முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -14

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்  டாக்டர். மெ.ஞானசேகர்

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற ஓவியராகவும், கட்டடக் கலைஞர், பொறியாளர், எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தவர் ஜார்ஜியோ வசாரி என்பவர். கலை வரலாற்றின் அடித்தள நூலாகக் கருதப்படும் ‘மிகச்சிறந்த ஓவியர்கள், சிற்பிகள் மற்றும் கட்டடக் கலைஞர்களின் வாழ்க்கை’ (Lives of the Most Excellent Painters, Sculptures and Architects) என்ற நூலின் ஆசிரியர். மைக்கேல் ஏஞ்சலோவின் கல்லறையை வடிவமைத்தவர். இவரது நூலின் மூலமாகப் பல கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் வெற்றிப் பாதைகளை உலகிற்குத் தந்தவர்.

ஜார்ஜியோ வசாரியின் நூலில் லியோனார்டோ டா வின்சி பற்றிய இவரது கூற்று நமக்கு நல்ல தொடக்கமாக அமைகின்றது.

‘‘இயல்பாகவே பல ஆண்களும், பெண்களும் உயர்ந்த திறமைகளோடு பிறக்கின்றனர். சிலவேளைகளில் மட்டுமே, இயற்கையைக் கடந்த நிலையில், தனியொரு மனிதர், வானகம் தந்த அழகு, அறிவு, அருள், திறமை செறிந்தவராகப் பிறந்து, மற்றவர்களை எங்கோ பின்தள்ளிவிட்டு அரிதாகப் பிறக்கின்றார். இவருக்கு எல்லா வல்லமைகளும் மானுடத் திறமையால் மட்டும் கிடைக்கப்பட்டவை அல்ல.

மாறாக, கடவுளிடம் இருந்தே வருகின்றன. லியோனார்டோ டா வின்சியைப் ெபாறுத்த வரையில் எல்லோரும் இதை உண்மையென்றே ஒப்புக்கொள்கின்றனர். அவரது பேரழகும், பேரருளும் அவர் செய்த அனைத்திலும் மிளிர்கின்றன. இவர், தான் எடுத்த, கண்ட சிக்கல்களுக்கெல்லாம் மிக எளிமையாகத் தீர்வுகள் காணும் வகையில், தன் அறிவுத் திறனை அருமையாக வளர்த்துக் கொண்டார்’’ என்று எழுதுகின்றார்.

பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அலசி ஆராய்ந்த இவர், லியோனார்ேடா டா வின்சியை இப்படிப் புகழக் காரணங்கள் நிறைய உள்ளது. இந்த மேற்கோளை எழுதியவரே, பல்திறன் கொண்டவர் தான். ஆயினும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்த மாமனிதர் டா வின்சி என்று அவருக்கு இவ்வாறு புகழாரம் சூட்டுகின்றார். ஆம், ஏராளமான திறமைகளுடன் வாழ்ந்து, மறையாத புகழைப் பெற்றவர் தான் லியோனார்டோ டா வின்சி.

பிறப்பும், இளமையும்

இத்தாலி நாட்டில் செர் பியரோ டாவின்சி என்ற நிலக்கிழாருக்கும், கத்தரீனா என்ற விவசாயக் குடும்ப அம்மையாருக்கும் 1452, ஏப்ரல் 15-ஆம் நாள் மகனாகப் பிறந்தார் லியோனார்டோ டா வின்சி.

இளமையில் தொடக்கக் கல்வியைக் கற்றார். வாசித்தல், எழுதுதல், எண்கணிதம் மற்றும் பாரம்பரியக் கல்வி வழங்கப்பட்டது. முக்கிய மொழியான இலத்தீன் கற்றுத்தரப்பட்டது. டா வின்சி இலத்தீன் மொழியை ஆர்வமாகக் கற்கவில்லை. ஆனாலும், முடிந்தளவு முயற்சித்து அனைத்தையும் ஓரளவு கற்றுக்கொண்டார்.

