மாண்புமிகு ஆசிரியர்கள் -2
முகில்
கணக்கு பலருக்கும் பிணக்கு. கணக்கில் மட்டும் ஃபெயில் என்று உதட்டைப் பிதுக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். கணக்கு வராததால் பள்ளிக்கே வராமல் படிப்பை நிறுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை இப்போதும் ஏறுவரிசையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த ஆசிரியர் ஸ்மார்ட்டாக ‘கணக்கு போட்டு’ கலக்கிக் கொண்டிருப்பவர். இவரது மாணவர்கள் கணக்கின் மேல் காதல் கொண்டு விரும்பி பள்ளிக்கு வருகிறார்கள். ஓஹோவென தேர்ச்சி ரிசல்ட் தருகிறார்கள். கணக்கினால் இவருக்கு மட்டுமல்ல, இவர் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கே புகழ் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
யாகூப் கொய்யூர் (Yakub Koyyur), கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் எளிய, பெரிய குடும்பத்தில் பிறந்தவர். உடன் பிறந்தோர் 2 சகோதரிகள், 5 சகோதரர்கள் என்று மொத்தம் 7 பேர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பிஎஸ்சி பட்டமும் பெற்றார். பள்ளி ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. யாகூபுக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. ஒரு மாணவனின் வாழ்க்கையில் ஓர் ஆசிரியரின் பங்கு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொண்டார். அதேசமயம் தனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்த்தார். அவர்கள் மட்டும் சரியான முறையில் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் என்னால் இவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியுமா!
யாகூப், மங்களூர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு சேர்ந்தார். இரண்டாவது ரேங்க் உடன் படிப்பை முடித்தார். கர்நாடகாவின் பேலாதாங்டி தாலுகாவில் அமைந்த நடா கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் (1996).
குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்ளும் திறன் பெரியவர்களைவிட அதிகம். ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் முறையைப் பொருத்துதான் குழந்தைகளின் கற்றல் அறிவு மேம்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் ஆசிரியர்களுக்கே பொறுப்பு அதிகம் என்பது யாகூப்பின் திண்ணமான எண்ணம். அவர் தன் மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி செயல்வழிக் கற்றல் முறையில் கற்றுக் கொடுத்தார். மாணவர்கள் அவரது வகுப்பை ஆர்வமாகக் கவனித்தனர். பள்ளியிலும், மாணவர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அதற்கு மேலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். வருடங்கள் நகர்ந்தன.
அரசியல் எங்கே இல்லை. அங்கும் இருந்தது. ஆசிரியர் யாகூப் மீது சில குற்றச்சாட்டுகள். அவர் பணி இடைநீக்கம் செய்யப்படும் அளவுக்குப் பிரச்னைகள் வளர்ந்தன. மன அழுத்தம் நிறைந்த ஓர் இரவில் யாகூப் தன் வீட்டில் கண்ணீர் விட்டு அழுதார். அவரது மனைவி ஜமீலா ஆசுவாசப்படுத்தினார். குழந்தைகளும் ஆறுதல் சொன்னார்கள். ‘எதையும் மனசுல போட்டுக் குழப்பாதீங்க. உங்க வேலையை நீங்க செஞ்சுக்கிட்டே இருங்க’ என்ற அவர்களது வார்த்தைகள் யாகூபுக்கு சற்றே அமைதி தந்தது.
அந்த இரவில் யாகூப் நன்றாக உறங்கினார். அழகான கனவு ஒன்று விரிந்தது. அறுங்கோணங்களும் எண்கோணங்களும் முக்கோணங்களும் காற்றில் மிதந்தன. கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் வகுத்தலும் வகுப்பெங்கும் மினுமினுத்தன. சைன் – காஸ் – டேன் டீட்டாக்களும், அல்ஜீப்ரா ஃபார்முலாக்களும் கரும்பலகையில் நடனமாடின. கணித மாதிரிகள் எல்லாம் அந்த அறையில் பிரமாண்டமாகக் கண் சிமிட்டின. யாகூப் அந்த அறையில் உற்சாகமாக உலவிக் கொண்டிருந்தார். விடிந்தபோது ஏன் அந்தக் கனவு முடிந்து போனது என்று தோன்றியது. அது வெறும் கனவல்ல, தான் நினைவாக்க வேண்டிய அடுத்த செயல்திட்டம் என்று உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பினார் யாகூப்.
