வாழ்வியல் திறன்கள்


முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

உலகில் நேர்மறையான நம்பிக்கைத் தரக்கூடிய சொற்கள், எதிர்விளைவுகளை உண்டாக்கக்கூடிய சொற்கள் என்ற இரண்டு வகைமையில் பயன்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகினர் பெரும்பாலும் இயல்பாகவே எதிர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். அதிகம் படித்த மக்களிடையே கூட ஆக்கச் சொற்கள் குறைவாகவே புலப்படுவதைக் காணமுடிகின்றது. சிந்தித்துப் பார்த்தால் உள்ளத்தின் தெளிவில்தான் வார்த்தைகளின் வீரியமும் வெளிப்படுவதை அறியமுடியும்.

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்” (குறள் 119)

என்ற குறளானது, மனத்தின் நேரியத் தன்மை மட்டுமே சொற்களின் ஆக்கத்தை உறுதி செய்யக்கூடியது என்று உறுதி செய்வதை அறியமுடிகின்றது. எனவே மனத்தை எப்போதும், நல்ல எண்ணங்களாலும், தூய செயல்களாலும் சமன் செய்து கொள்ள வேண்டிய கடமை மனிதகுலத்திற்கு உள்ளதை அறியலாம். எண்ணக்கட்டுகளால் நிரப்பப்பட்டுள்ள மனத்தை எப்படி உயரிய நிலையில் வைத்திருப்பது என்பது ஒரு பெரிய அறைகூவல் என்றுகூடச் சொல்லலாம். எத்தனையோ பல்கலை ஆற்றல் பெற்ற வல்லுநர்கள் கூட மனத்தின் கோணலால் பெரிய அவலங்களில் சிக்கிக்கொள்வதைக் காணமுடிகின்றது.

“சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும், மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே?’ என்று தாயுமான சுவாமிகள் வினவுவதை அறியமுடிகின்றது. மனத்தை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்துவது என்பது மிக அரிய செயல் என்பதை சான்றோர்களின் கூற்றுகள் மெய்ப்பிப்பதை அனைவராலும் உணரமுடியும். ஏனெனின் கட்டமைக்கப்பட்ட மனத்தினால் மட்டுமே உலகினில் உகந்த, ஊக்கநிறை வார்த்தைகளை பயன்பாட்டில் கொள்ளமுடியும். எனவே,

  1. நாளும் நல்ல புத்தகங்களை வாசித்து. நல்ல வளம் தரும் கருத்துகளை மனத்தினில் இருத்திக்கொள்ளல்,
  2. நல்ல சான்றோர்களின் நட்புறவில் நாளும் இருத்தல்
  3. உயர்ந்த சிந்தனைகளை எண்ணக்கூடிய தவமுயற்சியில் திளைத்தல்
  4. எந்த நிலையிலும் வழுக்கியும் தவறான சொற்களைப் பயன்படாதிருத்தல்
  5. மோசமான நிகழ்வுகளைக்கூட பண்பட்ட வார்த்தைகளில் வடித்தல்
  6. எதிர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்தும் மனமெலியரிடமிருந்து விலகியிருத்தல்
  7. ஒவ்வொரு நாளும் தன்னிடமும், பிறரிடமும் ஆக்கப்பூர்வமாகப் பேசியிருக்கிறோமா? என்பதனை சுய ஆய்வு செய்து கொள்ளல்.

என்றாக, சில தவமுயற்சிகளை மேற்கொள்ளும் போது, உறுதியான நேர் மனநிலை அமைவதற்கான அணுக்கச் சூழல்கள் இயல்பாவதை அறியமுடியும். ஆக்கச்சொற்களால் மட்டுமே எவ்வித மனநிலையினரையும் சிந்திக்க வைக்கின்ற சிறப்பாற்றல் இருப்பதை உணரமுடியும். மனப்பான்மை மாற்றம் மட்டுமே உலகினரிடையே மகத்தான மாற்றங்களை உருவாக்கம் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பெற்ற கருத்தாகவும் உள்ளது. எனவேதான் மக்களோடு கலந்து பழகும் கலையில் சிறப்பாக விளங்க,

