சமூகப் பார்வை – 20

திரு. .திருமலை மூத்த பத்திரிகையாளர்

லகம் என்றுமே அமைதியாக இருந்ததில்லை. போர்கள் இந்தப் பூமிக்குப் புதிதுமல்ல. இனங்களுக்கிடையேயும், சமூகங்களுக்கிடையேயும், நாடுகளுக்கிடையேயும்  போர்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. உலகின் ஏதோ ஒரு மூலையில் துப்பாக்கிச் சத்தம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

சூலை 26ஆம் தேதியை கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவினர். இந்திய ராணுவம், மைனஸ் டிகிரி குளிரில் அவர்களை எதிர்கொண்டு போரிட்டது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டியது இந்திய ராணுவம். இந்த வெற்றி மூலம் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உற்று நோக்கத் துவங்கின. இந்த வெற்றியை இந்திய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நாட்டைக் காப்பதும், நேசிப்பதும் நமது கடமை. மண்மீட்கும் போரில் வீரமரணம் அடைந்தவர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள். காரணம் நம் இறையாண்மையைக் காத்திருக்கிறார்கள். வெற்றி எப்போதும் சுவையானதாகத்தான் இருக்கும். தேர்வில் வெற்றி பெற்றால், போட்டியில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி கூத்தாடும். ஆனால் இதே மகிழ்ச்சி போரினால் கிட்டும் வெற்றியால் ஏற்படுமா? யோசிக்க வேண்டும். காரணம், போர் இருதரப்பிலும் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

நேட்டோ கூட்டமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன்மீது போர்த்தொடுத்தது. போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரினால் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் போர் நடவடிக்கையால் சுமார் 1 கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக, அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு உக்ரைன் மக்கள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வு பிரச்சனையாக இது பார்க்கப்படுகிறது.

பின் விளைவு

போர் நடப்பதற்கான காரணம் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் அதன் பின்விளைவுகளை யோசித்திருக்கிறோமா? அவை மிக மிக மோசமானவை. சோக வடுக்களை நினைவில் நிறுத்தி விட்டுச் செல்லக்கூடியவை. 

நேரடி போரினால் மக்கள் உயிரிழப்பார்கள். உறுப்புக்களை இழப்பார்கள். அதுமட்டுமல்லாமல் போர் முடிந்து பல ஆண்டுகளான பின்னரும் குழந்தைகள் அங்ககீனமாகப் பிறப்பதற்கும் போர் ஓர் காரணமாகி விடுகின்றது. போரின் பாதிப்பை உணர்ந்த நாடுகளில், இன்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முதல் நாடாக ஜப்பானைச் சொல்லலாம்.

இன்று உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரானது கட்டடங்களையும், தொழிற்சாலைகளையும், வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும், மண்வளத்தையும் சிதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது இத்தோடு நின்று விடுவதல்ல. உக்ரைனிய மக்கள் அனைவரது ஆரோக்கியத்தினையும் சத்தமில்லாமல் சிதைத்துக் கொண்டிருக்கிறது. காரணம், அணுவாயுதப் போர் இன்னும் ஆரம்பிக்கவில்லையே தவிர, வேதியியல் போர் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஒரு தீக்குச்சியைச் சட்டென உரசும் போது அதிலிருந்து எழும் புகையானது சில நொடிகள் நம்மைச் சுவாசிக்க முடியாமல் திணறவைக்கும். சின்னஞ்சிறு தீக்குச்சிப் புகையில் கலந்திருக்கும் வேதிப் பொருளே கூட பாதிப்பைத் தருமாயின் ஒரு போரினால் ஏற்படும் நச்சு வேதியியல் மூலங்கள் கலந்த புகை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியே தீரும் என்பதில் சந்தேகமில்லை. ரஷ்யாவால் போடப்படும் குண்டுகளிலிருந்து வெளிவரும் புகையில் கலந்திருக்கும் வேதியியல் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

தான் வாழும் இடத்திலிருந்து எங்கேயோ அதிக தூரத்தில் போர் நடந்தாலும் அந்தப் போரில் வெளிப்படுத்தப்படும் நச்சுக் காற்று உலகில் உள்ள ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு தானிருக்கின்றது.

ஏன் போர் வேண்டாம்

உலக நாடுகள் பலவும் ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை  அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. கடந்த ஆண்டில் (2021) மட்டும் உலக நாடுகள் ராணுவத்துக்கு 2.1 ட்ரில்லியன் டாலரைச் செலவு செய்திருப்பதாக. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா 801 பில்லியன் டாலர் தனது ராணுவத்துக்காகச் செலவு செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா, 293 பில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது. இந்தியா கடந்த ஆண்டு ராணுவத்துக்குச் செலவிட்ட தொகை 76.6 பில்லியன் டாலர். நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து கடந்த ஆண்டு மட்டும் 68.4 பில்லியன் டாலரை ராணுவத்துக்காகச் செலவு செய்திருக்கிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா 65.9 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. போருக்குத் தயாராவதற்கே  நாடுகள் பெருமளவு செலவழிக்கின்றன.

