இளைஞர் உலகம்

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

  1. சோம்பேறித்தனம்

இவர்கள் எதிலும் ஆர்வம் காட்டுவதோ, எதையும் விரைந்து முடிக்க முயலுவதோ இல்லை. காரணம் இது  இவர்களது மரபணுவில் (genes) உள்ள பிரச்சினை எனலாம். காலதாமதம் ஊழலை உருவாக்கும். தாமதித்த நீதி மறுக்கப்பட்ட ஒன்று என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் இவர்களால் இப்படித்தான் இருக்க முடியும். காரணம், நாம் பார்த்த கடுமுகம், சிரிமுகம், அழுமுகம் இன்னும் தூங்கு முகம் ஆகிய நான்கு உளப்பாங்குகளில் ஒன்றை ஒன்றாக உருமாற்றுவது கடினம் என்றாலும் ஒவ்வொரு உளப்பாங்கு கொண்டவரும் தங்களது பலவீனங்களை அறிந்துகொள்ளும் போது அவற்றை குறைத்துக்கொள்ள முடியும். அதனால்தான் அடுத்த தலைப்பு சீர்திருத்தம் என காணப்போகிறோம். பயிற்சியும் முயற்சியும் இதனை சாத்தியமாக்கும்.

நிகழ்ச்சி

ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தனது படிப்பை முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தான். காரணம் அவன் படிப்புக்குத் தேவையான பணத்தை அவனது அத்தை கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த மருத்துவப் படிப்பை முடிக்க எத்தனை வருடம் ஆனாலும் அதற்கான செலவு முழுவதையும் அத்தை சந்திப்பதாகக் கூறியிருந்தார். இதனால் இந்த மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் 5½ வருடப் படிப்பை 10 வருடம் சென்ற பின்பும் முடிக்காமல் இருந்தான். ஒரே வகுப்பில் தொடர்ந்து கொண்டிருந்தான். நிறையப் பாடங்களிலும் பாக்கி (arrear) இருந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் இவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண் இவனுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் இவன் தேர்வில் வெற்றி பெறுவான் என்பதை புரிந்துகொண்டாள். அவனைப் பார்த்து “நீ கடினமாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என தீர்க்கமாகக் கூறிவிட்டாள். வேறு வழியில்லாது அந்த வருடமே இரவு பகலாக உட்கார்ந்து படித்து மருத்துவ பட்டப் படிப்பில் வெற்றி பெற்றானாம். இங்கு இந்தக் காதலி அவனுக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்து செயல்பட்டிருக்கிறாள். இதுபோல தூண்டுதல் கிடைத்தால் தூங்குமுகத்தவரும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள்.

  1. சமூக ஈடிபாடின்மை

தூங்குமுகத்தவர் தங்களைப் பற்றியே சிந்திக்கும் சுயநலவாதிகள். அடுத்தவர் நலனில் அக்கறையோ சமூக ஈடுபாடோ இவர்களுக்கு இல்லாதது இவர்களது பெருங்குறையாகும்.

சில வருடங்களுக்கு முன் மும்பை மாநகரில் ஒரு மருத்துவரும் அவரது மனைவியும் இரவு சுமார் 12.30 மணிக்கு மெயின் ரோட்டில் ஆட்டோவில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆட்டோ சிறிது வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் அதில் ஒரு வேகத்தடை இருந்தது. வேகத்தடை அருகில் ஒரு ைபக் அனாதையாகக் கிடந்ததைக் கண்ட ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் போக முயன்ற போது, மருத்துவர் ஆட்டோ ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டார். மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நேரத்தில் இந்த இடத்தில் இவர் ஆட்டோவை நிறுத்துகிறாரே என ஆச்சரியத்துடன் மருத்துவரைப் பார்த்தனர். அந்த பைக் அனாதையாகக் கிடந்ததே தவிர அந்த பகுதியில் யாரும் விழுந்து கிடப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் ரோட்டின் அருகே ஒரு குழி தெரிந்தது. அது இருளடைந்து காணப்பட்டது. டாக்டரின் கழுகுக் கண்கள் அதனுள் எட்டிப் பார்த்த போது ஒரு வாலிபன் விபத்தில் அங்கு விழுந்து கிடப்பதைக் கண்டார். அங்கே வந்த சிலரைக் கூப்பிட்டு வாலிபனை வெளியே தூக்கி அவனது சட்டைப் பையில் மொபைல் இருந்ததைக் கண்டு அதை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்தி அனுப்பினார் மருத்துவர். சில நிமிடங்களில் பையனின் உறவினர் அங்கு வந்ததும், உறவினரிடம் வாலிபனை ஒப்படைத்துவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றார். நடு இரவு என்றும் பாராமல் தனது இளம் மனைவி தன்னோடு இருப்பதையும் பொருட்படுத்தாமல் இளைஞனின் உயிரைக் காப்பாற்றியது அந்த மருத்துவரது சமூக ஈடுபாட்டைக் காட்டுகிறது. தூங்குமுகத்தவர்கள் இப்படிப்பட்ட தருணங்களில், “அவனைத் தொட்டால் நமக்கு என்ன ஆகும்” என நினைத்து தன் வழியே போய்விடுவார்கள். ஆனால் இந்த மருத்துவரோ, அவனை நான் காக்காவிட்டால் அவனுக்கு என்னவாகும் என சிந்தித்துச் செயல்பட்டார்.

  1. அகங்காரம் கொண்டவர்கள்

தூங்குமுகத்தவரின் இன்னொரு பலவீனம் அவர்களது அகங்காரம் (Egoism) ஆகும். இன்று உலகம் முழுவதும் ஏன் ஐ.நா. சபையும் ஒரே குரலாக உக்ரைன் போரை நிறுத்தச் சொல்லியும் அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. போர் 50 நாட்களைக் கடந்த பின்பும், பல்லாயிரக்கணக்கான பேர் செத்து மடிந்த பின்னும் போரை நிறுத்த ஒத்துக்கொள்ளவில்லை. இது அகந்தையின் உச்சகட்டம். அழிவுக்கு முந்தியதுதான் அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியதுதான் வீண்பெருமை. எனவே தூங்குமுகத்தவர் அகங்காரம் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். இல்லையேல் அது இவர்களை வீழ்த்திவிடும். அந்த வீழ்ச்சியிலிருந்து எழும்புவது மிகவும் சிரமமாகவே இருக்கும்.

  1. நிர்வாகத் திறமையற்றவர்கள்

நல்ல நிர்வாகிகள் தனக்குக்கீழ் உள்ளவர்களைத் தூண்டி எழுப்பி திறம்பட செயல்பட வைப்பார்கள். இங்கு தூங்குமுகத்தவர் தோல்வியையே தழுவுவார்கள். காரணம், இவர்களே சோம்பேறிகள் என்ற நிலையில் இவர்கள் எதையும் செய்யாமலிருப்பவர்கள். இந்த சூழ்நிலையில் எப்படி இவர்கள் மற்றவர்களை செயல்பட வைக்க இயலும்? இவர்கள் ஓர் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தால் அந்த அலுவலகம் தூங்கிக் கொண்டிருக்கும். இதுபற்றி கொஞ்சம் எச்சரிக்கையாகத் தூங்குமுக உளப்பாங்கினர் இருக்க வேண்டும்.