டா வின்சி சிறுவனாக இருந்த போதே திறமையோடும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை அருகிருந்தோர் அறிந்தனர். ஒரு நாள் ஒரு விவசாயி டா வின்சியின் தந்தையிடம் வந்து ஒரு பலகையைக் கொடுத்துவிட்டு, “உன் மகன் ஓவியம் வரைவதில் திறமையானவன் என்று கேள்வியுற்றேன். இப்பலகையில் ஒரு ஓவியம் வரைந்து தரச் சொல்” என்று கொடுத்துச் சென்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட டா வின்சி அப்பலகையில் பல பாம்புகள் தீயை உமிழ்வதைப் போன்ற படத்தை வரைந்து கொடுத்தாராம். அந்தப் படம் பார்ப்பதற்கே பயமூட்டுவதாக, தத்ரூபமாக இருந்ததை டா வின்சியின் தந்தை கண்டுகொண்டார். தன் மகனிடம் அளவற்ற திறமைகள் உள்ளதையும், அதில் ஒன்று ஓவியம் வரைதல் என்பதையும் புரிந்து கொண்டதால், 14 வயதில் கலைப் பள்ளிக்கு மகனை அனுப்பினார்.

பிளாரன்ஸ் நகரில் புகழ்பெற்ற ஓவியராகவும், ஓவியக்கலை ஆசிரியராகவும் திகழ்ந்தவர். ஆன்டிரியா டெல் பெர்ரோக்கியா என்பவர். இவரது கலைப்பள்ளியில் 1466-ஆம் ஆண்டு தனது 14 வயதில் மாணவராகச் சேர்ந்தார் டா வின்சி.

சிறந்த ஓவியர்களாக அக்காலத்தில் அறியப்பட்ட கிர்லாண்டாயோ, பெருஜுனோ, பொட்டிச்செல்லி, லாரன்சோ டி கிரேடி போன்ற புகழ்பெற்றவர்களும் அந்தப் பணிக்கூடத்தில் இருந்தார்கள். மாபெரும் கலைஞர்களோடு பணி செய்வது, கற்றுக்கொள்வது என்பது டா வின்சியின் வாழ்க்கையில் கிடைத்த பரிசாக அமைந்தது.

அந்தக் கலைப்பள்ளி பல்திறன் வளர்க்கும் பள்ளியாகச் செயல்பட்டது. பல்வேறு இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களின் அறிமுகம் அங்கு கிடைத்தது. வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோக வேலைகள், வார்ப்பு செய்தல், தோல் வேலைகள், பொறிசார் வேலைகள், தச்சுவேலை, ஓவியம், சிற்பம் போன்ற திறமைகளையும் கற்றுத்தரும் மாபெரும் பள்ளியாக அவருக்கு அந்தப் பணியகம் அமைந்தது.

பின்னாளில் பல்துறைக் கலைஞராக டாவின்சி திகழ்ந்திட, மிளிர்ந்திட இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இச்சூழலில் தான் 1472 மற்றும் 1475-ஆம் ஆண்டுகளில் ‘கிறிஸ்துவின் ஞானஸ்தானம்’ (The Baptism of Christ) என்ற ஓவியம் ஆன்டிரியா செல் பெர்ரோக்கியா மற்றும் அவரது இளைய மாணவர் டா வின்சியால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தின் இறுதிப் பணியில் டா வின்சியின் ஓவியத் திறமை வெகுவாக வெளிப்பட்டது. இது பெர்ரோக்கியாவின் ஓவியத் திறமையைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. எனவே குருவான பெர்ரோக்கியா, தன் சீடனே இனி ஓவியங்களைத் தொடர்வான் என்று கூறி, அதன் பிறகு தூரிகையை எடுக்கவில்லையாம். இது ஒரு செய்தியாகவும், உண்மையாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

லியோனார்டோ டா வின்சிக்கு இருபது வயது நடந்த போது மருத்துவர்கள் மற்றும் கலைஞர்கள் கொண்ட குழுவான செயின்ட் லூக் குழுவில் ஒரு வல்லுனராகும் தகுதி கிடைத்தது. இந்தச் சூழலில் மகனின் திறமை கண்டு டா வின்சியின் தந்தை அவருக்குத் தனியான பணிக்கூடம் அமைத்துத் தந்திருந்தார். ஆனால், டா வின்சி பெர்ரோக்கியாவுடன் கொண்ட அன்பு மற்றும் நட்புக் காரணமாக, பெரும்பாலான காலத்தினை அவரது பணிமனையில் ஓவியம் வரைவதில் கழித்தார். 1473-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதியிடப்பட்ட ‘ஆர்னோப் பள்ளத்தாக்கு’ ஓவியம், டா வின்சியால் வரையப்பட்ட ஒரு மிகப் பழைய ஓவியம் ஆகும்.

