வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
அறிவில் உயர்ந்தோர்க்கு அதிர்ச்சி தரக்கூடிய நோய்கள் வராது என்கிறார் நம் திருவள்ளுவப் பேராசான்.
*எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்*
நாம் எதை அறிவு என்கிறோம்? நாம் இதுவரை கற்றதை, பெற்றதை, அறிந்ததை அறிவு என்கின்றோம். ஆனால் உண்மையான அறிவு என்பது தன்னியல்பாக நமக்குள்ளேயே இருப்பது. அதை நாம் மலரச் செய்ய வேண்டும். நமக்குள் ஏற்படும் அறிவு மலர்ச்சிக்கு பெயர் தான் ஞானம் என்பது.
அறிவு என்பது அறியப்படுவது, ஞானம் என்பது உணரப்படுவது.
உடலைப் பற்றிய உணர்வுநிலை,
மனதைப் பற்றிய உணர்வு நிலை,
இயற்கையைப்பற்றிய உணர்வு நிலை
இந்த மூன்றைப் பற்றிய உணர்வுநிலைகளில் நாம் எப்போதும் இருக்க வேண்டும்.
இந்த மூன்று உணர்வுநிலைகளும் நம்முடைய மூன்று அறிவு நிலைகளாகும்.
இந்த மூன்று அறிவு நிலைகளிலும் தெளிவும், விழிப்புணர்வும் உள்ளவர்களிடம் அவ்வளவு எளிதில் நோய் நெருங்காது.
இந்த அறிவுதான் “எதிரதாக்காக்கும் அறிவு” ஆகும்.
எளிமையாகச் சொன்னால் வரும் முன் காக்கும் அறிவு என்று சொல்லலாம்.
வரும் முன் காப்பது சாத்தியமா? என்றால், எதிரதாக்காக்கும் அறிவுநிலைக்கு நாம் வந்தால், சாத்தியம் தான்.
நோய்க்கு இடமாகும் 3 நிலைகள்
மேற்கண்ட அறிவுநிலையின் போதாமை காரணமாக மூன்று நிலைகள் நோய்க்கு காரணமாகின்றது.
- அறியாமை
- அலட்சியம்
- உணர்ச்சிவயப்படுதல்
அறியாமை
உடலின் மதிப்பை உணராமல் உண்பதிலும், உறங்குவதிலும், உழைப்பிலும் உடலுக்கு துன்பமிழைத்தல்.
அலட்சியம்
உடலின் மதிப்பை உணர்ந்திருந்தும் உடலைப் பராமரிப்பதில் அலட்சியமாயிருத்தல், அதன் மூலம் உடல் நலனுக்கு எதிராக செயல்படுதல்.
உணர்ச்சிவயம்
மிகுதியாக கோபப்படுதல், மிகுதியாக கவலைப்படுதல், மிகுதியாக பொறாமைப்படுதல் இவற்றின் மூலம் உடலுக்கு நாம் செய்யும் வன்முறை.
இவைகள் நம்மிடம் இருக்கும் காரணிகள். இவைகள் தவிர காலத்தின் கட்டாயத்தால் நமக்கு திணிக்கப்பட்ட புறக்காரணிகள் பல. அவற்றில் இனி நாம் விரும்பினாலும் தவிர்க்க முடியாத காரணியாய் நம்மை ஆட்கொண்டு நம்மை விழுங்கிக் கொண்டிருப்பது செல் போன்.
இன்று பிறந்த குழந்தை முதல் அதன் பயன்பாடு பாடாய்படுத்துகிறது. அனைத்து வயது மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் தூக்கத்தையே காவு வாங்கிவிட்டது என்றால் அது மிகையல்ல.
விளைவுகள்
* தூக்கமின்மை
* கண்களுக்கு ஓய்வற்ற வேலை
* நரம்புகள் கட்டிழந்து பலகீனம்
* மூளை தன் வளத்தையும், திறனையும் இழத்தல்
* ஆக்கபூர்வ வேலைகளில் கவனமின்மை
இவ்வாறு செயல்திறன் சிறப்பை இழப்பதோடு உடல் மற்றும் மனதின் ஆற்றலையும் இழக்கும் கேடான நிலை. இந்த விசயத்தில் யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லமுடியாத நிலையில் அனைவரையும் அடிமைப்படுத்தி விட்டது செல் போன் மோகம். இவற்றிலிருந்து நாம் எப்போது தப்பப் போகிறோம்? எப்படித் தப்பப் போகிறோம்? என்பதுதான் மில்லியனர் கேள்வி.
உலகத்தைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்ததில் செல் போன் அறிவியலின் சிறப்பை வியக்காமல் இருக்க முடியாது. எனினும், அதன் சாதக பாதகங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படும் சிறப்பறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கடைபிடிக்க வேண்டியது
- உணவில் ஒழுங்கு
- தேவையான உறக்கம்
- அளவான உழைப்பு
செய்ய வேண்டியது
* ஆண்டுக்கு ஒருமுறை கண்பரிசோதனை
* ஆண்டுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை
* தேவையெனில் முழு உடற் பரிசோதனை
* உடல் மொழி உணர்த்துவதை அலட்சியம் செய்யாமை
* சரிவிகித உணவுமுறை
* உடலுக்கு நடைப்பயிற்சியுடன் கூடிய எளிய உடற்பயிற்சிகள்
* மன நலத்திற்கு மூச்சுப்பயிற்சியுடன் கூடிய தியானப்பயிற்சி என்று கவனமுடன் செயல்பட்டால் ஐயன் திருவள்ளுவர் கூற்றுப்படி அதிர்ச்சி தரக்கூடிய நோய்கள் நம்மை அண்டாது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை சாத்தியமாக்கி நலமோடும், வளமோடும் வாழ உறுதியேற்போம்.