வெற்றித் திசை 

முத்து ஆதவன் வை.காளிமுத்து

ஒருவன் நல்ல தூய்மையான ஆடைகளை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு அழகாகத் தெரிவான். இது புற அழகு. அவனே பொய் பேசுபவனாகவும், ஏமாற்றுப்பேர்வழியாகவும் இருந்தால் அவனது தூய்மையையோ, அழகையோ ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் . மாறாக அருவருக்கவே செய்வார்கள்.

அதே சமயம் உண்மையும், நேர்மையும் உள்ள மனிதர்கள் புறத்தூய்மையோடு இல்லாவிட்டாலும், அழகாக இல்லாவிட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவார்கள். இதுவே உலக இயல்பு.

இந்த இயல்பை “புறத்தூய்மை நீரால் உண்டாகும், உள்ளம் தூய்மையாக இருப்பதை ஒருவரின் வாய்மை வெளிப்படுத்தும்” என்கிறது தமிழ் மறை.

நாணயம் உள்ளவனிடம் நா நயம் இருக்கும், நா நயமுள்ளவனிடம் நாணயம் இருக்கும். இந்த இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இரண்டு மிகச்சிறந்த பண்புகள்.

இந்த இரண்டு பண்புகளுக்குமான ஒற்றைச் சொல்தான் நேர்மை என்பது. நேர்மைப் பண்பு என்பது போதனைகளினாலோ, கட்டாயத்தினாலோ வரவழைக்கக்கூடிய குணம் அல்ல.  தன்னியல்பாக தனக்குள்ளேயே மலரக்கூடிய தெய்வீகப் பண்பு அது.

போர்க்களத்தில் எதிரிகளை புறமுதுகிடச் செய்து வெற்றிவாகை சூடுபவனையே மாவீரன் என்போம். ஆனால் அந்த மாவீரனிடமும் இல்லாத மன உறுதியும், வைராக்கியமும் உள்ளவனால் மட்டுமே நேர்மையை எப்போதும் கடைப்பிடிக்க முடியும்.

நேர்மையான மனிதனின் மனம் சலனமற்ற நீர் நிலைபோல் தெளிவாக இருக்கும்.தான் எவ்வளவு வறுமையில் இருந்தாலும்  தன் நேர்மையில் சிறிதளவு சமரசம் செய்து கொண்டால் போதும் தம் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும் என்ற நிலையிலும் கூட சிறிதும் மனக்கோணல் இன்றி நேர்மையைக் கடைப்பிடித்தல் என்பது ஒரு சாதாரண செயல் அல்ல.

*ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும்  செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை(குறள்-656‘)

தன்னைப் பெற்றவள் பசியினால் துன்பப் படுகின்றாள் என்ற நிலையிலும், ஒரு பழியான செயலை செய்வதன் மூலம் அவள் பசியை தீர்த்துவிடலாம் என்றாலும்கூட சான்றோர்கள் பழியென்று சுட்டும் செயல்களைச் செய்யக் கூடாது என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.

நேர்மை தவறிய அனைத்து செயல்களும் பழிச்செயல்களே.

வழியில் செல்லும்போது ஒரு பத்து ரூபாய் கீழே கிடந்து எடுத்தாலும் நேர்மையான மனம் உள்ளவர்களால் அதை தன் தேவைக்குப் பயன்படுத்த முடியாது. தேவையுள்ள யாரிடமாவது கொடுத்து விடுவார்கள் அல்லது எங்காவது உண்டியலிலாவது போட்டுவிடுவார்கள்.தனக்கு உரிமையற்ற எப்பொருளையும் தேவையற்ற சுமையாக கருதுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்த நேர்மைப் பண்பு படித்த பண்பாளர்களிடம் கூட காணமுடியாத நிலை உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஊதியம் வாங்கிக் கொண்டு செய்யும் மக்கள் சேவையில்கூட இந்நிலை மலிந்து கிடப்பது வேதனையளிக்கின்றது.

வேலைக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு தன் சீட்டில் அமர்வதற்குதான்  சம்பளம் வாங்குகின்றேன் உங்களுக்கு வேலை செய்ய வேண்டுமென்றால் நீங்கள்தான் சன்மானம் தரவேண்டும் என்று பொதுமக்களை அலையோ அலையென்று அலையவிட்டு கவுரவப் பிச்சை எடுக்கும் மனிதர்கள் மலிந்து கிடப்பது மாபெரும் சமூக அவலம். இந்த இழி நிலைகள் எப்போது மாறும்? எப்படி மாற்றப்போகிறோம்?

ஒரு காலத்தில் உணவு தானமாகவே வழங்கப்பட்டது. அன்ன தானம் என்றே இன்றும் வழங்கப்பெறுகிறது. இரண்டு இட்லி 24 ரூபாய் என்று விற்கும் இந்த நாளில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கு என்று ஏழைகளின் பசிப்பிணி போக்கும் நவீன மணிமேகலைகளும் நடமாடும் தெய்வங்களாக வாழ்வதும் இம்மண்ணில்தான். இதனால் தானோ என்னவோ “நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்கிறார் ஔவையார்.

ஒரு குறிப்பிட்ட கம்பெனி மருந்தை ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தொடர்ந்து பரிந்துரைப்பார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மருத்துவரும் தன் வளாகத்துக்குள்ளேயே மருந்துக்கடையும் நடத்துகிறார்கள். இந்த மருந்து வேறெங்கும் கிடைக்காது என்ற நிர்பந்தங்களும் உண்டு.

