முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -12

ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

சூலை 6, 1925-ஆம் தேதியன்று புகழ்பெற்ற வார இதழான ‘டைம்’ (TIME) இதழில், முதன்முறையாக ஒரு நடிகரின் படம் அட்டையில் வெளியானது. ஆம், தன் சிந்தனையால், சிறப்பான மற்றும் தனித்துவமான நடிப்பால், உலகைக் கவர்ந்த சார்லி சாப்ளின் தான் அந்த நடிகர்.

சார்லி சாப்ளின் போல நடித்துக் காட்டுவதற்கான போட்டிகள் அடிக்கடி நடந்ததுண்டு. இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு ‘சார்லி சாப்ளின்’ போல நடித்த இருவர் பின்னாளில் உலகில் புகழ்பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர். கார்ட்டூன் படங்கள், மிக்கி மவுஸ், டிஸ்னி உலகம் என்று புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி ஒருவர். தனது நூறு வயது வரை நடிப்பில் கோலோச்சிய நடிகர் பாப் ஹோப் என்பவர் மற்றொருவர். இப்படி கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர் சார்லி சாப்ளின்.

ஒருசமயம் இந்தப் போட்டியில், யாருக்கும் தெரியாமல் உண்மையான சார்லி சாப்ளினே கலந்து கொண்டாராம். ஆனால், அவருக்கு நான்காமிடம் தான் கிடைத்தது. அப்படியென்றால், அவரது நடிப்பை, அந்த அளவுக்கு உள்வாங்கிச் சிலர் நடித்துள்ளார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில், அதாவது 1910 முதல் 1925-ஆம் ஆண்டுகளில், வாரத்துக்கு பத்தாயிரம் டாலர்கள் மற்றும் வருடத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியம் பெறுபவராகத் திகழ்ந்தார் சார்லி சாப்ளின். தனது இருபத்து ஆறு வயதில் உலகிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகராகத் திகழ்ந்தார் என்கிறது அவரது வரலாறு.

1931-ஆம் ஆண்டில் திரைப்படங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, உலகமெல்லாம் பயணித்தார் சார்லி சாப்ளின். செல்லுமிடமெல்லாம் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு வரவேற்கின்றார்கள். அவர் மீது அவ்வளவு ஈர்ப்பு. உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம், ஜப்பான் சென்றுள்ளார் சார்லி சாப்ளின்.

1931-ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி ஜப்பான் பிரதமர் இனுகாப் சுயோஷி உள்நாட்டுத் தேசிய வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாள் சார்லி சாப்ளினுக்கு வரவேற்பு அளிக்க பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் சார்லி சாப்ளினைக் கொன்றுவிட்டு, அமெரிக்காவுடன் ஒரு போரைத் தொடங்கவும் சிலர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் நிலைமை வேறு மாதிரி ஆகிவிட்டது.

இப்படிப் பல புதிரான மற்றும் புதுமையான வாழ்க்கைப் பாதையைக் கொண்டு, இன்றும்கூட சிரிக்க, சிந்திக்க என்றால் ‘சார்லி சாப்ளின்’ படங்கள் ஒரு முக்கிய இடத்தில் இருக்கின்றன என்பதே சிறப்பானதாகும்.

இளமையும், வறுமையும்

1889-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி ஹன்னா சாப்ளின் மற்றும் சார்லஸ் சாப்ளின் சீனியர் என்பவர்களின் மகனாகப் பிறந்தார் சார்லி சாப்ளின். இவரது தந்தை ஒரு பாடகர், தாய் ஒரு நாடக நடிகையாக இருந்தார். மூன்று குழந்தைகள் பிறந்ததும், தந்தை சாப்ளின் வீட்டைப் பிரிந்து ெசன்றுவிட்டார். குடும்பம் வறுமைக்குள் தள்ளப்பட்டது. பிள்ளைகள் படிப்புக்கும், உணவுக்கும் கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காத ஹன்னா, தன் பிள்ளைகளை அரசு காப்பகத்தில் சேர்த்துவிட்டார்.

பெற்றோர் இல்லாத, வறுமையில் உழலும் பிள்ளைகளுக்கான அந்த இல்லமே சார்லி சாப்ளினுக்குப் புகலிடமாக இருந்தது. மத்திய இலண்டனில் அமைந்த ஏழைகளுக்கான பள்ளி அது. லாம்பெத் ஒர்க்ஹவுஸ் (Lambeth Workhouse) என்ற அந்த இடத்தில் தன் ஏழு வயதில் சேர்க்கப்பட்டார். “வாழ்க்கையில், எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற நிலைமை வரக்கூடாது” என்று பிற்காலத்தில் சார்லி சாப்ளின் தெரிவித்தார்.

