முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -15

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்

இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம் ப்ளோரன்ஸ். இந்த நகரில் வாழ்ந்து வந்த, செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சார்ந்த வில்லியம் நைட்டிங்கேல், பிரான்செஸ் நைட்டிங்கேல் தம்பதிகளின் இரண்டாவது மகளாக, 1820-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்.

தமது பெண் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தனர் பெற்றோர். இரண்டு பெண் குழந்தைகளையும் முற்போக்குச் சிந்தனையுடனும், பக்தியுடனும் வளர்த்தனர். இத்தாலி, கிரேக்கம், பிரெஞ்ச், ெஜர்மன் மொழிகள் கற்றுத் தரப்பட்டது. ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் தத்துவம், வரலாறு, கணிதம் ஆகியவற்றையும் சிறப்பாகக் கற்றார். சிறு வயது முதலே கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய், கனிகள் போன்றவற்றையும் அட்டவணைப்படுத்திக் காட்டினார்.

அவர்களது தோட்டத்தில் பல ஏழை மக்கள் வந்து வேலை செய்தனர். அந்தத் தோட்டங்களுக்கு அருகிலேயே அவர்கள் வாழ்விடமும் இருந்தது. குழந்தைப் பருவம் முதலே, இந்த ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும், உதவி செய்பவராகவும் விளங்கினார் ப்ளோரன்ஸ். அதேசமயம், இவரது குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்கள் பணக்கார வீட்டுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தனர்.

ஏழைகளோடு நெருங்கிப் பழகுவதும், அவர்களை நேசிப்பதும் கண்டு இவரது பெற்றோருக்கு உள்ளத்தில் பயமும் ஏற்பட்டது. ஒருநாள் “அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே உள்ளது” என்ற விவிலிய வாசகத்தால் ஈர்க்கப்பட்டார். எனவே, தன் பெற்றோரிடம் தான் ஒரு செவிலியராகப் பணிசெய்ய விரும்புவதாகக் கூறினார். அக்காலத்தில், அந்தப் பணியைச் செய்பவர்கள் பரம ஏழைகள். அவர்கள் மருத்துவ உதவியோடு, சமையல் செய்வது, தரைகளைச் சுத்தம் செய்வது என்று பல பணிகளையும் செய்து வந்தார்கள்.

வசதியான குடும்பத்தில் பிறந்துள்ள தங்கள் மகளுக்கு இதுபோன்ற வேலைகளைத் தர பெற்றோர் விரும்பவில்லை. எப்படியாவது, ஒரு நல்ல இடமாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்துவிட முயற்சித்தார்கள். சமூகப் பணியில் ஈடுபட திருமணம் ஒரு தடையாக இருக்கும் என்று எண்ணிய ப்ளோரன்ஸ், தன்னைக் காதலித்தவரையும் புறக்கணித்துவிட்டார். விடாப்பிடியாக தன் செவிலியர் வேலையின் விருப்பத்தில் ப்ளோரன்ஸ் நின்றதால், பெற்றோர்களால் தடைவிதிக்க முடியவில்லை.

1844-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியில், ஒரு ஏழை மனிதர் மருத்துவ வசதியின்றி இறந்த செய்தி பரவலாகப் பேசப்பட்டது. பலரும் கண்டனக் குரல் எழுப்பிய அந்தச் சூழலில், ஏழைகளுக்கும், அனாதை விடுதிகளில் வசிப்பவர்களுக்கும் சரியான மருத்துவ உதவிகள் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல். அச்சமயம் ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் ஆளுநரைக் கவனிக்கும் பணியில் இருந்தார்.