குறிப்பிட்ட கம்பெனி மருந்தை அதிக அளவில் பரிந்துரைத்து அதிக அளவில் விற்பனை இலக்கைத்தொட்டால் அவர்களுக்கு கார் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள்,உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாக்கள் என்று அமர்க்களப்படும் சந்தையில் எவ்வித சலனமோ,சஞ்சலமோ இன்றி நேர்மையான இதயசுத்தியோடு ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் நடமாடும் தெய்வங்களையும் நாம் அறிவோம்.

முப்பது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மருந்தும் கொடுத்தனுப்பும் 85 வயது கரூர் மருத்துவர் சதாசிவம் போன்றோரை கைராசி டாக்டர்,கடவுள் மாதிரி என்று எளிய மக்கள் புகழ்வதில் வியப்பேதும் இல்லை தானே?

நாணயம்

நாணயம் என்பதை இப்படிச் சொல்லலாம். பொருளியலில் நிறை மனம் என்று. தன் பொருளை தனக்கு உரிமை என்று எண்ணுவது, அப்பொருளையும் தன் உழைப்பால், அறிவின் திறனால் தாமே ஈட்டி பின் அதைத் துய்ப்பது, பிறர் பொருள் மீது சற்றும் விருப்பம் கொள்ளாமல் இருப்பது, பிறர் பொருளை  கவர நினையாத மனநிலை இவையே நாணயம் என்பதன் உள்ளீடாக கொள்ளலாம்.

ஒன்றைப் பொருளாக அல்லது பணமாகவோ பெற்று அதை தாம் திருப்பித் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட நாளில் காலம் தாழ்த்தாமல் திருப்பி தருவதும், இயலாத நிலையில் பொருளைக்கொடுத்தவரிடம் தன் உண்மை நிலையை அவர் திருப்தியடையுமாறு எடுத்துக்கூறி கால நீட்டிப்பு கேட்டுப் பெறுவதும் நாணயத்தின் பாற்பட்டவையே. இந்த நாணயம் என்ற பண்பை வைத்தே ஒரு மனிதனின் தரநிலை அறியப்படுகிறது.

நா நயம்

குற்றமில்லாத சொற்களைப் பேசுவது, இனிமையாகப் பேசுவது, இதமாகப்பேசுவது குறிப்பாக உண்மையையே பேசுவதையே நா நயம் எனலாம். இந்த நா நயம் என்ற பண்பையே வாய்மை என்ற சொல் சிறப்பாகக் குறிக்கிறது. வாய்மை என்பது வாயால் செய்கின்ற அறம் என்றும் வாயால் செய்கின்ற தவம் என்றும் சான்றோர்கள் கூறுகிறார்கள்.

* வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்*                 ( குறள்–  291 )

நாம் சொல்லும் எந்த ஒரு சொல்லினாலும், எந்த ஒரு தீமையும் யார் ஒருவருக்கும் எப்பொழுதும் நேரக்கூடாது. அவ்வாறான குற்றமற்ற சொற்களையே பேசும் பண்பே வாய்மை என வலியுறுத்துகிறது இந்தத் திருக்குறள்.

நாணயம், நா நயம், நேர்மை இவை அனைத்தும் இந்த ஒரு குறள் நெறியைக் கடைப்பிடித்தலிலேயே அடங்கி விடுகிறது.

உயர் பண்பு

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விலங்குப் பண்பும், மனிதப்பண்பும் கலந்தே உள்ளன. எது விலங்குப் பண்பு? எது மனிதப்பண்பு? என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் மட்டுமே அறம் சார்ந்த நெறியான வாழ்வை வாழ முடியும். இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டி மனிதனை உண்மையான மனிதப்பண்புடன் கூடிய வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தும் அனைத்து நூல்களும் அற நூல்களே. வாசிப்பின் மூலம் மட்டுமே மனிதனின் மனச்சான்றை தட்டியெழுப்ப முடியும். ஆன்றோர்களின் வாக்கும் வாழ்வும் நம் வாழ்வின் போக்கை சரியான திசையில் நகர்த்த வல்லவைகளாகும்.

உழைப்பும், துய்ப்பும்

*தன் உழைப்பால் அறிவின் திறனால் பெற்ற
எப்பொருளும் தனக்குரிமை என்பதுதான் நீதி
பி்ன்னும் அதைத் துய்க்கலாம்
பிறர்க்குதவி செய்யலாம்
பிறர் பொருளைத் தன்பொருள்
போல் மதித்தல் உயர் பண்பு*

தன் உழைப்பால் அறிவுத்திறனால் தாம் தேடிய செல்வமே நம்முடையது. அதை நாம் அனுபவிக்கவும், பிறர்க்கு உதவி செய்யவும் பயன்படுத்துவதே நீதியாகும் என்கிறது இந்த வேதாத்திரிய கவி.

அறத்திற்குப்புறம்பான அனைத்து வழிகளிலும் பொருளைச் சேர்த்துவிட்டு தர்மம் செய்கிறேன் பேர்வழி, அன்னதானம் செய்கிறேன் பேர்வழி என்பதெல்லாம் தெய்வநீதிக்கு புறம்பான வெற்று ஆடம்பரங்களே என்பதை  உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாணயம், நா நயம் ,நேர்மை என்னும் உயர்ந்த பண்புகளை வளர்த்துக்கொள்வோம்.இப்பண்புகள் நம்மிடம் இயல்பானால் நாம் வேண்டிப்பெற வேண்டியது என்று எதுவும் இல்லை. அனைத்து வளமும், நலமும் நாம் வேண்டாமலே தேடி வந்து சேரும். சிந்திப்போம்! 