சமூகப் பார்வை – 15
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
காலமும் அனுபவங்களும் நமக்கு நாகரிகத்தைக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக நம் உடலின் புறப்பகுதியை அழகுபடுத்துவதில் வேண்டுமானால் நாம் முன்னேறி யிருக்கலாம். வசீகரத்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால், நம் அகம் அழுக்காகவே இருக்கிறது. வக்கிரகம் நிறைந்ததாகவே உள்ளது என்பதை நாம் சமீபகாலமாக வாசிக்கும் செய்திகள் மூலம் வலியுடன் உணரமுடிந்தது. இன்றைக்குப் பெண் மற்றும் பெண் குழந்தைகள் குறித்தான பேச்சுக்களும், விமர்சனங்களும் கூட எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
கடந்த (டிசம்பர்) மாதத்தில் தமிழகத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே 15 வயது சிறுமி கை, கால், வாய் கட்டப்பட்டுச் சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொன்றவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்து கொடைக்கானலின் கீழ் மலைக்கிராமமான பாச்சலூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாவது வகுப்பு படித்த சிறுமி பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி விவகாரம், தலைநகரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, முதல்வர் கெஜ்ரிவால் போன்றோர் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் தமிழகத்தில் அப்படியொன்றும் அரசியல் தலைவர்கள் ஆர்வம் காட்டிவிடவில்லை. சிறுமிகள் மீதான பாலியல் தொந்தரவுகள் நீடிக்கத்தான் செய்கின்றன.
இழிவுபடுத்துதல்
பெண்கள் மற்றும் சிறுமிகளை இழிவுபடுத்துதல் என்பதனை பொறுப்புள்ளவர்கள் மத்தியிலும் காணமுடிகிறது. உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, இந்தாண்டு ஜனவரியில் ‘போக்சோ’ சட்ட வழக்கில் அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மற்றொரு போக்சோ சட்ட வழக்கிலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கினார். இவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அண்மையில் கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சனை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்சனை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, ‘‘அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுமதிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்” என்றார்.
அதற்குப் பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ரமேஷ் குமார், ‘‘சபாநாயகரைப் பார்த்து பாலியல் பலாத்காரம் குறித்துப் பேசிய ஒரு மோசமான கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் எம்.எல்.ஏ.
சிறுமிகள் நிலை
ஒரு குடும்பம் பெரும் பின்னடைவுகளையும் வருவாய் இழப்புகளையும் எதிர்கொள்ளும் போது, சிறுவர்களை விடச் சிறுமிகளே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுவயதில் திருமணம், குழந்தைத் தொழிலாளராகப் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற அதிக ஆபத்துகளைச் சிறுமிகள் எதிர்கொள்கின்றனர். கொரோனா காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாகவே நடந்தன. ‘‘20-24 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 27 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணமானவர்கள், 15 முதல் 19 வயதுடைய 7.9 சதவிகிதம் பேர் ஏற்கனவே தாய்மார்களாக உள்ளனர்” எனத் தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. குழந்தைத் திருமணம் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பம் போன்றவற்றால் சிறுமிகளுக்கு அதிகப் பாதிப்பு உண்டாகும்.
கல்வி
இந்தியாவில், 10 முதல் 19 வயதுடைய 12 கோடிப் பேரில், கிட்டத்தட்டப் பாதிப் பேர் பெண்கள். பள்ளிச் சேர்க்கை மற்றும் நிறைவு ஆகியவற்றில் சிறுவர் சிறுமிகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே இருக்கும்போது, மேல்நிலைப்பள்ளியை முடிப்பது சிறுமிகளுக்குச் சவாலாகவே உள்ளது என்று “இந்தியாவின் வினையூக்க மாற்றத்திற்கான மையம்” வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘‘தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகரித்து வரும் கடன் மற்றும் வேலை இழப்புகளால், ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் பள்ளிகளை விட்டு விலகியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. குடும்பத்தினரும் தங்களது மகள்கள், கல்வியைத் தொடராமல் இனி வேலைக்குச் செல்ல வேண்டும், வருவாய் ஈட்ட வேண்டும்” என்று விரும்புவதாக, உத்தரப்பிரதேசத்தின் பர்தாதா பர்தாதி கல்விச்சங்கத்தின் (பிபிஇஎஸ்) விரிவான ஆய்வு கூறியுள்ளது.
கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் சானிட்டரி பேட் வாங்குவதில் கூடச் சிறுமிகள் சிரமப்பட்டார்கள் என்கிறது டெல்லியைச் சேர்ந்த ‘‘பிராக்சிஸ் இந்தியா’’ என்ற அமைப்பின் கணக்கெடுப்பு. இதன் ஆய்வில் பங்கேற்ற 290 பேரில் 204 பேர் தங்களால் சானிடரி பேட் பெற முடியவில்லை என்றும், எட்டு பேர் சில நேரங்களில் தான் பெற முடிந்ததாகவும் கூறினர்.
