முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 16

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்           டாக்டர். மெ.ஞானசேகர்

2002ஆம் ஆண்டு 1,725 அமெரிக்க உளவியல் சங்க உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 20-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க இரண்டாவது உளவியலாளர் ஜீன் பியாஜெட் என்பது கண்டறியப்பட்டது. அதேசமயம், குழந்தைகள் உளவியலாளர்களில் முன்னோடியாக அவர் திகழ்வதும் அறியப்பட்டது. இத்தகு பெருமைமிக்க ஜீன் பியாஜெட் (Jean Piaget), 1896-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்தார்.

இளமை முதலே கற்பதில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்தார். இயற்கை சார்ந்த, உயிரினங்கள் சார்ந்த அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டு கல்வி பயின்றார். 1918-ஆம் ஆண்டு நியூசெட்டர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால், அதன் பிறகு அவரது ஆர்வம் உளவியல் துறை சார்ந்து மாறியது. 1923-ஆம் ஆண்டு வாலண்டைன் என்பவரை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

இந்தக் குழந்தைகளை இயற்கையாகவும், அன்பாகவும் வளர்த்த இந்தத் தருணத்தில் ஜீன் பியாஜெட், குழந்தைகள் சார்ந்த உளவியல் ஆய்வில், தன் சொந்தக் குழந்தைகளின் உடல், அறிவு மற்றும் மன மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தார்.

அக்காலத்தில் ஆல்பிரட் பிளெட் என்பவர் உருவாக்கியிருந்த குழந்தைகள் வளர்ச்சி நிறுவனத்தில் ஓராண்டு பணி செய்தார். உலகிலேயே முதன்முதலில் நுண்ணறிவுச் சோதனைகளை நடத்தியவர் என்ற பெருமை பெற்றவர் இந்த ஆல்பிரட் பிளெட் என்பவர். பிளெட்டுடன் பணிசெய்த இந்த ஓராண்டு காலம் ஜீன் பியாஜெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பியாஜெட் தன்னை ஒரு ‘மரபியல் ஆராய்ச்சி அறிஞர்’ என்றே அழைத்துக் கொண்டார். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல், ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகள் ஒவ்வொன்றையும் எப்படிப் பார்க்கின்றனர்? அணுகுகின்றனர்? என்பதைப் பற்றிய ஆய்வில் அதிகக் கவனம் செலுத்தினார்.

பியாஜெட் அணுகுமுறை

பியாஜெட் குழந்தைகளுக்கு பல்வேறு உளவியல் சோதனைகள் நடத்தினார். மாணவர்களிடம் வாசிப்புச் சோதனைகளை நடத்தி, அவர்களின் தவறுகளைக் கண்டறிந்து, அதற்கான காரணங்களை ஆய்வு செய்தார். மேலும், கதைகளைச் சொல்லி அவற்றில் அவர்கள், எப்படிப்பட்ட முடிவுகளைத் தருகின்றார்கள் என்பதையும் ஆய்வு செய்தார். சில சூழல்களை விளக்குவதன் மூலம், குழந்தைகள் அதை எப்படிப் புரிந்துகொள்கின்றார்கள்? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

உதாரணமாக, ஒரு சிறிய களிமண் கட்டியை எடுத்து அதனை தட்டையான வடிவமுள்ள ஒரு பொருளாகவும், கூம்பு வடிவமுள்ள வேறு ஒரு சிறிய அளவிலான பொருளாகவும் வடிவமைத்தார். இவற்றில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தட்டையான வடிவமுள்ளதை விரும்புவதைக் கண்டறிந்தார். பெரிய மாணவர்கள் கூம்பு வடிவமுள்ளதை தேர்வு செய்வதையும் கண்டறிந்தார். இதன்மூலம் சிறு வயதில், பெரிய வடிவங்கள், தோற்றங்கள் குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதை அறிந்தார். நமது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகள் வாங்கித் தரும்போது பெரிய வடிவிலான பொம்மைகள், கார்களை குழந்தைகள் விரும்புவதையும், நாட்பட உழைக்கும் விலை அதிகமுள்ள சிறிய பொம்மைகள், சிறிய கார்கள் அவர்களை ஈர்ப்பதில்லை என்பதையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