இப்படித் தன் குழந்தைகளைக் காப்பாற்ற இயலாமல் போனதே என்ற மன உளைச்சலில் சார்லி சாப்ளினின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவரானார். மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனவே தனது பதினாலு வயதில் படிப்பை எல்லாம் நிறுத்திவிட்டு நடிப்பில் ஈடுபாடு காட்டினார்.

சார்லி சாப்ளினின் நடிப்புக்கு தூண்டுதலாக அமைந்தவர் அவரது தாயார் ஹன்னா தான். சார்லி சாப்ளின் குழந்தையாக இருந்தபோது, அவரது தாயார் ஜன்னலில் அமர்ந்து கொண்டு வழிப்போக்கர்களைப் போல நடித்துக் காட்டுவாராம். ‘‘என் அம்மாவின் நடிப்பைப் பார்த்ததன் மூலம் கைகளாலும், முகத்தாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களை எப்படிக் கவனிப்பது மற்றும் படிப்பது என்று கற்றுக்கொண்டேன்’’ என்று கூறுகின்றார்.

தனது வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட போது, பல சமயம் தன்னுடைய தாய் தன்னை நடிப்பில் ஊக்கமூட்டியதை நினைவுகூறுகின்றார். பள்ளியில் நாடகங்களில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று முதலில் ஊக்கமளித்தவரும் சார்லி சாப்ளினின் தாய்தான்.

இளம் வயதில் மேடை நகைச்சுவையாளர்களைக் கண்டது, அவர்களோடு பழகியது அவருக்கு ஊக்கமாக அமைந்தது. கிறிஸ்துமஸ், கேரல் போன்ற நிகழ்வுகளில் கோமாளி வேஷம் போட்டவர்களையும் கண்டு இரசித்து, அவர்களது நடிப்பை உள்வாங்கியிருக்கின்றார். சைமன் லூயிஸ் நிறுவனம் தனது பயிற்சிக்களம் என்று கூறினார் சார்லி சாப்ளின்.

சார்லி சாப்ளினுக்கு ஒன்பது வயது நடந்த போது, அவரிடம் ஒரு தனிப்பட்ட நடிப்புத் திறமை உள்ளது என்பதை தாய் ஹன்னா கண்டுகொண்டார். அதைத் தன் மகனுக்கும் அடிக்கடிச் சொன்னார். மகனை வளர்க்க வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்ற உணர்வில் பிரிந்து சென்ற தன் கணவனிடம், அதாவது சார்லி சாப்ளினின் தந்தையிடம் மகனை அனுப்பினார்.

1899 மற்றும் 1900 ஆண்டுகளில், தந்தை சீனியர் சாப்ளின் உடன் பல இசை அரங்குகளில் பங்குபெற்றார் சார்லி சாப்ளின். பத்து வயதிலேயே கடுமையாக உழைத்தார். அனைத்தையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார். அவருக்கு நடனம் வரவில்லை; ஆனால், நடிப்பு பிறரை மகிழ்வூட்டியது என்பதை அங்கே கண்டு கொண்டார்.

பதினான்கு வயதில் வெஸ்ட் எண்ட் என்ற இடத்திலிருந்த ‘ஹாரி ஆர்தர் செயின்ட்ஸ்பரி’ என்ற நாடக நிறுவனத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார் சார்லி சாப்ளின். ஒரு செய்தியாளனாக முதல் பாத்திரத்தில் நடித்த சாப்ளினின் திறமையை மேலாளர் கண்டு கொண்டார். இந்த நடிப்புப் பலராலும், பலமுறை பாராட்டப்பட்டது. இதுேவ அவரது முதல் நடிப்பு, இதனால் பெற்ற வெற்றி அவரது வளர்ச்சிக்கான தொடக்கமாக அமைந்தது.

தொடர்ந்து சார்லஸ் ப்ரோக் மன் என்பவர் தயாரிப்பில் உருவான ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்தக் குழுவினருடன் மூன்று நாடுகளுக்குச் சென்று நடிப்பை வெளிக்காட்டினார். சார்லி சாப்ளினின் நடிப்பு பலராலும் விரும்பிப் பாராட்டப்பட்டது.