இவரது கவனிப்பில் மகிழ்ந்த அந்தப் பெண் ஆளுநர் பாராட்டியதால், அந்தப் பிரிவின் மேலாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஊக்கம் அவருக்கு மேலும் சேவை செய்யும் எண்ணத்தை அதிகரித்தது. 1846-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றார். அங்கு கெய்சர்வெர்த் என்ற மருத்துவமனைக்குச் ெசன்ற போது, அங்குள்ள பராமரிப்பு மற்றும் வசதிகளைக் கண்டு மகிழ்ந்தார். அதே மருத்துவமனையில் இருந்த பயிற்சியகத்தில் சேர்ந்து, நான்கு மாதங்கள் செவிலியர் பயிற்சி பெற்றார். அந்தப் பயிற்சி மூலம் செவிலியராக மருத்துவமனைகளில் பணிசெய்து வந்தார்.

கைவிளக்கேந்திய காரிகை

1854 முதல் 1856 வரை ரஷ்யாவுக்கும், பிரான்ஸ் மற்றும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. ‘கிரிமியன் போர்’ என்று இந்தப் போர் அழைக்கப்பட்டது. 1854-ஆம் ஆண்டில், ஏறக்குறைய பதினெட்டாயிரம் போர் வீரர்கள் காயமடைந்தவர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். இப்போரில் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் பலரும் உயிரிழந்ததோடு, காயத்துடன் உயிருக்காகவும் போராடினார்கள்.

இவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இங்கிலாந்து மக்கள் குரல் கொடுத்தனர். இச்சமயம், இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு உருவானது. ஏற்கெனவே இவரது மருத்துவப் பணியால் ஈர்க்கப்பட்டவர் சிட்னி ெஹர்பர்ட் என்பவர். இவர் போர்ச் செயலாளராகவும், ப்ளோரன்ஸிடம் நெருங்கிப் பழகியவராகவும் இருந்தார்.

எனவே, ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், தன்னுடன் 38 -செவிலியர்களை அழைத்துக்கொண்டு போர்த் தளத்தின் முகாம் பகுதி செல்ல அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் தன்னோடு வந்த உதவியாளர்களுடன் அங்கு சென்றடைந்தார்.

அங்கே இருந்த மருத்துவர்களுக்கு ஓய்வு இல்லை. படுகாயமடைந்த வீரர்களுக்கு சுகாதார வசதிகள் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தார். சரியான சுத்தம், சுகாதாரம் அங்கே இல்லாததால், நோய்த் தொற்று ஏற்பட்டுப் பல வீரர்கள் உயிரிழப்பதைக் கண்ணால் கண்டு கண்ணீர் வடித்தார் நைட்டிங்கேல்.

தன்னுடன் வந்தவர்களை வைத்துக் கொண்டு, சுகாதாரமான வகையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். அங்கிருந்த நோயுற்ற வீரர்களுக்கு சிறிதளவு மட்டுமே தண்ணீர் கிடைத்தது. தண்ணீர் தட்டுப்பாட்டாலும் சிலர் உயிரிழந்தனர். இதனைச் சரிசெய்ய ஏற்பாடு செய்தார். ஆரம்பத்தில் இவற்றையெல்லாம், முறைப்படுத்தும் முன்பே பல வீரர்கள் தன் கண்முன்னே இறப்பதைக் கண்டு பதைபதைத்தார்.

மருத்துவத் துறையில், மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதையும், மருத்துவர்களுக்கு உதவி செய்திட முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் தேவை என்பதையும் ஆழமாகக் கண்டுகொண்டார்.

அன்போடும், ஆறுதலோடும் கூறக்கூடிய வார்த்தைகள் பலரின் உயிரைக் காப்பாற்றும் என்று உணர்ந்து செயல்பட்டார். இரவு நேரங்களிலும், வெளிச்சம் இல்லாத இடங்களிலும் ஒரு கையில் மெழுகுவர்த்தியைக் கொண்ட விளக்கை ஏந்திக்கொண்டு நோயுற்ற வீரர்களுக்குச் சிகிச்சையளித்தார்.

