வழிகாட்டும் ஆளுமை – 7
திரு. நந்தகுமார் IRS
வாழ்வில் சாதித்த, தடம் பதித்த மாமனிதர்களின் வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தோமானால் அவர்கள் அனைவருமே தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அல்ல. மாறாக, அவர்களின் ஆளுமையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என்பது உண்மையிலும் உண்மை.
ஒருமுறை என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு தந்தை தன் மகனுடன் வந்திருந்தார். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நேரம். அவனுக்கும் முடிவுகள் வந்துவிட்டன. நான் அவர்களிடம் கேட்டேன் ‘என்ன ஆச்சு ரிசல்ட்!’ என்று, அதற்கு தந்தை “வெறும் 1086 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளான்’’ என்று மிகவும் சோகத்தோடு சொன்னார். இவ்வாறு அவர் கூறியவுடன் என் மனதில் என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் நினைவுக்கு வந்தது. நான் வெறும் 536 மட்டுமே எடுத்தேன்.
நான் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி வாழ்த்துகள்’’ என்னுடைய மதிப்பெண்ணை விட இரு மடங்கு அதிகமாகப் பெற்றுள்ளாய். நான் வெறும் 536 மதிப்பெண் மட்டுமே பெற்றேன்” என்று சொன்னேன். நான் எடுத்த மதிப்பெண்ணுக்கும், இன்று நான் இருக்க கூடிய நிலைமைக்கும் சம்பந்தமே இல்லை என்று, அவர்கள் என்னை வியப்புடன் பார்த்தார்கள். உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் முழு மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் ஆளுமையை உலகிற்கு அரங்கேற்ற வேண்டும்.
ஒரு மிகபெரிய பல்பொருள் அங்காடிக்குள் (Departmental Store) சென்று பார்த்தால் அங்கு வெறும் ஒரு 100 பேர் கூட இருக்கமாட்டார்கள். அதேபோல தீபாவளி நேரத்தில் தி.நகர் ரங்கநாதன் தெருவை நினைத்துப் பாருங்கள். கூட்டம் எப்படி இருக்கும்!. இன்றைய போட்டி உலகத்தில் அனைவரும் இவ்வாறு ரங்கநாதன் தெருவில் நிற்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வேலையைத் தேடுகிறீர்கள். உண்மையில், உங்களைத் தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் மதிப்பெண்ணை அவர்கள் தேடவில்லை. மாறாக, உங்கள் ஆளுமையை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
UPSC, TNPSC போன்ற போட்டித் தேர்வுகள் எல்லாம் உங்களின் தோற்றத்தை மதிப்பீடு செய்வதற்கல்ல, அரவிந்த்சாமி போல கலரா இருந்த IAS, இவ்ளோ உயரம் இருந்தால் IPS என்று நம்மை மதிப்பிடவில்லை. அப்படி இருந்திருந்தால் என்னை நினைத்துப் பாருங்கள். ஆக, நீங்கள் தான் எனக்கு வேலை வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள், ஆனால் வேலை தரக்கூடிய பலர் உங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
ஒரு முறை மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு அப்பா தன் மகனோடு வந்திருந்தார். மகன் தனக்கு தேவையானவற்றை எல்லாம் எடுக்கின்றான். ஆனால், அவன் தந்தையோ மகன் எடுப்பதை எல்லாம் வேண்டாம் என்று சொல்லித் தடுத்து பிறகு கடைசியில் இவர் வாங்கிக் கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொண்டு, பிறகு சென்றுவிட்டனர்.
இதனை அருகில் இருந்து நான் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆம், இன்று பலரும் அவ்வாறே உள்ளனர். பிறருக்குப் பிடித்த வேலையில், பிறர் சொல்கின்ற செயலுக்கு நாம் ஆளாகின்றோம். அவ்வாறு நாம் செய்கின்றபோது, உண்மையில் நாம் என்னவாக நினைத்தோம். நான் என்னவாக ஆகப்போகிறோம் என்று நம்முடைய கனவுகளை பிறருக்காக இழந்து வருகிறோம். அம்மா சொன்னாங்க, அப்பா சொன்னாங்க என்று நாம் நம்முடைய தேடலைச் சுருக்கி கொள்கிறோம். அதனால் தான் நம்முடைய எண்ணங்களும் இவ்வாறு வலிமையாக இருப்பதில்லை.
