார்.

கார் தொழிற்சாலைக்குத் தேவையான உதிரி பாகங்களையும், மூலப்பொருட்களையும் தாங்களே தயாரித்து உருவாக்கலாம் என்று ெஹன்றி ஃபோர்டு முடிவு செய்தார். இதற்காக, ஃபோர்டு நிறுவனம் விரிவாக்கப்பட்டது. இதன் மூலம் உற்பத்தி விலை குறையும். ஆகவே காரைக் குறைந்த விலைக்கு விற்கலாம் என்ற முடிவை ஃபோர்டு மேற்கொண்டார். இவ்வாறு சிறப்பான திட்டமிடல், செலவைக் குறைத்தல், உற்பத்தி செய்யும் நேரத்தைக் குறைத்தல் என்று செயல்பட்டதால் மிகுந்த இலாபத்துடன் நிறுவனம் வளர்ந்தது. ஒரு ஆண்டில் இருபது இலட்சம் கார்கள் உற்பத்தி என்ற இலக்கை எட்டியது. உழவர்கள் தங்கள் தொழிலுக்கும், விற்பனைக்கும் கார்களைப் பயன்படுத்திட ெஹன்றி ஃபோர்டு ஊக்கமளித்தார்.

அமெரிக்காவிலும், உலகளவிலும் ஃபோர்டு கார்கள் பிரபலமாகின. கார்களை வாங்கவும், விற்பனை செய்யவும் பரவலாக எல்லா இடங்களிலும் விற்பனை நிலையங்கள் உருவாகின. இரண்டரை நிமிடத்தில் ஒரு கார் உருவாகும் அளவுக்குத் தொழில்நுட்பத்தையும், வேகத்தையும் ெஹன்றி ஃபோர்டு தன் அயராத உழைப்பால் உருவாக்கியிருந்தார்.

தொழிலாளர்களை ஊக்கப்படுத்திட மூன்று திட்டங்களை அறிவித்தார் ெஹன்றி ஃபோர்டு. அதாவது தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு எட்டு மணிநேரம் மட்டும் வேலை செய்தால் போதும் என்பது முதல் திட்டம். அதற்கு முன்பு அது ஒன்பது மணி நேரமாக இருந்தது. இரண்டாவது, நாளின் 24 – மணி நேரத்தை மூன்று பிரிவாக்கி மூன்று கால முறை (Shift System) வேலையைக் கொண்டு வந்தார். இதனால் உற்பத்தி நாள் முழுவதும் தொடர்ந்தது. மூன்றாவது, ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டது.

இது பிற அமெரிக்கத் தொழிலதிபர்களிடம் எரிச்சலையும் கோபத்தையும் கிளப்பியது. பத்திரிகையில் செய்திகள் எதிர்மறையாகவும், நேர்மறையாகவும் வந்தது. அப்போது ெஹன்றி ஃபோர்டு, “என் ஊழியர்கள் எங்களுக்கு உழைப்பைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு ஊதியத்தை அள்ளிக் கொடுக்கிறேன்” என்று பதில் சொன்னார். இவ்வாறு, தன் நிறுவன ஊழியர்களைத் தக்க வைத்துக் கொண்டதோடு, ஊக்கமும் தந்தார்.

ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, வீட்டு மனைகள், கார் வசதி, குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிகள், ஊழியர்கள் ஆங்கில அறிவு பெறப் பயிற்சிகள் என்று அவர்கள் நலனில் அக்கறை காட்டினார் ஃபோர்டு. ஐரோப்பாவில் முதல் உலகப் போர் ஆரம்பித்தது. போரை வெறுத்தார் ெஹன்றி ஃபோர்டு. ‘அமைதிக் கப்பல்’ என்ற பெயரில் ஒரு கப்பலை அமர்த்திக் கொண்டு, சிறந்த அறிஞர்களை அழைத்துச் ெசன்று ஒரு நாட்டில் கூட்டம் நிகழ்த்தினார். வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்களில் போரின் பாதிப்புகள் பற்றியும் பேசினார். ஆயினும், அமெரிக்காவும் போரில் இறங்கியது. வேறு வழியின்றி போர்ச் சமயத்தில் தேவைப்பட்ட வாகனங்களையும் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி செய்து கொடுத்தது.

1915-ஆம் ஆண்டில் ரூஜ் நதிக்கரையில் 2000 ஏக்கர் நிலத்தை வாங்கி தொழில் நகரை உருவாக்கினார் ஃபோர்டு. அங்கு பிரம்மாண்டமாக டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். 1918-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 8000 – டிராக்டர்கள் தயாரிக்க அனுமதி கிடைத்தது. 1927-ஆம் ஆண்டு மட்டும் உருவான டிராக்டர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை இலட்சம் என்கிறது ஒரு செய்தி.

தொடர் பயணங்கள்

1923-ஆம் ஆண்டு வரை அதிகம் விற்பனையான ஃபோர்டு காரின் தேவை சந்தையில் குறைய ஆரம்பித்தது. காரணம், வேறு பல புதிய போட்டி நிறுவனங்கள் வந்துவிட்டன. எனவே, ஃபோர்டு காரை மாற்றியமைக்க வேண்டும் என்று அவரது மகன் எட்செல் உட்பட பலர் ஃபோர்டை வேண்டினர். ஆனால், சில காலம் மாற்றத்துக்கு அவர் உடன்படவில்லை, அதன்பிறகு நிறுவனம் சரிவை நோக்கிச் செல்லுவதைக் கண்ட ஃபோர்டு மாற்றத்துக்குத் தலையசைத்தார். ‘மாடல் டி’ காரை விட மணிக்கு 65 – மைல் வேகமாகச் செல்லும் ‘மாடல் ஏ’ என்ற கார் உற்பத்தி செய்யப்பட்டது. 1927-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட ‘மாடல் டி’ கார்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ஆகும்.

இப்போது ‘மாடல் ஏ’ உற்பத்திக்கு புதிய ‘அசெம்ளி லைன்’ உருவாக்க வேண்டியிருந்தது. பல கட்டமைப்புகள் மாற்றப்பட்டன. பல ஊழியர்களுக்கு அப்போது விடுப்புத் தரப்பட்டது. 250 மில்லியன் டாலர்கள் செலவு செய்து புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ‘மாடல் ஏ’ கார் தயாரிப்பு ஆரம்பமானது. இந்தக் கார் வடிவமைப்பு முதல், உற்பத்தி வெற்றி வரை கடுமையாக உழைத்தவர் ெஹன்றி ஃபோர்டின் மகன் எட்செல் ஆவார். ஆயினும் ெஹன்றி ஃபோர்டுக்குத்தான் புகழ் சேர்ந்தது. இருப்பினும் தொடர்ந்து அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சரிவுகளைச் சந்தித்து, மீண்டெழுந்து தன் ஃபோர்டு கார் பயணத்தைத் தொடர்ந்தார் ெஹன்றி ஃபோர்டு.

சிறு வயது முதலே பழைய பொருட்களைச் சேகரிப்பதிலும், அதனைச் சேர்த்து வைப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார் ஃபோர்டு. சாலிஸ்பரி என்ற இடத்தில் ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ தங்கிய ஒரு சத்திரத்தை விலைக்கு வாங்கினார். அதனருகில் இருந்த 2500 ஏக்கர் நிலத்தை இரண்டு மில்லியன் அதாவது இருபது இலட்சம் டாலர்கள் கொடுத்து வாங்கினார்.

அங்கு பழங்காலப் பொருட்களை சேர்த்து வைக்கும் ஒரு காட்சியகத்தை அமைத்தார். அதற்குத் தலைவராக வில்லியம் டெய்லர் என்பவரை நியமித்தார். இந்தக் காட்சியகத்தை அமைக்க ஒரு கட்டடம் கட்டினார் ெஹன்றி ஃபோர்டு. அதன் தொடக்க விழாவுக்கு பிரபல அறிவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசனை அழைத்திருந்தார். அங்கு வந்திருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் பாதங்களை, ஈரமான கான்கிரீட் தரையில் பதிக்கச் செய்து, அவரது பாதம் பதித்த இடத்தில் தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரையும் பதித்தார். இதன்மூலம் ஆரம்பம் முதல் தன்னை ஊக்கமூட்டிய எடிசனுக்கு நன்றி செலுத்தினார் ஃபோர்டு.

அந்த அருங்காட்சியகம் நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு பழங்காலச் சின்னங்கள், ஆடைகள், மனிதர்களின் உடையலங்காரங்கள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் என்று ஒரு பழங்காலக் கிராமமாக அது அமைக்கப்பட்டிருந்தது. தபால் நிலையம், கொல்லன் பட்டறை, மரக்கடைகள் போன்ற பலவும் காட்சிப்படுத்தப்பட்டன.

ரைட் சகோதரர்களின் சைக்கிள் கடை மாதிரி, எடிசனின் மென்லோ பார்க் ஆய்வக மாதிரி, ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராகப் பணி செய்த கோர்ட் மாதிரியும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன.

2500 – ஏக்கர் இடம் என்றால் அதன் விசாலத்தையும், பரப்பளவையும் நாம் புரிந்து கொள்ளலாம். அங்கே ெஹன்றி ஃபோர்டு படித்த பள்ளி, கிராமத்தில் வசித்த வீடு, அவர் உருவாக்கிய நீராவி எந்திரம், உருவாக்கிய முதல் கார் என்று ஃபோர்டின் நினைவுக் களஞ்சியங்களும் அமைந்தன. உள்ளுக்குள்ளேயே நிகழ்வுகள் நடத்த டவுன் ஹால், சர்ச் ஆகியவையும் இருந்தன.

1936-ஆம் ஆண்டு ‘ெஹன்றி ஃபோர்டு அறக்கட்டளை’ தொடங்கப்பட்டது. மருத்துவமனைகள், ஆராய்ச்சிகள், பள்ளிகள் என்று பல நூறு கோடி மக்களின் நல்வாழ்வுக்குத் தரப்பட்டது. உழவுத் தொழிலுக்கான ஆராய்ச்சியில் இறங்கி சோயா எண்ணெய்யை கார்களுக்கு வண்ணமாகப் பூசலாம் என்பதைக் கண்டறிந்தார் ஃபோர்டு.

தன் வாழ்நாளின் இறுதிவரை தன் அதிகாரம் நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஃபோர்டு. அவரது ஒரே மகன் புற்றுநோயால் இறந்த பின்பும் தன் தலைமையை விட்டுத்தர மனம் வராது இயங்கினார். பின்பு, அவரது மனைவியின் வற்புறுத்தலால் தனது பேரனிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். தன் நிறுவன ஊழியர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த அவர், அக்காலத்தில் உருவான தொழிற்சங்கங்களை ஏற்க மறுத்தார். ஆயினும், ஒரு கட்டத்தில் அதனை ஏற்றுக்கொண்டார்.

மனிதகுல வரலாற்றில், தொழில் வளர்ச்சியால் மாபெரும் மாற்றம் பெற்றது இருபதாம் நூற்றாண்டு. இந்த மாற்றத்திற்கு காரணமானவர்களில் முக்கியமான ஒருவராக ெஹன்றி ஃபோர்டு திகழ்கின்றார். கார்களை எல்லோரும் வாங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியதால் தான் சாலைகள், நாடெங்கும் பெருகின. போக்குவரத்து எளிமையானதால் மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் எளிதானது. பயணத்துக்கே பல மணி நேரம் செலவிட்ட வாழ்வு நிலை மறைந்து, வாழ்வதற்கான நேரத்தை அதிகரித்தது. உறவுகள் உருவாகவும், செய்திகள் எளிதில் சென்றடையவும், மனிதகுலம் நலமோடு வாழ மருத்துவம் கிடைக்கவும் சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் காரணமாகின. இந்த வாய்ப்பை மனித குலத்துக்கு உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ெஹன்றி ஃபோர்டு வரலாற்றில் என்றும் வாழ்கின்றார்.

அவரது வாழ்க்கை அனுபவங்களை ‘வாழ்க்கை மற்றும் வேலை’, ‘இன்று மற்றும் நாளை’ மற்றும் ‘எடிசன், நான் அவரை அறிந்தேன்’ என்ற நூல்கள் மூலம் உலகிற்கு வழங்கினார். 1946-ஆம் ஆண்டு அமெரிக்கப் பெட்ரோலிய நிறுவனம், “மனிதகுலத்தின் நலனுக்கான சிறந்த பங்களிப்புக்கான முதல் விருதை” ெஹன்றி ஃபோர்டுக்கு வழங்கியது சிறப்பான மற்றும் பொருத்தமான ஒன்றாகும். உலகின் முதல் ஓட்டுநராக, முதல் வேகக் காரை உருவாக்கி ஓட்டியவராக, முதலில் பொது மக்களுக்கான காரை உருவாக்கியவராக, முதல் அசெம்ளி லைன் மூலம் உற்பத்தி வேகத்தை அதிகரித்தவராக அறியப்படும் ெஹன்றி ஃபோர்டு இருபதாம் நூற்றாண்டின், இணையற்ற தொழிலதிபர் என்பது மிகவும் தகுதியான ஒன்றேயாகும்.

ெஹன்றி ஃபோர்டு – பொன்மொழிகள்

  • என்னில் உள்ள சிறந்ததை வெளியே கொண்டு வருபவர் எனது சிறந்த நண்பர்.
  • தோல்வி என்பது மிகவும் புத்திசாலித்தனமாக ஒன்றை, மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு ஆகும்.
  • உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும், உங்களால் முடியாது என்று நீங்கள் நினைத்தாலும், நீங்கள் சொல்வது சரிதான்.
  • இருபது அல்லது எண்பது வயதைத் தொடர்ந்து கற்றுக்கொள்பவர் இளமையாகவே இருப்பார்.
  • தரம் என்பது, யாரும் பார்க்காத போதும் அதைச் சரியாகச் செய்வதாகும்.
  • நீங்கள் எப்பொழுதும் செய்வதையே எப்போதும் செய்தால், எப்போதும் பெறுவதையே பெறுவீர்கள்.
  • சிந்திப்பதே கடினமான வேலை, இதனால் தான் சிலரே இச்செயலில் ஈடுபடுகின்றார்கள்.
  • ‘தடைகள்’ என்பது உங்கள் இலக்குகளிலிருந்து, உங்கள் கண்களை எடுக்கும் போது, நீங்கள் காணும் பயங்கரமான தோற்றங்கள்.
  • சிறிய வேலைகளாகப் பிரித்தால் எதுவும் கடினமாக இருக்காது.
  • ஒன்றாக வருவது ஆரம்பம், ஒன்றாக இருப்பதே முன்னேற்றம், ஒன்றிணைந்து செயல்படுவதே வெற்றி.
  • எல்லாம் உங்களுக்கு எதிராக நடப்பதாகத் தோன்றும் போது, விமானம் காற்றுக்கு எதிராகத் தான் புறப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • வெற்றிக்கான ரகசியம் என்பது, மற்ற நபர்களின் பார்வையை ெபறுவதிலும், அந்த நபரின் கோணத்திலும், உங்கள் சொந்தக் கோணத்திலிருந்தும் விஷயங்களைப் பார்க்கும் திறனில் உள்ளது.
  • தன்னால் செய்ய முடியும் என்று நினைப்பதைவிட, அதிகமாகச் செய்ய முடியாத ஒரு மனிதனும் இல்லை.
  • ஒரு வெற்றிகரமான வாழ்வின் முழு இரகசியமும், ஒருவரின் விதி என்ன என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் அதைச் செய்து காட்டுவதுதான்.
  • ஒரு நபர் செய்யும் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, அவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று, அவர்களால் செய்ய முடியாது என்று பயந்ததை, அவர்களால் செய்ய முடியும் என்று கண்டுபிடிப்பதாகும்.
  • அடுத்த ஆண்டு உலகம் என்ன செய்யப் போகின்றது என்பதை, நீங்கள் பள்ளியில் கற்றுக்கொள்ள முடியாது.
  • பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்வதைவிட, பிறவற்றில் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுகிறார்கள்.
  • மக்களுக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்டிருந்தால், அவர்களுக்கு வேகமான குதிரைகள் வேண்டும் சொல்லியிருப்பார்கள்.
  • எல்லோரும் ஒன்றாக முன்னேறினால் வெற்றி தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்.
  • உற்சாகம் என்பது, உங்கள் நம்பிக்கைகளை நட்சத்திரங்களுக்கு ஒளிரச் செய்யும் தூண்டுகோலாகும்.
  • கூலி கொடுப்பது முதலாளி அல்ல, முதலாளிகள் பணத்தை மட்டுமே கையாளுகிறார்கள். வாடிக்கையாளரே கூலி கொடுக்கிறார்.
  • பணத்தைத் தவிர வேறு எதையும் செய்யாத வணிகம், ஒரு மோசமான வணிகமாகும்.
  • பெரிய பிரச்சனைகள் அல்ல, சிறிய பிரச்சனைகள் தான் அதிகம்.
  • இந்த உலகில் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய உண்மையான பாதுகாப்பு, அறிவு, அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் இருப்பு மட்டுமே,
  • நம் வாழ்க்கையில் முன்னேறும் போது, நமது திறன்களின் வரம்புகளைக் கற்றுக் கொள்கின்றோம்.
  • உங்களிடம் உள்ளதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அல்லது இழக்க வேண்டும்.
  • ஒரு இலட்சியவாதி என்பவர் மக்கள் செழிப்பாக இருக்க உதவுபவர்.
  • எது சாத்தியமில்லை என்பதை உறுதியாகச் சொல்லும் அளவுக்கு, யாருக்குத் தெரியும் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
  • வேலையில், எதையாவது சாதித்துவிட்டோம் என்று உணர்ந்து கொள்வதைத் தவிர வேறு மகிழ்ச்சி இல்லை.