தங்களைக் காப்பதற்காக கடவுளிடமிருந்து விளக்கேந்திய ஒரு தேவதை வந்துள்ளதாகப் பல வீரர்களும் புகழ்ந்தார்கள். அவருக்கு ‘கைவிளக்கேந்திய பெண்மணி’ என்னும் பாராட்டுகள் குவிந்தன. நைட்டிங்கேலின் சேவைகள் இங்கிலாந்து முழுவதும் பரவியது. சில நாட்களில் போர் மருத்துவ முகாமில் இறப்பு எண்ணிக்கை குறைந்தது. கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்த ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், புள்ளியியல் வல்லுநராக விளங்கினார். ஆகவே, அங்கிருந்த நோயாளிகளின் தொற்றுப் பரவல் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு புள்ளியியல் வரைபடங்களை உருவாக்கி நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இங்கிலாந்து திரும்பிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலை வரவேற்க மக்கள் குவிந்தனர். பிரிட்டிஷ் செய்தி ஊடகம் B.B.C. ப்ளோரன்ஸ் நைட்டிங்கேைலப் புகழ்ந்தது. இங்கிலாந்து அரசியை அடுத்து, இங்கிலாந்தில் புகழ்பெற்ற நபராக நைட்டிங்கேலை மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்று அறிவித்தது. எளிமையை விரும்பும் நைட்டிங்கேல் இதனைக் கண்டு தர்மசங்கடப்பட்டார். ஆயினும் அவர் புகழ் உலகமெங்கும் பரவியது.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பற்றிய பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்று உலகமெங்கும் அவருக்கு மதிப்புத் தரும் நிகழ்வுகள் நடந்தன. இங்கிலாந்து அரசி அவரை அழைத்துப் பாராட்டினார். ராணி விக்டோரியா அவருக்கு ‘நைட்டிங்கேல் ஜுவல்’ என்ற விருதினை வழங்கினார். அந்த விருதுடன் இரண்டரை இலட்சம் டாலர் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்டோரியா மகாராணி கொடுத்த பணத்தையும், பிற நன்கொடைகளையும் வைத்துக் கொண்டு 1860-ஆம் ஆண்டு செயின்ட் தாமஸ் மருத்துவமனையைத் தொடங்கினார். அங்கு தான் உலகின் முதல் செவிலியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. முறையான பாடத் திட்டங்களைக் கொண்டு, முழுநேரப் படிப்பாக இந்தப் பயிற்சியகம் அமைந்தது.

செவிலியர் பணி

அன்றுவரை, மருத்துவர்களுக்கு உதவும் ஒரு சாதாரண உதவியாளர்களாகக் கருதப்பட்ட செவிலியரை மருத்துவர்களுக்குப் பேருதவி செய்யும், முறையான உதவியாளர்களாக மாற்ற வழி செய்தார் நைட்டிங்கேல். செவிலியர்களும் சிகிச்சை தரலாம் என்ற வாய்ப்பையும் உருவாக்கினார். அதுவரை, ஏழைகள், வசதியில்லாத பெண்கள் தான் இப்பணிக்கு வருவார்கள் என்ற எண்ணத்தை மாற்றி, பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சேவையுள்ளம் கொண்ட எல்லோரும் வந்து பயிற்சி பெறுமாறு வழிசெய்தார்.

இவர் உருவாக்கிய செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற போது, மருத்துவக் கட்டமைப்பு மேம்பட்டது. புள்ளியியல் வல்லுனராகத் திகழ்ந்த நைட்டிங்கேல் மருத்துவமனைகள் அனைத்திலும் அடிப்படை வசதிகள், மேம்பட்ட சுகாதாரம், சிறந்த ஊட்டம் தரும் உணவு, சிறப்பான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை என்பதை வலியுறுத்தினார்.

