உறவு

பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்

தூங்குமுகத்தவரின் பொதுமைப் பண்புகள் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதுவரை தூங்குமுகத்தவரின் உளப்பாங்கு உள்ளவர்களின் 17 பொதுமைப் பண்புகளைக் கண்டோம். இன்னும் சில குணநலன்களை இந்த இதழில் பார்ப்போம்.

  1. மனக்கலக்கம் இல்லாதவர்

கவலையும் பயமும் கலந்த உணர்வைத்தான் மனக்கலக்கம் (Anxiety) என்பர். இந்த மனக்கலக்கம் ஓர் எதிர்மறைப் பண்பாகும். “மனக்கலக்கம் நாளைய கவலையை இல்லாமலாக்கும் ஒன்றல்ல; மாறாக, அது இன்று நமது வலிமையை இல்லாததாக்கும் ஒன்றாகும்” என்கிறார் சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர். ஆர்தர் ரோச் என்ற ஆசிரியர் ‘‘மனக்கலக்கத்தை வளரவிடுவது பேராபத்து என்கிறார். “மனக்கலக்கம் துளித்துளியாய் விழுந்து சிறிய நீரூற்று போல்தான் நமது மனத்துள் ஓடும். ஆனால் அதை நாம் ஊக்கப்படுத்தும் போது அது பேராறு போல பெருக்கெடுத்து மனதின் மற்ற சிந்தனைகளை வெளியேற்றிவிடும்” என்கிறார் இந்த ஆசிரியர். இவரது கருத்துப்படி மனக்கலக்கத்தின் ஊற்றுக்கண் பயம் ஆகும். கிரேக்க ஞானி பிளேட்டோ “மனிதனின் எந்த ஒரு காரியமும், கலக்கமுற தகுந்ததன்று” என்கிறார். அதேபோன்று, “நமது சக்திக்கு அப்பாற்ப் பட்டவைகள் பற்றி கவலைப்படாமல் இருப்பதே நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி” என எப்பிகிற்றஸ் என்ற மற்றொரு கிரேக்க அறிஞர் கூறுகிறார். இதிலிருந்து பயமும் கவலையும்தான் மனக்கலக்கமாக உருவெடுக்கின்றன என அறிகிறோம். தூங்குமுகத்தவரின் நற்பண்புகளில் ஒன்று இந்த மனக்கலக்கமின்மையாகும்.

எந்த எதிர்மறைப் பண்பாக இருந்தாலும் அது நம்மை உடலளவில், மனத்தளவில், சக்தியற்றவர்களாக ஆக்கிவிடும்.

அதிலும் கவலையும் பயமும் மனக்கலக்கத்தை நம்மில் உருவாக்கி மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். 60 முதல் 80 விழுக்காடு தற்கொலைகள் மனஅழுத்தத்தாலே ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனஅழுத்தம் பற்றிக் குறிப்பிடும் நட்டாலி ஹோல்டுபக் என்பவர் “அது ஓர் அறியாமையின் நிலை; அது அனைத்தையும் அவசர நிலையெனப் பார்க்கிறது. உண்மையில் வாழ்வில் எதுவும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல” என்கிறார். அவர் ஏறக்குறைய கிரேக்க அறிஞர் எப்பிகிற்றஸ் கருத்தை வழிமொழிவதாகப் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கிறோம். அவர் நாம் எதிர்பார்ப்பது போல்தான் பதில் சொல்வார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஏனென்றால் அவரது பதில் சொல்லும் உரிமை நம்மிடம் இல்லை. அதுபோலவே நாம் ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்கிறோம்.

அது கிடைப்பது நமது கையில் இல்லை. இதைத்தான் எப்பிகிற்றஸ் தனது தத்துவமாக வைத்துள்ளார். எனவே நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று நாம் எதிர்பார்ப்பதை நிறைவேற்றாவிட்டால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இருப்பதே ஞானம். அத்தகையோர் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதைத்தான் ஷேக்ஸ்பியர் “நமது எண்ணங்கள் நம்முடையவை; அவற்றின் முடிவுகளோ நம்முடையவையல்ல” என அவரது சோக நாடகம் ஹாம்லட்டில் கூறுகிறார்.

“Our thoughts are ours;

their ends none of our own”

வாழ்க்கையில் மாற்றமுடியாதவைகளை, நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டவைகளை யதார்த்தங்களாக ஏற்று வாழ்பவன்தான் மன நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழமுடியும். தூங்குமுகத்தவர் இத்தகைய உளப்பாங்கு கொண்டவர்களாவர்.

  1. சமூக ஈடுபாடின்மை

தூங்குமுகத்தவர் இயல்பாகவே தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என வாழுகின்றவர்களாக இருப்பார்கள். இதனால் சமூகநீதிக்காக வாதிடுதல், போராடுதல் என்பவை இவரது அகராதியில் இல்லை. உண்மையில் பொதுநலம் பேணுவதால் நமது நலம் காக்கப்படுகிறது. பராசக்தி திரைப்படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பேசுவது போல, “உனக்கேன் (சமூக) அக்கறை, உலகத்தில் ஒருவருக்கும் இல்லாத அக்கறை? எனக் கேட்பீர்கள்! உண்மைதான்; எனது பொதுநலனோடு எனது சுயநலமும் கலந்துள்ளது. ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தண்ணீரைச் சுத்தம் செய்கின்றதே மீன்! அது போன்றதுதான் எனது பொதுநலமும்” என்பார்  அவர். சமூக அக்கறையின்மையால் எப்படி நாம் பாதிக்கப்படுகிறோம் என்பதற்கு ஹிட்லர் ஆட்சி காலத்தில் ஜெர்மனியில் மார்ட்டீன் நீமோலா வாழ்வில் நடந்த நிகழ்வை பலர் மேற்கோளாக அடிக்கோடிட்டுக் கூறுவர்.

“முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளை பிடிக்க வந்தார்கள். நான் கண்டுகொள்ளவில்லை. காரணம் நான் ஒரு சோசலிஸ்டு அல்ல. அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதிகளை கைது செய்ய வந்தனர். அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. காரணம் நான் தொழிற்சங்க உறுப்பினரல்ல; அடுத்து அவர்கள் (ஹிட்லரின் இராணுவத்தினர்) யூதர்களைப் பிடிக்க வந்தனர். இப்போதும் நான் எதுவும் பேசவில்லை; காரணம் நான் யூதனல்ல. இறுதியாக அவர்கள் என்னைப் பிடிக்க வந்தார்கள்; இப்போது எனக்காகப் பேச யாரும் முன்வரவில்லை.” தூங்கு முகத்தவரின் இத்தகைய சமூக அக்கறையின்ைம இறுதியில் அவர்களுக்கே எமனாக இருக்கலாம்.

  1. கடும் முயற்சியின்மை

“முடியும் வரை முயற்சி செய்;

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்ததை முடிக்கும் வரை”

மேற்சொல்லப்பட்ட வரிகள் நாம் வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதை குறிப்பாக எடுத்த காரியத்தை முடிக்கும் வரை, நமது இலட்சியக் கனவு நிறைவேறும் வரை தொடர் முயற்சி தேவை என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. காரணம் முயன்றால் முடியாதது இல்லை என்பர். வாழ்வில் சாதனை படைத்தோர் யாவரும் கடும் முயற்சியால்தான் தங்கள் இலக்கை அடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவார் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்”

என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்தமாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்கமாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற்கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக் கொள்ளார் என இதற்கு விளக்கம் கூறுவர்.

கருமமே கண்ணாயினார், மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார்: ஒரு படிக்காத இளைஞனை நன்கு படித்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவன் படிப்பறிவற்றவன் என்பதை அவள் அடிக்கடி குத்திக் காட்டினாள். இதனால் வேதனையடைந்த இளைஞன் எப்படியாவது கல்வி பயின்று இந்த அவமானத்தை அகற்ற முடிவு செய்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

ஒரு குருவிடம் சீடனாக சேர்ந்து 3 ஆண்டுகள் கல்வி கற்க ஆரம்பித்தான். ஒரு நாள் குரு தன்னுடைய மனைவியை அழைத்து அன்றிலிருந்து அவன் உண்ணும் உணவில் ஒரு ஸ்பூன் வேப்பெண்ணெய்யையும் சேர்த்துக் கொடுக்கச் சொன்னார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கணவனுக்கு கீழ்ப்படிந்து நாள்தோறும் அவனது உணவில் ஒரு ஸ்பூன் வேப்பெண்ணெய்யை கலந்து கொடுக்க ஆரம்பித்தாள். சுமார் 3 மாதம் பரிமாறிய பின் ஒருநாள், சீடன் குருவின் மனைவியை நோக்கி “உணவில் வேப்பெண்ணெய் வாடை இருக்கிறதே” எனக் கூறினான். குருவின் மனைவி இதை குருவிடம் கூறினாள். குரு சீடனை அழைத்து, ‘‘உனது பயிற்சி முடிந்துவிட்டது! நீ வீட்டுக்குச் செல்லலாம்” என்றார். குருவின் மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. குரு பின்னர் தன் மனைவியிடம் விளக்கினார். “3 வருடம், 3 மாதமாக அவனது கவனம் முழுவதும் கற்றுக்கொள்வதிலேயே இருந்ததால் அவனுக்கு வேப்பெண்ணெய்யைவிட அதிக சுவை கற்றுக்கொள்வதில் இருந்ததால் அவனால் வேப்ப எண்ணெய்யின் கசப்பை உணரமுடியவில்லை. எல்லாவற்றையும் கற்றுத்தேர்ந்தபின் கல்வி மேலுள்ள, கற்பதில் உள்ள ஆர்வம் தணிந்ததும், அவனுக்குக் கசப்புணர்வு தெரிய ஆரம்பித்தது. அதனால் அவனும் முறையிட்டான்” என்றார். கருமமே கண்ணாயினாருக்கு இப்படித்தான் இருக்கும்.

“நோகாது உண்பவர் கல்வியை நோற்பார்”

தூங்குமுகத்தவர் சோம்பேறிகள் என்பதாலும், எதிலும் ெபரிய நாட்டம் கொள்ளாதவர் என்பதாலும் கடும் முயற்சி ெசய்து கற்பது மட்டுமல்ல, எதையும் அடையவும் முயற்சியும் செய்யமாட்டார்கள். வேலையில் இருந்தால், தனது பதவி உயர்வுக்குக்கூட பெருமுயற்சி மேற்ெகாள்ளமாட்டார்கள். தானாக வந்தால் வரட்டும் என வாளாயிருப்பார்கள்.