மாண்புமிகு ஆசிரியர்கள் -5
முகில்

அந்த பொம்மைகள் உற்சாகமாகப் பேசுகின்றன. கதைகள் சொல்கின்றன. அதுவும் பழங்குடிகளின் மொழியிலேயே! மரங்கள் சூழ்ந்த அந்த ரம்மியமான பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் பழங்குடி குழந்தைகள், வனத்தை மறந்து கதை விவரிக்கும் உலகினுள் இறங்கி உற்சாகமாக வலம் வருகின்றனர். கற்றல் எவ்வளவு அழகானது என்று அவர்களது ஆழ்மனத்தில் பதிகிறது. அவர்களுக்கு பாடங்கள் கசப்பதே இல்லை. ஏனென்றால் மலைத்தேனையும்விட இனிமையான ஒருவர் அவர்களுக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக, ஒளிவிளக்காக, அன்பின் உருவமாகக் கிடைத்திருக்கிறார். அவர் தான் குர்ஷித் ஷேக்.

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் வரங்கான் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை வனக்காவலர். எனவே குர்ஷித்துக்குச் சிறு வயது முதலே காடுகள் பரிச்சயமாக இருந்தன. பத்து வயதில் தாயை இழந்தவர். சகோதரர்களின் பாசத்துடன் வளர்ந்தவர். அரசுப்பள்ளிகளில் அவரது கற்றல் விரிந்தது. அந்த ‘ஜில்லா பரிஷாத்’ பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த விதம், குர்ஷித்தின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார் குர்ஷித். படித்து முடித்ததும் ஏதாவது வேலை கிடைத்தால்தான் குடும்பத்தின் வறுமை நிலையிலிருந்து மீள முடியும் என்ற சூழல். DEd., படித்தவர்களுக்கு உடனே ஆசிரியர் பணி கிடைக்கிறதென அறிந்துகொண்டார். உடனே கல்லூரியில் இருந்து விலகி, DEd., படிப்பில் இணைந்தார். அப்போது அவரது தந்தை சொன்ன வார்த்தைகள், ‘எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அதை முழு மனத்துடன் செய்ய வேண்டும்!’

குர்ஷித்துக்குச் சிறுவயது முதலே வரைவதில் ஆர்வம் இருந்தது. ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பில் நிறைய வரைய வேண்டிய வேலைகள் இருக்குமல்லவா. உற்சாகமாக இயங்கினார் குர்ஷித். இதுதான் தன் பாதை, பயணம் என்று திடமாக முடிவெடுத்தார். ஓர் ஆசியராக மாணவர்கள் முன்பு சென்று நிற்கப் போகும் அந்த அழகான நாளுக்காகக் காத்திருந்தார்.

முதலில் கட்சிரோலி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் சில நாள்கள் பணியாற்ற வாய்ப்பு அமைந்தது. பின்பு அதே மாவட்டத்தில் ஜில்லா பரிஷாத் பள்ளி ஒன்றில் தன் ஆசிரியர் பணியைத் தொடங்கினார் குர்ஷித் (1996). அது மாடியோ-கோண்ட் பழங்குடி மக்களுக்காக அமைக்கப்பட்ட பள்ளி. முதல் பணியே மிகவும் சவால் நிறைந்தது. அந்தப் பள்ளிக்குச் செல்ல சாலைகள் கிடையாது. மின்சாரமற்ற வனம். பள்ளிக்கூடம் இருந்தும் அந்த மக்கள் கல்வியிலிருந்து விலகியே இருந்தார்கள். அறியாமையின் இருள். வெளிச்சமாக வந்து சேர்ந்தார் குர்ஷித்.

பழங்குடிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவதில் இருந்தே சவால் ஆரம்பமானது. ஆண் குழந்தைகள் எல்லாம் வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள். பெண் குழந்தைகளுக்கு வெளி உலகமே தெரியாது. அவர்களது சமூகத்துக்குள் அந்நியர் ஒருவர் நுழைவது அத்தனை எளிதானதல்ல. தங்கள் கலாசாரத்திலும் சடங்குகளிலும் மிகவும் உறுதியானவர்கள். அவர்கள் பேசும் மொழி தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. மராத்தியும் ஹிந்தியும் மட்டுமே அறிந்த குர்ஷித், அந்த மக்களைச் சென்று சந்தித்தார். ஆரம்ப நாள்கள் அச்சமூட்டக் கூடியவையாகவே இருந்தன. ‘அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டால் கொன்று போட்டு விடுவார்கள்’ என்று குர்ஷித்தின் தந்தை தன் வனக்காவல் அனுபவத்தில் எச்சரித்திருந்தார்.