மிலன் நகரில் வாழ்வு

1482 முதல் 1499 வரை ஏறக்குறைய 17 ஆண்டுகள் மிலன் நகரில் வாழ்ந்தார் டா வின்சி. 1478-இல் புனித பெர்னார்டு தேவாலயத்தில் The Adoration of the Magi – என்று சொல்லக் கூடிய, இயேசு பிறந்த போது அவரைக் குடிலில் கண்டு வணங்கிய, மூன்று அரசர்கள் கொண்ட காட்சி வரைய வாய்ப்புத் தரப்பட்டது. ஆனால் உள்நாட்டுப் போரால் இந்த வேலையை முழுவதுமாக டா வின்சியால் முடிக்க இயலவில்லை.

‘கிரான் கவால்லோ’ என்ற குதிரைச் சிைல ஒன்று வடிக்கவும் அவருக்கு பல மடங்கு எடையுள்ள வெண்கலம் தரப்பட்டது. பின்பு அந்த வெண்கலம் எல்லாம் போருக்கு ஆயுதம் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்பட்டது. இதே சிலையின் களிமண் மாதிரியை டா வின்சி உருவாக்கித் தந்ததும், இந்தச் சிலை பின்னாளில் உருவான பல குதிரைச் சிலைகளுக்கு உயிரோட்டம் மற்றும் மாதிரியாக அமைந்தது என்றும் கூறப்படுகின்றது.

1498-இல் லியோனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ‘கடைசி இரவு உணவு’ (The Last Supper) ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தன் சீடர்களோடு விருந்து உண்ட ஒரு காட்சியை இந்த ஓவியம் குறிக்கின்றது. இந்த ஓவியத்தை வரைந்த போது, சில நாட்களில் விடியற்காலை முதல் மாலை வரை சாப்பிடாமலே வரைந்து கொண்டிருப்பாராம். சில சமயங்களில் மூன்று, நான்கு நாட்கள் ஓவியத்தில் வண்ணங்கள் தருவதைச் செய்ய மாட்டாராம். அப்படி சிந்தனையில் ஆழ்ந்து உருவாக்கப்பட்டதாம் இந்த ஓவியம்.

இயேசு தன் சீடர்களோடு, ‘கடைசி இரவு உணவு’ உட்கொண்ட போது, ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ என்று யூதாஸைக் குறித்துச் சொன்னார். அந்த யூதாஸின் சரியான அப்போதைய முக பாவனையைக் கொண்டு வருவதற்காக டா வின்சி முயன்று வரைந்தாராம். இந்த ஓவியம் உலகப் புகழ்பெற்றது; வரலாற்றில் அழியாத இடம் பெற்றது.

லியோனார்டோ டா வின்சியின் மற்றொரு புகழ்பெற்ற ஓவியம் 1503-1506 காலகட்டத்தில் வரையப்பட்ட ‘மோன லிசா (Mona Lisa)’ என்ற ஓவியம் ஆகும். இன்றும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. இந்த ஓவியம் உலகின் மிகவும் பிரபலமான அதிகம் பார்வையிடப்பட்ட, அதிகம் எழுதப்பட்ட, அதிகம் பாடப்பட்ட, அதிகமாக விமர்சனம் செய்யப்பட்ட கலைப் படைப்பு என்று அறியப்படுகின்றது.

