இளைஞர் உலகம்

தூங்கு முகத்தவரின் பலம், பலவீனம், சீர்திருத்தம் போன்றவற்றை ஆய்வு செய்யும் ‘சுவோட்’ (SWOT)-இன் முதல் கட்டமாக இந்த உளப்பாங்கைக் கொண்டோரின் பொது குணநலன்களைப் பார்த்து வருகிறோம். இதுவரை 20 பண்புகளைக் கண்ட நாம் இன்னும் சில பண்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

உணர்ச்சிகளை எளிதில் வெளிக்காட்டாதவர்

பொதுவாக தூங்குமுகத்தவர் வெறுப்பு வைத்திருப்பவர்களாக (Grudge Holders) இருப்பார்கள். ஆனால் இந்த உணர்ச்சியை இதுபோன்ற வேறு எதிர்மறை உணர்ச்சிகளை இவர்கள் வெளிப்படையாகக் காட்டுவதில்லை. வெளித்தோற்றத்தில் உணர்ச்சி சமன்நிலை உள்ளவர்கள் போல் தெரிந்தாலும், வெறுப்புணர்வு இவரை ஆட்கொண்டிருக்கும். இதிலிருந்து வெளிவராத பட்சத்தில் இவர் (யாராக இருந்தாலும்) பல்வேறு வியாதிகள், பிரச்சினைகளை சுமந்து கொண்டிருப்பார். வெறுப்புணர்வு உள்ளோர் பிரஷர், சுகர், அல்சர், கான்சர் போன்ற வியாதியுள்ளவராயிருப்பர். அதிலும் வெறுப்பு வைத்திருப்பவர்களில் 61 விழுக்காடு பேர் கான்சர் வியாதியின் தாக்கத்திற்குட்பட்டவர்கள் என கண்டுபிடித்துள்ளனர். எனவே வெறுப்புணர்வை அகற்றாவிட்டால் கான்சர் நம்மைத் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என உணர்ந்து கொள்ள வேண்டும்.

வெறுப்புணர்வின் பன்முகங்கள்

வெறுப்புணர்வு, காழ்ப்புணர்வு, உட்பகை, எரிச்சல், கோபம், வர்மம், வைராக்கியம், உரத்த கூச்சல், அமைதிக் குலைவு, பழிவாங்கும் எண்ணம், மன்னிக்கும் மனமின்மை, பொறாமை, கசப்புணர்வு, சீற்றம், உளக்கொதிப்பு, சகிப்புத் தன்மையின்மை, பழிப்பு, வதந்தி பேசுதல், வடுச்சொல் யாவும் பகை என்ற ஒரு தாயின் பிள்ளைகளாவர்.

பாதிப்புகள்

இதனால் நமது நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தி, நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. எந்த ஒரு உணர்ச்சியும் வேகமெடுக்கும் போது அது நமது மூளையில் மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களைத் தூண்டி விடுகின்றது. “வெறுப்புணர்வு கொண்டிருப்பவன் உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, உள்ள ரீதியாக பாதிக்கப்பட்ட நோயாளியாகிறான்” என்கிறார் பிரபல அறிஞர் ஒருவர்.

வெறுப்புணர்வு பற்றி பேசும் இன்னொருவர், வெறுப்பு விஷத்திற்கு ஒப்பானது; பிறரை வெறுப்பது என்பது நாம் விஷம் அருந்திவிட்டு அந்த நபர் இறக்க வேண்டும் என நினைப்பது என்கிறார். ஆனால் வெறுப்புள்ளவர் அதன் பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதாவது வாழ்நாள் முழுவதும் நோயாளியாக விரும்புபவர்கள் வெறுப்பை கொண்டிருக்கலாம். வெறுப்பை ‘கசப்பான நச்சுவேர்’ என பைபிள் சொல்கிறது.

வெறுப்பு/பகை உருவாகும் விதம்

குழந்தைப் பருவத்திலிருந்தே மனித ஆளுமையில் பகை உருவாகிவிடுகிறது. குறிப்பாகக் குழந்தையாக இருக்கும்போது பாதுகாப்பின்மையை உணரும் போது, தன்னை, தனது கருத்துக்களைப் பாதுகாக்க மனிதன் மற்றவர்களை எதிர்க்கத் தொடங்குகிறான். உண்மையில் அவன் இந்த பகையை அடையாளம் காணும் முன்பே அது மனிதனில் வேரூன்றி விடுகிறது. இதனை எவ்வளவு சீக்கிரம் அடையாளம் கண்டு அகற்றுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டியது அவசியமாகிறது.

புண்பட்ட சுயமதிப்பு, பெற்றோர்களால், தன்னால் அன்பு செய்யப்பட்டவர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலை (Rejection), அக்கறையின்மை, இளம் வயதில் அன்பும் ஆதரவும் கிடைக்காத நிலை, நல்ல வாய்ப்புகள் இல்லாத நிலை, ஏளனம், அவமதிப்பு, தான் செல்வமாகப் போற்றி வந்ததை இழந்த நிலை, பிறர் அனுபவித்த மகிழ்வை தனது வாழ்வில் அனுபவிக்க முடியவில்லையே என்ற இழப்புணர்வு போன்றவைகளாலும் பகையுணர்வு, வெறுப்புணர்வு எழலாம்.

