சமூகப் பார்வை – 14
திரு
. .திருமலைமூத்த பத்திரிகையாளர்

பிசிலரி, அக்வாஃபினா, கின்லே, ரயில் நீர், அம்மா குடிநீர்.. எனப் பலதண்ணீர்பெயர்களை நாம் நன்கறிவோம். இந்த வியாபாரப் பெயர்களைத் தான் நாம் தண்ணீர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறிந்திடாத நீர்மறை நீர்“. இது ஏதாவது வியாபாரப் பெயர் என நினைக்கவேண்டாம். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் தான் மறை நீர்.

`‘ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு தனது நாட்டில் 1,82,700 லிட்டர் நீரைச் சேமித்துக்கொள்கிறது’’ என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தைக் கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்தக் கண்டுபிடிப்புக்காகஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்க பயன்பட்ட நீர் அதில் இருப்பது இல்லை. அதேசமயம் அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது அதனுள் மறைந்திருக்கிறது. அதுதான் மறை நீர் (Virtual Water)” என்கிறார் அவர்.

ஒரு கிலோ அரிசி 3000 ரூபாய்

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கு உள்ளேயும் மறைந்திருக்கிறது மறைநீர். இதோ நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த இதழின் ஒவ்வொரு காகிதத்துக்குள்ளும் மறைந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசிக்குரிய நெல்லின் உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படும். ஆனால் ஒரு கிலோ அரிசியை அதிகபட்சமாக அறுபது ரூபாய் கொடுத்து வாங்குவோம். இங்கு அரிசியின் விலையில் தண்ணீர் விலை சேர்க்கப்படுவதில்லை. அப்படிக் கணக்கிட்டு பார்த்தால், ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் என வைத்துக்கொண்டாலும்கூட ஒரு கிலோ அரிசி விலை மூவாயிரம் ரூபாய்க்கு விற்கவேண்டிவரும்.

இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ஒரு கப் காபி குடிப்பதற்கு 140 லிட்டர் மறை தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது ஒரு காபி தயாரிப்பதற்குத் தேவையான காபிக் கொட்டை உற்பத்தி செய்வதற்கான தண்ணீர் தேவையிலிருந்து அந்தக் காபி கப்பை கழுவுவது வரையிலான நீரின் மொத்த தேவை 140 லிட்டர். ஆனால், நாம் ஒரு கப் காப்பிக்கு மட்டும் 15 ரூபாய் கொடுத்துவிட்டுகொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம்என அபிப்பிராயம் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவோம். ஒரு கப் காப்பிக்குச் செலவாகும் மறைநீரான 140 லிட்டர் நீருக்கு எந்த விலையும் கிடையாது.

ஏற்றுமதி .. இறக்குமதி

இன்று மறைநீர் தத்துவத்தின் மூலமே பல நாடுகள் ஏற்றுமதி, இறக்குமதியைத் தீர்மானிக்கின்றன. சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மறைநீர் விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர் என்பதால், சீனாவில் பன்றி இறைச்சி உற்பத்திக்குக் கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக அதை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சு பழத்திற்கான நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர்ப் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குக் கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

சவுதி அரேபியா 90-களின் தொடக்கத்தில் அந்நியச் செலாவணியை ஈட்ட ஏராளமான கோதுமையை ஏற்றுமதி செய்தது. இதனால், 10 ஆண்டுகளின் சவுதி 6 பில்லியன் கனமீட்டர் நீர் பற்றாக்குறை கொண்ட நாடாகிவிட்டது. விழித்துக்கொண்ட அந்த நாடு இப்போது கோதுமையை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.

யோசிப்போம்..

பன்னாட்டு நிறுவனங்கள் பல சென்னை யைச் சுற்றி கார் தொழிற்சாலைகளைத் தொடங்கியிருக்கின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் கார்களைத் தயாரித்து நம் நாட்டில் விற்பதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் கார்களை உற்பத்தி செய்ய இடமில்லையா? அல்லது மின்சாரம் இல்லையா? யோசித்திருக்கிறோமா? அதெல்லாம் காரணமில்லை. இங்கு மனித சக்தி எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் வரைமுறையின்றி நீர் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் செலவில்லாமல். 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். இந்த நீரை எந்த நாட்டுக்காரன் இலவசமாகக் கொடுப்பான்? நம்மைத் தவிர.

திருப்பூரிலிருந்து ஜட்டியும் பனியனும், பனியனுக்கான நூலும் வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் பயணிக்கின்றன. செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்கத் தெரியாதா? பின் ஏன் ஜட்டி பனியன்கள் இங்கிருந்து போகின்றன? என யோசித்திருக்கிறோமா? ஒரு ஜட்டியைத் தயாரிக்கத் தேவையான மறைநீர் 2,700 லிட்டர். அப்படி என்றால் ஒரு ஜட்டிக்காக நாம் கொடுக்கும் குறைந்தபட்ச விலை ரூ. 2700. (லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் எனக் கணக்கிட்டால்..) அதுபோல ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை. நம்நாட்டின் நீர் வளம் பறி போவது குறித்து யோசிப்பதில்லை. அன்னிய செலாவணி கிடைக்கிறது எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதற்காக மென்பொருள் நிறுவனங்களை இங்கே வைத்து நம் ஆட்களுக்குச் சம்பளம் கொடுத்து வருகின்றன? இங்கே கூலி குறைவு என்பது மட்டுமில்லை. சென்னையில் ஒரு நபருக்குப் பி.பி.. பணியைத் தருவதன் மூலம் அந்த நாடுகள் சேமித்துக்கொள்ளும் மறைநீரின் அளவு நாளன்றுக்கு 7,500 லிட்டர்.