தனது அனுபவத்தில் கண்ட விளைவுகளை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினார். இந்தக் கட்டுரைகளைக் கூர்ந்து கவனித்துப் பல மருத்துவமனைகள் மேலான கட்டமைப்புகளை உருவாக்கின. இங்கிலாந்திலுள்ள பொது மருத்துவமனைகளிலும், இராணுவ மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

மருத்துவ வசதிகள், சுகாதார நுட்பங்கள் மற்றும் இவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் தனது மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகளை ‘Notes of Hospitals’ என்ற நூலாக வெளியிட்டார். இந்த நூல் அக்காலத்தில் மருத்துவ ஆர்வலர்களுக்கு மிகச்சிறந்த நூலாக அமைந்தது. செவிலியர்களுக்கான குறிப்புகள் (Notes of Nursing) என்ற இவரது புகழ்பெற்ற நூல் இன்றளவும், செவிலியர்களுக்கான சிறந்த பாடநூலாகக் கருதப்படுகின்றது. ‘உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்’ (Notes on matters affecting the health) என்ற நூலும் புகழ்பெற்றது. பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல்திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்ற நூலும் மிகவும் புகழ்பெற்றது.

விக்டோரியா மகாராணியின் ேவண்டுகோளுக்கு ஏற்ப, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும், அதற்குத் தேவையான அறிக்கைகளைத் தயாரிப்பதிலும் முதல் நபராக நியமிக்கப்பட்டார். ஆனால், பெண் என்பதால் அதன் தலைவராக இவரை நியமிக்கவில்லை. நைட்டிங்கேலின் நண்பர் சிட்டி ஹெர்பேர்ட் இதன் தலைவராக இருந்தார். இந்தப் பொறுப்பினில் நைட்டிங்கேலின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், போர் வீரர்களின் மருத்துவப் பாதுகாப்பு உயர்ந்தது. மேலும் இராணுவ மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்துவதற்கும் வழிவகையாக அமைந்தது.

செவிலியர், மருத்துவம் சார்ந்து அவர் கூறியுள்ள மேலான கூற்றுகளில் சிலவற்றைக் காண்பதன் மூலம், நைட்டிங்கேலின் சீரிய பணியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

*      செவிலியர் பணி ஒரு கலையாகும். அதை ஒரு கலையாக மாற்ற வேண்டுமென்றால், ஒரு சிற்பி பளிங்குக் கல்லை அர்ப்பணிப்போடு அணுகுவது போல, மனித உடலை, அவர்கள் உடல்நலத்தை அணுகிக் காக்க வேண்டும். உயிரற்ற ஒரு பளிங்குக் கல்லுக்கு சிற்பி தரும் முக்கியத்துவத்தைவிட, உயிருள்ள மனித உடலுக்கு நாம் முதலிடம் தரவேண்டும்.

*      ‘நர்சிங்’ செவிலியப் பணி என்பதை நான் சிறப்பாகச் சொல்ல விரும்புகின்றேன். மருந்துகளை நிர்வகிப்பது, ஊசிகளைப் போடுவது என்பதைக் கடந்து, நல்ல காற்றோட்டம், வெளிச்சம், அரவணைப்பு, தூய்மை, அமைதி மற்றும் நிர்வாகம் என்பதே இப்பணியின் மேலான நோக்கமாகும்.

*      தங்கள் கைகள், முகம் ஆகியவற்றை அடிக்கடி தூய்மை செய்து கொள்ளும் ஆயத்தப் பணிகள் செவிலியர்களை சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வைக்கும்.

*      செவிலியர்கள் பணி அனுபவத்தால் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் நாம் முன்னேறவில்லையென்றால் நாம் பின்னோக்கிச் செல்வதாக மாறிவிடும்.

*      மருத்துவமனையின் முதல் தேவை என்னவென்றால், அது நோய்வாய்ப் பட்டவர்களுக்கு எந்தத் தீங்கையும் தரக்கூடாது. மோசமாகக் கட்டப்பட்ட வீடுகள், ஆரோக்கியத்துக்குத் தீமை செய்வது போல, மோசமாகக் கட்டப்பட்ட மருத்துவமனைகள் உயிர்களுக்குத் தீமை செய்கின்றன.

*      மருந்து என்பது குணப்படுத்தும் செயல்முறை என்று அடிக்கடிச் சொல்லப்படுகின்றது. ஆனால் ‘மருத்துவம்’ என்பது செயல்பாடுகளின் அறுவைச் சிகிச்சையாகும்.

