வாழ்வியல் திறன்கள்


முனைவர். திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

உலகில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவ்வண்ணம் இருப்பதற்கு குறியீடுகளாகக் கொண்டிருப்பன, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு போன்றன. ஆனால் உண்மையான மகிழ்ச்சிநிலைக்கு, அடிப்படையாக அமையக்கூடிய ஆரோக்ய உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கொண்டோர் எத்தனை பேர்கள் என்றால், அந்நிலை வருந்தற்குரியதாக உள்ளது. ஏனெனில் சிலர் நடுத்தர வயதினில் பல நோய்களுக்கு ஆட்பட்டு மருந்துகளில் வாழ்வதையும், பலர் வயது முதிர்ந்த நிலையில் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதையும் அறியமுடிகின்றது.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” (குறள்.131) என்ற குறட்தொடரானது, ஓர் அரிய உண்மையை நமக்கு வலியுறுத்துகின்றது. இங்கு வாழ்வியல் ஒழுக்கங்களாக அறிவுறுத்தப்பெறும், இறையொழுக்கம், தூய்மை ஒழுக்கம், நேர ஒழுக்கம், கடமை ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், பணி ஒழுக்கம் என்ற விழுமிய ஒழுக்க வரையறைகளுக்குள், உடலைப் பேணவேண்டிய அவசியமும் உள்ளீடாக உள்ளதை அனைவரும் அறிய வேண்டும்.

மனித வாழ்க்கையின் நோக்கமாக உடலைப் பேணும் அவசியமும் உணர்த்தப்பெறவேண்டும். பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சி என்பது ஏதோ செய்யப்பட வேண்டும் என்றளவில் பயிற்றுவிக்கப்படுவதை அறியமுடிகின்றது. ஏதோ மட்டில்லா ஆர்வமுள்ள ஒரு சில மாணவர்கள் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிக்க முடிகின்றது. பலர் கட்டாயத்திற்காக செய்ய வைக்கப்படுகின்ற சூழலே பெரும்பாலும் உள்ளது. இச்சமனற்ற நிலையால், மெத்தப் படித்தவர்களுக்கும் கூட உடலைப் பேணவேண்டும் என்ற அக்கறையுணர்வு அறவே இல்லாதிருக்கிறது.

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு” (குறள் 503)

ஆன்ற அறிவுடன், நிறையுடையவர்களிடத்தும், ஆராய்ந்து உணர்ந்தால் அறியாமைநிலை இருப்பது புலப்படும் என்பார் திருவள்ளுவர். இன்றைய உலகினில், குறிப்பாக நம் நாட்டில் உடலைப் பேணாது, மருந்தினையே உணவாகக் கொண்டு வாழ்பவர்களின் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது. நம் அண்டை நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலோர்கள் 100 வயது வாழ்கின்றார்கள் என்பதையும் புள்ளியியல் விவரங்கள் தெளிவாக்குகின்றன. நம் நாட்டில் 70 வயது சராசரி என்ற போதும். பலர் உடல் குறைகளோடு வாழ்வதையே தரவுகள் அதிர்வுகளாகத் தருகின்றன. எனவே குறள் சுட்டிடும் அறியாமை உணர்வினைக் களைந்திட, சமுதாய அக்கறையாளர்களும், சான்றோர்களும், அரசும் இயைந்து கூட்டாக உடல்நிலையை அனைவரும் பேணவேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதனை செயல் முறையாக்குவதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. இன்றைய பெருந்தொற்றின் காலத்தில் கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே அதிகம் தாக்கத்திற்குட்பட்டதை அனைவராலும் அறிய முடிந்தது.

