வாழ்வியல் திறன்கள்

முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

உலகில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் ஆனால் எண்ணியவண்ணம் சாதிக்கின்றவர்கள் சிலராகத்தான் உள்ளனர். ஏன், இந்த வேறுபாடுகள் என்று கூர்ந்து சிந்தித்தால், சாதிப்பவர்களுக்கு எல்லாவற்றிலும் நேரம், இருக்கின்றது, மற்றவர்களுக்கு எதிலும் சாக்குகள் இருக்கின்றது. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் 24 மணிநேரம் என்பது எவ்வித ஏற்றத்தாழ்வின்றி வழங்கப்பட்டுள்ளது.  இந்நாட்டை ஆள்பவர் முதல்கொண்டு, சாதாரண மனிதன் வரை அனைவருக்கும் சமமாக உள்ளது நேர அளவு.  ஆனால் நேரவுணர்வு ஒரு சிலருக்குத்தான் இருக்கின்றது   பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணாது, நொடிகளின் மகத்துவம் அறிந்து அன்றன்று செயல்படுபவர்கள், சாதனையாளர்களாகின்றனர். மடி(சோம்பல்) கொண்டு நொடியை நொடிப்பவர்கள், மடிந்து போகும் வரை மண்ணில் சாதிப்பதில்லை.  

“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்”               (குறள்.608) 

‘சோம்பல்’, என்ற தள்ளிப்போடும் பழக்கம் ஒருவரிடம் உண்டானால், அக்குணமானது அவனின் தனித்துவத்தைப் போக்கி பிறரை எதிர்பார்த்து வாழக்கூடிய அடிமை நிலைக்கு ஆளாக்கிவிடும் என்கிறது திருக்குறள்.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்        (குறள். 489)

எவ்வித அவகாசமும் இன்றி, உரிய சந்தர்ப்பம் வாய்த்த போது, உடன் செயலாற்றுபவருக்கு செய்வதற்கு இயலாத செயல் என்பது இப்புவியின்கண் ஒன்றில்லை என்று தக்க காலத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார் திருவள்ளுவர்.  ஆனால், இன்றைய உலகியல் நிலையில்,

  1. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை
  2. வீட்டில் சமைப்பதற்கு நேரம் இல்லை
  3. பொறுமையாக அமர்ந்து உண்பதற்கு நேரம் இல்லை
  4. அனைவருடனும் மனம் விட்டுப் பேச நேரம் இலலை
  5. வீட்டைப் பராமரிக்க நேரம் இல்லை
  6. நல்ல நூல்களைப் படிப்பதற்கு நேரம் இல்லை
  7. உறவுகள், நட்புகளைப் பேணுவதற்கு நேரம் இல்லை.

என்று இன்றியமையாத பணிகளுக்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு. 

  1. மொபைல் உடன் நேரம் இருக்கின்றது
  2. தொலைக்காட்சியில் அனைத்தும் பார்க்க நேரம் இருக்கின்றது
  3. வீணாண விவாதங்களுக்கு நேரம் இருக்கின்றது
  4. புலனவழி விளையாட்டுகளுக்கு நேரம் இருக்கின்றது
  5. தேவையற்ற அரட்டைகளுக்கு நேரம் இருக்கின்றது

என்றாக, தள்ளத்தக்க செயல்களுக்கு எல்லாம் நேரம் இருக்கின்றது.  இவ்விதமான மாறுபாடுகளைப் போக்குவதற்கு, வாழ்க்கையில் ஒரு தெளிவான நோக்கத்தை ஒவ்வொருவரும் கொண்டிருந்தால், உறுதியாக இதுபோன்ற நேரப்பற்றாக்குறை என்பது அறவே இருக்காது எனலாம். 

மேலும் நேரமேலாண்மை என்பது, கடிகாரத்தைப் பார்த்து ஆற்றுகின்ற செயலன்று,  வாழ்க்கையில் இன்றியமையாத குறிக்கோள்களைப் பற்றுறுதியாகக் கொண்டு, அதனை குறித்தக் காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டிய அருமையே காலமேலாண்மை எனலாம்.  இதனையே, திருக்குறளும்,

“ஞாலம் கருதினும் கைகூடும்” (குறள்.484) என்று உலகத்தையே உடைமையாக்கும் நுட்பத்தைக் காலத்தின் துணைக்கொண்டு நெறிபடுத்து கின்றது. எனவே ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்,

  1. வாழ்க்கையில் எதுவாக வேண்டும், என்ற திட்பமான வாழ்க்கைத் திட்டத்தை அறுதி செய்யவேண்டும் (statement of Life mission)
  2. இலக்குகளைத் தெரிவுசெய்து, அதனை நிறைவேற்றலில் கவனத்தைக் குவிக்க வேண்டும்(Focus on results not mere activities)
  3. நாளை ஆற்றிடவேண்டியவற்றையும் இன்றைய நாளின் முடிவிற்குள் இறுதிசெய்ய வேண்டும் (Make your-to-do list of tommorrow before you leave today)
  4. காலத்தை வீணாக்காது, அனைவருடனும் பெருந்தன்மையுடன் இருப்பதற்கு தயாராக வேண்டும்((gracious with people but firm with time)
  5. ‘இயலாது’, என்று சொல்ல வேண்டிய நிலையில், அதனையும் நயம்பட நவிலும் கலையை அறிய வேண்டும் (Try to Know how to say No)
  6. சுய ஒழுக்கத்தைப் பேணுவதுடன், தள்ளிப்போடும் பழக்கத்தை விட்டொழித்து உடனாற்ற வேண்டிய பணிகளைத் தப்பாது செய்யவேண்டும் (Sustain Self-discipline and harness do it now habit, by the way mitigate procrastination)
  7. சாதனைக் கனவிற்கும், இலகுவாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் (Take time to dream, time to relax, time to live as one aspires)

மேற்குறித்த வகைமையில், நொடிகளின் உயிர்ப்பை அறிந்து, நேரவுணர்வுடன் செயல்படுபவர்களுக்கு, எதிலும் நேரமிருக்கும், மனஇறுக்கம் இராது, உடலும் உள்ளமும் ஆரோக்கயமாகத் திகழும், சுயநலமிருக்காது, அனைவருடனும் கலந்து பழகும் பண்பாடு தலைப்பட்டு நிற்கும்.  எல்லாவற்றிருக்கும் மேலாக,  எண்ணியதை எண்ணியவாறே நிகழ்த்திடும் வல்லாண்மையானது இயல்பாகும்.