தன் சகோதரர் சிட்னியுடன் சேர்ந்து பல புதிய நாடகக் குழுக்களைத் தொடர்பு கொண்டார். இச்சூழலில் தனிப்பட்ட ஒரு சிரிப்பு நடிகனாகத் தன்னை வெளிப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார். அவைகள் தோல்வியில் முடிந்தன.

சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி தனது சிறந்த நடிப்பால் ‘ப்ரெட் கர்னோ’ என்ற புகழ்பெற்ற நபரின் நகைச்சுவை நாடகக் கம்பெனியில் வேலையில் சேர்ந்து வரவேற்பைப் பெற்றிருந்தார். தன் தம்பி சார்லி சாப்ளினையும் இந்தக் கம்பெனியில் சேர்த்துவிட்டு வளர்க்க விரும்பினார்.

ஆனால், முதலில் சார்லி சாப்ளினைப் பார்த்த ப்ரெட் கர்னோ “உன் தம்பி ஒல்லியாகவும், எரிச்சல் தரும் தோற்றமுள்ளவனாகவும், வெளிரியவனாகவும் உள்ளான்” என்று ரொம்பவே யோசித்தார். மேலும், நடிக்குமிடத்தில் வெட்கப்படுகின்றார் என்றும் புகார் சொன்னார். ஆயினும் அண்ணன் சிட்னியின் அன்பு அழுத்தத்தால், தொடர்ந்து சில வாய்ப்புகள் தந்த போது சார்லி சாப்ளினின் திறமையைப் புரிந்துகொண்டு வாய்ப்புத் தந்தார்.

கர்னோ தனது புதிய நாடகப் பயணத்தில் சார்லி சாப்ளினுக்கு குடிகாரர் வேஷம் தந்தார். சார்லி சாப்ளின் தனக்குத் தரப்பட்ட வேஷத்தில் சிறப்பாக நடித்தார். இந்த நாடகக் குழு வடஅமெரிக்கா முழுவதும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பயணித்தது. இக்காலக்கட்டத்தில் தன் முழுத்திறமையை வெளிப்படுத்தி சார்லி சாப்ளின் ஒரு சிறந்த நடிகராக முத்திரை பெற்றார். மீண்டும் இவர்கள் இங்கிலாந்து திரும்பினர்.

சில காலம் வாய்ப்புகள் இல்லை. எனவே, கவலையடைந்தார். ஆனால், தொடர்ந்து ‘நியூயார்க் மோஷன் பிக்சர்’ என்ற நிறுவனத்தால் அமெரிக்கா அழைக்கப்பட்டார். ஆறு மாதம் அங்கே நடிகராக இருந்தார். பின்பு 1913-ஆம் ஆண்டு ஒரு வாரத்துக்கு 150 டாலர்கள் சம்பளத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்த கீஸ்ேடான் ஸ்டுடியோவில் வேலையில் சேர்ந்தார்.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு மாவட்டம் ‘ஹாலிவுட்’. திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள் தயாரிக்கும் ஒரு புகழ்பெற்ற பகுதி. ‘பாலிவுட்’ என்று நாம் மும்பையை அழைக்கின்றோம். ‘கோலிவுட்’ என்று நம் கோடம்பாக்கத்தை அழைக்கின்றோம். ஹைதராபாத்தில் உள்ள செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ‘ராம்போஜி பில்ம் சிட்டி’ போன்ற ஒரு பிரம்மாண்டமான நகரம் அல்லது பகுதி ‘ஹாலிவுட்’. உலகப் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளுக்கு, இசைச் சக்கரவர்த்திகளுக்கு, இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அது ஒரு சொர்க்க பூமி.

தன் திறமையால் மெல்ல முன்னேறி ‘ஹாலிவுட்’ நோக்கிச் சென்றிருந்தார் சார்லி சாப்ளின். 24-வயது கொண்ட அவரை முதலில் நடிக்க வைக்கத் தயங்கினார் கீஸ்டோன் ஸ்டுடியோ முதலாளி மேக்சென்னட். ‘மேக்கிங் எ லிவ்விங்’ என்ற முதல் படத்தில் நடித்தார். எடுபடவில்லை. அடுத்த காமெடி படம் என்று அமைந்த ‘கிட் ஆட்டோ ரேஸ் அட் வெனிஸ்’ அவரை உலக நகைச்சுவைக் கலைஞன் ஆக்கியது.