*      பயம், நிச்சயமற்றதன்மை, காத்திருப்பு, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் எந்த உழைப்பையும்விட, நோயாளிக்கு அதிகமான தீங்கு விளைவிக்கின்றது.

*      ஒரு நோயாளிக்குத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லையென்றால், படுக்கையில் புண் இருந்தால் இது நோயின் தவறல்ல, செவிலியரின் தவறு என்று கூறப்படுகிறது. இது உண்மையல்ல, நோயாளியின் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன.

இந்தியச் சுகாதாரம்

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நேரடியாக இந்தியா வரவில்லை. ஆனால் இன்றைய இந்திய சுகாதாரக் கட்டமைப்புக்குப் பெரிதும் உதவியவர் அவரே என்பது தெளிவாகின்றது.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் மனிதாபிமானி, புள்ளியியல் நிபுணர், சமூகச் சீர்திருத்தவாதி, எல்லாவற்றுக்கும் மேலாக நவீன நர்சிங் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் நிறுவனர் என்று போற்றப்பட்டவர்.

இந்தியாவில் இராணுவ வீரர்களின் மருத்துவ வசதிகளைப் பற்றி ஆய்வு செய்யுமாறு நைட்டிங்கேல் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை அவர் ஆராய்ந்த போது, இந்தியாவில் பொதுசுகாதாரம் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டறிந்தார். இவரது அறிவுரையால் 69 சதவீத இறப்பு விகிதம், 18 சதவீதமாகக் குறைந்தது.

ஒன்டோரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெரார்ட் வாலி என்பவர், ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் 19-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சமூக எழுத்தாளராகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். உடல்நலம், விவசாயம், காலநிலை, பூர்வீக வாழ்வு மற்றும் பழக்க வழக்கங்கள், பெண்கள் கல்வி, பஞ்சம் மற்றும் வறுமை பற்றிய தனது எண்ணங்களை அடிக்கடிக் கட்டுரைகளாக எழுதியுள்ளார். 1878-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இதழில் ‘இந்திய மக்கள்’ என்ற தலைப்பில், ‘நாங்கள் இந்திய மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; இந்திய மக்கள் பஞ்சத்தால் இறப்பதைத் தடுக்க நாம் ஒன்றும் செய்யவில்லை’ என்று எழுதி ஆங்கிலேய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் அவர்கள், ‘உலகில் பஞ்சங்கள் உணவுப் பற்றாக்குறையால் ஏற்படவில்லை; அரசியல் மற்றும் சரியான சமூக அமைப்புப் பற்றாக்குறையால்தான் ஏற்படுகின்றது’ என்ற கருத்தைச் சொன்ன போது, இதே கருத்தை, எண்ணத்தை நூறாண்டுகளுக்கு முன்பு ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இந்தியாவை முன்னிறுத்தி எழுதியுள்ளதைக் குறிப்பிட்டார்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இந்திய பஞ்சத்தைப் பற்றி எழுதிய போது ‘மனித துன்பம் மற்றும் அழிவு போன்ற ஒரு பயங்கரமான இந்தப் பதிவு உலகம் இதுவரை கண்டிராதது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய சுகாதார ஆணையத்தின் அறிக்கைகள் முறையே 1069 மற்றும் 959 பக்கங்களைக் கொண்டதாக இரண்டு பருமனான தொகுதிகளாக அக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. இவற்றுக்கான கேள்விகள் மற்றும் தொகுப்புகள் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆலோசனையில் செய்யப்பட்டதாகும்.

1862-ஆம் ஆண்டு இந்த இந்திய சுகாதார ஆவணம் தயாரிக்கப்பட்டது. 1863 மற்றும் 1864ஆம் ஆண்டுகளில் ‘டைம்ஸ்’ இதழில் ஆங்கிலேய அரசு இந்திய சுகாதாரம் பற்றிக் கவனம் செலுத்தவில்லை என்று எழுதினார் நைட்டிங்கேல். அதன்பிறகு, அவரது ஆலோசனை கோரப்பட்டது. 1863-இல் ஜான் லாரன்ஸ் என்பவர், இந்தியாவுக்கு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இவர், இந்தியா வரும் முன்பு ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலைச் சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

ப்ேளாரன்ஸ் நைட்டிங்கேலின் அயராத முயற்சிகள் காரணமாகவே, இந்தியாவில் சுகாதாரத் துறை முதலில் தொடங்கப்பட்டது.

