வழிகாட்டும் ஆளுமை – 9
திரு. நந்தகுமார் IRS
இன்றைய உலகில் போட்டியில்லாத இடமே இல்லை. காலையில் நாம் எழுவது முதல் நாம் செல்கின்ற இடமெல்லாம், செய்கின்ற, ஈடுபடுகின்ற செயல்களெல்லாம் போட்டிகளாலே நிறைந்துள்ளன என்றால், அது மிகையில்லை. போட்டி என்று வரும்போது அனைவரிடத்திலும் ஒரு ஆர்வம், திட்டம் இருக்கும். உங்கள் அனைவருக்கும் தெரியும், போட்டித் தேர்வுகளுக்கு நான் வகுப்பெடுத்து பயிற்சி வழங்கி வருகிறேன். அந்த பயிற்சிகளின் போது அவர்கள் போட்டியை எந்த அளவிற்கு சமாளிக்கிறார்கள், போட்டியில் வெற்றி பெறுகிறார்கள், தோல்வியுற்றவர்கள் மீண்டும் தங்களை வெற்றியாளர்களாக்கி கொள்கிறார்கள் என்று நான் அவர்களைப் பார்க்கின்றபோது நிறைய ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். காரணம், கிட்டத்தட்ட என்னுடைய பயிற்சி வகுப்பில் 6 லட்சம் மாணவர்களில் 500 – 600 வரையில் தான் தேர்ச்சி பெற்றுச் செல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அதாவது தேர்ச்சி பெறாதவர்களின் அணுகுமுறையை, மனப்பான்மையை நான் கவனிப்பதுண்டு. அதனைக் கண்டு மிகவும் வியப்புக்கு உள்ளாகியிருக்கிறேன்.
நாமும் கூட பள்ளியில் படிக்கும் போதும் சரி, அல்லது கல்லூரியில், கல்லூரி முடித்து வேலைகளுக்கு செல்லும் போதும் சரி போட்டியை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். பல சமயங்களில், நேர்மறையான எண்ணங்களும், எதிர்மறையான எண்ணங்களும் நமக்கு தோன்றும்; என்னடா இது, இந்த வேலைக்காக இப்படி அலைகின்றோமே, இப்படிப் போராடுகிறோமே என்றெல்லாம் கூடத் தோன்றும். நாம் இந்தக் கட்டுரையில் இந்த போட்டிகள் மிகுந்த சவால்களை எப்படி நல் முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் காண்போம்.
இந்திய அளவில், ஏன் உலக அளவில் நாம் உற்று நோக்கினால் எந்தப் போட்டிகளையும் நன்முறையில் அணுகியவர்கள் தான் மிகப் பெரிய ஆளுமைகளாக, நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் இப்படித்தான் போட்டித் தேர்வுக்கு தயாரித்துக் கொண்டிருந்தார். நல்லபடியாக தேர்வும் எழுதிவிட்டார். தேர்வு முடிவுகள் வரும் வரையில் நலமாக, சந்தோஷமாக இருந்தார். முடிவுகள் வந்தன. அவர் தேர்ச்சி பெறவில்லை. உடனடியாக, அவரின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் காணப்பட்டன. அவரால் அந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரி, அவரிடம் பேசலாம் என்று பேசினேன்.
போட்டியில் ஜெயித்தவர்களுக்கு ஒரு மனப்பான்மை வந்துவிடும், ‘தான்’ ‘நான்’ என்று அவர்களுக்குள் ஒரு ஹீரோ வந்துவிடுகிறார். தோல்வியுற்றவர்கள் அப்படியே அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விடுகின்றனர். நான் ஆறாவது படிக்கும்போது, ஒரு ஓவியம் வரையும் போட்டியை அறிவித்தார்கள். எனக்குச் சிறுவயதில் நன்கு ஓவியம் வரையும் ஆர்வம் இருந்தது. எனவே அந்தப் போட்டியில் நான் பங்கெடுத்தேன். அந்தப் போட்டி தேசிய அளவில் நடந்தது. அதில் ஜெயிப்போமா, தோற்போமா என்று எண்ணவில்லை. கலந்து கொள்வோம் என்று கலந்து கொண்டேன். முடிவுகளும் வந்துவிட்டன. தேசிய அளவில் முதல் பரிசு எனக்கே கிடைத்தது. எதுவும் எதிர்பார்க்காமல் பரிசு எனக்கு என்று அறிவிக்கப்பட்டது. போட்டி போடுபவர்கள் எல்லாருமே பெரிய எதிர்பார்ப்போடு களத்தில் இறங்குகிறார்கள். இவ்வாறு அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் அவர்களிடம் தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனம் இருப்பதில்லை.