இந்த எதிர்மறை உணர்வு நமது ஆளுமையில் பாதிப்புகளை உருவாக்கும் என ஏற்கெனவே பார்த்தோம். இந்த நபர்களிடம் அளவுகடந்த தூக்கம் அல்லது தூக்கமின்மை, பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமான பசி, உடல் வலி, ஜலதோசம், குடல் புண், மூட்டு மூட்டாக வலி, ஆஸ்துமா, பெருமூச்சு, ஏக்கம், மூச்சிரைப்பு, சர்க்கரை வியாதி இவற்றுள் பல இருக்கலாம். ஏற்கெனவே கான்சர் வியாதியின் வேர் பகையாக இருக்கலாம் எனப் பார்த்தோம்.

இன்னும் வெறுப்புணர்வு இவர்களை வலுச்சண்டை செய்வோராக, சமூக விரோதிகளாக, மனநிலை திரிந்தவர்களாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. உளவியலார் பிராய்டு கருத்துப்படி, தீங்கு செய்யும் பண்பு எல்லா மனிதரிடமும் அவர்களது ஆழ்மனதில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்த மனிதன் குழந்தைப் பருவத்தில் அன்பை பெறவில்லையோ, அவன் வாழ்வின் மேல் வெறுப்பு கொண்டு, மனவேதனையின் அமுக்கங்களால் வலுச்சண்டை செய்பவனாக மாறுகிறான். இது அவனது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தி, உடல் தனது சமநிலையைப் பாதுகாக்க முயலும். இல்லாத பட்சத்தில் இது விபத்தில் போய் முடியும். இல்லை என்றால் இது நோயாக வெளிப்படும்.

டியூப்பில் காற்று அதிகமாகும் போது கொஞ்சம் காற்றை வெளியேற்றி டியூப் வெடித்துச் சிதறாமல் பாதுகாப்பது போன்றதுதான் இது. மேலும் இந்த நபர்கள் பிறரோடு கொள்ளும் உறவில் பாதிப்புகளை உருவாக்கலாம். இன்னும் இவர்கள் தொழிலாளர் சங்கங்கள், எதிர்ப்பு இயக்கங்கள், குழுக்கள் இவற்றை உருவாக்கி சமூகத்தில் எதிர்ப்பைக் காட்ட முயலுவார்கள். இப்பண்புடையோர் பிறரைத் தாக்குதல், பிறருக்கு எதிராகப் போராடும் போர்க்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறைச்சாலைக் கைதிகளில் பெரும்பாலோர் இத்தகைய ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே தூங்கு முகத்தவர் தங்களது வெறுப்புணர்வு குறித்து எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.

வெளிவருவது எவ்வாறு?

வழக்கமாக எந்த ஒரு எதிர்மறை உணர்ச்சியையும் நேர் மறை எண்ணங்களைப் புகுத்துவதன், பதிப்பதன் மூலம் அகற்ற முடியும் என உளவியல் கூறுகிறது. எடுத்துக்காட்டாக பகை அல்லது வெறுப்புணர்வு உள்ளவர்கள், தான் அன்பு செய்யப்படுவதாக  அறிக்கையிட்டு, அதாவது தனக்குத்தானே சொல்லிச் சொல்லி அதை அடி மனதில் பதித்துவிட்டால் ஒளியேற்றியதும் இருள் அகலுவதுபோல் இந்த வெறுப்புணர்வு மறைந்துவிடும்.

நிகழ்ச்சி

ஒரு ஸ்தாபனத்தில் கணக்கர் வேலை பார்த்த பெண்மணி, தனது புதிய மேலாளர் தன்னை எப்படியாவது வேலையைவிட்டு நீக்க முயற்சிப்பதைக் கண்டு கொதிப்படைந்தாள். ஒரு நாள் அவர் வெளிப்படையாகவே அவரை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்புவதாகக் கூறிவிட்டார்.

இவளோ ஒரு விதவைப் பெண். இவளுக்கு இதனால் அந்த மேலாளர் மீது ஆத்திரமும் கோபமும் மூண்டது. அவர் இல்லாத நேரத்தில் இதனை வெறுப்புப் பேச்சுகளால் வெளிப்படுத்தினாள். இரவு சரியான தூக்கமில்லை. சர்க்கரை வியாதி அதிகமாகி மெலிந்த நிலையிலிருந்தாள்.

இவரை சந்தித்த ஆற்றுப்படுத்துநர், கீழ்க்கண்டவாறு இனி வாய்விட்டு காலையில் எழுந்ததும் சொல்லி உடல்நலமும் வேலையையும் பேணக் கூறினார்.

“நான் எல்லோராலும் அன்பு செய்யப்படுகிறேன். எனது மேலாளர் என்னை நேசிக்கிறார். நானும் அவருக்கு பதிலன்பு காட்டுகிறேன். எனது மேலாளர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். என்னை வேலை விசயத்தில் பாராட்டுகிறார். நாங்கள் நல்லுறவுடன் இருக்கிறோம். எனது ஸ்தாபனத்தில் யாரும் எனக்கு எதிராக இல்லை; நானும் யாருக்கும் எதிராக இல்லை. என் சக ஊழியர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். எல்லோருக்கும் நான் பிடித்தமுள்ளவளாக இருக்கிறேன். எனது பேச்சு இனிமையானதாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது. எனது வேலை விசயத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எல்லோரையும் நான் அன்பு செய்வதால் எல்லோரும் என்னை அன்பு செய்கின்றனர். எங்கள் ஸ்தாபனத்தில் அனைவரும் சமாதானமாக உள்ளோம்.”

ஒரு மாதம் காலையில் எழுந்தவுடன் வாய்விட்டு இவற்றைச் சொல்லி, இப்போதும் அவள் பணியிலிருக்கிறாள்.