சிரிப்பு நடிகர் சாப்ளின்

திடீரென்று ஒருநாள் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி வருமாறு அழைத்தார் மேக்சென்னட். என்ன நடிப்பு? என்ன பாத்திரம்? எதுவும் தெரியாது சார்லி சாப்ளினுக்கு. ஆனால், அவர் தன் மனதில் சில எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு ஒரு வித்தியாசமான உடையில் நடிக்கும் இடத்துக்குக் கிளம்பிச் சென்றார்.

ஒருவேளை சார்லி சாப்ளின் தன் மனதில் இப்படியொரு வேடத்தை அல்லது தோற்றத்தை நெடுநாளாகக் கொண்டிருந்தாரோ அல்லது அவரது நல்ல நடிப்பை வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்போ என்று அந்த நாள், அந்த நடிப்பு அமைந்துவிட்டது.

அவரே அந்த நாளில் தன்னைப் பற்றி எழுதுகின்றார். “எல்லாமே முரண்பாடாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தொள தொளவென்று ஒரு பேண்டை அணிந்து கொண்டேன். ஒரு இறுக்கமான கோட், சிறிய தொப்பி மற்றும் பெரிய காலணிகளைப் போட்டுக் கொண்டேன். எனது மீசையைச் சிறிதாக்க முயற்சித்தேன். அது ரொம்பவே சிறிதாகிவிட்டது. சரி, அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்ன வேஷத்தில் நடிக்கப் போகிறோம்? என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த உடைகளை அணிந்துகொண்டு என்னைப் பார்த்த போது, அது ஒரு புதிய நபராக, தோற்றமாக என்னைக் காட்டியது. அந்த உடைகளை உடுத்திய நொடியில், உடைகள் மற்றும் ஒப்பனை என்னை ஒரு ‘சார்லி சாப்ளினாக’ உணர வைத்தது. நான் அந்த நொடியில் ஒரு புதிய நடிகனாகப் பிறந்ததாக உணர்ந்தேன்” என்று எழுதுகின்றார்.

இப்படி ஒப்பனை செய்து கொண்டு நடிக்கும் இடத்துக்குச் சென்றார். அங்கே முதன்முதலாகத் தன் மனம் சொன்னபடி நடித்தார். இயக்குநர் படப்பிடிப்பு முடிந்ததும், கோபப்பட்டார். இது என்ன நடிப்பு? இதை எப்படி வெளியிடுவது? என்று ெசால்லி வருத்தப்பட்டார். ஆனால், ேவறு வழியின்றி அப்படத்தை வெளியிட்டார். “கிட் ஆட்டோ ரேஸ் அட் வெனிஸ்” (Kid Auto Race at Venice) என்ற அந்தப் படம் 1914-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

1914-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி ஊமைப்படமாக, அதாவது நடிப்பை மட்டுமே கொண்ட மெளனப்படமாக வெளியானது இத்திரைப்படம். 6-நிமிடங்கள், 22-நொடிகள் ஓடிய இத்திரைப்படம் ‘சார்லி சாப்ளின்’ என்ற மாபெரும் கதாபாத்திரத்தை உலகிற்குக் காட்டியது. இயக்குநர் படம் ஓடுமா? என்று பயந்தார். படம் ஓஹோவென்று ஓடியது. சார்லி சாப்ளினை நடிக்கச் சொல்லிப் படம் எடுங்கள் என்று ரசிகர்கள் வேண்டினார்கள். புகழ்பெற்ற ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை சார்லி சாப்ளின் தனக்கே இப்படத்தில் நடித்ததன் மூலம் உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு நடிப்பில் அமெரிக்க நாட்டளவில் முத்திரை பதித்த சார்லி சாப்ளின் உலகளவில் புகழ்பெற்றார்.

