சமூகப் பார்வை – 18

திரு. .திருமலை மூத்த பத்திரிகையாளர்

உலக மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20ஆம் தேதி) நான் வாசித்த செய்தியொன்று கவலையை அளித்தது. மகிழ்ச்சி தினத்தன்று கவலையை அளித்த செய்தியா? அது என்ன செய்தி என்கிறீர்களா? அதாவது, 2022ஆம் ஆண்டுக்கான “மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்” வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவின் இடம் மிக மோசம் என்பதுதான் கவலைக்கான காரணம்.

வெளியான 146 நாடுகள் கொண்ட பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தில் இருந்தது. பட்டியலில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 103 ஆம் இடத்திலும். இலங்கை 126வது இடத்திலும் இருந்தன. இந்தப் பட்டியலில், அமெரிக்கா 16ஆவது இடத்திலும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முறையே 15ஆவது மற்றும் 20ஆவது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின், இத்தாலி ஆகியவை 27, 28 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன. மத்திய கிழக்கு நாடான லெபனான், தென்அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

தனிநபர் வருமானம், சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, சமூக ஆதரவு, அனைத்துக்கும் மேலாக ஆரோக்கியமான வாழ்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டே மகிழ்ச்சியான நாடுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

மகிழ்ச்சிக்கான அடித்தளம்

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் நம் நாட்டில் நம் மக்கள்தான் நமக்கு மிகப் பெரிய பலம். நமது மக்களின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆரோக்கியமாக இருத்தல் அடித்தளம்.

ஆரோக்கியம் என்கிற போது அது உடலளவிலும் மனதளவிலும் இருக்க வேண்டும். ஆனால் நாம் இன்றைக்கு இரண்டிலும் பின்தங்கியே இருக்கிறோம். தொற்றும் வகையிலான நோய்கள் மூலமான மரணம், தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றாத நோய்கள், கிருமிகளால் பரவும் நோய்களின் சுமை போன்றவை உடலளவில் நம்மைப் பாடாய்படுத்துகிறது. இப்போது கொரோனா வேறு மக்களின் மன அமைதியைக் குலைத்துப் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. சத்தான உணவுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் இன்னும் இந்தத் தேசத்திலுள்ள அனைவருக்கும் சாத்தியமாகவில்லை. சிறப்பான வாழ்க்கை முறை அமையவில்லை.

வாழ்க்கை முறை

வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், பெண்களுக்கு ஆயுள் 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இது தொடர்பான ஆய்வில் 111,000 பேர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணிக்கப்பட்டனர். பாஸ்டனில் உள்ள பொதுச் சுகாதாரத்துக்கான ஹார்வர்டு கல்லூரியைச் சேர்ந்த, டாக்டர் பிராங் ஹியு இந்த ஆய்வைத் தலைமை ஏற்று நடத்தினார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வகைகள். மது மற்றும் புகை தவிர்த்தல், தினமும் 30 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடல் இயக்கச் செயல்பாடுகள், பதப்படுத்திய மாமிசத்தைக் குறைத்தல், நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றை ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குக் காரணிகளாக அதில் குறிப்பிட்டுள்ளது. இதில் பெரும்பாலானவற்றை நாம் பின்பற்றுவதில்லை. உடல் நலனோடு மனநலமும் அவசியம். உலகத்திலேயே தற்கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் மனதளவிலும் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். இதற்குக் காரணம் வறுமையையும் பட்டினியும்.

வறுமை

உலக அளவில் நிலவும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, `உலகப் பட்டினிக் குறியீடு பட்டியலை’ (குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்) அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்’ அமைப்பும்,  ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்’ ம் ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

116 நாடுகள் கொண்ட பட்டியலில் 101 இடத்திலிருக்கிறது இந்தியா. இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட 15 நாடுகள் மட்டுமே மோசமானதாக இருக்கின்றன. “இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமாகவோ கள எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை” என்று இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது வேறு விஷயம். எப்படிப் பார்த்தாலும் நாம் முதலிடத்தை எட்டப்போவதில்லை.

தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு. உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவச் சென்றால், மேலும் 10 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் எரிபொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்வதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் எனக் கருதப்படுகிறார்கள்.