ஜீன் பியாஜெட், குழந்தைகளின் உளவியலை ஆய்வு செய்த போது ஒரு புகழ்பெற்ற உண்மையை உலகிற்குச் சொன்னார். அதாவது, குழந்தைகள் பெரியவர்கள் போலச் சிந்திப்பது இல்லை. அவர்கள் மாறுபட்டுச் சிந்திக்கின்றார்கள் என்பதே அந்த உண்மை. இன்று, இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, புரிந்துகொள்ளப்படவும் முடிந்திருக்கின்றது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இவை, பல கேள்விகளை உருவாக்கின. இதன் மூலம் கல்வி, சமூகம், மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் பல மாற்றங்களும் உருவாகின.

அறிவாற்றல் வளர்ச்சி – நான்கு நிலைகள்

ஜீன் பியாஜெட் வழங்கிய அறிவாற்றல் வளர்ச்சியின் நான்கு நிலைகள் மிகவும் முக்கியமானவையாகும். ஒவ்வொரு குழந்தையும், இந்த நான்கு நிைலகளைக் கடந்து செல்வதாகக் குறிப்பிடுகின்றார் பியாஜெட்.

சென்சரி மோட்டார் நிலை

இந்த முதல் நிலை குழந்தையின் முதல் இரண்டு ஆண்டுகளைக் குறிக்கின்றன. தனது உள்ளார்ந்த அனிச்சை செயல்கள் மூலமும் உடலுறுப்புகளின் இயக்கங்கள் மூலமும், குழந்தைகள் உலகத்தை அறிந்துகொள்கின்றார்கள். உறிஞ்சுதல், கடித்தல், பிடித்தல், பார்த்தல், கேட்டல் மூலம் தங்களால் முடிந்தவரை உலகை உணர்ந்து, தங்களது தேவைகளையும் உடல் உறுப்புகள், அழுகை மற்றும் செய்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

குழந்தைகளின் வளர்ச்சி நிலையில் மிக வேகமாக மற்றும் முக்கியமாக நகரும் நிலை தான் இந்த முதல் நிலை. இது மிகப்பெரிய வளர்ச்சியைக் குறுகிய காலகட்டத்தில் கொண்டுள்ளது என்பதை, குழந்தைகளின் பெற்றோர், அவர்களை வளர்ப்பவர்கள், கண்காணிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடத்தல், பேசுதல், புரிந்துகொள்ள முயலுதல் என்று அசுர வளர்ச்சிக்கு இக்காலமே அடித்தளம் அமைக்கின்றது.

எந்த அளவுக்கு, இந்தக் காலக்கட்டத்தில் ஒரு குழந்தைக்கு முக்கியத்துவம் மற்றும் கவனிப்பு கிடைக்கின்றதோ, அந்த அளவின் அடிப்படையில் அதன் எதிர்கால வளர்ச்சி கட்டமைக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அக்குழந்தையின் மீது கவனம் செலுத்திட வேண்டும்.

மொழியறியும் இரண்டாம் நிலை

குழந்தைகளின் இரண்டு முதல் ஏழு வயது வரை இந்த நிலையைக் குறிப்பிடுகின்றார் ஜீன் பியாஜெட். மொழி மற்றும் சிந்தனை வளர்ச்சி இந்தக் காலக்கட்டத்தில் வேகமாக நடைபெறுகின்றது. சரியான வார்த்தைகளைத் தேடி, அறிந்து பேசும் பயிற்சி பெறுகின்றார்கள். புதிய மொழிப் பயிற்சி கிடைத்தாலும் அதையும் கற்றுக்கொள்கின்றார்கள்.

குறிப்பாக இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு அறிவு தானாக வளர்வதில்லை. மாறாக, கற்றுக்கொள்வதற்காக அமையும் சூழல்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மூலமே பலவற்றை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பருவமும் மிகவும் முக்கியமான பருவம் ஆகும். காரணம், குழந்தைகளின் சிந்தனைப் போக்கில் மாற்றமும், தெளிவும், வேகமும், அறிதலும், உறுதியும் இந்தப் பருவத்தில் வெகுவாக நடக்கின்றது. எனவே, இப்பருவக் குழந்தைகளை வளர்ப்பவர்கள் இவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும், கற்றுத் தருதலையும் வழங்கிட வேண்டும்.