எல்லாவற்றையும் மீறி, குர்ஷித் அவர்களுள் ஒருவராக மாறுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தார். சில மைல்கள் காடுகளில் நடந்து, காட்டாற்றைக் கடந்து, சேற்றிலும் சகதியிலும் புரண்டு எழுந்து தினமும் ஒருவன் இங்கே நமக்காக வருகிறானே என்று மாடியோ-கோண்ட் பழங்குடியினர், குர்ஷித்தின் வார்த்தைகளுக்குச் சற்றே செவி கொடுத்தனர். அதற்காகவே, அந்த மக்களின் மொழியை அவர் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அவர்களது கலாசார விழாக்களில் கலந்து கொண்டு ஆடினார், பாடினார். குழந்தைகளிடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டார். அவர்கள் மூலமாக பெற்றோரின் நம்பிக்கையைச் சம்பாதித்தார். அவர்களைக் கல்விக்கான பாதையில் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

உயிர் எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதில் தொடங்கி அடிப்படைச் சுகாதாரத்தைக் கற்றுக் கொடுப்பது வரை பணிகள் படமெடுத்து நின்றன. இன்முகத்துடன் சவால்களைச் சந்தித்தார் குர்ஷித். அங்கே ஏழு ஆண்டுகள் பணியில் அந்தப் பழங்குடிக் குழந்தைகள் பலரும் கற்றலின் ருசிக்கு அடிமையாகி இருந்தனர். குறிப்பாகப் பெண் குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வரத் தொடங்கியிருந்தனர். கல்வி அங்கே வேர்பிடித்துவிட்டதால் விருட்சமாக வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் பணி இட மாறுதலை ஏற்றுக்கொண்டு அஹேரி என்ற இடத்துக்கு நகர்ந்தார். அடுத்து வேறு சில பணியிட மாறுதல்கள். இடையில் BEd., பின்பு MEd., படிப்புகளையும் முடித்தார் குர்ஷித்.

அவர் பணியாற்றியவை எல்லாமே பழங்குடியினக் குழந்தைகளுக்கான பள்ளிகள்தாம். இப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருப்பது அசரல்லி என்ற மிகவும் பின்தங்கிய பகுதி. மகாராஷ்டிரா – தெலுங்கானா எல்லையிலிருக்கும், தெலுங்கு பேசும் பழங்குடிகள் நிறைந்த ஊர். அவர்கள் மொழியையும் கற்றுக் கொள்வோமே என்று ஆர்வத்துடன் களமிறங்கினார். அவர் பணியில் சேரும்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 43. இப்போது 211. மூன்று ஆசிரியர்கள் ஏழாக உயர்ந்திருக்கிறார்கள். பள்ளியில் கல்வியின் தரமும் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வோர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும்போதும் எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டியதாக இருக்கும். குர்ஷித் அதற்குச் சலித்துக் கொள்வதே இல்லை. கூடுதலாகச் சில நூறு குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட நினைத்த வாய்ப்பாகக் கருதி அர்ப்பணிப்புடன் உழைத்தார். உழைத்துக் கொண்டிருக்கிறார்.

2013-ம் ஆண்டில் மகாராஷ்டிர அரசு, ‘மாடல் ஸ்கூல் ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தியது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கும் திட்டம். ஆனால், அது பெரும்பாலும் வெற்றி பெறவில்லை. மாணவர்களின் பற்றாக்குறை, தேர்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை என்று பல காரணங்கள். ஆனால், குர்ஷித் பணியாற்றிய கட்சிரோலி பழங்குடிப் பள்ளியில் அந்தத் திட்டம் வெற்றி பெற்றது. ஆங்கிலத்தைக் கண்டு மிரளாமல், தனியார் பள்ளி மாணவர்களைப் போல பழங்குடி மாணவர்களும் அசத்தலாகக் கல்வி பயின்றனர். ஸிங்னௌர் பள்ளியில் குர்ஷித்திடம் பயின்ற பழங்குடி மாணவி ஒருத்தி, அவரது வழிகாட்டலில் மருத்துவப் படிப்புக்குள் நுழைந்தது பெரும் சாதனை.

குர்ஷித் ஆசிரியராகப் பணிபுரிந்த இடங்களில், அவரது முயற்சியாலும், அந்த பழங்குடி மக்களிடையே அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வாலும் இப்போது மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. மின்சாரம், சாலை வசதிகள், பேருந்து போக்குவரத்து போன்றவை கிடைத்திருக்கின்றன. அந்த மக்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் உண்டாகியிருக்கின்றன. தொலைக்காட்சி அறிமுகமாகியிருக்கிறது. அவர்களது உடைகளில் நவீனம் புகுந்திருக்கிறது. அவர்களது சிந்தனையிலும்.