இந்த ஓவியத்தின் பின்னணியாக அமையும் வளிமண்டல மாயை, ஓவியத்தின் காட்சி நுட்பம், ஓவியக் கலவையின் வெளிப்பாடு, ஓவியத்தின் உணர்ச்சி வெளிப்பாடு என்று பல வகையில் இது பாராட்டப் பெற்ற அழியாத காவியமாகத் திகழ்கின்றது. 2022-ஆம் ஆண்டின் மதிப்புப் படி 870 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மதிப்புள்ள கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. தற்போது பிரெஞ்சு நாட்டின் சொத்தாக பாரிஸில் உள்ள லூவ்ரேயில் நிரந்தரக் கண்காட்சியில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது.

அறிவியல் அறிஞர், பொறியாளர்

ஓவியம் சார்ந்த கலைப் பணிகள் மட்டுமல்லாமல் டா வின்சி உலகிற்கு பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். டா வின்சி இடது கையால் எழுதும் பழக்கம் கொண்டவர். வாழ்நாள் முழுவதும் கண்ணாடி உருவ எழுத்துகளையே பயன்படுத்தி வந்தவர்.

“மனதில் தோன்றும் சிந்தனைகளை, அறிவின் துணைகொண்டு சோதனை செய்யாவிட்டால் பயன் ஏதும் இல்லை” என்று கூறியவர் லியோனார்டோ
டா வின்சி. அறிவியல் சார்ந்த இவரது அணுகுமுறை வரை படங்களோடு தொடர்பு கொண்டிருந்தது. மிலனில் 17 ஆண்டுகள் இவர் வாழ்ந்த காலத்தில் அரசின் குடும்பக் குறிப்பேடுகளில், ‘டியூக்கின் ஓவியர் மற்றும் பொறியாளர் (Painter and Engineer of the Duke)’ என்றே எழுதப்பட்டிருந்தது.

ஓவியராகவும், சிற்பியாகவும், நீதிமன்ற விழாக்களின் வடிவமைப்பாளராகவும் மிலனின் அரச குடும்பத்தால் மதிக்கப்பட்டு, பணி தரப்பட்டார். கட்டடக் கலை, கோட்டைகள் மற்றும் இராணுவத் தேவைகளில் ஆலோசகராக இருந்தார். ஹைட்ராலிக் (நீரியல்) மற்றும் மெக்கானிக்கல் (இயந்திரவியல்) பொறியாளராகப் பணிசெய்தார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

லியோனார்டோ டா வின்சியின் பயிற்சிப் பாசறையில் சிறந்த மாணவர்கள் பலரும் இருந்தனர். ஜியோவானி அண்டோனியா, அம்ப்ரோஜியோ, பெர்னாட்டினோ, ஆண்ட்ரியா, சோலாரி, மார்கோ டி ஓகியானோ மற்றும் சாலாய் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ‘மோன லிசா ஓவியம்’ பின்னாளில் சாலாய் மூலம் பாதுகாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இளம் பிரபுவான பிரான்ஸிஸ்கோ மெல்ழியை தன் மாணவத் தோழனாக இறுதிவரை உடன் வைத்திருந்தார். அவரது வாரிசாகவும் அமைந்தார்.

லியோனார்டோவின் சிறந்த படைப்புகளில் முக்கியமானது அவர் உருவாக்கிய ‘ஆர்னித்தாப்டர்’ (Ornithopter) என்ற பறக்கும் எந்திரம் ஆகும். மனிதனால் பறக்க முடியும் என்ற சிந்தனையை உலகில் விதைத்தவர் டா வின்சி. 1487-இல் இதை உருவாக்கி, மனிதக் கால்களால் விசையைச் செலுத்தும்படி வடிவமைத்திருந்தார். திசைமாற்றும் சுக்கான் கூட அதில் வைத்திருந்தார். இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், பின்னாளில் விமானம் கண்டுபிடிக்க இது ஒரு தூண்டுதலாக அமைந்தது.

இந்த ‘விமானம்’ அல்லது பறக்கும் எந்திரம் தயாரிக்க டாவின்சி, பறவைகள் எவ்வாறு காற்றைக் கிழித்துச் செல்கின்றன என்றும் ஆய்வு செய்தார். இதன் வெளிப்பாடாக காற்றின் வேகத்தைக் கண்டறியும் ‘அனிமோ மீட்டர் (Anemometer)’ என்ற கருவியையும் கண்டறிந்தார்.