இந்தக் கற்றலைத் தரும் வகைகளை ‘ஸ்கீமா’ என்ற வார்த்தை மூலம் விளக்கினார் ஜீன் பியாஜெட். ஸ்கீமா (Schema) என்னும் கோட்பாடானது, பியாஜெட்டின் கூற்றுப்படி, அறிவின் வகையையும், அந்த அறிவைப் பெறுவதற்கான செயல்முறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.

அதாவது ஒரு குழந்தை அது பெறக்கூடிய அறிவு மற்றும் அதைப் பெறும் வழிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் அறிவு வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்பதே இதன் விளக்கமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை எப்போதும் சிறிய நாய்களை மட்டுமே பார்த்து, விளையாடிப் பழகினால் நாய்கள் என்பவை சிறியவை, நான்கு கால்கள் கொண்டவை, ஒரே மாதிரியான முடிகள் கொண்டவை என்று தன் மனதில் வைத்துக் கொள்ளும்.

அதேசமயம் ஒரு பெரிய நாயைச் சந்திக்கும் போது, தனது பார்வையை, எண்ணத்தை மாற்றிக் கொள்ளும். இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எத்தகைய சூழல்களை, அறிவுக்கான தகவல்களை நாம் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தருகின்றோம் என்பதன் அடிப்படையில் அதன் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதுதான்.

இன்று சிறு குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துப் பழகும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் பலவற்றைக் கற்றுக்ெகாள்கிறார்கள். ஆனால், இப்படி அசுர வளர்ச்சியில் குழந்தைகளை ஈடுபடுத்தல் ஆகாது, நல்லதல்ல என்பதைத் தான் அடுத்த நிலையில் ஜீன் பியாஜெட் விளக்குகின்றார்.

வளர்ச்சி மாற்றம் பெறும் மூன்றாம் நிலை

குழந்தைகளின் ஏழு முதல் பதினோரு ஆண்டுகளை இந்த நிலையில் அடக்குகின்றார் பியாஜெட். இந்தப் பருவத்தில் குழந்தைகள் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி உறுதியாகச் சிந்திக்கின்றார்கள். அளவீடுகள், கணக்கீடுகள், உயரம், ஒல்லி, நீளம், குட்டை என்று பல்வேறு மாற்றங்கள் பற்றிய தெளிவு அவர்களுக்குப் பிடிபடுகின்றது.

தங்களது எண்ணங்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் சிந்திக்கின்றார்கள். சில சமயங்களில் எண்ணப் போராட்டங்களுக்கு உட்படுகின்றார்கள். எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்பதையும், எதைப் பேச வேண்டும் என்ற தெளிவையும் பெறுகின்றார்கள். சுருங்கச் சொன்னால், குழந்தைகளுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் சொல்லி வளர்க்க வேண்டிய முக்கியப் பருவம் இதுவாகும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு இங்கு முக்கியமானது. இங்கே சில நல்ல பண்புகளைக் கற்றுத்தரவில்லை என்றால் அவர்களது எதிர்காலத்தில் கஷ்டப்படுவார்கள்.

சுயம் விரியும் நான்காம் நிலை

பன்னிரெண்டு வயது முதல் தொடர்ந்து வரும் வயதுகளை உள்ளடக்கிய இறுதி நிலை என்று பியாஜெட் குறிப்பிட்டுள்ளார்.

கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல், தர்க்க ரீதியாகச் சிந்தித்தல், அரசியல், பொருளாதாரம், சமூக நிகழ்வுகள் பற்றிப் பேசுதல், சிந்தித்தல் என்று ஒவ்வொரு குழந்தையின் உலகமும் அடுத்த வாழ்வு நிலை நோக்கி நகர்கின்றது.

ஜீன் பியாஜெட் நூல்கள்

ஜீன் பியாஜெட் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இந்த நூல்களில் பெரும்பாலானவை குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சார்ந்தது ஆகும்.