அதே ஆண்டு 1914, மே மாதம் 4-ஆம் தேதி வெளியான ‘கேட் இன் தி ரெயின்’ என்ற படத்தை இயக்கினார் சார்லி சாப்ளின். இப்படம் ெவற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வாரம் ஒரு ஊமைப்படம் என்று ஆர்வத்தோடு களமிறங்கினார் சார்லி சாப்ளின். நடிப்பும், புகழும் அதிகரித்துக் கொண்டே செல்ல அவரது பல திரைப்படங்கள் உலகமெல்லாம் புகழ்பெற ஆரம்பித்தன. 1914-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சிக்காகோவைச் சார்ந்த ‘எஸ்ஸனே’ என்ற திரைப்பட நிறுவனம் 10,000 –- டாலர் வாரத்துக்குத் தருவதாகக் கூறி சார்லி சாப்ளினுக்கு வாய்ப்புத் தந்தது. அச்சமயம் தனக்கு 1000 – டாலர் வாரத்துக்குத் தருமாறு சென்னட்டிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு இதைவிடப் பத்து மடங்கும், சுதந்திரமும் தர எஸ்ஸனே நிறுவனம் தயாராக இருந்தது. அங்கே வேலையில் சேர்ந்தார். எட்னா பர்வியன்ஸ் என்ற சிறந்த நடிகையுடன் 35 படங்களில் 1917 வரை நடித்தார். இக்காலக்கட்டத்தில் படங்களில் நடிக்க அதிக நாட்களையும் அதிக நேர்த்தியையும் எடுத்துக் கொண்டார், சார்லி சாப்ளின்.

1915-ஆம் ஆண்டுகளில் சாப்ளின் ஒரு பேசுபொருளாக மாறினார். கடைகளில் அவர் சார்ந்த, உபயோகிக்கும் மாதிரியான பொருட்கள் குவிந்தன. அவரைப் பற்றிய பாடல்கள், கட்டுரைகள் பல எழுதப்பட்டன. ஒரு வருடத்துக்கு ஏழு இலட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியம் பெறுகின்றவராகிப் புகழ்பெற்றார்.

ஈஸி ஸ்ட்ரீட், தி க்யூர், தி இமிக்ரண்ட், தி அட்வென்ச்சர் என்று பல வெற்றிப் படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கேட்க நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், இவையனைத்தும் ஊமைப்படங்கள் மற்றும் அதிகபட்சம் முப்பது நிமிடத்தில் முடிந்துவிடக்கூடிய படங்கள். அந்தக் காலத்தில் திரைத்துைறயின் வளர்ச்சி அப்படித்தான் இருந்தது.

‘தி கிட்’ (The Kid) என்ற படம் தனது வாழ்க்கை ஆரம்பத்தின் சோகக் கதையையும், ஒரு அனாதைச் சிறுவன் வாழ்வில் படும் துன்பங்களையும், அதைச் சமுதாயத்தில் சிலர் தவறாகப் பயன்படுத்துவதையும் மையமாக வைத்து எடுத்தார். ஆனால், வெளியிட அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதால், சார்லி சாப்ளினுக்குத் திறமை போய்விட்டது போல என்றெல்லாம் பேசினார்கள். எதையும் அவர் கண்டுெகாள்ளவில்லை. படம் 1921-இல் வெளிவந்தது. பெரும் வெற்றி தந்தது.

இப்படத்தில் நடித்த நான்கு வயதுச் சிறுவன் ஜாக்கிகூகனை ஒரு நாடகத்தில் கண்டுபிடித்தார். இவனது நடிப்பு புகழ்பெற்று அவனும் சிறந்த குழந்தை நடிகனாக வளர்ந்தான். ஆனால், அவனது சம்பாத்தியத்தை அவனது பெற்றோர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்தனர். இதனால், குழந்தைகள் உழைப்பு ஊதியத்துக்குப் பாதுகாப்புத் தந்து அமெரிக்காவில் பின்னாளில் சட்டமே இயற்றப்பட்டது. அதற்கு இந்த ஜாக்கிகூகன் தான் காரணமானார்.

1925-ஆம் ஆண்டில் ‘தி கோல்டு ரஷ்’ (‘The Gold Rush’) என்ற படத்தை சார்லி சாப்ளின் வெளியிட்டார். ஒரு இடத்தில் தங்கம் கிடைக்கிறது, வேலை கிடைக்கும், தங்கம் கூடக் கிடைக்கும் என்று பலர் அங்கே முட்டி மோதும் காட்சி. சார்லி சாப்ளின் அப்படத்தில் ஏழைகள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்று சிறப்பாக எடுத்திருந்தார். அப்படத்தின் மூலம் பணம் கொட்டியது. இந்தப் படத்தின் மூலம் சார்லி சாப்ளினின் சிந்தனைகள் ‘கம்யூனிஸச் சிந்தனைகள்’ என்று உணரப்பட்டது. அவர் அந்தச் சிந்தனையோடு தான் படங்களை எடுத்தார்.

