இளைஞர் உலகம்
உறவு
பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588
இதுவரை தூங்கு முகத்தவரின் 21 பொதுமைப் பண்புகளைப் பார்த்தோம். மீதமுள்ள பொதுமைப் பண்புகள் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.
தள்ளிப் போகுதல் (Procrastination)
இயல்பாகவே தூங்குமுகத்தவர் செயலற்றத் தன்மையும், சோம்பேறித்தனமும் கொண்டு உளப்பாங்கைக் கொண்டிருப்பவர்களாதலால், இவர்களிடம் எந்த காரியத்தையும் குறித்த நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடும் பண்பு காணப்படும். “நாளை என்பது இல்லை என்று பொருள்”
(Tomorrow never comes) என்பர். அதாவது இன்று செய்ய வேண்டியதை எதிர்காலத்தில் (நாளை) செய்யலாம் என தள்ளிப்போட்டால் அதை ஒரு காலத்திலும் செய்யமுடியாது என்பது அதன் பொருளாகும். ஆகவேதான் ஓர் இந்திப் பாடலின் வரிகள்,
“நாளை ெசய்வதை இன்று செய்;
இன்று செய்வதை இப்போதே செய்;
திடீரென வெள்ளப் பெருக்கு வந்துவிட்டால்
பின்பு நீ எதைச் செய்ய முடியும்?” என்கின்றன.
தள்ளிப்போடுதல் என்னும் திருடன்
தள்ளிப்போடுதல் என்பது ஒரு திருடன் என்கிறது ஆன்றோர் வாக்கு (Procrastination is a thief). அது நம்மையறியாமல் நமது நேரத்தைத் திருடிவிடுகிறது. சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் நேசத்தின் அருமையை, ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் 86400 விநாடிகளைப் பற்றி எழுதியிருந்தேன். இளையோருக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதால் இன்று எப்படி இளையோரின் நேரம் அவர்கள் அறியாமலே அவர்களிடமிருந்து கைபேசி, அலைபேசி, ஊடகங்கள் மூலம் திருடப்படுகிறது என்பதை விளக்கியிருந்தேன்.இதற்கு வலுசேர்க்கும் முகமாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு வீட்டிலுள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அலமாரியோடு களவு போய்விட்டது. அதுவும் பகல் நேரத்தில், அந்த வீட்டிலுள்ள வீட்டுத் தலைவி வீட்டிலிருக்கும் போதே களவு போயிருந்தது. வழக்கமாகத் திருடர்கள் அலமாரியைத் திறந்து அதிலுள்ள நகைகளை எடுத்துக்கொண்டு போவார்கள். ஆனால் இங்கு அலமாரியையே அதுவும் வீட்டிலுள்ள நபர் உள்ளே இருக்கும் போது எப்படி தூக்கிச் செல்ல முடிந்தது? திருடனைப் பிடித்து விசாரித்த போது, அவன் சொன்னது சுவாரஸ்யமானது.
“அந்த குறிப்பிட்ட நாள் ஒரு வீடு பகல் நேரத்தில் திறந்து கிடந்தது. நான் உள்ளே நுழைந்த போது அந்த வீட்டு அம்மா வைத்த கண் வாங்காமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதுதான் நல்ல தருணம் என மெதுவாக வீட்டினுள் சென்று அலமாரி இருக்கும் அறையில் நுழைந்தேன். அலமாரியைத் திறந்தால் அல்லது உடைத்தால் அந்த சத்தத்தில் வீட்டுப் பெண்மணி கண்டுபிடித்துவிடுவார் என நினைத்த நான், எனது நண்பர்கள் நான்கு பேருக்கு எனது கைபேசி வழியாக தகவல் அனுப்பினேன். அவர்களும் சத்தம் போடாமல் வீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் டி.வி.யில் கண்வைத்த வீட்டுப் பெண்மணியோ எதையும் கண்டுகொள்ளவில்லை. எனவே நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அலமாரியை தூக்கிச் சென்றோம். அப்போதும்கூட அந்த பெண்மணியின் கவனம் முழுவதும் டி.வி. பெட்டி மீது இருந்ததே தவிர, நாங்கள் அலமாரியைக் கொண்டு சென்றதை அவர்கள் பார்க்கவே இல்லை.” எனவே இளையோரே விழிப்பாயிருங்கள். உங்களை அறியாமல் உங்கள் நேரம் ஊடகங்கள் வழியாகத் திருடப்படுகிறது. இப்படி நேரத்தைத் ‘திருட’ அனுமதியாதீர்கள் என எழுதியிருந்தேன். இதைத்தான் தூங்கு முகத்தவருக்கும் சொல்கிறேன். தள்ளிப்போடுதல் வழியாக நேரம் திருடப்படுகிறது. இழந்த நேரத்தை நாம் திரும்பப் பெற முடியாது. காரணம் நேரம் உயிர் போன்றது. அது போனால் திரும்பி வராது. எனவே நேரத்தின் இன்றியமையாத் தன்மையை மனதில் கொண்டு தூங்கு முகத்தவர் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றை செய்ய, காலத்தாமதமின்றிச் செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
நீதியைத் தள்ளிப்போடுதல் நீதியை மறுப்பதற்குச் சமம் (Justice delayed is justice denied) என்பர். அதுபோலவே தள்ளிப்போடுதல் வெற்றிக்கு எதிரி என்பர். எனவே வெற்றி பெற வாழ்வில் தள்ளிப்போடுதலைத் தவிர்க்க வேண்டும். “நமது வாழ்வின் நல்வாய்ப்புகளையெல்லாம், தள்ளிப்போடுதல், குழிதோண்டிப் புதைக்கிறது” என்பர். இறுதியாக தள்ளிப்போடுதல் நமது நேரத்தை மட்டுமல்ல, நமது கனவுகளையும் திருடிச் சென்றுவிடும் என்பதை தூங்குமுகத்தினர் உணர வேண்டும். இதனால்தானோ என்னவோ கிராமப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், “அப்பப்ப உள்ளதை, அப்பப்ப செய்யலனா அப்பன் காலத்திலும் செய்ய முடியாது.”