தூண்கள் இல்லாமலே நெடுந்தொலைவு செல்லும் பாலங்களை வடிவமைப்பது பற்றிக் குறிப்புகள் தந்துள்ளார். இந்தக் குறிப்புகளை ஆய்வு செய்து சமீபத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்ந்த, மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகப் பொறியாளர்கள் ஒரு அறிக்கை தந்தார்கள். இவரது ‘ஆற்றுப்பாலம்’ பற்றிய கட்டுமான மாதிரி மிகத் துல்லியமாக உள்ளதாகவும், தூண்களே இல்லாமல் அமையும் இந்தத் தொழில்நுட்பத்தால், பாலத்தின் கீழே படகுகள் தாராளமாகச் செல்லவும் முடியும் என்று கூறியுள்ளார்கள். 500-ஆண்டுகள் கழித்தும் டாவின்சியின் பொறியியல் அறிவு போற்றப்படுகின்றது.

டா வின்சியின் பொறியியல் எழுத்துகள் மட்டும் 13,000 (பதிமூன்றாயிரம்) பக்கங்களில் குறிப்புகளாக உள்ளன. இவற்றின் சில பக்கங்களை மைக்ேராசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தனது சொந்த சேகரிப்புக்காக 213-கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பதும் டா வின்சியின் பொறியாளர் திறமையை நமக்குக் காட்டுகின்றது.

உடற்கூறியல் வல்லுநர்

டா வின்சியின் மிகப்பெரிய மற்றொரு பரிமாணம், அவரது உலகுக்கு வழங்கிய உடற்கூறியல் படங்களும், செய்திகளும் ஆகும். 1510-11 ஆகிய ஆண்டுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட பிணங்களை அறுத்து, அவற்றின் உள் கட்டமைப்புகளைக் கூர்ந்து நோக்கிப் படங்களாக வரைந்தார் டா வின்சி.

பிளோரன்சில் இருந்த சாந்தா மரியா மருத்துவமனையில் மனித உடல்களை வெட்டி ஆய்வு செய்தார். மார்க்கங்தோனியா தெல்லாதோரே என்ற மருத்துவருடன் இணைந்து இந்தப் பணிகளைச் செய்தார். மனித உடலின் உள் உறுப்புகள், எலும்புகள், நரம்புகள், தசைகள் உள்ளிட்ட பலவற்றை மிக நுணுக்கமாக, கூர்ந்து ஆய்வு செய்து படங்களாக வரைந்தார் லியோனார்டோ டா வின்சி. இவ்வாறு வரைந்த 240 – விரிவான வரைபடங்கள், 13,000 – சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாட நூலாக அன்று அமைந்தது.

இன்று உள்ளது போல், மருத்துவ வசதிகள் இல்லாத காலம் அது. அறுவைச் சிகிச்சை பற்றிய தெளிவும், அறிவும் இல்லாத காலம். அக்காலக்கட்டத்தில் டா வின்சி வரைந்து கொடுத்த இந்தப் படங்களும், விளக்கங்களும் மாபெரும் மருத்துவ வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் வித்திட்டது. இன்றைய நவீன அறுவைச் சிகிச்சை முறைகளுக்கும், உடற்கூறியல் (Physiology) என்ற பாடம் வருவதற்கும் வழிகாட்டியவர் தான் டா வின்சி.

இந்தப் படங்கள், விளக்கங்களை எல்லாம் தன் அன்புக்குரிய மெல்ழியிடம் கொடுத்து வெளியிடச் சொன்னார். இந்தப் பணி டா வின்சி இறந்து ஐம்பது ஆண்டுகள் கழித்தும் மெல்ழியாலும் முடிக்கப்பட முடியவில்லை. காரணம், இந்தப் படங்கள் வெளியிட ஆரம்பித்தது முதலே பல ஆய்வுகளும், விளக்கங்களும் உலக மருத்துவர்கள் மற்றும் உயிரியாளர்களால் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு புகழ்பெற்ற மனிதர் இறந்த போது பிரான்சு நாட்டு அரசர் இவரைத் தன் கையில் ஏந்திக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