இந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதியை மனித ஆரோக்கியத்துக்காகவும், கல்விக்காகவும், குழந்தைகள் நலத்துக்காகவும் திருப்பப்பட்டால் மனிதக்குலம் எவ்வளவோ மேம்படும். உலகநாடுகள் இது குறித்துச் சிந்திப்பதில்லை. காரணம் தன்னால் முடிந்தவரை கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. இது இருக்கும்வரை, போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். மனித மனதின் அடியில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் பகை உணர்வுதான் போராக வெடிக்கிறது.

 போரில்லா பூமி சாத்தியமா

“இந்தியாவிடம் நவீன ஆயுதங்களும் இல்லை.. அங்குள்ள மக்களிடம் ஒற்றுமையும் இல்லை அதனால் அவர்களுக்கு சுதந்திர உணர்வே ஏற்படாது” என்பதுதான் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களின் எண்ணமாக இருந்தது. 1888ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் சர் ஜான் ஸ்டார்ச்சி என்பவர் இந்தியா குறித்துப் பேசுகையில் “ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு புதிய நாடு உருவாகினால் உருவாகுமே தவிர, இந்தியா என்ற ஒரு நாடு உருவாவதற்கான வாய்ப்பில்லை. காரணம், ஐரோப்பியக் கண்டத்தில் ஸ்பெயினுக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையேயான வேற்றுமைகளைவிட, பஞ்சாபுக்கும், வங்காளத்திற்கும் இடையேயான வேற்றுமைகள் அதிகம்.” என்றார். இவர் பல ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் வசித்தவர். இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசகராகவும் இருந்தவர்.

1947ஆம் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு 1948-க்குள் சுதந்திரமளிக்க இருப்பதாக அறிவித்தார் அட்லி. அப்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர்ந்திருந்த வின்சென்ட் சர்ச்சில். “இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்து என்ன ஆகிவிடப்போகிறது? அவர்களால், இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது” என்றார். ஆனால், காந்திஜியின் அகிம்சை வழி போராட்டமே இந்தியாவுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது.

காந்திஜியின் அமைதி வழியிலான அரசியல் நகர்வுகள் என்பது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என மூன்று கண்டங்களில் நேரடியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 1893 முதல் 1914 வரை அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த காலத்தில் நேட்டாலிலும், டிரான்ஸ்வாலிலும் ஆரம்பித்த போராட்டங்கள்தான் அந்தக் காலத்தில் உலகின் பாதியை ஆட்சி செய்துவந்த பிரிட்டனையே அதிர்வடையச் செய்தன. 1915 முதல் இந்தியா சுதந்திரமடையும் வரையில் அவர் நடத்திய அகிம்சை வழியிலான சத்தியாகிரகம் பிரிட்டிசாரின் பீரங்கிக் குண்டுகளைவிட வலிமையானவை. உலக அரசியல் வரலாற்றில் பின்னாட்களில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங்சன் சூகி என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் எல்லாம் தங்களின் வழிகாட்டியாக விரல்நீட்டியது காந்தியைத்தான்.

பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, காந்தியின் போராட்ட முறைபற்றி குறிப்பிடும்போது, “சர்வாதிகார முறையிலிருந்து ஜனநாயகத்துக்கு மாறிய சுமார் ஐந்து டஜன் நாடுகளைப்பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 70 சதவிகிதத்துக்கு மேற்பட்ட இடங்களில் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்ததற்கு ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகள் காரணமல்ல; மாறாக, இந்த இந்தியச் சிந்தனையாளர் கண்டுபிடித்த புறக்கணிப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், இன்னபிற போராட்ட முறைகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது” எனத் தன்னுடைய ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ என்ற புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்

புத்தம் புது பூமி

போரில்லாத பூமி சாத்தியமாகவேண்டும் என்ற எண்ணம் உலகளவிலான சில தலைவர்கள், பெரும்பான்மையான மக்களிடம் இருக்கிறது. அன்பும் அகிம்சையும் மட்டுமே உலகை ஜனநாயகப்படுத்தும். இந்தியாவை ஜனநாயகப் பாதைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் காந்திஜி. “பழிக்குப் பழி என்பது நாளை உலகை சுடுகாடாக்கி விடும்” என்பார் காந்திஜி. சத்தியமான வார்த்தைகள் இவை.

தொடர்ந்து இந்தப் பூமி, போர்களால் காயப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. போரைத் தடுப்பதற்கான தீர்வுகளை ஆராய்ந்து செயல்படுவதே ஒவ்வொரு நாட்டின் கடமையாக இருக்கவேண்டும். போரிட வேண்டும் என்ற எண்ணம், தனி மனிதனிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் இருந்து மறைய வேண்டும் அதற்கு ஒவ்வொரிடத்திலும் அன்பு நிறைந்திருக்கவேண்டும். உலகை நேசிக்கும் உணர்வு மேலோங்கியிருக்கவேண்டும். கருணையினால், அன்பினால், இந்த உலகம் வழிநடத்தப்பட வேண்டும். நாடு, இனம், மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்த அன்பு வளம்பெற்றிருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் யுத்தமில்லாத பூமி சத்தமில்லாமல் பூக்கும்.