இதற்கிடையில் பேசும் படங்கள் வந்துவிட்டன. ஆனால், “நான் பேசும் படங்களை எடுக்கமாட்டேன். எல்லா மக்களும் புரிந்துகொள்ளும் ஊமைப் படங்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும்” என்று சார்லி சாப்ளின் பிடிவாதமாக இருந்தார். அவ்வளவு தான் இனி சார்லி சாப்ளின் தொலைந்தார் என்று கூடப் பல பத்திரிகைகள் எழுதின.

1915-ஆம் ஆண்டு வெளியான ‘தி டிராம்ப்’ உலகப் புகழ்பெற்றதைச் சுட்டிக்காட்டினார் சார்லி சாப்ளின். ஒரு தாயையும், மகனையும் காப்பாற்றும் வண்ணம் அமைந்த இருபத்து ஆறு நிமிட காமெடிப் படம் இந்தப் படம். இப்படம் மொழியே தெரியாத எல்லாரையும் ஈர்த்ததை விவரித்தார் சாப்ளின். அவர் கருத்தை ஆதரித்து உலகமெங்கும் இருந்து அவருக்கு, அதாவது ஊமைப் படத்துக்கு ஆதரவாகக் கடிதங்கள் வந்து குவிந்தன. தன் ரசிகர்களை நம்பிக் களத்தில் இறங்கினார், சாப்ளின்.

‘சிட்டி லைட்ஸ்’ (City Lights) என்ற படத்தை 1931-இல் வெளியிட்டார். ஒரு பார்வையில்லாத பெண்மணி படும் பாடுகளை மையமாக வைத்த இரண்டு மணிநேரப் படம். தான் சந்தித்த ஒரு கண் தெரியாத பூ விற்கும் பெண்மணியை மனதில் வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தைப் பார்த்த பலரும் ‘பேசும் படங்கள் வந்துவிட்ட போது, ஒரு பேசாத படத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்த சாதனை சார்லி சாப்ளினால் மட்டுமே சாத்தியம்’ என்று பேசினார்கள். பேசாத இப்படம், அதிகம் பேசப்பட்ட படமானது. பார்க்காத பெண்மணியின் கதை பலரும் பார்த்திட்ட காவியமாயிற்று.

இதற்கிடையில் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும், அமெரிக்கக் குடியுரிமை பெறாத சார்லி சாப்ளின் மீது ஒரு சிலர் கோபத்தை வெளிப்படுத்தினர். தொழில் போட்டிகள், சார்லி சாப்ளினின் வாழ்க்கைப் பிரச்சனைகள் அவருக்கு பெரும் தலைவலியாக அவ்வப்போது வந்து சென்றது.

பிரச்சினைகளோடு சாப்ளின்

ஒரு சிறந்த நடிகர், நன்கு சம்பாதிப்பவர் என்ற முறையில் அவர் மீதும், அவர் பணத்தின் மீதும் ஆசைப்பட்ட பெண்கள் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்தினர். அவரும் வீழ்ந்தார். திருமண வாழ்வு என்பது அவருக்குத் தீராத சோகங்களை அறுபது வயது வரை தந்து கொண்டேயிருந்தது. பல முறை ஏமாற்றங்களை அடைந்தார். தான் சம்பாதித்த பணத்தில் பல மடங்கை இதுபோன்ற வழக்குகளில் வாழ்க்கைச் சன்மானத் தொகையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்குப் பலமுறை தள்ளப்பட்டார். ஆனாலும், இவற்றையும் கடந்து தொடர்ந்து தன் கலையில் ஆர்வம் செலுத்தியதால் அவருக்கு வருமானப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

தனது கடைசிப் பதினெட்டு ஆண்டுகளில் தான் நிம்மதியான ஒரு வாழ்வைப் பெற்றார். இறக்கும் போதும் தன் மனைவி பெயரில் 800 கோடி அளவில் சொத்துக்களை விட்டுச் சென்றார் இந்த நடிப்பு நாயகன்.

