வழிகாட்டும் ஆளுமை – 7
திரு. நந்தகுமார் IRS
‘‘நிலா நிலா ஓடி வா” என்று சிறுவயதில் நமக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக நம்முடைய அம்மா அல்லது நம்முடைய பாட்டி இந்தப் பாடலை பாடி சாப்பாடு ஊட்டுவார்கள். உண்மையில் நிலா நம்மிடம் வராது என்பது அப்போது நமக்கு தெரியாது. நாம் நினைத்துக் கொள்வோம் நம் அம்மா வார்த்தையால் சொன்னது கூட நிச்சயமாக நடக்கும், நிலா வரும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். நிலா நம்மிடம் வருமா என்று சொன்னால் உண்மையில் வராது. ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் அம்மா இவ்வாறு சொல்லி இருக்கலாம் என்று நான் நினைப்பேன். என்னவென்றால், நிலா நம்மை நோக்கி வராது, மாறாக, நாம் தான் அதனை நோக்கி செல்ல வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள் போல. அதனால் தான் அவர் நிலாவிடம் சென்றார்.
தேடலில் மனிதர்கள் பல விஷயங்களை நம்மை நோக்கி வரவேண்டும் என்று நினைக்கின்ற பொழுது விண்ணைத்தாண்டி வருமா? அது எனக்கு வருமா? இந்தப் பொருள் எனக்கு கிடைக்குமா? இந்த பதவி எனக்கு கிடைக்குமா? என்று பல விஷயங்கள் நம்மை நோக்கி வரவேண்டும் என்று நினைப்போம். ஆர்க்கிமிடிஸ் கூற்று போல “ஒரு திடப்பொருள் திரவத்தின் மீது மூழ்கும் போது அந்த திடப்பொருளால் விலக்கப்பட்ட திரவம் அதன் எடைக்குச் சமம்” ஆக, மற்ற ஆளுமைகள் எல்லாம் நமக்குள் புகுந்து நம் ஆளுமையைப் பல சமயம் இல்லாமல் செய்துவிடுகிறது. நாம் யாரென்று தெரியாமல், நமது ஆளுமை என்ன என்று தெரியாமல் பல சாதாரண மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையில் ஒருவரைப் போல் பெரியாளாக வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை. மாறாக, அவர் வாங்கிய கார் போல் வாங்க வேண்டும். அவர் கட்டிய வீடு போல நானும் கட்ட வேண்டும் என்ற ஆசை தான் இருக்கிறதே தவிர, அவரிடமிருந்த அந்த ஆளுமைத் திறன் தனக்கு இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பதில்லை.
சிந்தனையே முதல் வழி
நாம் எவ்வாறு சிறுவயதில் இருந்தோமோ, அந்த ஆற்றல் நமக்கு இப்போது இருக்கிறதா என்று கேட்க வேண்டும். ‘‘விண்ணைத் தாண்டி வருவாயா’’ என்று, சிந்திக்கும் போது, நம்மீது நம்பிக்கையில்லாத, சந்தேகமான, தேவையில்லாத பல விஷயங்களை எல்லாம் நமக்குள்ளே நாம் வரவழைத்துக் கொள்கிறோம். ஏன் இதை அடையும் ஆளுமை நம்மிடம் இல்லை? என்று சிந்திக்க வேண்டும். “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்று சொல்லுவார்கள். அதுபோல நாமும் நமக்குள் இருக்கக்கூடிய அந்த ஆளுமையைத் தேட ஆரம்பிக்க வேண்டும். அதனால் தான் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம் போன்ற பெரிய ஆளுமைகள் எல்லாம் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன விஷயங்களை உள்வாங்கி, எப்படி அந்த இடத்துக்கு செல்கிறோம் என்பது தான் முக்கியம். நமது சிந்தனை நம் எல்லையை தாண்டி போக முடியுமா? நம்முடைய சிந்தனையின் வீரியம் அந்த அளவிற்கு செல்லுமா?.