‘இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் மட்டும்தான் லேப் இருக்கணுமா என்ன? நம்ம ஸ்கூல்ல ஒரு Maths Lab உருவாக்கலாம்’ என்று யாகூப் தன் சக ஆசிரியர்களிடம் உற்சாகமாகச் சொன்னார்.
‘அருமையான யோசனை’ என்று பலரும் வரவேற்றனர். ‘நீங்க பண்ணுங்க சார்’ என்று நம்பிக்கையும் கொடுத்தனர். அல்லும் பகலும் அதே சிந்தனையுடன் யாகூப் திட்டமிட்டார். தோரயமாகக் கணக்குப் போட்டார் சுமார் நான்கு லட்சம் வரை செலவாகும் என்று தெரிந்தது. மற்றவர்களிடம் சொன்னார். யாரும் அதற்கு மேல் நேர்மறையாக ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?
கொஞ்ச காலம் தன் கனவை ஒத்திப்போட்ட யாகூபுக்கு அடுத்த யோசனை தோன்றியது. அது பழைமையான அரசுப் பள்ளி. அங்கே பயின்றவர்கள் பலரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எனவே முன்னாள் மாணவர்களிடம் உதவி கேட்க முனைந்தார். வாட்சப்பும், ஃபேஸ்புக்கும் அதற்குக் கருவியாக உதவின. செம ஐடியா சார்! பிரமாதமா பண்ணலாம்! எக்ஸலண்ட் சார்! என்று உற்சாக மறுமொழிகள் வந்ததே தவிர, அதுவும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை.
யாகூப் சோர்வடையவில்லை. ஏதோ ஒருவிதத்தில் தன் அணுகுமுறை தவறாக இருக்கிறது என்று யோசித்தார். எப்படித் திட்டமிட்டால் இலக்கை அடைய முடியும் என்று நிதானமாக ஆராய்ந்தார். நான்கு லட்சம் தேவை என்றால் எதற்கு அவ்வளவு தொகை என்று ‘மேத்ஸ் லேப்’ குறித்த செயல் திட்டத்தை விளக்கமாக உருவாக்கினார். அதில் எது எதற்கு எவ்வளவு செலவாகும் என்ற விவரங்களைத் தெளிவாகக் கொடுத்தார். அதனைப் பழைய மாணவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஓரிரு நாள்களிலேயே மூன்றரை லட்சம் சேர்ந்துவிட திக்குமுக்காடிப் போனார் யாகூப்.
அதற்குப் பின் யாகூபுக்குத் தூக்கமே வரவில்லை. உள்ளூர் எம்.எல்.ஏ.வின் நிதிப்பங்களிப்பும் சேர, திட்டமிட்ட அளவு பணம் கைக்கு வந்துவிட்டது. யாகூப், பழைய மாணவரான ஹரிஷ் என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். வரவு செலவு விஷயங்கள் எல்லாம் வெளிப்படையாக நடக்கும்படி பார்த்துக் கொண்டார். அவர்கள் நகரங்களில் அமைந்திருக்கும் CBSE மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்றார்கள். அங்கே அமைக்கப்பட்டுள்ள லேப்களை, மற்ற வசதிகளைப் பார்வையிட்டார்கள். யாகூப், தனியார் பள்ளிகளுக்குச் சென்று அவர்களது அனுமதியுடன் கணித வகுப்புகளை, அவர்கள் பயன்படுத்தும் உத்திகளைக் கவனித்தார். வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களைச் சந்தித்து தனது திட்டத்தைச் சொல்லி ஆலோசனைகள் பெற்றுக் கொண்டார்.
கடைகளுக்குச் சென்றார். கணித மாதிரிகளை விளக்கும் பொருள்களின் விலைகளை விசாரித்தார். எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல். இந்த விஷயங்களுக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? அந்தத் தொகையைக் கட்டடப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று யோசித்தார். ஒரு ரூபாய்கூட வீணாகச் செலவு செய்துவிடக்கூடாது என்பதில் யாகூப் உறுதியாக இருந்தார்.
தன் மனைவி மற்றும் குழந்தைகளின் துணையுடன் வீட்டிலேயே கணித மாதிரிகளை உருவாக்கத் தொடங்கினார். மாதக்கணக்கில் உழைப்பு. தூக்கமில்லா இரவுகள். இன்னொரு பக்கம் கணித சோதனைச் சாலை வேலைகளைத் துரிதப்படுத்தினார். பள்ளியில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடம் ஒன்று புதுப்பொலிவுடன் சரி செய்யப்பட்டது.