இன்றும் பல மருத்துவக் குறிப்புகளிலும், மருத்துவமனைகளிலும் நாம் காணும் விட்ருவியன் மனிதன் (Vitruvian Man), அதாவது இவ்வுலகிற்கும், மனிதனுக்கும் உள்ள ஆத்மார்த்த இணைப்பு என்ற எண்ணம் தரும் ஒரு புகழ்பெற்ற படத்தைக் காணலாம். இதனை டாவின்சி தான் வரைந்தார். குழந்தை கருவிலுள்ள படம், மூளையின் வரைபடம், கைகளின் தசைகள், கால்களின் தசைகள், மூட்டுகள் என்று அவரது படங்கள் எண்ணற்ற தகவல்களை மருத்துவ உலகிற்குத் தந்தது. டா வின்சியின் கூற்றுப்படி ‘மனிதன் இயற்கையோடு இணைந்த ஒரு படைப்பு’ என்பதாகும். இயற்கையில் பஞ்ச பூதங்கள் உள்ளது போல மனித உடலிலும் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன மனித உடலில் உள்ளது என்பதையும் இவர் எடுத்துரைத்தார். இந்தப் படங்கள் எல்லாம் இன்றும் பாதுகாப்பாக வைத்து, ஆய்வு செய்யப்படுகின்றன.

பல்துறைக் கலைஞர்

தலைச்சிறந்த ஓவியர், கட்டடக் கலைஞர், சிற்பி, தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, உடல் கூறியல் மற்றும் உடல் இயக்கவியல் நிபுணர், இராணுவ ஆலோசகர், உலோகவியலாளர், நில அளவையாளர், வேதியியலாளர், தேர்ந்த பொறியாளர், இசைக் கருவிகள் பல வாசித்த இசைப் பிரியர், தத்துவ மேதை, கணிதவியலாளர், நகர வடிவமைப்பாளர், சொற்பொழிவாளர் என்று லியோனார்டோ டா வின்சியின் துறைகள் விரிகின்றன.

இன்றுபோல் அன்று, விஞ்ஞான வளர்ச்சியும், போக்குவரத்து வசதிகளும், நுண்ணோக்கிகளும் இல்லை. ஆனாலும், டா வின்சியின் சாதனைகள் இன்றும் பிரமிப்போடு காணப்படுகின்றன என்றால், அவரது உழைப்பும், அறிவும், ஞானமும் பரந்துபட்டு இருந்ததை நம்மால் உணரமுடியும். தானாகவே கற்றுக்கொண்ட பொறியாளர் மற்றும் பரந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் அவர் புகழப்படுகின்றார்.

இவரது வரைபடங்களில் காணப்படும் பாலங்களின் மாதிரிகள், முப்பரிமாணத் தோற்றத்தினாலான கணித வடிவங்கள், ஓவியங்களுக்குப் பின்னால் வரையப்பட்டிருந்த தத்ரூபமான காட்சிகள் இன்றும் காண்பவர்களை அதிசயிக்கவும், சிலிர்க்கவும் வைக்கின்றன. உலக வரலாற்றில் பொறியியல், உடலியல் மற்றும் கட்டடக் கலைகளை முழுவதும் படங்களால் வரைந்து தந்துள்ளார்.

தண்ணீர்த் தொட்டிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இராணுவத் தளவாடப் பாதுகாப்புகள் என்று இவரது ஆய்வு மற்றும் அறிவுப் பக்கங்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. ‘கவிதைகளைப் போல அல்லாமல் ஓவியங்கள் உடனடி திருப்தியை மனிதருக்குத் தருகின்றது’ என்று பேசுகின்றார் டா வின்சி.

