வாழ்வியல் திறன்கள்

முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

லகின் அமைதிக்கும், செழிப்பிற்கும் இன்றையத் தேவையாக இருப்பது பண்பட்ட மனமுடைய மனிதர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளே எனலாம்.  மனம் பண்படுவது என்பது எளிதான செயலன்று.  நம்முடைய கல்வி முறையோ, பிற அளவுகோல்களோ பண்பட்ட மனத்தினை உலகினர்க்கு உண்டாக்க முடியாது. 

“உறுப்பொத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு        (குறள்.993)

என்ற குறள் மிகத்தெளிவாக புற உறுப்புகளினால் மனிதம் தீர்மானம் செய்யப்படுவதில்லை. நல்ல மனிதநேயப் பண்புகளைத் தப்பாது செயல்படுத்தும் நிலையில் மட்டுமே மனிதன் என்ற மாண்பு உறுதிசெய்யப்பெறும் என்று வரையறுக்கின்றார் திருவள்ளுவர்.  இன்றைய உலகியலில்,

  1. சொத்தினைத் தனக்குத் தரவில்லை என்பதற்காக சொந்தத் தந்தையைக் கொன்று கூறுபோடும் மகனின் வெறிச்செயல்,
  2. கணவனுடன் பிரச்சனை என்பதற்காக குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் மடமைச் செயல்,
  3. உடனே செல்வச்செழிப்பில் திளைக்க வேண்டும் என்பதற்காக, வீட்டின் முதலாளியையே கொலை செய்யும் பாதகச் செயல்,
  4. தவறான உறவுகளுக்கு இடையூறாக இருக்கும், சொந்தக் குழந்தையையோ, அல்லது உறவினையோ தீர்த்துக் கட்டும் பாவச்செயல்,
  5. திருமணத்திற்காக வரதட்சணை கூறிய அளவில் தரவில்லை என்பதற்காக, மணமகளை இன்னலுக்கு உள்ளாக்கித் தற்கொலைக்குத் தூண்டும் பாதகச் செயல்,
  6. தனியாக இருக்கும் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனைப் படமெடுத்து பணம் பறிக்கும் இழிச்செயல்,
  7. வேலியே பயிரை மேய்வதுப்போன்று, உயர் பதவியிலிருப்பவர்களே, தத்தமது துறைகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான வழியல் பணத்தைச் சுருட்டும் துரோகச்செயல்,

மேற்குறித்தனவெல்லாம் அண்மையில் நிகழ்ந்த கொடுமைகள். செய்தித்தாளில் வெளிவந்தனவற்றைக் கண்ணுறும்போது, பண்படாத மனங்களின் அறமற்றச் செயல்வழி நேர்ந்த அவலங்களின் அடர்த்தியை உணரமுடிகின்றது.  இதுபோன்று உலக நிலைகளிலும் எவர் வல்லண்மையாளர் என்பதனை நிரூபிப்பதற்காக, கலவரங்கள், போர்கள், ஆயுத விற்பனைகள், போதை மருந்துகள் விற்பனைகள், எனப்பல பண்பற்றச் செயலழிவுகள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இவ்வாறான கீழ்க்குணங்களையெல்லாம் போக்குவதற்கு உலகளாவிய ஒருமித்த அறமுயற்சி இன்றியமையாதொன்றாகின்றது. 

Science has guided missiles but misguided mankind.