நடா அரசு உயர்நிலைப்பள்ளியின் ‘மேத்ஸ் லேப்’ கட்டடம் பொலிவுடன் உருவாகி நின்றது. Maths World என்ற முகப்பு மாணவர்களை ஆசையுடன் வரவேற்றது. ஆரஞ்சு வண்ணச் சுவர்கள். யாகூப் குடும்பத்தினர் கணித மாதிரிகள். ஃபார்முலாக்களை எளிதாகப் புரியும்படி விளக்கும் அட்டைகள். சிறிய வகுப்பு மாணவர்கள் முதல் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும்படியான விஷயங்கள். 52 இன்ச் ஸ்மார்ட் டீவி. அதில் போட்டுக்காட்ட கணிதத்தை எளிதாக விளக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள். இன்னும் பல வசதிகள். கணிதம் மீது கட்டுப்பாடற்ற காதல் வரும்படியாக அந்த லேப் எல்லோரையும் சுண்டி இழுத்தது.
எப்போது கணக்கு வகுப்பு வரும், மேத்ஸ் லேபுக்குச் செல்வோம் என்று ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினர். ‘எங்களுக்கு இன்னிக்கு விளையாட்டு பீரியட் வேண்டாம். மேத்ஸ் லேப் வரலாமா சார்?’ என்று ஆசையுடன் கேட்கத் தொடங்கினர்.
நல்விளைவுகள் நிகழ்ந்தன. எப்போதும் கணக்கில் ஒற்றை இலக்க மதிப்பெண் எடுக்கும் மாணவர்களும் எளிதாகத் தேர்ச்சி பெற்றனர். சிரமப்பட்டு தேர்ச்சி பெறும் மாணவர்கள் எழுபது, எண்பதை அநாயசமாகத் தொட்டனர். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு கணக்கில் சதம் என்பது சாதாரணமாகிப் போனது. அதிக அளவில் தேர்ச்சி கொண்ட பள்ளியாக நடா அரசு உயர்நிலைப்பள்ளி சாதனை படைக்கத் தொடங்கியது. மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர், மாநிலத்தில் சிறந்த ஆசிரியர் விருதுகளை வாங்கிய யாகூபுக்கு, 2021-ம் ஆண்டில் மத்திய அரசின் நல்லாசிரியருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இப்போது கர்நாடகாவின் முன் மாதிரி அரசுப் பள்ளியாக நடா விளங்குகிறது. அரசின் நிதியுதவியும் கிடைத்திருக்கிறது. பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கே கல்விச் சுற்றுலா வந்து மேத்ஸ் லேபைக் கண்டுகளித்துச் செல்கின்றனர். ஆசிரியர் யாகூப், கணிதம் கற்றுக் கொடுக்கும் வீடியோக்களை எல்லாம் தனது வலைத்தளத்தில் (ykoyyur.blogspot.com) ஏற்றி எல்லோருக்கும் பயன்படும்படி கொடுத்திருக்கிறார். கன்னட மொழியில் எல்லா பாடங்களுக்குமான கையேடுகளையும் தயாரித்துக் கொடுக்கிறார். இளம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுத்து உதவுகிறார்.
யாகூப், கொரோனா காலத்தில் பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் உருவாக்கியிருக்கிறார். அடுத்து ஸ்மார்ட் கிளாஸ் ரூம், ஸ்மார்ட் நூலகம் என்று பள்ளிக்கான அவரது லட்சியக் கனவுகள் நீள்கின்றன.
தனது 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியில், சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அனுபவத்தில் யாகூப் சொல்லும் சொற்கள் முக்கியமானவை.
‘Pi என்பதன் மதிப்பு 22/7 என்று எல்லோருக்கும் சொல்லத் தெரியும். ஆனால், அது ஏன் என்று கேட்டால் சில ஆசிரியர்களுக்கேகூட பதில் தெரியாது. ஆனால், எனது பள்ளி மாணவர்கள் அதற்கான விளக்கத்தை எடுத்துக்காட்டுடன் தெளிவாகச் சொல்லுவார்கள். நான் அப்படித்தான் கணிதம் கற்றுக் கொடுக்கிறேன். ஏனென்றால் கணிதம் என்பது வெறும் ஃபார்முலாக்கள் அல்ல. கற்பித்தல் என்பது கரும்பலகை, சாக்பீஸால் மட்டும் நிகழ்வது அல்ல.’