வழிகாட்டும் ஆளுமை – 10
திரு. நந்தகுமார் IRS
ஆரோக்கியமற்ற போட்டி, எதிர்மறையான எண்ணங்களையும், தாழ்வு மனப்பான்மையையும் தரும். போட்டி தேவையா? எவ்வாறு போட்டிகளை, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது? என்பதை இங்கே காண்போம். ஏற்கனவே போட்டிகளைப் பற்றி பல கட்டுரைகளில் நாம் பார்த்து இருப்போம். போட்டியை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய நல்ல தெளிவு பலருக்கும் இல்லை. நமக்குத் தெரியும், தூத்துக்குடியில் முத்துக் குளிப்பார்கள், முத்தை எடுப்பதற்காகச் செல்வார்கள். அவர்கள் கடலுக்கு உள்ளே மிக ஆழமாகச் சென்று, நீரின் பல அழுத்தங்களை பொறுத்து, மூழ்கி இருந்து பின் இதன் விளைவாக விலையுயர்ந்த முத்தை எடுத்து வென்று வருவர்கள்.
அதுபோல வாழ்க்கையிலும் போட்டியை நாம் எதிர்கொள்ளும் போதும், போட்டிக்குத் தயாராகும் போதும் தானாகவே பல அழுத்தங்கள் உண்டாகின்றன. பலரை நான் சந்திக்கும் போது, தேர்வு நேரங்களில் புலம்புவார்கள், “படித்தவுடன் அனைத்தும் மறக்கிறது”, “எதுவும் நினைவில் இல்லை” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்னும் சிலர் “தூக்கமே வரவில்லை” “பயமாகவே உள்ளது” என்றெல்லாம் கூடச் சொல்லியிருக்கிறார்கள். உண்மை தான் இதுபோன்ற விளைவுகள் நிச்சயமாக இயற்கையாகவே வரும்.
ஏன்? நான் இவ்வளவு அழுத்தமாக இதனைப் பதிவிடுகிறேன் என்றால், தேர்வு நேரங்களில், போட்டியின் போது ஏற்படுகின்ற அச்சம், அவர்களின் ஆளுமையைப் பாதிக்கிறது. இந்த அழுத்தம் மற்றும் பயத்தினால் அவர்களின் ஆளுமை சிதைந்து போய்விடுகிறது.
வழக்கமாக நான் தேர்வு நேரங்களில் மிகவும் சந்தோஷமாக இருப்பேன். ஏன்? என்றால், கிட்டத்தட்ட ஓராண்டு மிகவும் கடினப்பட்டுத் தயார் செய்திருக்கிறோம், இரவும், பகலும் என்று இவ்வளவு தூரம் படித்திருக்கிறோம் இதனை நாம் நேரடியாக அரங்கேற்றப் போகிறேன் என்பதனை எண்ணி நான் சந்தோஷப் படுவேன். பல நாட்கள் தயாரித்ததை, நான் இந்த உலகத்தின் முன் வழங்கப் போகிறேன் என்று போட்டியாளர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
தேர்வுக்கு முந்தைய நாள் நான் படிக்கவே மாட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரியும், இவ்வளவு நாட்கள் நான் தயாரித்ததை என் மனதும், மூளையும் என்னை கைவிடாது என்று. தேர்வறையை எண்ணி, பல கற்பனையாக நினைத்து யோசித்து கொண்டிருப்பேன். ஒவ்வொருவரும் எவ்வாறு தயார் செய்து தேர்வறைக்கு வருவார்கள் என்று நான் நிறைய சிந்தித்துக் கொண்டு வருவேன்.
எந்தக் கேள்வி வந்தாலும் நான் எழுதி விடுவேன், சரியா?, தவறா? என்பது இரண்டாவது. அந்தச் சூழ்நிலையில் நான் எவ்வாறு வெளிக்கொணர்வது என்பதே முக்கியம். அந்த மூன்று மணி நேரமும் நான் உள்ளபடியாக மகிழ்ச்சியாகத் தேர்வெழுதுவேன். பயம், அழுத்தத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், இவ்வளவு நாட்கள் நான் தயாரித்திருக்கிறேன், இவ்வளவு உழைத்திருக்கிறோம், எனவே, இதனை நாம் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளவில்லை என்றால் நமக்கு கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும் என்பதே என் சிந்தனையாக இருக்கும்.
இப்படி, நிச்சயமாக அச்சமும், அழுத்தங்களும் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும். ஆனால், ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொண்டு தயாரிக்கும் போது எந்த கெட்ட உணர்வும் நம்மை சூழாது. நம்மிடம் தேர்வு, போட்டி குறித்த புரிதல் இல்லை, அதனால் பயம் அதிகரிக்கிறது. ஏன்? எதற்காக? என்று அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டால் போட்டியும், தேர்வும் உங்கள் வசம்.
பலர் இவ்வாறு நினைத்துப் பயப்படுவார்கள், தெரியாத கேள்வி வரும், வந்தால் என்ன செய்வது?. முதல் கேள்வியே தெரியவில்லை என்று தலையில் கை வைத்து ‘‘ஐயோ!’’ என்று உட்கார்ந்து விடுவார்கள். இதுவே தெரிந்த கேள்வி வந்தவுடன் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக ஜொலிக்கும். ஆக, தெரியாத கேள்வி வந்துவிடுமோ என்ற அச்சம், புரியாத ஒன்று வந்து விடும் என்று அந்த சூழ்நிலைக்கு தான் பலர் தங்களை இழந்து விடுகிறார்கள்.
எவர் ஒருவர் கணிக்க முடியாத சூழ்நிலைக்கு தயாராகிராறோ, அவரே உச்ச நட்சத்திரமாக ஆளுமையாக வெற்றியடைவார். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பார்கள். அதுபோல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டி எப்படி இருந்தாலும் நான் இவ்வாறு என்னுடைய தயாரிப்பை அரங்கேற்றுவேன், என்று நினைப்பவர்கள், தானாகவே அவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சூழ்நிலைகளையும் சரியாக கையாள்கிறார்கள்.
எனவே, போட்டி, தேர்வு என்று வரும்போது, நீங்கள் நினைத்தது மட்டும் தான் வரவேண்டும் என்று நினைத்தால் அது ஆரோக்கியமான போட்டி அல்ல. மாறாக, கணிக்க முடியாத பல சூழ்நிலைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வதே சிறந்தது என்ற மன நிலையோடு செல்ல வேண்டும். அதுதான் உங்களின் ஆளுமையை அடையாளப்படுத்தும். சாதனை மனிதர்களின் வரிசையில் உங்களை அமர வைக்கும். போட்டியின் போது வரும் பயங்களையும், அழுத்தங்களையும் சமாளித்துத் தயாராகுங்கள். பல விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள், அப்படிச் செய்தால் வரும் எல்லா நாட்களும் சாதனை நாட்களே! வெற்றியின் நாட்களே! வாழ்த்துகள்…