உணவு
‘‘பிராக்சிஸ் இந்தியா’’ அமைப்பு, 2020 மே மாதம் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பதின்பருவ பெண்களை நேர்காணல் கண்டது. இந்த ஆய்வில், ஊரடங்குக்கு முன்பைவிடத் தற்போது 36% குறைவான உணவை அவர்கள் பெறுவதாகத் தெரிவிக்கிறது. இதில் 7% பேருக்கு, சில நாட்களில் உணவே கிடைப்பதில்லை. 70% பேருக்கு சானிட்டரி பேட் கிடைப்பதில்லை, 40% பெண் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் மொபைல் கிடைப்பது சிறுமிகளுக்கும் சிக்கல் உள்ளது.
“சிறுவர்கள் கைப்பேசிகளைப் பெறுகிறார்கள், ஆனால் சிறுமிகளுக்கு உடனே அது ஒருபோதும் கிடைத்துவிடுவதில்லை. அந்த அலைப்பேசியால் அவள் “கெட்டுப்போகக்கூடும்” என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்” என்று, “இந்தியா ஸ்பெண்ட்” கட்டுரை கூறுகிறது.
கொரோனா காலம் மிக மோசமான காலமாகவே கழிந்தது. கொரோனா தொற்றுக் காலத்தில் வளரிளம் பெண்கள் பாலியல் சுரண்டல், துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் மிகவும் பாதிக்கப்படுவதாக, யுனிசெஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆடை காரணமா?
ஒரு பெண்ணோ சிறுமியோ பாலியல் துன்புறுத்தலுக்கு, சீண்டலுக்கு உள்ளானால் அவளது ஆடை குறித்து, மேக்கப் குறித்து விமர்சிக்கும் போக்கு நம்மிடம் இன்றும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வெளியே செல்லும் நேரம், செல்லும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டை வீட்டில் வாழ்ந்த துஷ்யந்த் எனும் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி, 2018ஆம் ஆண்டு, காஷ்மீரில் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட ஆசிபா எனும் 8 வயது சிறுமி, சென்னை அயனாவரம் குடியிருப்பு ஒன்றில் 15 பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது காது கேளாத சிறுமி மற்றும் கடந்த மாதம் தமிழகத்தில் இறந்த இரண்டு சிறுமிகள்… இந்தச் சிறுமிகள் எல்லாம் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். பள்ளிக்குச் சென்ற மாணவிக்குக் கூடப் பாதுகாப்பில்லை என்பதனை உணரமுடிகிறது. எனவே நிகழும் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம், ஆடையாலோ, இடத்தாலோ, நேரத்தாலோ நிகழவில்லை. சிறுமிகளை நாம் பார்க்கும் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. சிறுமிகளின் உடல் பாலியல் பண்டமாகவே பார்க்கப்படுகிறது .
என்ன செய்யலாம்?
குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் பல நன்றாகத் தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. குழந்தையை டியூஷன், பாட்டு, நடனம், கராத்தே போன்ற பயிற்சிகளுக்கு அனுப்புகிறீர்களா? வகுப்புகள் அமைந்துள்ள இடம், அதன் பயிற்சியாளர், அங்குப் பணியாற்றுபவர்கள் என அனைத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, பின்னரே குழந்தையை அங்கு அனுப்பவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது எதிர் பாலினத்தவர் குழந்தையிடம் எந்த எல்லைக்குள் பழக அனுமதிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், ஓர் ஆண் தன்னிடம் என்ன கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை அதனால் அறிந்துகொள்ள முடியும்.
குழந்தைகளைத் தற்காப்பு வகுப்புகளுக்கு அனுப்பலாம். மேலும், சீண்டலுக்கு உட்பட்டால் கத்துவது, கடிப்பது, அடிப்பது போன்ற தற்காப்பு பயிற்சிகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்போதுதான் ஆபத்தான சூழலிலிருந்து வெளிவரும் தைரியம் அவர்களுக்குக் கிடைக்கும். பல குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அச்சத்தினால் வெளியில் சொல்வதில்லை. அதனால் தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளைக் கண்காணிக்க வேண்டும். தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யாரோடு எல்லாம் குழந்தை பழகியது, சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் ஏதாவது நடந்ததா என்பதைப் பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல் தந்தவர்கள் பற்றிக் காவல் துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டால், அதே துன்புறுத்தலை அந்த நபர் தொடரும் அபாயம் இருக்கிறது. வீட்டில் ஆண்குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பெண் குழந்தைகளையும் பெண்ணையும் மதிக்கக் கற்றுக்கொடுங்கள்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களை மட்டுமல்ல, நம் கலாச்சாரம், வாழ்வியல் நெறி போன்றவற்றையும் எதிர்காலத்துக்காகப் பாதுகாக்கிறோம் என்பதனை மறந்து விடக்கூடாது.=
(ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்)