என்பார்கள். ‘‘அறிவியல் புரட்சியாக ஏவுகணைகளைச் செலுத்தத் தெரிந்த நமக்கு அறப்புரட்சியாக மனித மனங்களைப் பண்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்கத் தெரியவில்லை’’ என்பது வருத்தமளிப்பதாகவுள்ளது. இம்மண்ணுலகச் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், சான்றோர்கள் அனைவரும் எவ்விதப் பாகுபாடுமின்றி ஒன்றாகக் கூடி இவ்வுலகின் அமைதிக்கும், மக்கள் அனைவரும் தன்மதிப்புடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் ஏதுவான வழிமுறைகளை வரையறை செய்திடவேண்டும்.  இன்றைய காலக்கட்டத்தில் ஓரளவு நிறப்பேதங்கள், மதவெறிகள், உலகப்போர் நிகழாத அளவிற்கான சூழல்கள் என நல்லாக்கங்களை ஏற்படுத்த தெரிந்த அறிவினர்க்கு, உலக உள்ளங்களை பண்பட்டவர்களாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் உருவாக்க இயலும்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
 தம்நோய்ப்போல் போற்றாக் கடை” (குறள்.315)

மேற்குறித்த குறளானது, மனிதநேயப் பாவிப்பினை மிக அழுத்தமாகச் சுட்டுவதை அறியலாம். 

இக்குறளின் பொருண்மைகளாவன

  1. அறிவின் பயன் அடுத்தவரையும் தன்னைப் போலப் பாவிப்பது
  2. அடுத்தவரின் நிலையோடு தன்னைச் சார்த்தி நன்மை செய்ய முனைவது
  3. தானும் அடுத்தவரும் வேறல்ல என்ற உணர்வினில் உறுதி கொள்வது
  4. எந்தத் துயரில் பிறர் சிக்கினாலும் தானே உற்றது போன்று உணர்ந்து உடன் களைய முனைவது
  5. உலகில் எந்த மூலையில் மனித உரிமைகள் நசுக்கப்பட்டாலும் தானுற்றதாகப் பாவித்து தன் கண்டனக்குரலைப் பதிவடுவது
  6. உழைப்பினைச் சுரண்டும் அநீதிகள் யாருக்கு நேர்ந்தாலும், அதற்கு ஏதுவான வழிமுறைகளுக்கு வித்திடுவது
  7. தன்னை வளர்த்துக்கொள்வதே தன்னைப் போன்றோரின் நலத்திற்காக என்ற மேவிய எண்ணமதை உள்ளமதில் வலுப்பெறச்செய்வது.

 இவ்வாறான உயர்வுள்ளல் ஒவ்வொரு உலக மனிதனிடத்தும் உடைமையாக இருப்பின், பெற்ற அறிவின் பயனே பிறரையும் தன்னைப் போல நயமுடன் நடத்துவதற்கே என்ற ஆன்ற சிந்தனையானது இயல்புற்றிருக்கும்.  எனவே உலகினர் தத்தம் கல்விக் கூடங்களில் அறிவியல் நுண்மைகளோடு, அறவியல் உயிர்ப்பான மனிதநேய பாவிப்புணர்வினை மாணவ உள்ளங்களில் அடிநாதமாகப் பதிவு செய்திடவேண்டும். இளமையில் மனஆழத்தில் அழுத்தமாக நம்பப்பெறும் எதுவும் இறுதிவரை துடிப்போடு செயலாக்கம் பெறும் என்பது உளவியல் உறுதிப்பாடு.  உலகில் நிலவும் வன்கொடுமைகளை நித்தம் செய்திகளாகப் போட்டு புலம்புவதைவிட.

இந்தக் கொடுமைகளைத் தீர்ப்பதற்கு உண்டான அறவழி ஆக்கங்களை செயல்படுத்தும் வழியினை ஒரு தவமாகச் செய்திடின், பெருமளவு மக்கள் தங்களின் மனசாட்சியின் தெய்வீகக் குரலை ஆழ்ந்து கேட்டு அதன்வழி இயங்கக்கூடிய மறுமலர்ச்சி நிலையானது உலகினில் உறுதிசெய்யப்பெறும்.  பண்புடையார் பட்டுண்டு உலகு(996) என்ற வள்ளுவச் சொல் உலக சிக்கல்களைத் தீர்க்கவல்ல ஒரு சக்திவாய்ந்த தவச்சொல் என்பதனை அனைவராலும் உணரமுடியும். 