இரும்புப் பட்டறையில் பொருட்கள் செய்து முடித்த பிறகு, சில இரும்புத் துகள்கள், துண்டுகள் சிதறிக் கிடக்கும். சிலர் என்ன செய்வார்கள் ஒரு கட்டையின் இறுதியில் ஒரு காந்தத்தை வைத்துச் சிதறிக் கிடந்த துகள்களை எல்லாம் ஒன்று சேர்த்து எடைக்குப் போட்டு விடுவார்கள். அதுபோல, சிறுவயது முதலே ஒரு சில பொது அறிவுப் புத்தகங்கள் படித்து, நாட்டின் தலை நகரங்கள், ரூபாய்கள், ஆறுகள் என்று பல தகவல்களை இந்த காந்தம் கட்டிய ஒரு குச்சி போல இழுத்து கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒன்று சேர்த்து, அவர்களுக்கு கிடைக்க கூடிய வேலையே கிளார்க் போன்ற சாதாரண வேலைகள் தான். மாறாக, சரியாகத் தேடினால், சரியாக அதற்காக உழைத்தால் உங்கள் ஆளுமைக்கான வேலை நிச்சயமாக கிடைக்கும்.
இந்தத் தேடல் உங்கள் படிப்புக்கான வேலை என்று இருக்கக் கூடாது. மாறாக, உங்களின் ஆளுமைக்கான, உங்களின் ஆளுமையை வெளிக் கொணர்வதற்கான இடமாக இருக்க வேண்டும். எப்படி கூகுளில் ஒரு விஷயம் தேடுவதற்கு முதல் எழுத்தை டைப் செய்தவுடன் தகவல் வந்து குவிகிறதோ, அதுபோல பல வேலை வாய்ப்புகளுக்குப் பல போட்டித் தேர்வுகள் நடக்கின்றன.
புத்தகங்கள் மட்டுமல்ல, புத்தகங்களைக் கடந்து இயற்கை நமக்கு நிறையக் காரியங்களை கற்றுத் தருகின்றன. என் அலுவலகத்திலும் ஒரு செடியை வைத்திருந்தேன். அப்போது ஒருவர் ‘‘சார், சூப்பரா இருக்கு சார். இந்தச் செடியை எந்த கடையில் வாங்குனீங்க? உண்மையாகவே பிளாஸ்டிக் செடி அருமையாக இருக்கு சார்’’ என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் ‘‘இது பிளாஸ்டிக் செடி இல்லை, உண்மையான செடி’’ என்று. ‘ஓ, அப்படியா’ என்று நிறுத்திக் கொண்டார். ஆக, செயற்கையைப் பாராட்டுகின்ற நம் மனம் இயற்கை என்று சொன்னவுடன் பாராட்ட மறுக்கின்றது. நம்மில் சிலரும் அவ்வாறே உள்ளனர்.
செயற்கையான ஆளுமைகளைக் கொண்டாடுகின்றன. உண்மையான ஆளுமைகளைப் பற்றி நினைப்பது கூட கிடையாது. ‘‘உங்களுக்கு எந்த வேலை வேண்டும்?’’ என்று யாரைக் கேட்டாலும், பெரும்பாலானோர்க்கு பதில் இல்லை. அதில் சிலர் ‘‘கிடைத்த வேலைக்குப் போய் விடலாம் சார்’’ என்பார்கள். சிலர் ‘‘நல்ல வேலை கிடைக்குது போயிடுவோம் சார்’’ என்பார்கள். அப்போ ‘‘நல்ல வேலை எது?’’ என்று கேட்டால். ‘எது கிடைக்கிறதோ அது நல்ல வேலை’ என்கின்றார்கள். அதுபோலத் தான் கிடைக்கிற வேலை நல்ல வேலை என்று அதில் சேர்ந்து விடுகின்றனர்.
எவ்வாறு தேனீக்கள் தேடித் தேடிச் சென்று தேனை சேகரிக்கிறதோ, அதுபோல, உங்களின் தேடல் இருக்க வேண்டும். புத்தகங்களை வாங்கி, படித்து, வாசித்து, மனப்பாடம் செய்து, தேர்வில் அதனை வெளிக்கொணர்வது மட்டும் அல்ல. தேடலும், ஆய்வும் தான், எங்கு நான் உள்ளேன் என்று, எதனை நோக்கி நான் சென்று இலக்கை அடைய வேண்டும் என்று தேடி, ஆய்வு செய்து பயணிக்க வேண்டும்.
அழகான, ஆழமான உங்களுக்கான, உங்களின் ஆளுமைக்கான தேடலாக உங்கள் தேடல் அமையட்டும். அந்தத் தேடலின் வெற்றி உங்களின் இலக்கைத் தொடும் தேடலாக அமையட்டும்! அப்படி அமைந்தால் உலகம் உங்கள் கையில்! வாழ்த்துகள்.