குழந்தைகளின் உளவியல் பகுதியில் அதிகத் தாக்கத்தை, விளக்கத்தை இந்த நூல்கள் தந்தன. பல நூறு ஆய்வுகளும் இவரது எழுத்தை, சிந்தனையைச் சார்ந்து இன்றும் தொடர்கின்றன. வழக்கமாக சில உளவியல் சிந்தனைகள் சில ஆண்டுகளில் மாற்றம் பெறும். ஆனால், ஜீன் பியாஜெட்டின் பல சிந்தனைகள், கருத்துகள் இன்றளவும் பயனுள்ளதாக உள்ளதே சிறப்பாகும்.

ஜீன் பியாஜெட் கல்வி நிலையங்கள் சார்ந்து தனது ஆய்வை, எழுத்துகளை உலகிற்கு வழங்கவில்லை. ஆனால், அவற்றின் தாக்கம் உளவியல், சமூகவியல் என்று விரிந்த போது “குழந்தைகளின் கல்வி உளவியலாக” மாறியது. காலத்தின் ேதவை அடிப்படையில், குழந்தைகளுக்குக் கற்றுத்தருதலில் உள்ள பல சிக்கல்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு தர ஆசிரியப் பயிற்சிகளில் குழந்தைகளின் உளவியல் இன்று கட்டாயப் பாடமாகியுள்ளது. எதிர்காலத்திலும் இதன் தேவை மற்றும் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளும் நல்லொழுக்கமும்

ஜீன் பியாஜெட் தான் குழந்தைகளின் நல்லொழுக்க வளர்ச்சி பற்றி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் படிநிலைகளை உலகில் முதன்முதலில் அறிவித்தவர் ஆவார். குழந்தைகளின் நல்லொழுக்க வளர்ச்சி மூன்று நிலைகளில் உள்ளதாக பியாஜெட் தெரிவிக்கிறார்.

  1. நல்லொழுக்க அறிவு (Moral Knowledge)
  2. நல்லொழுக்கம் பற்றிய தீர்மானம் (Moral Judgement)
  3. நல்லொழுக்க நடத்தை (Moral Behaviour)

இன்று கல்வியகங்களில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை நாம் அறிவோம். இதன் தேவை மற்றும் வளர்ச்சியை பியாஜெட் அன்றே விளக்கியுள்ளார்.

ஜீன் பியாஜெட் கூறியுள்ள, ஒரு எளிய சம்பவம் மூலம், இதனை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு சிறுவனின் தாய், அவனிடம் வீட்டில் பொருட்கள் வைக்கும் அறைக்குள் சென்று, அலமாரியிலிருந்து சில கண்ணாடிக் குவளைகளை எடுத்துவரச் சொல்கின்றார். சிறுவன் உள்ளே செல்கின்றான். அலமாரியைத் திறந்து குவளைகளை எடுக்க முயன்ற போது, கை தவறி, ஆறு குவளைகள் கீழே விழுந்து உடைந்து நொறுங்கிப் போகின்றன.

இன்னொரு வீட்டில் ஒரு சிறுவன், அவனது அம்மாவுக்குத் தெரியாமல், பொருட்கள் வைக்கும் அறையில் சென்று இனிப்பு ரொட்டிகளைச் சாப்பிடச் சென்றான். யாருக்கும் தெரியாமல், மெதுவாகச் சென்று அலமாரியைத் திறந்து, ரொட்டிகளை எடுக்கும் போது ஒரு கண்ணாடிக் குவளை, கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

இந்த இரண்டு சிறுவர்களில் எந்தச் சிறுவன் செய்த தவறு பெரியது? என்ற கேள்வியானது எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. அவர்களில் எல்லோருமே, முதல் சிறுவன் செய்ததுதான் பெரிய தவறு. காரணம், அவன் ஆறு குவளைகளை உடைத்துவிட்டான். பெரிய இழப்பு அவனால் தான் வந்துள்ளது என்ற பதிலை வழங்கினார்கள்.

எட்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேட்ட போது அவர்களில் பெரும்பாலானவர்கள், இரண்டாவது சிறுவன் செய்தது தான் தவறு என்றார்கள். காரணம், அவன் தாய்க்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக ரொட்டி சாப்பிடச் சென்றான் என்பதையும் விளக்கினார்கள்.

இப்படிச் சம்பவங்களைக் கொடுத்து, பதில்களைப் பெற்று, குழந்தைகளின் மன ஓட்டத்தை, வளர்ச்சி நிலையைப் பகுப்பாய்வு செய்தவர் தான் ஜீன் பியாஜெட்.