இந்தத் துறையின் பொறுப்பாளர் டாக்டர் ஹாதேன்கே, வைஸ்ராய், டாக்டர் ஹெவ்லெடின் தனிச் செயலாளர், பம்பாயின் சானிடரி அதிகாரி, இந்திய அரசின் சுகாதார ஆலோசகர் போன்றோர் இருந்தனர். 1864-இல் மேலும் பல மருத்துவர்களுடன் கலந்துரையாடி ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் எழுதிய சுகாதாரக் கட்டமைப்புக்கு வழிகாட்டியுள்ளார்.

குறிப்பாக வடிகால் அமைப்புகளை நகரங்களில் கொண்டு வருவதன் மூலம் கழிவுப் பொருட்களை அகற்றலாம் என்ற ஆலோசனையை அவர் வலியுறுத்தியுள்ளார். 1866-ஆம் ஆண்டில் சென்னையில் வடிகால் அமைப்பதற்கான திட்டமிடலில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பெரும்பங்கு வகித்துள்ளார். இந்தப் பணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்ததைக் கண்டு அதனைக் கேலியும் செய்து கேள்வி கேட்டுள்ளார். அதன்பிறகு ரிப்பன் பிரபு இப்பணியை முடுக்கிவிட்டுள்ளார். 1865-இல் சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நேப்பியாரின் மனைவி லேடி நேப்பியார் மூலம் பெண்கல்வி மற்றும் மருத்துவத்துக்கு வழிகாட்டியுள்ளார். அவரது ஆலோசனைப்படிதான் முதன்முதலாக இந்திய மருத்துவமனைகளில் பெண் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள், பயிற்சிகளும் தரப்பட்டது.

1891-ஆம் ஆண்டு, தனது 71-ஆவது வயதில் இந்திய அரசின் செயலருக்கு ஒரு கடிதம் எழுதினார் ப்ளோரன்ஸ். அதில் “இந்திய மக்கள் ஏழைகள்; சரியான சுகாதாரம் இல்லாமல் அவர்களுக்கு நல்ல நீர் கிடைக்காது; அப்படியுள்ள அவர்களுக்கு ேவலை மறுக்கப்பட்டு, வரி விதிக்கப்படுவது நியாயமற்றது” என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், சுகாதாரத் தேவைகளில் கவனம் செலுத்துவது அரசின் கடமை என்றும் வேண்டுகோள் விடுத்தார். ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிரிட்டிஷ் அரசிக்கு நெருக்கமானவர் என்பதால், அவரது கருத்துக்கள் மிகவும் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நமது இந்தியப் பெருநகரங்களில் காணும் பல்வேறு வடிகால் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைக் கட்டமைப்புகளுக்கும் வழியாக அமைந்தவர் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் 50-ஆண்டுகாலம் இந்தியச் சுகாதாரத் துறைக்கு வழிகாட்டியுள்ளார். அதனால்தான் அவரைக் கௌரவிக்கும் விதமாக சிறந்த செவிலியருக்கு ‘ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கி, இந்திய அரசு சிறந்த ெசவிலியர்களை வாழ்த்துகின்றது.

உலக செவிலியர் தினம்

பல்வேறு தலைப்புகளில் 150-க்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள் என்று தன் சிந்தனைகளை மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் வழங்கியவர் நைட்டிங்கேல்.