ஓவியத்தை விஞ்ஞானமாகச் சொன்னவர் டா வின்சி. அதற்கு ஒரு உதாரணம் தந்துள்ளார். கண்ணின் பத்து ஒளியியல் செயல்பாடுகளான இருள், ஒளி, உடல் மற்றும் நிறம், வடிவம் மற்றும் இருப்பிடம், தூரம் மற்றும் நெருக்கம், இயக்கம் மற்றும் ஓய்வு என்று கூறியதோடு, இவைகள் யாவும் ஓவியத்தில், அதன் தன்மைக்கேற்ப அமைத்து வரையப்படுகின்றது என்று விளக்கினார்.

மனித உடலின் உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றிலுள்ள இயக்கங்களைப் பொறியாளராக வரைந்து தந்தார். இவை புகழ்பெற்ற உடற்கூறியல் கண்டுபிடிப்பு வரைபடங்களாக உள்ளன.

டா வின்சி ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வரையும் திறமை பெற்றிருந்தார். 1504-ஆம் ஆண்டு அவர் வரைந்த சால்வேட்டர் முண்டி (Salvator Mundi) என்ற ஓவியம் உலக வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ஓவியமாகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2925 கோடிக்கு இது ஏலம் போயுள்ளது. இன்று வரை, வேறு எந்த ஓவியமும் இவ்வளவு தொகைக்கு உலகில் வாங்கப்படவில்லை.

ஏராளமான ஓவியங்களை டா வின்சி வரைந்திருந்தாலும் புகழ்பெற்ற 17 – ஓவியங்களே இன்றும் உள்ளன. பல ஓவியங்கள் கால ஓட்டத்தில் சிதைந்தோ அல்லது அழிந்தோ போயிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

மனிதகுல வரலாற்றில், தனது வாழ்நாள் முழுவதும் தேடலையும், உலகிற்கு நல்லதைத் தருதலையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் தான் லியோனார்டோ டா வின்சி. திருமணமே செய்து கொள்ளாமல் ஆய்வுகள், தரவுகள், பல ஆயிரம் பக்க எழுத்துகள், ஓவியப் படைப்புகள், வரைபடங்கள் என்று எண்ணிப் பார்க்க இயலாத ஒரு மாபெரும் வாழ்வு வாழ்ந்தவர் டா வின்சி. ஒரு தனி மனிதர் தன் வாழ்நாளில் இவ்வளவு சாதிக்க முடியுமா? இது சாத்தியமா? என்று இன்றளவும் நாம் இவரது சாதனைகளைக் கண்டு பிரமிப்பு அடைகின்றோம்.

பல்துறைக் கலைஞரான லியோனார்டோ டா வின்சி உலகுக்குச் சொல்லுவது, மனித வாழ்க்கை அற்புதமானது. 67 – ஆண்டுகளே வாழ்ந்த டா வின்சி ஆயிரம் ஆண்டுச் சாதனைகளை நிகழ்த்தியதன் மூலம் மனித வாழ்வுக்கும், வெற்றிக்கும் நம்பிக்கை தருகின்றார். முழுமையாக, மிக முழுமையாக ஒரு மனிதர் வாழ்ந்தார்; இன்றும் தன் படைப்புகளால் வாழ்கின்றார் என்பதற்கு சிறந்த உதாரணமாக, முதல் மனிதராக லியோனார்டோ டா வின்சி திகழ்கின்றார். 

