வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
நாம் எப்போதுமே கடந்த காலத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது எதிர்காலத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
கடந்த காலத்தை நினைத்து அது அப்படி ஆயிடுச்சு இது இப்படி ஆயிடுச்சு நமது வாழ்நாள் இப்படி எல்லாம் வீணா போச்சு என்று சென்றவைகளைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டே இருக்கின்றோம். அல்லது எதிர்காலம் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் நம் நிலை என்னவாக ஆகும்? எதிர்காலம் சிக்கல் மிகுந்ததாக தெரிகிறதே எதிர்காலத்தில் மகிழ்ச்சிக்கே வழியில்லையா? என்றெல்லாம் எண்ணி கலங்கிக் கொண்டும் இருக்கிறோம்.
நிகழ்காலத்தில் இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நிகழ்காலம் நமக்கு எப்படி அமைந்திருக்கிறது? இந்த நிகழ்காலத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? நிகழ் காலத்தைப் பற்றிய, இந்த நிமிடத்தை பற்றிய சிந்தனை சிறிதாவது நம்மிடத்தில் இருக்கிறதா? என்று யோசித்தால் நிச்சயமாக யாருமே நிகழ்காலத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நிகழ்காலம் என்பது ஒரு மாயை போல ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு மயக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம். நிகழ் காலத்தைப் பற்றிய கவலை அல்லது கவனம் நமக்குச் சிறிதும் இருப்பதில்லை. இது ஒரு மனோபாவம், அப்படியே இருந்து பழகிவிட்டோம். ஆனால், இது ஒரு சிறந்த நிலையா? என்றால் நிச்சயமாக இல்லை.
நம்மில் யாராவது மிக உயர்ந்த நிலையை அடைந்து வெற்றியாளர்களாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக நிகழ்காலத்தில் சிந்தை வைத்து, நிகழ்காலத்தில் வாழ்ந்து, நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்ந்தவர்கள் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நான் வெற்றிகரமாக இல்லை என்று நினைப்பவர்கள், நான் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது என நினைப்பவர்கள் மற்றவர்கள் அப்படி இருக்கிறார்கள், இப்படி இருக்கிறார்கள் நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? என்று எண்ணி தன்னைப் பற்றியே ஒரு ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதைவிட எதிர்காலத்திலும் அல்லது கடந்த காலத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை உறுதியாகச் ெசால்ல முடியும்.
அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து இருந்தால் உறுதியாக அவர்கள் அடைய வேண்டிய வெற்றியை அடைந்து இருப்பார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை. வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. நாமும் எவ்வளவோ விசயங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். கடந்து வந்த பாதையை அனுபவமாக்கிக் கொண்டு நிகழ் காலத்தில் ஒரு புதிய பாதையை அமைத்தால் தான் எதிர்காலம் என்பது ஒளிமிகுந்த பாதையாக நமக்கு முன்னே செல்லும்.
ஒரு அருமையான ஒரு தத்துவார்த்தமான சொற்றொடர் இருக்கிறது அது என்னவென்றால் ‘‘கடந்தகாலம் என்பது உடைந்த பானை; எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை; நிகழ்காலம் என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனி’’
உடைந்த பானையை எப்படி ஒட்ட வைக்க முடியாதோ, எப்படி ஒட்ட வைத்தாலும் அது ஒன்றுக்கும் பயன்படாதோ அதுபோலதான் கடந்த காலமும். அது முடிந்து விட்டது அதைப்பற்றியே எப்போதும் சிந்திப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எதிர்காலம் என்பதும் அப்படித்தான் மதில் மேல் இருக்கின்ற பூனை இப்படியும் தாவலாம், அப்படியும் தாவலாம். இந்தப் பக்கம்தான் தாவும் என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நிகழ் காலம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக நம் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பது. அதை நாம் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம் நிகழ்காலத்தில் சரியான திட்டமிடுதல் மற்றும் விழிப்புணர்வோடு நமது செயல்களை அமைத்துக் கொண்டால் எதிர்காலம் என்பது மிகச் சிறப்பாகவே அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நிகழ்காலம் என்பது யாரும் நமக்காக தந்ததும் இல்லை, தானாக உருவானதும் இல்லை நாமாக உருவாக்கியது தான். நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளும் நாம் கடந்த காலத்தில் செய்த செயல்களின் எச்சம்தான். அப்படியென்றால் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் நாம் செய்யவிருக்கும் செயல்களின் எச்சம்தானே?