எனக்கு வேகமாக எழுத வராது. அது தான் நான் சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் போதும் மிகப் பெரிய பிரச்சனையாகவும் இருந்தது. ஒவ்வொரு முறையும் தோல்வியுறும் போதும், அந்தத் தோல்வியில் நாம் நம்முடைய பலம் எது? பலவீனம் எது? என்று ஆராய்ந்து நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேலை இருக்கிறது; அதற்குப் பத்து பேர் போட்டி போடுகிறார்கள் என்று சொன்னால், நிச்சயமாக ஒருவருக்குத் தான் வேலை கிடைக்கப் போகிறது. மீதமுள்ளவர்கள் தோல்வியைத் தழுவித்தான் ஆக வேண்டும். அப்படி வாய்ப்பை நழுவ விட்டவர்கள் அந்தத் தோல்வியிலிருந்து எது நமக்கு தோல்வியடையக் காரணமானது, அந்த தோல்வியிருந்து எது நமக்குப் பலவீனமாக உள்ளது, எதனை நாம் அதிகரிக்க வேண்டும் என்று சுய ஆய்வு செய்து தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என்று எல்லா இடத்திலும் நிச்சயமாக நீங்கள் தோல்வியை ருசித்திருப்பீர்கள். அந்த தோல்வியின் மூலம் என்ன நீங்கள் கற்றுக் கொண்டு வளர்கிறீர்கள் என்பதும் இங்கு முக்கியம்.
இந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்காகத் தயாரிக்கும் சில மாணவர்கள் முதல்நிலைத் (Prelims) தேர்வில் தோற்றவுடன், உடனே எனக்கு இது வராது என்று பின்வாங்கி விடுகிறார்கள். ஆனால், அதிலிருந்து நம்மிடம் என்ன குறைவாக உள்ளது, எதனை அதிகரிக்க வேண்டும் என்று தன்னைச் செதுக்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு முதல்நிலைத் (Prelims) தேர்வில் தோல்வியுற்றவர்கள், தான் வெற்றி பெற்றதாக நினைத்து அடுத்த நிலைக்கு அவர்களைத் தயாரிக்க வேண்டும். தோல்வியடைந்து விட்டோம் என்று மீண்டும் பூஜ்ஜியத்திற்குச் செல்ல கூடாது. வெற்றி பெற்றோம் என்ற உணர்வுடன், அடுத்த நிலைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். பலர் என்ன செய்கிறார்கள் என்றால் தோற்றவுடன் போட்டியிலிருந்து விலகியே விடுகிறார்கள். சிலர் மீண்டும் பூஜ்ஜியத்திற்கு சென்று போட்டியின் முதலிலிருந்து தொடங்குகிறார்கள். எந்த இடத்தில் தோல்வியடைந்தோமோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் பயணிக்க, தொடர வேண்டும்.
நிறையப் பேர் தோல்விக்குப் பிறகு, கற்றுக் கொள்வதும் இல்லை, மீண்டும் அதனைத் தொடர்வதும் இல்லை. எப்படி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது கீழே விழுகிறோம். மீண்டும் விழுந்த இடத்தில் இருந்து ஓட்டக் கற்றுக் கொள்கிறோமோ, அதுபோலவே தோல்வியடைந்த இடத்தில் இருந்து மீண்டும் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும்.
நிறைவாக, போட்டி உலகத்தில் தாக்குபிடிக்கின்ற மனநிலை அனைவருக்கும் வர வேண்டும். இந்த மன நிலையோடு அணுகும் போது, தோல்விகள் வந்து சூழ்ந்து நின்றாலும், தாக்குப்பிடித்து பல உச்சங்களை உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். இதன் மூலம் சிறந்த ஆளுமைகளாக உங்களை இந்தப் போட்டி உலகத்திற்கு முன் பட்டைத் தீட்டி ஜொலிக்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நம்புங்கள், வாழ்த்துகள்.