மேற்கண்ட சம்பவத்தை மையமாக வைத்து மூன்று நிலைகளில் குழந்தைகளின் ஒழுக்க நிைலயை வகைப்படுத்துகின்றார்.

முதல் நிலை

குழந்தைகள் தங்கள் மனதில், அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கான தண்டனைகளின் அளவை மட்டுமே நினைவில் கொள்வார்கள். அந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கப் பொய் சொல்லுவார்கள் அல்லது வேறு ஒரு தவறைச் செய்வார்கள். இளம் பருவத்தில் அவர்கள் பொய் சொல்வது, ஏமாற்றுவது ஒரு தவறு என்று எண்ணக்கூடிய மனநிலையை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். அறியாமல், தண்டனைக்குப் பயந்து, பயந்து இப்படித் தவறுகளை இழைப்பவர்கள்தான் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்து சேரும், குழந்தைகள் சிறைக்கு வந்து சேரும் நிலையை அடைகின்றார்கள். இவர்களைக் குற்றவாளிகள் என்று உணர்த்துவதைவிட, இவர்களது செயலைத் தவறு என்று உணர்த்தித் திருத்துவதே இங்கு பெரிய கடமையாக உள்ளது.

குழந்தைகள் நமது வீட்டில் வளருகின்ற பருவத்தில், இத்தகைய செயல்களைச் செய்கிறார்கள். நாம் மன்னிக்கின்றோம். ஆனாலும், ஆரம்பம் முதலே இது தவறு என்ற உணர்வை அவர்களுக்கு விதிகள் மூலம் நாம் உணர்த்தலாம்.

இரண்டாம் நிலை

ஐந்து வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட நிலையில் இதனைக் கவனிக்கலாம். முதல் நிலையில் பெற்றோர்கள் சில விதிகளைச் சொல்லி ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று கட்டுப்பாடுகளைச் சொல்லியிருப்பார்கள். குழந்தைகளும் இதனை ஏற்றுக்கொண்டு நடந்திருப்பார்கள். ஆனால், இந்த நிலையில், அவர்களால் பெற்றோர்கள் ‘தவறு’ என்று கூறுவது ‘உண்மையா?’ ‘பொய்யா?’ என்று பகுத்தறிய முடியும். எனவே, சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், சரியானவற்றை மட்டுமே நாம் கற்றுத் தந்தால், அவர்களுக்கு ‘நல்லொழுக்கம்’ என்பது ஒரு பண்பாகத் தெரிய ஆரம்பிக்கின்றது.

எனவே, சில தவறுகளைச் செய்து அவர்கள் தண்டனையைப் பெறும் போது, அது நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு வந்துவிடுகின்றது. இப்போது விதிகள் என்பதைவிட, நல்லொழுக்கப் பண்புகள் ஒரு தேவை என்ற தெளிவும், அதனைப் பின்பற்ற வேண்டும் என்று தானாகவே முன்வரும் செயலும் நடைபெறுகின்றன.

மூன்றாம் நிலை

இப்படிச் சிறப்பாக இரண்டாம் நிலையை அடையும் குழந்தைகள், நல்லொழுக்கத்திற்கான அறிவைப் பெறுவதுடன், அதற்கு எதிராகக் கேள்வி கேட்பதை, நிறுத்திவிடுகின்றார்கள். அதாவது இந்த நிலையில் ஒரு குழந்தை, பொய் சொல்வது என்பது மற்றவர்கள் கண்டுபிடித்தாலும் சரி, மற்றவர்கள் அதைக் கண்டுபிடிக்காவிட்டாலும் சரி தவறுதான் என்ற உணர்வுக்கு வருகின்றது. இந்த நிலையை ஒரு குழந்தை அடைகின்ற போது, சாலையில் போக்குவரத்துக் காவலர் நின்றாலும் சரி, நில்லாவிட்டாலும் சரி, சாலை விதிகளைக் கடைப்பிடித்து, சாலையில் பயணிக்கின்றார்கள். பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும் போது, அதைத் தூய்மையாக்கிவிட்டு வெளியே வருகின்றார்கள். காரணம், யாரும் தன்னைப் பார்க்காவிட்டாலும், மற்றவர்கள் தொடர்ந்து அந்தக் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒழுக்க விதியைத் தானாகவே கடைப்பிடிக்கின்றார்கள்.