  1. சிறந்த உடன்மறைச் சிந்தனையாளனாக இருக்கவும்.
  2. வெளிப்படையாகவும், உண்மை பேசுபவராக இருக்கவும்.
  3. ‘நன்றி’ மற்றும் ‘மன்னிக்க’ போன்ற பண்பட்ட பதங்களைப் பயன்படுத்தவும்.
  4. அனைவரிடமும் நட்புணர்வுடனும், அக்கறையுடனும் இருக்கவும்.
  5. பிறர் பேசுவதைக் கேட்பதில் உலகில் தலைச்சிறந்த கேட்பாளனாக விளங்கவும்.
  6. பேசும் போது தன்னையே எதிர்நிலையில் இருத்திக்கொண்டு பேசும் வகைமையை பயன்படுத்தவும்
  7. எப்போதும் மனத்தை மகிழ்ச்சியில் நிரப்பிக்கொள்வது என்பதில் உறுதியாகத் திகழவும்.

மேற்குறித்தவழி திறனறிந்த நிலையில் மனத்தை நெறிப்படுத்திக்கொண்டு பழகும்போது மக்களிடம் பழகும் கலையானது இயல்பாகவே செறிவு பெற்றிடும். பண்பட்ட ஆக்கச் சொற்கள் தரக்கூடிய உயரிய விளைவுகளை ஒரு படக்காட்சி மிக அருமையாகப் புலப்படுத்தியது. ஒரு பார்வையற்ற பிச்சைக்காரர் வெயிலில் அமர்ந்து கொண்டு எழுதப்பெற்ற ஒரு பதாகையை அருகில் வைத்துக்கொண்டு யாசித்துக் கொண்டிருக்கின்றார். அந்தப் பதாகையில்,

“I AM BLIND PLEASE HELP”

என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வழிச்செல்பவர்கள் ஏதோ சிலபேர் மட்டுமே காசுகளைப் போட்டார்கள். இதனைப் பார்த்துக் கொண்டே சென்ற ஓர் இளம் பெண்ணிற்கு இரக்கம் கசிந்தது. இப்பெரியவருக்கு, அதுவும் பார்வையற்றவருக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, அவரின் அருகில் வந்து அவரிடமிருந்த எழுதப்பெற்ற பதாகையை எடுத்து அதனின் பின்பக்கம் சில வாசகங்களை அழுத்தமாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பக்கம் செல்லக்கூடிய அனைவரும் அந்தப்பதாகையில் உள்ள எழுத்துகளில் ஈர்க்கப்பெற்று அவரிடமுள்ள பாத்திரம் நிரம்பி வழியும் வண்ணம் அள்ளிக் காசுகளைப் போட்டனர். பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அந்த இளம்பெண், அவரிடம் வந்து ‘‘இப்போது ‘தங்களுக்கு நிறைவா?’’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர் ‘‘என்ன செய்தீர்கள் இவ்வளவு காசுகள் நிறைந்திட’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், ‘‘நான் ஏதும் பெரியதாகச் செய்யவில்லை அய்யா , சில பண்பட்ட வார்த்தைகளை மாற்றினேன் அவ்வளவே’’ என்றார். அப்பண்பட்ட வார்த்தைகளாவன:

“IT’S A BEAUTIFUL DAY AND I CAN’T SEE IT”

“இது ஒரு அழகிய காலைப்பொழுது, ஆனால் என்னால் பார்க்க முடியவில்லையே!” என்ற ஆதங்கத்தை உள்ளத்தை தொடும் வண்ணம் நேர்த்தியாக சொல்லிய பண்பட்ட சொல்நுட்பமே, அவருக்குப் பயன்விளைத்தது. அவ்வாசகத்தில் பார்வை தெரியாதவர் என்ற பதமானது பயன்படுத்தப்படவில்லை. இதனையே நம் வள்ளுவரும்,

“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்” (குறள். 644)

எனவே வாழ்வியலில் நல்ல உறவுகள், நட்புகள், மேலும் செல்லும் இடந்தோறும் உலகினரிடையே கலந்து பழகும் கலையை, ஆக்கப்பூர்வமான நேர்மறைச் சொற்களைப் பயன்படுத்துதன் மூலமாக பெற்றிடலாம். மேலும் நம் மனமும் இறுக்கமின்றி இருப்பதுடன், நம்முடன் பழகிச்செல்பவர்களுக்கும் மனமானது வசந்தமுடன் திகழும். 