இவரது சிந்தனை, படங்களில் சொல்லும் கருத்துகள் எல்லாம் சமூகம் சார்ந்ததாக இருந்தது. இயற்கையிலேயே தன் அன்பைப் பிறருக்குத் தரும் குணம் உள்ளவராகவே திகழ்ந்தார். திரைப்படம் நடித்துப் புகழ்பெற ஆரம்பித்த போதே மனநலம் பாதிக்கப்பட்டவராகி விட்டார், இவரது தாயார். அவரைப் பல ஆண்டுகள் அவர் இறக்கும் வரை மிக வசதியான பங்களாவில் வைத்துக் கவனித்துக் கொண்டார். ஆனால், இறுதிவரை அந்தத் தாயால் சார்லி சாப்ளினின் வளர்ச்சியைக் கேட்டு, ரசிக்க முடியவில்லை. காரணம், அவர் நினைவின்றி இருந்தார். தனக்கு உதவிய பலரும் ஓய்வுபெற்ற பின்பும், அவர்களைத் தன் உதவியுடன் இறுதி வரை கவனிக்க ஏற்பாடு செய்தார்.

அக்காலத்தில் ஹிட்லரின் கொடுமைகள் உச்சகட்டத்தில் இருந்தன. இதனை மையமாக வைத்து “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தை எடுத்தார். ஹிட்லர், சார்லி சாப்ளினின் பரம ரசிகர். சார்லி சாப்ளின் பிறந்த நான்கு நாட்கள் கழித்துப் பிறந்தவர் ஹிட்லர். இப்படி ஒரே ஆண்டில் பிறந்த இருவரும் இரு துருவம் என்று உலகம் பேசியது. சார்லி சாப்ளின் தன் நடிப்பால் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர். ஹிட்லரோ, தன் அதிகாரத்தால் பல இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். ஹிட்லர், சார்லி சாப்ளின் மீது கொண்ட ஈர்ப்பால் தான் சிறிய மீசையை வைத்துக் கொண்டார் என்றும் கூறுகின்றார்கள்.

ஹிட்லர் பற்றி எடுத்த இந்தப் படம் ஒரு பேசும் படம் ஜெர்மனில் தடைசெய்யப்பட்டது. ஆனால், அப்படத்தை இங்கிலாந்தும், அமெரிக்காவும் வெற்றிப்படம் ஆக்கின.

அமெரிக்காவின் குடியுரிமை பெற விருப்பம் காட்டாததாலும், கம்யூனிசத் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுவதாலும் சார்லி சாப்ளினை அமெரிக்கா வெளியேற்றியது அல்லது வெளியேறும் நிலைக்குத் தள்ளியது தனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து வெளியேறினார். அமெரிக்காவின் அதிகாரப் போர்வை இடித்துரைக்கும் ‘தி இமிக்ரண்ட்’ மற்றும் ‘தி கிங் இன் நியூயார்க்’ என்ற படங்களையும் எடுத்தார். தொடர்ந்து தனது இறுதிக் காலத்திலும் தனது படங்களை மீள்பார்வை செய்து வெளியிட்டும் சம்பாதித்தார். இங்கிலாந்து ராணி புகழ்பெற்ற ‘சர்’ பட்டம் தந்து வாழ்த்தினார்.

மூன்று முறை ஆஸ்கர் விருதையும் பெற்றவர் சார்லி சாப்ளின். கடைசிக் காலத்தில் மீண்டும் இவரை அமெரிக்க நாடு அழைத்துக் கௌரவித்தது. ஒரு மாபெரும் கலைஞன், தன்னைப் போல ஒரு கலைஞனை இனி உலகம் காண இயலாது என்று சொல்லும் அளவுக்கு உழைத்து உயர்ந்தவர் சர். சார்லி சாப்ளின். நமது ஊர் நகைச்சுவை மன்னர் கலைவாணரும் சார்லி சாப்ளினின் வடிவத்தைத் தமிழ்ப் படங்களில் தந்தார். வாழ்க்கை முழுவதும் போராட்டங்களுடன், சாதனைகளுடன் இணைந்து போராடி, சிரித்து, சிந்திக்க வைத்துச் சாதித்த சார்லி சாப்ளின் மாபெரும் கலைஞனாக என்றும் வாழ்கின்றார்.

இன்றும் சார்லி சாப்ளினின் பல படங்கள் முதல்நிலைப் படங்களாகவே தேர்வு செய்யப்படுகின்றன. நூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு கலைஞர் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கதும், பெருமை தருவதும் ஆகும்.

சார்லி சாப்ளின் பற்றி 1200-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 11,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மேலாக, இவரது படங்களில் நடிப்பு மற்றும் பாத்திரங்கள் பல நாடுகளின், பல்வேறு மொழிகளிலான திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடிப்புக் கலை உள்ளவரை சார்லி சாப்ளின், யாரோ ஒருவர் மூலமோ, அழியாத தனது படங்களின் மூலம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்.