‘‘முனிவர்கள், சித்தர்கள் என்பவர்கள் திரிகால ஞானம் உடையவர்களாக இருப்பார்களாம். அதாவது முக்காலத்தையும் அறியத்தக்க ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம் இந்த ஞானம் முனிவர்களுக்கும் சித்தர்களுக்கு மட்டும் அல்ல நல்லறமாக இல்லறத்தை மாற்ற விரும்பும் ஒவ்வொரு இல்லறத் தானுக்கும் தேவை’’ என்கின்றார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
அவர்கள் கூறும் திரிகால ஞானம் என்பது கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை, எதிர்கால விளைவுகள், அதாவது கடந்தகால அனுபவத்தைக் கொண்டு நிகழ்காலத்தைச் சரி செய்து வாழ்ந்தால் எதிர்கால வாழ்வு இன்பமாக இருக்கும் என்பதாகும்.
அவ்வாறான ஒரு பாடத்திட்டத்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்துக் கொடுத்ததோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவற்றை பின்பற்றி வாழ்ந்தும் வருகிறார்கள் என்பது சிறப்பான செய்தியாகும்.
மற்றபடி விதி என்றெல்லாம் ஒன்றுமில்லை அப்படி விதி ஒன்று உண்டு என்றால் அது நாமாக உருவாக்கிக் கொண்டது தான். ‘சோம்பிக் கிடந்தால் விதி உழைப்பு இருந்தால் மதி’ இதைத் தவிர வேறென்ன இருக்கிறது?
இதைத்தான் பட்டுக்கோட்டையார் ‘‘விதியை நம்பி வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும் உழைத்தோம் என்றால் உயரலாம் என்ற விவரம் மண்டையில் ஏறனும்’’ என்று பாடினார்கள்.
நம் மாமுனிவர் திருவள்ளுவரும் ‘‘பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல்’’ நம் வாழ்க்கை பெருமைக்குரியதாக விளங்குவதற்கும் சிறுமை உடைய வாழ்க்கையாக விளங்குவதற்கும் கட்டளைகல்லாக விளங்குவது நம் செயல்கள் தான் என்று உறுதிபடக் கூறுகிறார்.
நேற்றைய வாழ்க்கை நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து இருக்கலாம். அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும். இன்று முதல் சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்வேன் என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு யார் குறுக்கே நிற்க முடியும்? அவ்வாறு ஏன் நம்மால் முடிவெடுக்க முடியவில்லை? அவநம்பிக்கை ஆம்! நம்மைப் பற்றியே நமக்கு நம்பிக்கை இல்லை இதுதான் நம் பலவீனமாக இருக்கிறது. இந்த மனோபாவம் மாற வேண்டும். நம் மனோபாவம் மாறினால் நம் வாழ்க்கையும் மாறிவிடும். நாம் யாரையும் மாற்ற முடியாது, நம்மாலும் எதையும் மாற்ற முடியாது ஆனால் நாம் மாறிவிட்டால் எல்லாம் மாறிவிடும். ‘‘மாற்றம் ஒன்றுதான் மானுடத் தத்துவம்’’ என்பார் கண்ணதாசன்.
சென்றதை எல்லாம் தூக்கி போட்டு விட வேண்டும். சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தால் கவலைதான் மிஞ்சும். கவலை நிகழ்காலத்தை செல்லரித்ததாக ஆக்கிவிடும். எதிர்காலத்தை இருள் காலமாக மாற்றிவிடும். கடந்த காலத்தைப் பற்றியே சிந்திப்பவர்களை மூடர் என்று சாடுகிறார் பாரதியார்.
‘‘சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று வினையாடி இன்புற்றி ருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் அழிந்து போம் திரும்பி வாரா.’’
நமக்கு விழிப்புணர்வு இருக்குமானால், நமக்குள் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நாம் விரும்புவோமானால், இந்த ஒரு பாடல் போதும், நம் வாழ்க்கையைப் புரட்டிப் போட. இந்தப் பாடலுக்கு மேலும் பொருள் விளக்கம் தேவையில்லை. உள்ளங்கை நெல்லிக்கனி போல அமைந்த ஞானப்பாடல்கள் இது.
சென்றதை நினையோம்;
புதுவினை புரிவோம்;
இன்று புதிதாய் பிறந்தோம்!
வரமாய் வாய்த்ததிவ் வாழ்க்கை
வாழ்ந்து பார்ப்போம்! வையம் புகழ!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!