வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
மனிதன் இயல்பிலேயே குற்றம் உடையவனாக இருக்கின்றான். இயற்கையிலும் நல்லதும், கெட்டதும் கலந்தேதான் இருக்கிறது. எனவே மனிதனும் நல்லதும், கெட்டதும் கலந்த கலவையாகவே இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற நல்லவனே பெரும்பாலும் வெளியே தெரிகின்றான், கெட்டவன் நல்லவனுக்கு பின்னால் மறைந்தே நிற்கின்றான். இதில் யாரும் விதிவிலக்காக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே. ஆனாலும் மனிதனுக்கு பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவு இயற்கையால் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவைக் கொண்டு தன்னிடத்தில் உள்ள நல்லது மற்றும் கெட்டதை பிரித்துப் பார்த்து நல்ல குணத்தை மேம்படுத்தி தீய குணத்தை தன்னிடமிருந்து தவிர்த்து வாழும்போது தான் ஒரு மனிதன் முழுமையடைந்த மனிதனாகிறான். இல்லை என்றால் ‘‘கடவுள் பாதி; மிருகம் பாதி’’ கலந்து செய்த கலவையாக இருக்கின்றான். உள்ளே உள்ள கெட்டவன் இவனால் விரும்பி வரவழைக்கப்பட்டவனும் அல்ல, இவனிடமுள்ள நல்லவன் இவனால் விரும்பி வரவழைக்கப்பட்டவனும் அல்ல. இந்த இரண்டு பேருமே அவனுடைய வித்து பதிவாக அதாவது கருத்தொடர் பதிவாகவே வருகிறார்கள்.
இதன் விளக்கம் என்னவென்றால் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் முன்னோர்கள் என்று வழிவழியாக வந்த நமது பெற்றோர்கள் வரையில் என்னென்ன நல்லது மற்றும் கெட்டதை செய்து வைத்திருந்தார்களோ அவ்வளவும் நம் குணமாக நம் இடத்திலேயே உள்ளது. அதற்கு தக்கவாறு நாம் நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ ஒரு செயலை செய்கிறோம் அதனால், நாம் ஒரு நன்மையையோ, அல்லது தீமையையோ அடையப் பெறுகிறோம். நாம் எல்லாருமே எப்போதுமே எல்லோருக்கும் நல்லதே செய்ய நினைக்கிறோம், எல்லோரிடமும் நட்பு பாராட்டவே விரும்புகிறோம், ஆனால், ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் நாம் அறிந்தோ, அறியாமலோ ஒருவருக்கு தீமையும் செய்து விடுகின்றோம் ஒருவருக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறோம்.
நாம் நம்மையும் அறியாமல் சூழ்நிலையின் உந்துதலால் ஒருவருக்கு ஒரு தீங்கை செய்து விட்டாலும், நாம் செய்தது தீமை என்று நமக்குத் தெரியவரும் போது நாம் யாருக்கு தீமை செய்தோமோ அவரிடத்தில் சென்று பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும். அதாவது ‘‘தவறான புரிதலின் காரணமாக சூழ்நிலையின் காரணமாக, நான் இவ்வாறு செய்ய நேர்ந்தது, அதற்காக நீங்கள் வருத்தம் அடைந்து விட்டீர்கள் என்பதை நான் உணர்கிறேன். உங்கள் வருத்தத்திற்கு நான் காரணமானதை எண்ணி நான் வருந்துகிறேன் என்னைப் பொறுத்தருள்க!’’ என்று கேட்டுக் கொண்டால் நிச்சயமாக அந்த நண்பர் நம்மைப் புரிந்து கொண்டு நம்மீது நல்லெண்ணம் கொள்வார். அவருடைய நட்பையும் நாம் புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு நம்முடைய வாழ்வில் நடைபெறக்கூடிய எந்த சிக்கல்களையும் நாம் நல்ல புரிதலுடன் அணுகினால் நாம் யாருக்கும் எதிரியாக மாட்டோம், நமக்கும் யாரும் எதிரியாக இருக்க மாட்டார்கள்.
மற்றவரிடம் உள்ள குறையை காண்பதிலும், மற்றவருடைய குறையை பெரிதாக்கி மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதையும், நிறுத்திவிட்டாலே நம் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவே இருக்காது.
எல்லோரிடத்திலும் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது, என்னிடத்திலும் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது என்பதை நாமே புரிந்து கொண்டு மற்றவருடைய நிறையை மட்டுமே காணவும் மற்றவர்களின் நல்ல செயல்களையும் குணங்களையும் மட்டுமே பாராட்டவுமே பழகிக்கொண்டால் எப்பொழுதுமே மற்றவர்கள் குறையைப் பார்க்கின்ற தன்மையும் மற்றவர்களைப் பற்றிப் புறம் கூறுகின்ற தன்மையும் நம்மிடத்திலிருந்து விலகிச் சென்றுவிடும்.