இன்று கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடப்பதும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் முறைகேடாக நடப்பதும் இந்த ஒழுக்க விதி மீறல்களால்தான் என்பதை, எளிதில் நம்மால் புரிந்துகொள்ள முடியும். எழுபது ஆண்டுகளுக்கு முன்ேப ஜீன் பியாஜெட் இதுபற்றி நிறைய சிந்தித்தது, இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவதை நாம் காணலாம்.

பியாஜெட்டின் தேவை

ஜீன் பியாஜெட் தனது கல்வி மற்றும் சிந்தனையில், அடிக்கடிக் கூறிய ஒரு கூற்று இங்கே கவனிக்கத்தக்கதாகும். அதாவது, “நமது கல்விக் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் இலக்குகள் காலங்காலமாக உள்ளதையே போதிப்பதாக இல்லாமல், புதிய விஷயங்களைச் செயலாக்கக் கூடிய ஆண்களையும், பெண்களையும் உருவாக்குவதாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்க்கை முழுவதும் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்தார். உளவியல் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அறிவியலில் பல்லாண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டார். 1960-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை இருபது ஆண்டுகள் ஜீன் பியாஜெட்டின் கோட்பாடுகள் கல்வி நிறுவனங்களில் கோலோச்சியது.

1921-ஆம் ஆண்டுமுதல் குழந்தைகளின் பகுத்தறிவுச் செயல்முறைகள் பற்றிய கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தார். 1925 முதல் 1929 வரை நியூசெட்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1929 முதல் ெஜனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 1980-ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை ஜெனீவா பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தினார். 1955-ஆம் ஆண்டு மரபணு அறிவியலின் சர்வதேச மையத்தைத் தொடங்கினார். வாழ்வின் இறுதிவரை அந்த மையத்தின் தலைவராக இருந்தார்.

குழந்தைகள் உலகை மையப்படுத்தி, குழந்தைகளின் செயல்பாடுகளை முழுவதுமாக ஆய்வு செய்து, குழந்தைகளின் உளவியலுக்கு அடித்தளமிட்ட ஜீன் பியாஜெட் என்றென்றும் கல்வியாளர்களால், பெற்றோர்களால் நினைவுகூறப்படுகின்றார். மனிதர்களின் வளர்ச்சி நிலையில் குழந்தைப் பருவமே, தலையான மற்றும் விரைவான வளர்ச்சிப் பருவம் என்பதை உலகில் ஆழமாக விதைத்தவர் ஜீன் பியாஜெட். குழந்தைகள் மீதான நமது பார்வையும் அவர்களது நலன் சார்ந்த நடவடிக்கைகளும் கல்வியகங்களில் சிறப்பாக அமைந்திட, புதிய வெளிச்சம் காட்டியுள்ளார் ஜீன் பியாஜெட். இந்த ஒளியில் பயணிப்போம். “உலகின் எதிர்காலச் சிற்பிகள் குழந்தைச் செல்வங்களே” என்ற உணர்வோடு வரும் கல்வியாண்டு மலரட்டும், ஒளிரட்டும். 