பொம்மலாட்டங்கள் வழியாகப் பாடங்கள் நடத்துவது, செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவது, கலைகளில் ஆர்வத்தைத் தூண்டுவது, குறும்படங்கள் எடுத்து சமூகக் கருத்துகளை விதைப்பது, பாலியல் கல்வி மூலம் விழிப்புணர்வை உருவாக்குவது, விருந்தினர்களை வரவழைத்து பேசச் செய்வது, மாணவர்கள் தொலைதூர நகரங்களில் மேற்கொண்டு படிக்க ஏற்பாடு செய்வது, அவர்களுக்கு ஹாஸ்டல் வசதி செய்தி தருவது, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்து அவர்களும் கல்வியின் பாதையில் சிகரத்தை அடைய வழி செய்வது, போட்டித் தேர்வுகளில் பங்குபெறச் செய்வது, பணிக்கு ஏற்பாடு செய்வது என்று குர்ஷித், பழங்குடி மக்களின் நல்மேய்ப்பராகத் திகழ்கிறார்.

கோவிட் காலம். போன் இல்லா மனிதர்கள். ஆன்லைன் வகுப்பெல்லாம் சாத்தியம் கிடையாது. பெரும்பாலும் வெளி உலகத் தொடர்பு இன்றி இருந்த பிரதேசத்தில் வாழ்ந்த குர்ஷித், தினமும் தன் மாணவர்களைத் தேடிச் சென்றார். தன்னிடமிருந்த லேப்டாப், ப்ரொஜெக்டர் மூலமாக வீடியோக்களை ஒளிபரப்பினார். நாக்பூர் வானொலியும் பாடங்களை ஒலிபரப்பியது. தொலைவுகளில் அமர்ந்தபடி வனம் அதிரக் குரல் எழுப்பி பாடம் படித்தார்கள். பெருந்தொற்றுக் காலம் மாணவர்களின் கற்றலைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார் குர்ஷித்.

அவர் பணிபுரிந்த பிரதேசங்களில் பெரும்பாலானவை நக்சல் போராளிகளின் நிழல் படிந்தவையே. அங்கெல்லாம் எழுதுவதற்கு கரும்பலகை, சிவப்புப் பலகை என்று இரண்டு விதங்களில் மாட்டி வைத்தார். கரும்பலகை பாடங்கள் எழுதுவதற்கு. சிவப்பில் நக்சல்கள் தங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். தேசிய உணர்வை வளர்க்கும் விதத்தில் குர்ஷித் நிகழ்ச்சிகளை நடத்தும்போதெல்லாம் சக ஆசிரியர்கள் எச்சரிப்பது உண்டு. ‘நக்சல்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.’ ஆனால், குர்ஷித் அழுத்தமாகச் சொல்லும் பதில், ‘நக்சல்கள் என்றும் கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. நன்கு படித்த ஒருவன் அவர்களிடம் சென்று சேர்ந்தால் அதையும் அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். ஆனால், என்னிடம் கல்வி கற்றவர்கள் போலீஸாகவும் ராணுவத்திலும் பிற பணிகளிலும் சென்று சேர்ந்திருக்கிறார்களே தவிர, ஒருபோதும் இயக்கங்களில் சேர மாட்டார்கள்.’

அடுத்து தன்னிடம் படிக்கும் மாணவர்களை குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெறச் செய்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க வேண்டும் என்ற கனவுடன் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் குர்ஷித். தனது இருபத்தைந்து ஆண்டு கால பழங்குடி மாணவர்களுடனான அனுபவத்தில் சக ஆசிரியர்களுக்குச் சொல்லும் வார்த்தைகள் இவை.

‘நேர்மறையாகச் சிந்தியுங்கள். கற்பித்தலைக் காதலியுங்கள். இது 10 டூ 5 வேலை அல்ல. இருபத்து நான்கு மணி நேரமும் மாணவர்களுக்காகவே அர்ப்பணிப்புடன் சிந்திக்க வேண்டிய பணி. தேசிய அளவில் சிறந்த ஆசிரியர் பணி விருதுக்காக நான் நான்கு முறை விண்ணப்பித்தேன். 2021-ல்
கிடைத்திருக்கிறது. இந்த விருதை நான் விரும்பியதற்கு ஒரே காரணம், இதன் மூலம் பழங்குடி மக்களின் மீது தேசிய அளவில் வெளிச்சம் விழட்டும் என்பதற்காகத்தான்.’ 