மற்றவர்களின் குறையை ஆராய்ந்து கொண்டு இருக்கும் பழக்கம் நம்மிடமிருந்து ஒழிந்து விட்டாலே மற்றவர்கள் நம்மிடம் குறை காண எதுவுமே இருக்காது.
எல்லோரும் நல்லவர்கள், எல்லோரும் அவரவர்கள் நிலையில் சரியாகவே நடக்கிறார்கள், என்ற கருத்தை நம் மனதில் ஆழமாக நாம் பதிய வைத்து விட்டால், மற்றவருடைய செயலில் நமக்கு குறையே தெரியாது. மற்றவர்களின் நிறையை மட்டுமே காண்போம்.
ஐயன் திருவள்ளுவரும் இதை அழகாக வலியுறுத்துகிறார் எல்லோரிடமும் குணமும் இருக்கிறது, குற்றமும் இருக்கிறது ஒருவரிடத்தில் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்று பார். அவரிடத்தில் உள்ள கெட்ட குணங்கள் என்ன என்ன என்று பார். இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதை வைத்து அவரை எடை போடு, அவரோடு உறவாடு என்கின்றார்.
*குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்*
“பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே”
என்ற நமது சமயக் குறவர்களின் வேண்டல் எத்தனை உயர்ந்த தத்துவத்தைப் போதிக்கின்றது.
நமது அருட்துறைச்சமயங்களானாலும்,
சங்க இலக்கியங்கள் ஆனாலும்
உலக மக்கள் யாவருக்குமான,
மாந்த இனத்தின் மன இயல் மேன்மைக்கான நீதி நெறிகளை வாரி வழங்கியிருக்கிறது.
குணம், குற்றம் இரண்டில் எது மிகையாக உள்ளதோ அதை எடுத்துக்கொள் என்கிறது திருக்குறள்.
“பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்
நயத்தகு நனிநாகரியர்” என்கிறது நமது சங்க இலக்கியம்.
நல்ல நண்பர்களின் மேல் உள்ள அன்பின் காரணமாக அவர்கள் கையால் நஞ்சைக் கொடுத்தாலும் அதையும் மனமுவர்ந்து அருந்தும் நனி நாகரிகம் இந்த மண்ணில் உலவியமையை இந்தச் சங்கப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.
இன்று இத்தகைய தத்துவங்கள் எங்கே போயின?
“பணத்துக்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர் குறைந்தோர் ஆகின்றார்” என்ற வேதாத்திரியக்கவி இந்தச்சூழலை நன்கு உணர்த்துகிறது.
மனிதன் என்றால் ‘நினைப்பவன்’ என்று பொருள்.நினைவுகள் எண்ணங்கள் உருவாக்குகிறது. உருவான எண்ணங்களைக் கொண்டு சிந்திக்கிற அந்த சிந்தனை மனிதனை செயலுக்குத் தூண்டுகிறது. செயலினால் ஏற்படும் விளைவுக்கு ஏற்ப மனிதன் உயர்வு தாழ்வு அடைகின்றான். நல்ல எண்ணங்கள் மனிதனை உயர் நிலையில் வைக்கின்றது. தீய எண்ணங்கள் மனிதனை கீழான நிலைக்கு ஏற்படுத்துகிறது. மனிதனின் எண்ணங்களை உயர்த்தி நல்ல செயல்களைச் செய்ய நம்முடைய நீதி நூல்களும் அற நூல்களும் வலியுறுத்துகிறது. ஆன்றோர்களின் கருத்துக்களை அடிக்கடி சிந்திப்பதன் மூலம் நம்முடைய எண்ணத்தை ஒழுங்கு படுத்தி அதன் மூலம் மனதைப் பலப்படுத்தினால் மனிதன் குறைவில்லாத மகிழ்ச்சியை, இன்பத்தை அடைய தகுதியானவன் ஆகிறான். அத்தகைய மனிதனே, சகமனிதனின் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவனிடத்தில் உள்ள நல்லவைகளை மட்டும் கவனத்தில் கொள்கிறான். எனவே, இன்னா செய்தவனுக்கும் இனியவே செய்து, நம் எதிரிகளையும் மன்னித்து நட்பாக்கிக் கொள்வது மட்டுமல்ல, நமது எதிரியும் வாழ்த்துகின்ற அளவிற்கு நம் மனதின் ஆற்றலை வளர்த்துக்கொள்வோம்.