அண்மையில் ஒரு சிறந்த மருத்துவர், ஆசிய அளவில் பெயர் பெற்ற சான்றோர், ஒரு நேர்காணலில் மிகவும் அழுத்தமான ஓர் ஆரோக்கியக் குறிப்பினைத் தந்தார். அதாவது, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரமாவது, ஏதேனும் ஒழுங்குக்குட்பட்ட உடற்பயிற்சியினைச் செய்யவேண்டியது அவசியம் என்றார். அதாவது, ஓட்டம், நல்ல நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல். யோகா, நீச்சல், அல்லது, வியர்வை சிந்தும் வண்ணம் பிற விளையாட்டுகள் என்பன அவற்றில் உள்ளடங்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தவமாகச் செய்பவர்கள் மருத்துவரை நாடி வரவேண்டியதிருக்காது என்றும், ஒன்றினையும் செய்யாதவர்கள் மருத்துவரை நாடி வந்தே தீரவேண்டும் என்றும், மிக அழுத்தமான உண்மையை உரக்கச் சொன்னார். மேலும் இப்பொழுதெல்லாம் மிக இளவயதில் பிணிகளுக்கு உட்பட்டு செயலிழக்கும் இளைஞர்களைக் கருத்தில் கொண்டு தாம் உடற்பயிற்சியினை வலியுறத்துவதாகவும் கூறினார்.

திருக்குறளில், “பிணியின்மை” (குறள்.738) என்ற குறட்தொடர் ஒரு நாடு நலமிக நாடாக இருக்க வேண்டும் என்றால் அங்கு மக்கள் ஆரோக்யமாக இருக்கவேண்டும் என்பதனைச் சுட்டுகின்றது. முதலில் பிணியின்மை என்று சொல்லி பின்னர். செல்வம், விளைச்சல், இன்பம். கட்டான பாதுகாப்பு என்று வரிசைப்படுத்திச் சொல்லுகின்றது. இவ்வழி, உடலைப்பேண வேண்டிய கட்டாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஆள்பவருக்கும் உள்ளதை திருவள்ளுவர் உறுதிபடுத்துகின்றார். மேலும் உடலைப் பேணும் அவசியத்தை உணர்ந்தவர்கள்,

  1. எதனையும் நேரவுணர்வோடு செய்யும் பக்குவத்தையும், 2. உணவில் நல்ல கட்டுப்பாட்டுணர்வையும் 3. உணர்வுநிலைகளை சமன்பாட்டில் வைத்திருக்கும் நுட்பத்தையும் 4. கடமைகளைத் துடிப்புடன் ஆற்றவல்ல ஊக்கத்தையும் 5. வயதாகிவிட்டது என்ற உணர்வினில் ஆட்படாத நெஞ்சுரத்தையும் 6. பிறரை எதிர்பார்த்து வாழாத தன்னம்பிக்கை திறத்தையும் 7. மேற்கொண்ட செயலை விடாமுயற்சியோடு நிறைவேற்றும் வல்லாண்மையும் முழமையாகப் பெற்று வாழ்க்கையை இயல்பாக வாழும் பேறுபெற்றவர்களாக வாழ்வார்கள்.

எனவே ‘இனியொரு விதி செய்வோம்!’ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றின்படி, அனைவரும், உடல்நிலையைப் பேணவேண்டிய அவசியத்தை ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்வோம். எதனையும் தொடங்க வேண்டிய பருவம், மாணவப்பருவம், எனவே, தொடக்கப்பள்ளியிலிருந்தே இந்த உடல்பயிற்சி சார்ந்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவனிடத்தும் அரசும், சமுதாய அமைப்புகளும், குறிப்பாகப் பெற்றேர்களும் விதைக்க வேண்டும். வகுப்புத் தேர்ச்சிக்கு உடற்பயிற்சியினைக் கட்டயாமாக்க வேண்டும். ஏனெனில். உடலைப் பேணும் நல்ல மாணவர்கள், சிறிய வயதினில், கெட்ட பழக்கங்களுக்கு அடியமையாகமாட்டார்கள். மேலும், தங்களைத் தங்கள் அளவிலேயே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பண்பட்ட அறிவினைப் பெறுவதும் அவர்களுக்குச் சாத்தியமாகும்.

உடல் நலனில் அக்கறை கொண்ட மாணவ மாண்புகள், எதிர்காலங்களில் எந்தத்துறையினில் முற்பட்டாலும், அவர்களால் அந்தத் துறைகளும் ஆக்கங்கள் பெறுவது உறுதியாகும். ஒரு முன்னேற்ற நாட்டின் அடிப்படையாக, செல்வ நிலை மட்டுமல்லாது, மகிழ்ச்சிக் குறியீடும் (Happy Quotient) உள்ளதை அறிஞர் அறிவர்.