இளைஞர் உலகம் – உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

லம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் (SWOT) ஆய்வின் அடிப்படையில் தூங்குமுகத்தவரின் பண்புகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். தூங்கு முகத்தவரின் பொதுவான பண்புகளைப் பார்த்த நாம், சென்ற மாதம் அவர்களது பலவீனங்கள் பற்றி பார்த்தோம். இந்த இதழில் அவர்களது பலம் பற்றி ஆய்வு செய்வோம்.

தூங்கு முகத்தவரின் நற்பண்புகள்

  1. இன்முகம் கொண்டவர்

தூங்குமுகத்தவர் இன்முகம் காட்டும் பண்புடையவர்கள். இதனால்தான் நேர்காணலில் தூங்குமுகத்தினரை சில வேலைகளுக்கு விரும்பித் தேர்வு செய்வார்கள். குறிப்பாக பெரிய ஓட்டல்களில் விருந்தினரை உபசரிக்கும் இடத்தில் இவர்களை நிற்கச் செய்வார்கள். இவர்களது இயல்பான சிரிப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்குமாதலால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு நல்ல வருமானம் இவர்களால் கிடைக்கும். அதுபோல இவர்களை வங்கிப் பணிகளுக்கும் தேர்வு செய்வார்கள். எதையும் அவசரப்படாமல் நிதானித்து செய்வதால், பணம் அதிகம் புழங்கும். வங்கிகளில் இவர்களை வேலையில் அமர்த்த விரும்புவர்.

  1. தன் முனைப்பு கொண்டவர்

தனக்கென்று ஒரு வழி அமைத்துக் கொள்பவர். இப்படிப்பட்டவர்கள்தான் வாழ்வில் சாதனையாளர்களாய் இருப்பர். எல்லோரும் செல்லும் வழியில் செல்லுவதை தவிர்ப்பதால் புதிய கண்டுபிடிப்புகளை தேடும் நபராக இவர்கள் இருப்பார்கள். இந்த தன் முனைப்போடு விடாமுயற்சி மட்டும் இருந்துவிட்டால் இவர்கள் சாதனையாளர்களாவதை யாரும் தடுக்க முடியாது.

  1. அகிம்சை வழி இலக்கை அடைபவர்

இவர்கள் வன்முறை மூலம் எதையும் அடைய விரும்பமாட்டார்கள். மாறாக காந்தியடிகளைப் போல் அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு இலக்கை அடைய முயலுவார்கள்.

நிகழ்ச்சி

1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் நாள் செளரி சௌரா என்ற இடத்தில் அப்போதைய விவசாயிகள் காவல் துறையினரோடு மோதும் நிலை ஏற்பட்டது. கலவர சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி ஆங்கிலேய காவல் துறையினர் சுட்டார்கள். இது அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இன்னும் அதிகமாக ஆத்திரப்பட வைத்தது. இறுதியில் ஒரு போலீஸ் நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் தீயில் கருகி 22 போலீசார் இறந்தனர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டவர்கள்தான் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள். அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்லியிருந்தார் காந்தியடிகள். ஆனால் இந்த ஒத்துழையாமை இயக்கத்தினர் வன்முறையில் இறங்கியதை அறிந்த காந்தியடிகள் உடனடியாகப் போராட்டத்தை நிறுத்தும்படி சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்த்து கூறினார். போராட்டத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்பதை போராட்டக்காரர்களுக்கு நினைப்பூட்டினார். தூங்குமுகத்தவர் அமைதியை விரும்புகிறவர்கள்.

  1. எதையும் திட்டமிட்டு செய்பவர்

தூங்கு முகத்தவர் எதைச் செய்தாலும் அவசரப்பட்டு செய்வதில்லை. எதையும் தீர விசாரித்து அதன்பின் தான் நடைமுறைப்படுத்துவார்.

டென்சிங், ஹிலாரி ேஜாடி 1953-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்தது. ஆனால், இந்த சாதனைக்கு பின்னால் அவர் பட்ட வேதனைகள், எடுத்த முயற்சிகள் ஏராளம் உண்டு. முதல் முறை டென்சிங் வெற்றி பெறவில்லை. இதனால் மனமுடைந்து போகாமல் திரும்பத் திரும்ப முயற்சி செய்தார். எவரெஸ்ட் பற்றிய புத்தகங்களைப் படித்தார். தகவல்களைச் சேகரித்தார். மலையேறுவதில் தேர்ச்சி பெற்றோரின் நல் ஆலோசனைகளைக் கேட்டார். 6 முறை முயன்று தான் தனது இலக்கை அடைய முடிந்தது. சாதனை படைக்க காரணம் அவர் அனைத்தையும் திட்டமிட்டு செய்தார். திட்டமிட்டார். சிகரத்தைத் தொட்டுவிட்டார்.

  1. ஆழ்ந்த சிந்தனையாளர்

தூங்கு முகத்தவரின் இந்த பண்பு இவருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைவதுண்டு. ஆழ்ந்த சிந்தனையாளராக இருப்பதால் பெரிய தத்துவஞானிகளின் அந்தஸ்த்தைப் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இவர் சோம்பேறியான நிலையில் இவர்கள் உட்கார்ந்து சிந்திப்பதிலேயே கருத்தாய் இருப்பதால் எதையும் சீக்கிரம் முடிக்கும் ஆற்றல் அற்றவராயிருப்பார்கள்.

  1. மதிநுட்பமுடையவர்கள்

தூங்கு முகத்தவர் மதியீனர்கள் அல்ல; மாறாக மதிநுட்பமுடையவர்கள். முன்மதியோடு விவேகத்தோடு செயல்படுபவர்கள். “வெட்டுக்கிளியும் எறும்பும்” என்ற நீதிக்கதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். கோடைக்காலத்தில் எறும்பு குளிர்காலத்துக்குத் தேவையான உணவை கடினமாக உழைத்து சேமித்து வைத்துக்கொள்கிறது. இந்த திட்டமிடுதலோ, முன் மதியோ வெட்டுக்கிளிக்கு இல்லை. அது கோடைக்காலம் முழுவதும் ஆடிப்பாடி வீணடிக்கிறது. குளிர்காலம் வந்ததும் உணவில்லாமையால் எறும்பிடம் போய் கையேந்தி நிற்கிறது. ஆனால் எறும்பு, வெட்டுக் கிளியைப் பார்த்து ஏளனமாக, “கோடையில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என வினவ, வெட்டுக்கிளி ‘‘தான் கோடை காலம் முழுவதும் நடனமாடி களித்ததாகக் கூறுகிறது. இதனைக் கேட்ட எறும்பு, “அப்படியானால் இப்போதும் போய் நடனமாடி களித்திரு” என்கிறது. முன் மதியோடு செயல்பட்ட எறும்பு தான் சேமித்த உணவை உண்டு நிறைவு கொள்கிறது.

இப்படி பல்வேறு நற்குணங்கள் தூங்கு முகத்தவரிடம் உள்ளன. 