சமூகப் பார்வை – 19

திரு. .திருமலை மூத்த பத்திரிகையாளர்

அவ்வப்போது சாலைகளில் பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கடந்து செல்கிறோம். நம் ஆடைகளில் அந்த கழிவுநீர் பட்டுவிடக்கூடாது என்ற வெகு கவனமாக நகர்ந்து போகிறோம். என்றைக்காவது அந்தத் தூய்மைப் பணியாளரை உற்று நோக்கியிருக்கிறோமா? அவர்களது வாழ்வியல் நிலை குறித்து யோசித்திருக்கிறோமா? சக மனிதனை மனிதனாகப் பார்த்தலும் அங்கீகரித்தலும், பாசத்தோடும், பரிவோடும், கருணையோடும் அணுகுதலும் மனித மாண்பின் கூறுகளாகும். ஆனால், இன்றைக்கு மனித மாண்பினைத் தொலைத்துவிட்டோம்.

அண்மையில் மதுரையில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்ல. தேசிய அளவிலும் பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது உயிரிழக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கழிவு நீர்த் தொட்டியில் இறங்கி மயங்கியவரைக் காப்பாற்றச் சென்று மரணித்தவர்கள் இங்கே ஏராளம். கழிவு நீர்த் தொட்டி மட்டுமின்றி ரசாயணக் கழிவு, சாய ஆலைகளின் கழிவு நீர்த் தொட்டியில் இறங்கி உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதைகளும் இங்கு உண்டு.

“2013-2014 முதல் 2020 ஜனவரி 31 வரை 13 மாநிலங்களில் நகராட்சிகள் மற்றும் சிற்றூராட்சிகளில் கையால் கழிவகற்றும் 14 ஆயிரத்து 559 தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுதவிர, 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் ஒரு தேசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48 ஆயிரத்து 345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதன்படி நாடுமுழுவதும் கையால் கழிவுகளை அகற்றும் 62 ஆயிரத்து 904 தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது” என்றார் மத்திய சமூக நலத் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

மேலும், சாக்கடைக் குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் விஷவாயு தாக்கியோ தொடர்ந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மக்களவையில், சமூக நீதி அமைச்சர் ராமதாஸ் அத்வாலே  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது 340 பேர் இறந்துள்ளனர். இந்த தரவு 2020 டிசம்பர் 31 வரையிலானது. இந்த உயிரிழப்புகள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவ்வாறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதற்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன” என ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார்.

2010 முதல் 2020 மார்ச் வரை, அதாவது 10 வருடங்களில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது 631 பேர் இறந்துள்ளனர் என்று அரசு அமைப்பான தேசியத் துப்புரவுப் பணியாளர்கள் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

நீதிமன்ற உத்தரவு

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதைத் தடுக்கவும், நிவாரணம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், உயிர்ப்பலி ஏற்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும்,  அவர்களின் வாரிசுகளுக்கு  அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. பின்னர், 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவது தடை செய்யப்படுவதாகவும்  அந்த உத்தரவில் சொல்லப்பட்டது. ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

யார் பொறுப்பு

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடுக்க 2013ல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிப்பதில்லை. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கான நவீன உத்திகளைக் கையாள வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் உபகரணங்களின்றி தான் பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள். குறிப்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முககவசம், கையுறை, காலுறை, கவச உடை, உபகரணங்கள் இல்லாத நிராயுதபாணியாகத் தான் உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பாதாளச் சாக்கடை, கழிவு நீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனிதத் தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். கழிவு நீரைச் சுத்தம் செய்யும்போது மரணங்கள் நிகழ்ந்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கேரளாவில்

கேரளாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஜென்ரோபோடிக்ஸ்’ சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் ரோபோ எந்திரத்தைச் சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டது. இந்தியாவிலேயே முதல் முறையாகப் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதனைத் தவிர்த்து ரோபோக்களை களமிறக்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்த 50 கிலோ எடை கொண்ட, ரிமோட்டால் இயங்கக்கூடிய இது ஐந்து மாநிலங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழகமும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளைச் சீரமைப்பதற்கு எந்திரத்தைக் கொண்டு கும்பகோணம் நகராட்சியில் சோதனை செய்து வெற்றியும் கண்டது. ஆனால் இந்த எந்திர பயன்பாட்டை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் தவறி விட்டது என்றே தோன்றுகிறது.

இந்த ரோபோவை பாதாளச்சாக்கடைக்குள் அனுப்பினால் அது தன் கைகளை விரித்துக் கழிவுகளை அகற்றிவிடும். இதன் ரோபோடிக் கை பாதாளச் சாக்கடையில் உள்ள கழிவுகளைச் சேகரிக்க 360 டிகிரியில் நகர்கிறது. இந்தியாவில் மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை முடிவிற்குக் கொண்டு வர இது சிறந்த மாற்றாகும்.

நிவாரணம்

 துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

துப்புரவுப் பணியாளர் குடும்பமாக அடையாளம் காணப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 40 ஆயிரம் உதவித் தொகையாக ஒரு முறை வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. துப்புரவு தொடர்பான புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட சுயதொழில் துவங்கக் கடன் பெற விரும்பும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவுகளை அகற்றும் நபர்களாக அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.

இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீனத் தொழில்நுட்பத்தையும், தொலைதூரத்தில் எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளைத் தயாரித்தாலும் பாதாளச்சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் உயிர் இழக்கும் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்தாகவேண்டும். மனித மாண்பு காப்பாற்றப்படவேண்டும். 