வாழ்வியல் திறன்கள்

லகில் மெத்தப் படித்தவர்கள் பலர், தங்களின் அறிவார்ந்த சேமிப்பை பிறருக்குத் தருகின்றார்களா? என்றால், பெருமளவில் இல்லை எனலாம்.  தங்கள் கற்றவற்றை பிறருக்குத் தரக்கூடாது என்பதைவிட எப்படித் தருவது என்பதே இவர்களின் சிக்கலாக உள்ளது.  எடுத்துச் சொல்லும் ஆற்றல் என்பது பலருக்கு இல்லாமல் இருப்பதே உண்மையான காரணம்.  அவர்கள் பல ஆராய்ச்சிகளைக் கூட திறம்பட செய்பவர்களாக இருப்பார்கள், ஆனால் தங்களிடமுள்ள அந்த நுண்ணாற்றலை எடுத்துச் சொல்லும் கலையை அவர்கள் இறுதிவரை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே பெரிய குறையாக அமைந்துவிடுகின்றது.  இந்தநிலையை சோகமாக சொல்லிக்கொண்டிருப்பதைவிட, இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.  பேச்சுக்கலை என்பது, வெறும் மேடைப்பேச்சு மட்டுமன்று, அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்த வேண்டிய ஓர் ஈர்ப்பு ஆற்றல், அஃது ஒரு கலை எனலாம்.  இக்கருத்தினை தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும்,

“பேச்சு என்பது வெற்றாவியன்று;
வெறுங் கூக்குரலன்று:
அஃதொரு கலை.
பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை,
அதனை வெறுமையாக்குவது அறிவுடைமையாகாது”

பேச்சைக் கலையாக்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துகின்றார். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த தேர்ச்சி பெற்றிருந்த போதும், மிகப்பெரிய தேர்வுகளில் நேர்முகத்தேர்வின்வழியாகத் தேர்ந்தெடுப்பதை அறிகின்றோம்.  அந்நிலையில் தான் கற்றதை, உணர்ந்ததை, தேர்வாளர்கள் மனம் பதியச் சொல்லத்தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை.  இத்திறனற்ற நிலையினை,

“உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்”   (குறள்.730)

என்றாக, கற்றவர் ஒருங்குகூடிய அவையில் தான் கற்றவற்றை மனம்பட எடுத்துச்சொல்லத் தெரியாதவர்கள், உயிரொடு இருப்பினும் இறந்தவர்க்கு ஒப்பாவார் என்று சாடும் போக்கைத் திருக்குறளில் அறியமுடிகின்றது.  எனவே, அறிவார்ந்த கல்வி என்பது பேச்சுக்கலையில் பெருமிதமுறுவதை உணரமுடிகின்றது.  பேச்சுக்லை என்பது ஒரு தவமாகச் செய்யப்படவேண்டிய அரிய முயற்சி எனலாம்.  சந்திக்கும் அனைத்து மனிதரிடமும், அல்லது அனைத்து இயங்குநிலைகளிலும் முற்றாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு முழுமை ஆற்றல் என்றாலும் மிகையாகாது.  எந்தச் சிக்கல்களையும் முறைப்படுத்தப்பெற்ற பேச்சின்வழியாக தீர்க்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்ட வரலாறாக உள்ளது. 

ஆழமான கருத்துகளை நாகரிகமாக வடிவமைத்து, கேட்டவரை தம் வயப்படுத்தும் ஆற்றல் உள்ளவரை உலகம் என்றும் சார்ந்து நிற்கும். ஆனால் அத்தகைய பேச்சாற்றலுக்கு பேசுபவரின் மனமானது பண்பட்ட ஒன்றாக இருக்கவேண்டியது அவசியமாகும்.  உட்கோட்டமான மனத்தை தெளிவாக கொண்டிருப்பவரால் மட்டுமே, மிகத்தெளிவாக பேசி இணக்கச் சூழலை அனைவரிடமும் உருவாக்கம் செய்திட முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற போது. பல நூறு பிரிவுகளாக இருந்த சமஸ்தானங்களையெல்லாம், தன்னுடைய ஆற்றல்மிக்கப் பேச்சால் ஒன்றிணைத்தார் சர்தார் வல்லபாய் பட்டேல்.  இன்றைய பரந்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அவரின் ஒழுங்கமைந்த பேச்சாற்றலே அடிப்படையாக அமைந்தது.   ஆனால் இன்று, வீட்டிற்குள் கூட ஒருவரோடு ஒருவர் இணக்கமாக பேசுவது கடினமாக உள்ளது.  ஏனிந்த மாறுபாட்டு நிலைகள் என்று சிந்திக்கும் போது,

  1. தான் சொல்வதை அனைவரும் மறுப்பில்லாமல் கேட்க வேண்டும் என்று நினைப்பது.
  2. அடுத்தவர்கள் பேசுவதை உளமாற கேட்காமல் இருப்பது.
  3. எதிரில் பேசுபவரின் குணாதிசயங்களை எடை போடுவது.
  4. புரியவைக்க வேண்டும் என்றெண்ணாது, பணிய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பேசுவது.
  5. சாதாரணமாக சொல்லுவதைக் கூட நீட்டி முழக்கி குழப்பிவிடுவது.
  6. கட்டளை இடுவதைப் போன்று பேசுவது.
  7. அடுத்தவரின் குறிப்புகளை அறியாமல் பேசுவது.

மேற்குறித்தவழி, இன்று பேச்சுக்கலையில் (Non-verbal) உடல்மொழி அசைவுகளையும் ஊன்றி பார்த்து அறிய வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.  எனவே பேச்சுக்கலையில் சிறந்து திகழவேண்டுமாயின்,

  1. பேச வேண்டும் என்ற எண்ணம் நம்முள் வலுப்பெற்றிருக்க வேண்டும்.
  2. சிறந்த நிலையில் பேசுபவர்களை கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
  3. பேசும் வாய்ப்புகளை நழுவ விடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  4. குறித்த சொற்களால் குறிப்பறிந்து பேச பயிற்சி செய்ய வேண்டும்.
  5. உலகத்தின் தலை சிறந்த கேட்பாளனாகத் திகழ வேண்டும்.
  6. இனிமையான சொற்களை நயமாகச் சொல்லும் கலையில் சிறக்கவேண்டும்.
  7. எப்போதும் உடன்மறை நிலையில்
    (Positive utterance) பேசவேண்டும்.

என்ற உயிர்ப்புறு கோட்பாடுகளை செயலாக்கி நிற்கும்போது உலகம் நம்மை ஊன்றி கேட்கும் நிலை ஏதுவாகும்.

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்” (குறள்.648)

செறிவாக, கோர்வையாக, முறைப்படுத்தி பேசும் நிலை வாய்க்குமானால், இவ்வுலகினர் அனைவரும் வேட்புடன் கேட்பதுடன், அதனைச் செயலாக்கும் செறிவையும் காணமுடியும் என்று திருக்குறள் திண்ணமாகக் கூறுகின்றது.  இன்றைய அவசர உலகில் அனைத்துத் துறையிலும் பொருளார்ந்த கேட்டார்ப் பிணிக்கும் சொல்வன்மையே உடனடித் தேவையாக உள்ளதை உணரலாம்.  எனவே இயலாதது என்றும் எதுவுமில்லை.  சிறந்த நா நலத்தை உடைமையாக்கி நல்ல உறவுகள், நட்பு வட்டம், சமுதாய ஆக்கங்கள், தொழில்வழி மேன்மைகள், உலகியல் உன்னதங்கள் என்ற அனைத்திலும் ஆக்கம் பெறுவோம். 