எதற்கு எவ்வளவு?

தாமிரபரணி ஆறு அந்நிய குளிர்பான நிறுவனத்துக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஒரு லிட்டர் குளிர்பானம் உற்பத்தி செய்யத் தேவையான மறைநீர் 56 லிட்டர். அதுபோலப் பன்னாட்டு காகித நிறுவனம் பவானி கரையோரத்தில். ஒரு -4 அளவு கொண்ட காகிதத்தை உற்பத்தி செய்யத் தேவையான மறைநீர் 10 லிட்டர்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தோல் பொருட்களில் 72 விழுக்காடு வேலூர் மாவட்டத்தில் உற்பத்திச் செய்யப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ எடைகொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனைச் செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் நீர் தேவை.

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலாவணி கிடைக்கிறது. 60 கிராம் எடை கொண்ட ஒரு முட்டை உற்பத்திக்கு 196 லிட்டர் மறை நீர் தேவை. ஐந்து ரூபாய் விலை கொண்ட ஒரு முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் எனக் கருதுபவன் முட்டாளாக மட்டுமே இருக்கமுடியும். முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை.

மேலும் சில பொருட்களின் ஒரு கிலோ எடைக்குத் தேவைப்படும் மறைநீர். (அடைப்புக்குள் இருப்பது மறைநீர் அளவுலிட்டரில்) ஆட்டுக்கறி (5521), மாட்டுக்கறி (15415), கோழிக்கறி (4323), பன்றிக்கறி (5988), பால் 250மி.லி (255), பால்பவுடர் (4745), வெண்ணெய் (5553), நெய் (3178), தேனீர் -250மி.லி (27), காபி 125மி.லி (132 ), பீர்– 250மி.லி (74), ஒயின்– 125மி.லி (109), பிரட் (1608), பிட்சா-1 (1259), கரும்பு (1782), உருளைக்கிழங்கு (287), ஆப்பிள் (822), வாழை (790), ஆரஞ்சு (560), மாம்பழம் (1,800), பேரீட்சை (2277), நிலக்கடலை (2782), பூண்டு (353), முட்டைக்கோஸ் (237), தக்காளி (214).

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லாச் செலவுகளையும் உள்ளடக்கியது. ஆனால் தண்ணீர் மட்டும் அந்தக் கணக்கில் வருவதில்லை என்பதுதான் வேடிக்கை.

ஆனால் நாம் மறைநீரைக் கருத்திலே கொள்ளவே இல்லை. ஆனால், நாம் தான் மறைநீர் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டும் காரணம், நம் நாட்டில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலை முன்னேற்றத்தினால் ஏற்படும் தண்ணீர்த் தேவை, மக்களின் சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டினால் உருவாகும் நீர்மாசு, உயர் தர நவீன சொகுசு வாழ்க்கையின் மேல் உள்ள மோகம் எனப் பல காரணங்களால் நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது அல்லது தேவைப்படுகிறது. பல நாடுகளில் மக்கள் தொகை இந்தியாவைப் போல் இல்லாத போதிலும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் மறை நீர் அளவுக்கு, அவர்கள் இறக்குமதி செய்து விடுகிறார்கள். ஆனால், இந்தியா தொடர்ந்து மறை நீரை ஏற்றுமதி செய்துகொண்டே இருக்கிறது. இன்றைய தண்ணீர் பஞ்சத்துக்கு மறைநீரும் ஒரு காரணம். மறைநீரின் மதிப்பினை உணராததால் நீரின்றித் தவிக்கிறோம்.

முட்டையில் தொடங்கிக் கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாட்டின் வளர்ச்சியில் உனக்கு அக்கறையில்லையா?” என நீங்கள் கோபப்படுவது காதில் விழுகிறது. ஆனால் நம் விளைநிலங்களும், அதிலுள்ள நீரும் சுரண்டப்படுவதைப் பற்றியும், அவை கைவிட்டு போவதைப்பற்றியும் அக்கறை கொள்ளாமல் கார் தொழிற்சாலைகளும், மொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளையும் துவங்குவது தான் வளர்ச்சி என்கிறீர்களா? அவர்கள் நம் வளத்தைச் சுரண்டிவிட்டு வெளியேறிவிட்டால் பின்னர் ஏதுமில்லாமல் நிற்பது நீங்களும் நானும்தான். உற்பத்தி செய்யவேண்டாம் எனச் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் உற்பத்தியோ ஏற்றுமதியோ செய்யவேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மறை நீர் பொருளாதாரமும்தேவையில்லாமல் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது“.

ஏற்கெனவே தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம், அப்படியிருக்கையில் நாம், மறைநீர் மூலமும் நீரை வீணாக்க வேண்டுமா? மறைநீரை மொத்தமாகத் தவிர்த்துவிடமுடியாது. ஆனால் தவிர்க்க வேண்டிய உற்பத்தியை தவிர்த்து நீர் இருப்பைத் தக்கவைக்கலாம். யோசிப்போம். 