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

  • சிரிக்காத ஒரு நாள் வீணான நாள் ஆகும்.
  • கூர்ந்துநோக்கும் (க்ளோசப்) போது வாழ்க்கை ஒரு சோகம். ஆனால் தூரமாக நின்று (லாங் ஷாட்) பார்க்கும் போது வாழ்க்கை ஒரு நகைச்சுவை.
  • ஒரு மனிதனின் உண்மையான குணம் அவனது குடிபோதையில் வெளிப்படும்.
  • மக்கள் உங்களைத் தனியாக விட்டுவிட்டால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
  • இது சில சமயங்களில் இரக்கமற்ற உலகம்; இதைச் சமாளிக்க ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும்.
  • சிரிப்பு ஒரு டானிக், நிவாரணம், ஒரு வலிநீக்கும் மருந்து.
  • தோல்வி முக்கியமற்றது. உங்களை முட்டாளாக்கத் தைரியம் வேண்டும்.
  • ஒரு காமெடி நிகழ்த்த எனக்குத் தேவை ஒரு பூங்கா, ஒரு போலீஸ்காரர், ஒரு அழகிய பெண்.
  • ஆடம்பரத்துடன் பழகுவது என்பது எனக்கு கற்பனை செய்யவே கடினமான ஒன்றாகும்.
  • விரக்தி ஒரு போதைப் பொருள். அது மனதை அலட்சியத்தில் தள்ளுகிறது.
  • நீங்கள் பயப்படாவிட்டால் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். அதற்குத் தேவையானது, தைரியம், கற்பனைத்திறன் மற்றும் கடும் உழைப்பு.
  • நான், ஒரு நாடோடி, ஒரு மனிதன், ஒரு கவிஞன், ஒரு கனவு காண்பவன், ஒரு தனிமை விரும்பி, எப்போதும் ஒரு காதல் மற்றும் சாகச நம்பிக்கை கொண்டவன்.
  • நீங்கள் ஏன் அமெரிக்கக் குடிமகனாகவில்லை என்று என்னைக் கேட்கிறார்கள். எனது தேசியத்தை மாற்றுவதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நான் என்னை இந்த உலகின் குடிமகனாகக் காண்கின்றேன்.
  • இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆம், நமது பிரச்சனைகளும் கூட நிரந்தரம் இல்லை.
  • நாம் அதிகமாக எண்ணுகின்றோம்; ஆனால் குறைவாக உணர்கின்றோம்.
  • ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்துவதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். உலகெங்கிலும் நாம் அமைதியைப் பெறுவோம், போர்களை ஒழிப்போம், மாநாட்டு மேசையில் அனைத்து சர்வதேச வேறுபாடுகளையும் தீர்த்து வைப்போம். அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் நம்மை ஒழிக்கும் முன்பு அவற்றை ஒழிப்போம். ஒரு நவீன உலகைப் படைப்போம்.
  • சரியான தருணத்தில், தவறான செயலைச் செய்வது வாழ்க்கையின் முரண்பாடாக அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.
  • ஒரு படைப்பு, அதன் படைப்பில் உண்மை எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ, அப்படைப்பு அவ்வளவு காலம் வாழும்.
  • ஒரு சோகமான வியாபாரம், வேடிக்கையாக இருப்பது.
  • நீங்கள் கீழே பார்த்தால் வானவில்லைக் காணமுடியாது.
  • நம்மிடமோ அல்லது மற்றவர்களிடமோ வாக்குவாதங்கள், மோதல்கள் அல்லது எந்தவிதமான பிரச்சனைகளுக்கும் நாம் இனிப் பயப்படத் தேவையில்லை. நட்சத்திரங்கள் கூட மோதுகின்றன. மேலும் அவற்றின் மோதலின் மூலம் புதிய உலகங்கள் பிறக்கின்றன. அது தான் வாழ்க்கையிலும் நடக்கிறது.
  • கண்ணாடி என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிக்காது.
  • எனக்கு எப்போதும் மழையில் நடப்பது பிடிக்கும். அதனால் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.
  • உங்கள் இதயம் வலித்தாலும், உடைந்தாலும் சிரியுங்கள்.

உண்மையிலேயே சிரிக்க, நீங்கள் உங்கள் வலியை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும்