இளைஞர் உலகம் – உறவு
பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588
தூங்கு முகத்தவரின் பொதுவான பண்புகள், அவர்களது பலம், பலவீனம் ஆகியவற்றை இதுவரை பார்த்தோம். ஓர் உளப்பாங்கை இன்னொரு உளப்பாங்காக மாற்றிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட உளப்பாங்கைக் கொண்டுள்ளவர். தனது பலவீனத்தை அறியும் பட்சத்தில், விழிப்பாயிருந்து அதனை குறைத்துக்கொண்டு, பலத்தை அதிகரிக்கும்போது பலவீனம் வெளியே தெரியாமலிருக்கும். இதனால் குறிப்பிட்ட உளப்பாங்கையுடையவர் ஆளுமை முழுமையாக்கம் பெற இது உதவும். இதனை சீர்திருத்தம் என்கிறோம். தூங்குமுக உளப்பாங்கை உடையவர் தங்களைச் சீர்திருத்தும் வழிகள் :
- அகம்பாவத்தை அகற்ற முயல வேண்டும். தூங்கு முகத்தவர் அகங்காரம் கொண்டவராயிருப்பர். இது இவர்களது ஆளுமையை சீர்குலைத்துவிடும். “அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை” என்பது ஆன்றோர் வாக்கு. தற்பெருமை ஆபத்தானது.
கிரேக்க புராணத்தில் வரும் இக்கேரஸின் (Icarus) மூலம் இதை விளக்கலாம்.
இக்கேரஸ் தாதேலஸ் என்பவரின் மகன். மிகவும் புத்திக்கூர்மை உடையவன். சிறு பையனாக இருக்கும் போதே புதியவற்றை, புதுமையானவற்றை கண்டுபிடிப்பதில் சிறந்தவனாக இருந்தான். எடுத்துக்காட்டாக கிேராசஸ் தீவில் குழப்பமூட்டும் சிக்கலான பாதை ஒன்றை (Labrinth) அமைத்தான். இதனுள் சென்றவர்களால் அதிலிருந்து வெளியே வருவது மிக மிகக் கடினம். ஒருமுறை இதனுள் அகப்பட்டுக் கொண்ட இக்கேரியசின் தந்தை வெளியே வரமுடியாது திணறினாராம். சிறு வயதிலேயே இத்தகைய முனைப்பு கொண்ட இக்கேரியஸ் தனது தந்தை தாதேலஸ் எச்சரிப்பையும் மீறி சூரியனை நோக்கி பயணம் செய்தான். இவனுக்கு மெழுகினல் உண்டான இறக்கை இருந்தது. அதை வைத்து சிறகடித்து பறந்து மகிழ்ந்த இவனிடம் சூரியனின் அருகில் செல்லாதே, அதிக உயரம் பறக்காதே என்று தந்தை தாதேலஸ் கூறியிருந்ததை புறந்தள்ளிவிட்டு, சூரியனை நெருங்க வெகு உயரத்தில் பறந்தான். விளைவு? மெழுகிலான இறகுகள் உருகிப்போன நிலையில் வீழ்ச்சியடைந்தான். கீழே விழுந்து இறந்த அவனது உடலை ெஹர்குலிஸ் கண்டுபிடித்து இவனது தந்தையிடம் கொடுத்தார் என்று புராணம் கூறுகிறது. பேராசை பெருநஷ்டமானது.
தூங்கு முகத்தவர் பிறருடைய நியாயமான, நல்ல ஆலோசனைக்கு செவிகொடுத்தால் இத்தகைய வீழ்ச்சிகளை தவிர்க்க முடியும். இவர்களுக்குப் பணிவு தேவை. தலைக்கனம் கூடாது.
- பற்றுறுதி இவர்களுக்குள் புகுத்தப்பட வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றிய பற்றுறுதி இல்லாவிட்டால் தூங்குமுகத்தவரால் எதையும் சாதிக்க முடியாது. பற்றுறுதி, மனவுறுதி உள்ளவர்களால்தான் எண்ணியதை எண்ணியவாறே முடிக்க இயலும். இதைத்தான் பாரதி,
“மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே வலிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்”
என்று பாடினார்.
தூங்குமுகத்தினர் புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பதால் தளராத மனவுறுதி இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.
- இலக்கை நோக்கி நகர, இலக்கை அடைய இவர்களின் பரம எதிரியான சோம்பேறித்தனமும், செயலற்ற, அக்கறையற்ற தன்மையும் மாறவேண்டும்.
ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும், “சோம்பி இருப்பது இரும்பில் துரு சேர்ப்பது” (Resting is rusting) என்பார். அதுபோல “சோம்பேறியின் மூளை சாத்தானின் தொழிற்கூடம்” (An idle brain is devil’s workshop) என்பர். தூங்கு முகத்தவரின் மிகப்பெரும் குறை சோம்பேறித்தனமாக இருப்பதால் இதனை வென்றடக்க இவர்கள் நீண்ட நெடிய பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. “சோம்பேறி, எறும்பைப் பார்” என்பார்கள்.
“எறும்பும் வெட்டுக்கிளியும்” என்ற சிறுகதை பிரபலமானதாகும். கோடை காலத்தில் எறும்பு தனக்கு வேண்டிய உணவை சேர்த்து சேமித்து வைக்கிறது. குளிர்காலம் வந்ததும் தான் சுறுசுறுப்பாக கோடை கோலத்தில் சேகரித்த உணவை அது உட்கொள்ளுகிறது. ஆனால் வெட்டுக்கிளியோ, கோடை காலத்தில் ஆடி, பாடி, நடனமாடி எதையும் சேமிக்காமல் இருக்கிறது. குளிர்காலம் வந்ததும் வெட்டுக்கிளி எறும்பிடம் போய் தனக்கு உணவு தருமாறு யாசிக்கிறது. எறும்பு வெட்டுக்கிளியை நோக்கி, “கோடை காலத்தில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” எனக் கேட்கிறது. “நான் கோடையில் நடனமாடி களித்திருந்தேன்” என வெட்டுக்கிளி சொல்கிறது.
அதைக்கேட்ட எறும்பு, “அப்படியானால் இப்போதும் நீ போய் நடனமாடு” என வெட்டுக்கிளியைப் பார்த்து ஏளனம் செய்கிறது; உணவுகொடுக்க மறுத்துவிடுகிறது. வெட்டுக்கிளி பசியினால் வாடித் தவிக்கிறது. தூங்குமுகத்தவரின் சோம்பேறித்தனத்தைப் பற்றி,
“சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கத்திலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள்; இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்; வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப் போல் பாயும்; ஏழ்மை நிலை உங்களைப் போர் வீரரைப் போல் தாக்கும்”
என ஒரு ஞானி கூறுகிறார். தூங்குமுகத்தவர் சோம்பேறித்தனத்தை மேற்கொள்ளாமல் இலக்கை அடைய முடியாது. கொரோனா பலரை வீட்டுக்குள் முடக்கி சோம்பேறிகளாக்கிவிட்டது.
- தேவையுள்ள போது தன்னையே ஊக்கப்படுத்தி தன்னுள் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளியே கொண்டுவர வேண்டும்.
ஊக்கவுரை (Motivation Talk) கொடுக்கச் செல்லும் போது மாணாக்கர்களை நன்கு படிக்க வைக்க அவர்களிடம், இரண்டு வகையான தூண்டுதல்கள் பற்றிக் கூறுவோம். அகத்தூண்டுதல், புறத்தூண்டுதல். புறத்தூண்டுதலைச் சார்ந்து படிப்பவர்கள் பெரிய சாதனையாளர்களாக முடியாது. அதாவது புறத்தூண்டுதல் என்பது ஒரு வண்டியை உதைத்து இயக்குவது (Kick Start). இதையே நம்பியிருந்தால் பல சமயங்களில் பிறர் உதவியை நாடமுடியாமல் வரும்போது நாம் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் ‘நமக்கு நாமே’ என்ற அடிப்படையில் தானாக இயங்கும் வண்டி இருந்தால் அதை பிறர் உதவியின்றி நாமே இயக்க (Self-start) முடியும். இதனை அகத்தூண்டுதல் என்கிறோம்.
தூங்கு முகத்தவரில் மட்டும் இந்த அகத்தூண்டுதல் இருந்துவிட்டால் இவர்களிடம் இருக்கும், மறைவாக இருக்கும் அளப்பெரிய ஆற்றலை அது வெளிக்கொண்டு வரும். இதுவும் தூங்கு முகத்தவரின் இயல்பாக இல்லாததால், விழிப்புணர்வு ெபற்று அவ்வப்போது இவர்கள் தங்களையே தாங்கள் ஊக்கப்படுத்திக் கொண்டால் சரித்திரத்தில் இவர்களால் கால் பதிக்க முடியும்.