1869-ஆம் ஆண்டு எலிசபெத் பிளாக்வெல்லுடன் இணைந்து பெண்களுக்கான முதல் மருத்துவக் கல்லூரி தொடங்கிடக் காரணமாக இருந்தார்.்

கடந்த ஆண்டு கொரோனா தீவிரமடைந்த போதும், இவரது மருத்துவப் புள்ளியியல் கோட்பாடுகளே உலக சுகாதார அமைப்புக்கு உதவியதாக ஏடுகள் எழுதின. இவரால் முறைப்படுத்தி வளர்க்கப்பட்ட செவிலியர் என்ற பணியே கோடான கோடி உலக மக்களின் வாழ்வைப் பெருந்தொற்றிலிருந்து காத்தது.

இவரது பிறந்த 200-ஆம் நூற்றாண்டை உலகம் செவிலியர் நூற்றாண்டாகக் கடந்த ஆண்டு கொண்டாடியது. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவத் துறை எண்ணற்ற உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபடக் காரணமாக, உதவியாக உள்ளவர்கள் ‘செவிலியர்கள்’தான். சகோதரிகள் (sister) என்று அன்போடு அழைக்கப்படும் செவிலியர்களின் பணி மிகவும் மகத்தானது. இப்பணியைப் போற்றி, உருவாக்கி உலகுக்கு அளித்த மாபெரும் மனிதராகத் திகழ்கின்றார் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்.

1987-ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற உலகச் செவிலியர்கள் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றைக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. 1991-இல் மே மாதம் முதல் நைட்டிங்கேல் பிறந்த தினமான 12-ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகின்றது. தன்னலமற்ற சேவை புரியும் செவிலியர்களுக்கு நன்றி சொல்ல, பாராட்ட, வாழ்த்த இந்த நாள் அமைந்துள்ளது. அதே நாளில் இலண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள், அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமர வைக்கப்பட்டுக் கௌரவிக்கப்படும் நிகழ்வும் நடக்கிறது.

மிகச்சிறந்த மனிதநேயராக, சேவகியாக வாழ்ந்த ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மரணமடைந்தார். மிக உயர்ந்த மனிதர்களை அடக்கம் செய்யும் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அவருக்கு இடம் தந்து கௌரவிக்கப்பட்டது. ஆனால், தன் இறப்பு ஊர்வலமும், அடக்கமும் எளிமையாக அமைய வேண்டும் என்று பலமுறை நைட்டிங்கேல் வேண்டிக் கொண்டதால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் விருப்பப்படி ஈஸ்ட் பெலோவில் அடக்கம் செய்யப்பட்டது.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலால் தொடங்கப்பட்ட செவிலியர் பயிற்சிப் பள்ளி, அவரது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ‘கிரிமியாவின் தேவதை’, ‘விளக்கேந்திய பெண்மணி’ என்றழைக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகள், பயன்படுத்திய பொருட்கள், உபகரணங்கள், நூல்கள் என்று இரண்டாயிரம் பொருட்கள் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

உலகில் இன்று நாம் காணும் சுகாதாரம் மேம்பட்ட மருத்துவ வசதிகள் உருவாகிட அடித்தளமிட்ட ஒரு மாபெரும் மனிதராக, பெண்மணியாக, சமூகச் சேவகராக, செவிலியர்களின் வழிகாட்டியாகத் திகழ்கின்றார் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல். அயராத, அபாரமான அவரது உழைப்பும், எழுத்தும், வழிகாட்டலும் உலகில் எண்ணற்ற உயிர்களுக்குப் பாதுகாப்புத் தந்துள்ளது. ‘சுகாதாரமான வாழ்வே, உண்மையான வாழ்வு’ என்ற சிந்தனைக்கு மெருகூட்டிச் சாதித்த நைட்டிங்கேல் என்றும் நினைவில் வாழுகின்றார்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பொன்மொழிகள்

  • நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது, ஒரு மருத்துவமனையின் முதல் தேவையாக இருக்க வேண்டும்.
  • உலகமே பைத்தியக்காரத்தனமாகச் சுழன்று கொண்டு இருக்கும் போதும், அன்றாட வீட்டு வேலைகளில் தங்கள் கடமையைச் செய்பவர்கள் மிகப்பெரிய ஹீரோக்கள் ஆவர்.
  • ஒருவருடைய உணர்வுகள் சில சமயம் வார்த்தைகளில் வீணடிக்கப்படுகின்றன என்று நான் நினைக்கின்றேன். அவை அனைத்தும், செயல்களாகவும், முடிவுகளைத் தரும் செயல்களாகவும் வடிக்கப்பட வேண்டும்.
  • உங்களிடம் இருக்கும் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு. இவ்வாழ்க்கையில் சிறியது என்று எதுவுமில்லை.
  • சில சமயங்களில் சிறியதாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தக்கூடிய தொடக்கத்தை வலியுறுத்தும் வாய்ப்புகளை ஒருபோதும் நழுவவிடாதீர்கள். கடுகு விதை சிறியதாக இருந்தாலும், வேரூன்றி, விருட்சமாகின்றதை நினைத்துக் கொள்ளுங்கள்.
  • பொறுப்பில் இருப்பது என்பது மிகச்சிறந்த நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்வது மட்டுமல்ல, மற்றவர்கள் அதைச் செய்வதைக் கண்காணிப்பதும்கூட.
  • தங்களுக்கு எதுவும் தெரியாது அல்லது தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் வியாபார ரீதியிலான விஷயங்களில், கருணையுள்ள ஆண்களும், பெண்களும் சில நேரங்களில் கொடூரமான தவறுகளைச் செய்கின்றார்கள்.
  • ஒரு நோயாளிக்கு வழங்கும் புத்திசாலித்தனமான மற்றும் மனிதாபிமான மேலாண்மை நோய்த் தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாகும்.
  • சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன்பு, மனிதகுலம் இம்மண்ணில் சொர்க்கத்தை உருவாக்க வேண்டும்.
  • கடவுளுடன் இணைந்து ஒரு சக வேலையாளாக இருக்க வேண்டும் என்பது மிக உயர்ந்த ஆசையாகும். இதன்மூலம் நாம் மனிதத்தைக் கருவுறச் செய்ய முடியும்.
  • ஒவ்வொரு நபரும் தம் சொந்த அனுபவத்திலிருந்து உண்மையைச் சொல்லட்டும்.
  • வாழ்க்கை ஒரு கடினமான சச்சரவுகள், போராட்டம், தீய கொள்கையுடன் மல்யுத்தம், கைக்கு கை, காலுக்குக் கால் என்று ஒவ்வொரு அங்குலமும் சர்ச்சைகளைக் கொண்டது. ஆனாலும், சக்தியின் நீரூற்றில் மூச்சுவிடவும், பிரார்த்தனை செய்யவும், ஆழமாக அருந்தவும் இரவு நமக்குத் தரப்பட்டுள்ளது. எனவே, கொடுக்கப்பட்டுள்ள வலிமையைப் பயன்படுத்தி மாலை வரை சிறப்பாகப் பணிசெய்யுங்கள்.
  • தேசபக்தி மட்டும் போதாது; யாரிடமும் பெறுப்போ, கசப்போ நம் செயலில், சொல்லில் இருக்கக்கூடாது.
  • உங்களில் சூரியனை உதிக்கச் செய்ய தீப்பொறியைப் பற்ற வையுங்கள்.
  • கடவுளின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள, நாம் புள்ளிவிவரங்களைப் படிக்க வேண்டும்; ஏனென்றால், இவை அவருடைய நோக்கத்தின் அளவுகோளாகும்.
  • இயற்கை மட்டுமே குணப்படுத்துகின்றது; செவிலியர் செய்ய வேண்டியது என்னவென்றால் நோயாளியை இயற்கையின் செயல்பாட்டிற்கு உகந்த நிலையில் வைப்பதுதான்.
  • நமது முதல் பயணம், நமக்கான சிறந்த இடத்தைத் தேடுவதுதான்.
  • ஒரு மனிதனின் மரணம் அவனது இருப்பை நிறுத்துவதில்லை; மாறாக, அது ஒரு மாற்றம், அழிவல்ல.

நான் ஒருபோதும் சாக்குப்போக்குச் சொன்னதில்லை. இதுவே, என் வெற்றிக்குக் காரணம்.