“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற பாடல் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறேன் என்று சொன்னால் அந்த வெளிச்சம் என்னை வந்து அடைந்து விட்டது என்று அர்த்தம். பல நட்சத்திரங்களின் ஒளி, வெளிச்சம் அந்த அளவிற்கு வெளியில் தெரிவதில்லை அந்த ஒளி நன்றாக தெரிகின்ற பொழுது இன்னும் பல நட்சத்திரங்களை நாம் காண முடியும். ஒரு பொருளை பார்க்கின்ற பொழுது என்னுடைய சிந்தனை எவ்வளவு தூரம் போகின்றது. நான் நிலாவை பார்க்கும்போது நிலாவின் ஒளி என் மீது பட்டவுடன் என்னுடைய சிந்தனை அந்த நிலா வரை சென்றுவிட்டது. அந்த நட்சத்திரம் வரை என்னுடைய சிந்தனை சென்றிருக்கிறது. இதைத்தான் அந்தக் காலத்தில் டெலிபதி என்று சொல்வார்கள். அந்த நிலாவிற்கு செல்வதற்கு அல்லது அந்த நட்சத்திரத்திற்கு செல்வதற்கு எவ்வளவு தூரம் ஆகும் என்பது தெரியாது. ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக நாம் ஒரு நிலாவைப் பார்ப்பதோடு விட்டுவிடாமல் அடுத்த நொடியே நம்முடைய சிந்தனை அந்த நிலாவிடம் சென்று சேருகிறது என்று கூறுகிறது.
வேண்டும் வீரியம்
எப்படி விளக்கில் இருந்து வெளிச்சம் வருகிறதோ, அதுபோல நம்முடைய எண்ணத்தின் வீரியமும், சிந்தனையின் வீரியமும் வெளியில் பிரகாசமாக பரவ வேண்டும். உதாரணத்திற்கு மண்ணெண்ணையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்திருக்கிறோம். மற்றொன்றில் நெய்யை ஊற்றி ஒரு திரியில் விளக்கு ஏற்றி வைத்து இருக்கிறோம். இதில் எந்த விளக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்? மண்ணெண்ணெயில் ஏற்றிய விளக்கு நம்மை ஈர்க்குமா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த ஒளியில் ஒரு மந்தத்தன்மை இருக்கும். நம்மை அந்த அளவிற்கு ஈர்க்காது. ஆனால் நெய்யில் ஏற்றி இருந்த விளக்கு மிகவும் ரம்மியமாகவும் பிரகாசமாகவும் இருப்பதனால் நம்மை மிகவும் ஈர்க்கும். அதுபோல நம்முடைய ஆளுமைகளும் ஒரு எண்ண வீரியத்துடன், சுத்தமாக இருந்தது என்று சொன்னால் அது பலரையும் ஈர்க்கும் என்று அர்த்தம். கலப்படமில்லாத எண்ணங்கள், பிறரை பார்த்து பொறாமை இல்லாத, ஒரு இயற்கையான சிந்தனை உண்மையான சிந்தனையோடு இருக்கிறோம் என்று சொன்னால் இந்த விளக்கின் வெளிச்சம் போல இவ்வளவு பிரகாசமாக ரம்மியமாக பலரிடம் சென்று சேரும், ஈர்க்கும்.
நம் உடலிலும் ஒரு நல்ல உளவியல் ரீதியான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டோம் என்றால், நமது ஆளுமைத்திறன் வளர்ந்து நன்கு பிரகாசிக்க முடிகிறது. நம் உடலை நல்ல அளவில் வைத்துக் கொள்கிறது. என்னுடைய எண்ணம் விண்ணைத் தாண்டிப் போக வேண்டும் என்று செயல்படும்போது அது பலருக்கும் சென்று சேரக் கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நம்முடைய சிந்தனையோடு நம் ஆளுமை முதலில் நம்முடைய உடலை தாண்ட வேண்டும். அதனால் தான் நம்மில் பலர் அதனை தொட இயலவில்லை. எனக்கும் என்னுடைய ஆளுமையை ஒரு சிறிய வீட்டிற்குள் அடைத்து வைத்தது போல் தோன்றும். நம்மில் பலரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நம்முடைய ஆளுமையை உள்ளடக்கி விடுகிறோம். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் நாம் பிறக்கின்ற போதே நமக்கான ஆளுமை நம்மிடம் வந்து சேர்ந்துவிடுகிறது.