வறுமையின் விளைவு

இந்தியக் குழந்தைகளில் 20 சதவிகிதக் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக உலக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய சூழலில் ஏழைகள் அவர்களுடைய வருமானத்தில் 69 சதவிகிதத்தை உணவுக்காகவும், 6 சதவிகிதத்தைக் கல்வி, உடல்நலத்துக்காகவும் செலவிடுகின்றனர். தற்போதைய பொருளாதாரச் சூழல் விளைவாக அக்குடும்பத்தின் அடுத்தத் தலைமுறையும் கல்வியறிவு இல்லாத தலைமுறையாகவே உருக்கொள்கிறது.

வறுமைக்கான காரணம்

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை உயர்ந்துள்ளது. வேலையில்லை என்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபுறம் போதிய ஊதியமின்மை. தனியார் நிறுவனங்களில் வருடாந்திர ஊதிய உயர்வு என்பது தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால் வேலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனும் பாதிக்கப்படுகிறது. இது பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். இவற்றின் விளைவாக உடல்நலன் பாதிக்கப்படுகிறது மற்றும் வன்முறை அதிகரிக்கிறது.

யார் காரணம்?

பட்டினி இருக்கிறது என்கிறபோது ஆரோக்கியம் குறித்துப் பேசுவது அபத்தமானதாகும். முதலில் அந்தப் பட்டினிக்கு, பசிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். அதிக மக்கள்தொகை கொண்ட தேசம். ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர். அடிப்படை வசதிகள் கூடச் சரியாகக் கிடைக்காத மக்கள் இன்னொரு பக்கம் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இரு பிரிவினருக்குமிடையேயான இடைவெளி அதிகம்.

இந்தியாவின் பிரச்சனை என்பது செல்வம், சரியான முறையில் பங்கீடு செய்யப்படாததே என்பதை ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகளில் ஒன்று, சமத்துவமின்மை. பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது. இந்திய மக்களில் 22 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் 84 பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். மக்கள் தொகையில், 10 சதவிகிதம் பிரிவினரிடமே 80 சதவிகித சொத்துகள் இருக்கின்றன. இந்த விகிதாச்சாரமே இந்தியாவை மீள முடியாத சூழலுக்குள் தள்ளியுள்ளது. இவை தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் இருக்கச் செய்கிறது. இந்தச் சமத்துவமின்மையால் தனிநபர் நுகர்வுத் திறன் குறைகிறது.

தனிநபர் நுகர்வு திறன்

அண்மையில் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று வெளியே கசிந்தது. அதில் மக்களின் நுகர்வுத் திறன் 2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18இல் 3.7 சதவிகிதம் அளவில் சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கிராமப்புறத்தில் நுகர்வுத் திறன் 10 சதவிகிதம் சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நுகர்வுத் திறன் என்பது ஒரு தனி நபர் தனது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திச் செய்யக்கூடிய அளவுக்கு அவரிடம் பணப் புழக்கம் இருப்பதைக் குறிப்பதாகும்.

தனிநபர் நுகர்வுத் திறன் குறைந்ததால் கடந்த 7 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குகீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 3 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே சென்றுள்ளனர். இன்னும் சொல்வதென்றால் தனி நபர் வருவாய் 7 ஆண்டுகளுக்குமுன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. குறிப்பிடும்படியாக மேம்படவில்லை. ஆனால் விலைவாசியோ இருமடங்காகிவிட்டது. உதராணமாக 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு டீ-யின் விலை 5 ரூபாய். ஆனால் தற்போது 10 ரூபாய். எனில், போதிய வருமானம் இல்லாத ஒருவரால் இந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? மக்கள் நுகர்வுத் திறன் குறைவது என்பது, அந்த நாட்டில் வறுமை அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறி.

மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், இலஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருப்பது எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்கு, அரசுக்கு அக்கறையில்லாமைதான் முக்கியக் காரணம் ஆகும்.

ஏழ்மை நிலையில் இருப்பவர்களை, ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிவிட முடியாது. ஆனால், இப்போதிருந்து பல தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டினால், எதிர்காலச் சந்ததியினரும் தொடர்ந்து வறுமைக்கோட்டிலேயே வசிப்பதைத் தவிர்க்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினால் வறுமை அகலும்.

அனைவருக்கும் மூன்று வேளை உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யப்படவேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியத் தினத்தை அட்டகாசமாகக் கொண்டாட முடியும். மகிழ்ச்சிக்குரிய நாடுகள் பட்டியலில் முன்னேற முடியும்.

(ஏப்ரல் – 7 – உலக ஆரோக்கிய தினம்)