குழுவோடு இணைந்திருப்பவர் (Good Team Player)
சர்வதேச போட்டிகளில் நமது நாடு பல சமயங்களில் வெற்றியை நழுவ விடுவதன் காரணம், நமது விளையாட்டு வீரர்களிடையே கூட்டு முயற்சி (Team Spirit) இல்லாமைதான் என்ற குற்றச்சாட்டு எழுவதை நாம் கேள்விப்படுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் போட்டியில் நாம் தோல்வியைத் தழுவ இது காரணம் என்பார்கள். தனித்தனியாகப் பெரிய அளவில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள், குழு என்று வந்துவிட்டால் உடலாலும் மனதாலும் குழுவோடு ஒன்றித்து விளையாடததால் நமது அணி, ஏன் எந்த அணியும் தோற்கத்தான் செய்யும். இன்னும் கால்பந்து போட்டியில் குறிப்பிட்ட விளையாட்டு வீரரை இழந்தால் தோல்வியடைகிறார்கள் பல முன்னணி நாட்டினர். சென்ற முறை பிரேசில் நாட்டு அணியிலிருந்த நெய்மர் காயமுற்று வெளியேறியதால் அந்த நாடு அதன் பின்னர் நடந்த போட்டிகளில் வெல்ல முடியவில்லை! தூங்குமுகத்தவரைப் பொறுத்தமட்டில் இந்த கூட்டு முயற்சியில் ஒத்துழைப்பு கொடுப்பவராயிருப்பது அவரது நற்பண்பாகும்.
வெகு சிலரே நண்பர்கள்
தூங்கு முகத்தவருக்கு அழுமுகத்தவரைப் போன்று நண்பர்கள் குறைவு – ெவகுசிலர் தான் இவர்களது நண்பர்களாயிருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இவர் மிகவும் உண்மையுள்ளவராக இருப்பார். அவர்களிடம் உறவை இவராக முறிக்கமாட்டார். ஆனால் முறிந்துவிட்டால் துண்டித்தது துண்டித்ததுதான். திரும்பவும் அவருடன் சேருவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதில் ஓர் உளவியல் உண்மை இருப்பதை உணரலாம். அதாவது நிறைய இருப்போருக்கு அதில் கொஞ்சம் இழந்தால் அது பேரிழப்பாகத் தெரியாது. ஆனால் கொஞ்சம்தான் உள்ளவர்களுக்கு ஒரு சிறு இழப்பும் பேரிழப்பாக தெரியும். அதை திரும்பவும் கட்டி எழுப்ப முடியாத ஒன்றாக அது மாறிவிடும். காந்தியடிகளுக்கு உடைமைகள் மிகக்குறைவு. ஓர் இடைத்துண்டு, ஒரு கண்ணாடி, ஒரு கைத்தடி, ஒரு பேனா, ஒரு கடிகாரம் போன்றவை தான் அவை. ஆனால் ஒருமுறை இவரது கடிகாரத்தை யாரோ திருடிவிட்டார்கள். பார்க்க வேண்டுமே காந்தியின் படபடப்பை! மலை சாயினும் நிலை குலையாத காந்தியடிகள் ஒரு கடிகாரத்தின் இழப்பை தாங்கமுடியாமல் தவித்தாராம். காரணம் அவருடைய உடைமைகள் மிக சொற்பமாய் இருந்ததுதான். தூங்குமுகத்தவருக்கும் நண்பர்கள் மிகக் குறைவு என்பதால், ஒரு நபரை இழந்தாலும் ஆளுமையில் அதிக காயமுறுவர். அதை பின்பு சரிசெய்ய முயலமாட்டார்.
எடுத்த காரியத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பார்; விடவேமாட்டார்
தூங்கு முகத்தவரின் பொதுமைப் பண்புகளில் இறுதியாக வருவது இவர்களது விடாப்பிடியான இயல்பு. இதை நாம் உடும்புப் பிடி என்றோ, முதலை கவ்விப் பிடிக்கும் பிடி என்றோ (மூர்க்கனும் முதலையும் பிடித்ததை விடாதன்றோ!) கூறலாம். அதைவிட ராட்வெல்லர் என்ற ஒருவகை நாயின் பிடிக்கு ஒப்பிடலாம். ராட்வெல்லர் (Rottweller) நாய் எலும்பையோ, சதையையோ கவ்விப் பிடித்தால், அந்தப் பொருளை அதன் வாயிலிருந்து விடுவிக்கவே முடியாது என்பர். தூங்குமுகத்தவருடைய பண்புகளில் ஒன்றும் அதுதான். இவர்கள் ஒன்றின்மீது பற்றுக்கொண்டால் அதிலிருந்து இவர்களை விடுவிப்பது பெரும் சிரமமாகும். இதனால்தான் பல சமயங்களில் இவர்களோடு ஒத்துப்போவது மிகமிகக் கடினமானதாக இருக்கும்.
(தொடரும்)