 ஜீன் பியாஜெட் – பொன்மொழிகள்

  • அனுபவம் புரிதலுக்கு முந்தைய நிலையாகும்.
  • ஒரு சிக்கலைப் பற்றிப் படிக்கும் முன், அதைப்பற்றிச் சிந்திக்க நான் எப்போதும் விரும்புகிறேன்.
  • உலகில் உள்ள அனைத்து விதிகளையும் விட, ஒரு சிறிய மனிதநேயம் எவ்வளவு விலைமதிப்பற்றது.
  • என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாத போது, நீங்கள் பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும்.
  • எழுதாமல் என்னால் சிந்திக்க முடியவில்லை.
  • கல்வியின் குறிக்கோள் அறிவின் அளவை அதிகரிப்பது அல்ல; ஆனால், ஒரு குழந்தை ஒவ்வொன்றையும் தானே கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதாகும்.
  • கல்வி மட்டுமே, நமது சமூகங்களை வன்முறை மற்றும் படிப்படியான சரிவிலிருந்து காப்பாற்றும் திறன் கொண்டது.
  • ஆசிரியர் ஒரு விரிவுரையாளராக இருப்பதை நிறுத்திவிட்டு, மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டும், வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
  • அறிவு என்பது பரம்பரையால் முன்னரே தீர்மானிக்கப்படவில்லை.
  • கல்வி என்பது படைப்பாளிகளை உருவாக்குவது ஆகும்.
  • குழந்தைகள் தாங்களே கண்டுபிடித்ததைப் பற்றி மட்டுமே, அவர்களுக்கு உண்மையான புரிதல் உள்ளது.
  • ஒவ்வொரு குழந்தையும் தானே கற்றுக்கொள்ளக்கூடியதை, நாம் கற்றுக்கொடுக்கும் போது, அதனுடைய உண்மையான புரிந்துகொள்ளும் அறிவுக்கு நாம் தடையாக உள்ளோம்.
  • சமமானவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, குழந்தையின் நடைமுறை அணுகுமுறையில் படிப்படியான மாற்றத்தைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அது அதிகாரத்தின் மீதான மாய உணர்வையும் நீக்குகின்றது.
  • குழந்தைகளுக்கு நீண்ட, தடையற்ற விளையாட்டு மற்றும் ஆய்வுகள் தேவை.
  • சிந்தனையின் ஒவ்வொரு களத்திலும், குழந்தை ஒரு எதார்த்தவாதியாகும்.
  • ‘புதியது எப்படி வருகின்றது?’ என்பதற்கான பதில் விளையாட்டாகும்.
  • ஒவ்வொரு செயலும், ஒரு ஆற்றல் மிக்க அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு அம்சம் மற்றும் ஒரு கட்டமைப்பு அல்லது அறிவாற்றல் அம்சத்தை உள்ளடக்கியது என்று நாம் எளிதாகக் கூறுவோம். ஆனால், இது உண்மையில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள வெவ்வேறு கண்ணோட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
  • நாம் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, நாம் அதிகமாகக் கற்றுக்கொள்கின்றோம்.
  • மிகவும் வளர்ந்த விஞ்ஞானம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது.
  • கற்பித்தல் என்பது கட்டமைப்புகளைக் கண்டறியக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குவதாகும்.
  • மனதின் இன்றியமையாத செயல்பாடுகள் புரிந்துகொள்வது மற்றும் கண்டுபிடிப்பதில் உள்ளன.
  • நாம் பார்ப்பது நமக்குத் தெரிந்ததை மாற்றுகிறது. நமக்குத் தெரிந்தது நாம் பார்ப்பதை மாற்றுகின்றது.
  • ஏழு, எட்டு வயதுக்குட்பட்ட குழந்தையைப் பற்றி ஒருவர் கண்டுபிடிப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அக்குழந்தைகளுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஆர்வம் உள்ளது என்பதே.
  • புரிந்துகொள்வது என்பதே கண்டுபிடிப்பதாகும்.
  • தனக்கு சமமானவர்களுடன் விளையாடுவதற்குமுன், குழந்தை தன் பெற்றோரால் பாதிக்கப்படுகின்றது.
  • சமநிலையே அனைத்து மனித நடவடிக்கைகளின் ஆழமான போக்காகும்.
  • குழந்தைகளின் விளையாட்டுகள், மிகவும் போற்றத்தக்க சமூக நிறுவனங்களாக அமைகின்றன.
  • நீங்கள் குழந்தையைப் பின்தொடர்ந்தால் நீங்கள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கலாம்.
  • பதினொன்று, பன்னிரெண்டு வயதில் குழந்தைகள் தங்களைக் குழுக்களாக உருவாக்க ஒரு உந்துதலைக் கொண்டிருப்பார்கள்.
  • ‘புதியது எப்படி உருவாகிறது?’ என்ற கேள்விக்கான பதில் ‘நாடகம்’.
  • விளையாட்டு என்பது குழந்தைப் பருவத்தின் வேலையாகும்.

தர்க்க அறிவு, கணித அறிவு, உடல் அறிவு மற்றும் பலவற்றின் வளர்ச்சியைப் படிப்பதற்கான சிறந்த வாய்ப்பு குழந்தைகளிடம் உள்ளது.