விண்ணைத் தாண்டும் ரகசியம்
நம்முடைய ஆளுமை விண்ணைத்தாண்டிப் போவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றார். ஆனால், அவருடைய எண்ணமும் சிந்தனையும் தான் முதலில் இறங்கியது. அந்த எண்ணம் இறங்க வில்லை என்றால், அந்த சிந்தனை இல்லாமல் இருந்தால் அவர் இறங்கி இருக்க மாட்டார். அதனால் தான் அது சாத்தியமாகியது. இதுபோன்ற எண்ணங்களும் நம்முடைய சிந்தனையின் வீரியமும் இல்லாத காரணத்தால் தான் பல காரியங்கள் கிடப்பில் போய்விடுகிறது. கடவுள் நம்மை படைக்கின்ற போதே ஒருவரை குண்டாகவும், ஒருவரை ஒல்லியாகவும் எதற்காக படைத்தார் என்று சொன்னால். எந்தளவிற்கு ஆளுமை அலைவரிசையை உள்வாங்க முடியுமோ அந்த அளவிற்கு கடவுள் நம்மை ஆன்ட்டனாவாக படைத்திருக்கிறார். அந்தளவிற்கு தான் நம்முடைய எண்ண வீரியமும் இருக்கும். நம்முடைய ஆளுமை எந்த மாதிரியான சிந்தனைகளை உள்வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல எண்ணங்களை உள்வாங்குவதற்கான ஆளுமை அதுவாகவே தயாராகிக் கொள்கிறது. எதிர்மறையாக சிந்திக்கின்ற போது நம்முடைய உடல் எதிர்மறையான எண்ணங்களை உள் வாங்க தயாராகின்றது. ‘‘விண்ணைத் தாண்டி வருவாயா’’ என்று சொல்லும்பொழுது கெட்ட எண்ணங்களும் தான் உள்நுழைகின்றன. நல்ல விஷயங்களை உள் வாங்குவதற்காக நம்முடைய எண்ணங்களை மாற்றுகின்ற போது, அனைத்து நல்ல விஷயங்களும் விண்ணைத்தாண்டி நம்முள் வந்து சேரும்.
ஒரு மனிதன் சூரியனுக்கு முன்னால், இந்த பிரபஞ்சத்திற்கு முன்னால் ஒரு சிறிய புள்ளி. உங்களுடைய ஆளுமையின் செயல்பாட்டை உங்களின் எண்ணத்தின் மூலமாக மாற்றிவிட்டால் நீங்கள் வாழ்க்கையில் என்ன அடைய வேண்டுமென்று, என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எல்லாம் செய்யக் கூடிய அத்தனை ஆளுமையும் விண்ணைத்தாண்டி உங்களை நோக்கி வர ஆரம்பித்துவிடும். இவ்வாறு தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஆளுமை விண்ணை தாண்டி சென்றிருக்கிறது. அந்த எண்ணம் இருந்ததனால் தான் அவர் அந்த அளவிற்கு சென்றிருக்கிறார். எனவே, அதுபோன்ற எண்ணம், எண்ணத்தின் வீரியம் நம்முள் இருந்தால் நிச்சயமாக நட்சத்திரம் வரை செல்லும். உங்களை மிகப் பெரிய ஆளுமை நட்சத்திரமாக அது மாற்றும்.
உங்கள் எண்ணங்களும் சிந்தனையின் வீரியமும் விண்ணைத்தாண்டி நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது நினைத்த காரியங்களை எல்லாம், நினைத்தவற்றை எல்லாம் உங்களால் செய்ய முடியும். அது பலரையும் உங்களை நோக்கி ஈர்க்கும். எனவே உங்களுடைய ஆளுமை, சிந்தனைத் திறன், எண்ணங்களின் வீரியம் விண்ணைத்தாண்டிச் செல்லட்டும்! உங்களை ஆளுமை நட்சத்திரமாக மாற்றட்டும்!. வாழ்த்துகள்.