லியோனார்டோ டா வின்சியின் பொன்மொழிகள்

  • கற்றல் மனதைச் சோர்வடையச் செய்வதில்லை.
  • மௌனத்தைப் போல அதிகாரத்தை வலுப்படுத்துவது எதுவும் இல்லை.
  • மூன்று வகை மக்கள் இருக்கின்றார்கள்; தானாகப் பார்ப்பவர்கள், ஒரு பொருள் காட்டப்படும் போது பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள்.
  • நீர் தான் அனைத்து இயற்கையின் உந்துசக்தியாகும்.
  • ஒரு அழகான உடல் அழிந்து போகும்; ஆனால், ஒரு சிறந்த கலைப் படைப்பு எப்போதுமே அழியாது.
  • நான் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்ட போது, நான் எப்படி இறக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
  • செய்ய வேண்டிய அவசரத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். தெரிந்தால் மட்டும் போதாது; நாம் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். தயாராக இருப்பது மட்டும் போதாது; நாம் செயலாற்ற வேண்டும்.
  • புரிந்து ெகாள்ளுதலில் கிடைக்கும் மகிழ்ச்சியே மேலான இன்பமாகும்.
  • கோட்பாடு அல்லது இலக்கு இல்லாமல் பயிற்சியில் ஈடுபடுபவர், சுக்கான் மற்றும் திசைகாட்டி இல்லாமல் கப்பலில் ஏறும் மாலுமி போன்றவர். அவருக்கு காற்று எந்தப் பக்கம் வீசும் என்பது தெரியாது.
  • குருவை மிஞ்சாத மாணவன் ஏழை.
  • கூச்சல் இருக்கும் இடத்தில், உண்மையான அறிவு இருக்காது.
  • நமது அனைத்து அறிவும், அதன் தோற்றமும் நமது உணர்வில் உள்ளது.
  • முடிவில் எதிர்ப்பதைவிட, ஆரம்பத்தில் எதிர்ப்பது நல்லது.
  • அறிவார்ந்த ஆர்வம், சிற்றின்பத்தைப் புறக்கணிக்கின்றது.
  • கடந்த காலத்தையும், பூமியின் இடங்களையும் பற்றிய அறிவு மனிதனின் மனத்தின் ஆபரணம் மற்றும் உணவாகும்.
  • அறத்தை விதைப்பவன், மானத்தை அறுவடை செய்வான்.
  • கண்மூடித்தனமான அறியாமை நம்மைத் தவறாக வழிநடத்துகின்றது. ஓ, கேடுகெட்ட மனிதர்களே, கண்களைத் திறங்கள்.
  • கையாலான கடும் உழைப்பு செயல்படாத இடத்தில் கலை இல்லை.
  • மிகச்சிறிய பூனை ஒரு தலைச்சிறந்த படைப்பு.
  • ஒரே நாளில் பணக்காரன் ஆக விரும்புபவன், ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.
  • பொது அறிவு என்பது பிற புலன்களால், கொடுக்கப்பட்ட விஷயங்களுக்குத் தீர்வு காண்பதாகும்.
  • நட்சத்திரத்தில் உறுதியாக இருப்பவர் மனம் மாறுவதில்லை.
  • நல்ல மனிதர்களின் இயல்பான ஆசை அறிவாகும்.
  • நன்றாகக் கழிந்த வாழ்க்கை நீண்டது.
  • இயற்கை தன் சொந்த விதிகளை மீறுவதில்லை.
  • விஷயங்களின் உண்மையே, உயர்ந்த அறிவாளிகளின் ஊட்டச்சத்து ஆகும்.
  • உயர்ந்த மேதைகள் சாதாரண வேலைகளைச் செய்யும் போது சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
  • ஒவ்வொரு செயலும், ஒரு நோக்கத்தால் தூண்டப்பட வேண்டும்.
  • ஓவியரின் மனம் ஒரு கண்ணாடியை ஒத்திருக்க வேண்டும். அது எப்போதும் பிரதிபலிக்கும் பொருளின் நிறத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் அதன் முன்னால் உள்ள பல பொருட்களின் உருவங்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
  • மனிதனைப் பறக்க அனுமதிக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்குவது எனது விதி என்று நான் அடிக்கடி உணர்ந்தேன்.
  • எளிமையே வாழ்க்கையின் உயர்ந்த பண்பு.
  • சிக்கலில் சிரிக்கக் கூடியவர்களையும், துன்பத்தில் இருந்து வலிமை பெறக்கூடியவர்களையும், சிந்திப்பதன் மூலம் தைரியமாக வளரக்கூடியவர்களையும் நான் விரும்புகிறேன்.
  • பசியின்றி உண்ணும் உணவு அலுப்பூட்டும் ஊட்டமாக இருப்பது போல், ஆசை இல்லாமல் படிப்பது, அதை உறிஞ்சும் நினைவாற்றலில் பதியாது.
  • ஓவியம் என்பது உணர்ந்ததைவிடக் காணும் கவிதை. கவிதை என்பது பார்ப்பதைவிட உணரும் ஓவியம்.