வாழ்வியல் திறன்கள்

உலகில் அனைத்து மனிதர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஒரு பொன்னான நாளாக புத்தாண்டின் முதல் நாள் உள்ளது. கழிந்த ஆண்டில், எத்தனையோ பின்னடைவுகள், தோல்விகள், உறவுச்சிதைவுகள், பிரச்சனைகள் என அனைத்து அதிர்வுகளிலும் சிக்குண்டு பரிதவிக்கும் நிலையில், பிறக்கும் புத்தாண்டிலாவது ஏதேனும் ஆக்கங்கள் கைகூடாதா? என்ற எதிர்பார்ப்புகள் பெரும்பான்மை மக்களிடையே எழுவது இயற்கையாகும். நுணுக்கமான திட்டங்களும், முறைப்படுப்பத்தப்பட்ட முயற்சிகளும், அழுத்தமான தன்னம்பிக்கையும் அமைவுறாத எந்த எதிர்பார்புகளும் முழுமை பெறுவது என்பது அரிதினும் அரிது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் இன்று தங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைவிட, ஏதேனும் அதிசயங்கள் நடந்து தங்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறிடாதா! என்ற பகல் கனவிலேயே காத்திருப்பது கவலை தருவதாக உள்ளது. உயர்ந்த எண்ணங்களை எண்ணுவது ஆக்கமானது, ஆனால் அந்த எண்ணங்களை எண்ணத்தளவிலேயே விட்டுவிடாது, முழு நம்பிக்கையுடன் திட்டங்களாக்கிச் செயல்படுத்துவதே வெற்றிக்கான வழிமுறைகள் என்பதனை நிறைவாக உள்ளத்தளவில் உணர்ந்திட வேண்டும். உதிக்கும் ஒவ்வொரு நாளும் வீணே கழியும் நாளாகிட சற்றும் அனுமதியாத திடவுள்ளத்தோடு எதிர்நோக்க வேண்டும்.

‘‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்’’ (குறள்.484)

மேற்குறித்த குறளானது, ஒரு ஆன்ற செய்தியை நமக்கு நல்குகின்றது. எண்ணங்கள் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் குலைந்துபோவதை விட்டுவிட்டு,

  1. முதலில் செம்மாந்த இலக்குகளை நிறுவுங்கள்.

        Manifest lofty targets in your mindset.

  1. அந்த இலக்குகள் அடையக்கூடியனவே என்று அழுத்தமாக நம்புங்கள்.

        Believe that those targets are achievable.

  1. இலக்குகளை செயல்படுத்துவதற்கான கால எல்லைகளை நிர்ணயுங்கள்.

        Determine Time Limit to achieve those targets

  1. இலக்குகளை அடைவதற்கான களநிலைகளையும் உறுதி செய்யுங்கள்.

        Destine the ideal place to clinch those targets

  1. அடைய வேண்டிய இலக்குகளை நித்தமும் பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

        Ascertain to visualise those targets every day without a slip

  1. இலக்குகளை எய்துவதற்கான முறைப்படுத்தப்பட்ட முயற்சிகளை விடாது பற்றி செய்யுங்கள்.

        Effectuate energised action with all faith

  1. இலக்குகளை எய்துவோம், எய்திவிட்டோம் என்ற திடமான நம்பிக்கையுடன் நாளும்.நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

        Stride your action with pinned hope that you could achieve, and also with profound belief of having achieved.

மேற்குறித்த வழி – வகை முறைகளில், தன்னம்பிக்கை, திட்டமிடல், முயற்சிகள், பற்றுறுதி போன்றன செயல்முறைகளாக்கப்படும்போது, இலக்குகளாக உலகத்தில் எந்த உயரிய ஒன்றினையும் அடைவது இயல்பாகும் என்ற நிறைவான செய்தி உறுதிசெய்யப்படுகின்றது.

‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்’’ (குறள். 666)

என்ற வழி, எண்ணங்களின் ஈடேற்றமானது, உறுதியான மனதிட்பத்தில் மட்டுமே உள்ளது. மேலும், ‘‘வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” (குறள்.661) என்ற அருங்குறளும் எண்ணுபவர்களின் பிற பின்புலங்களைப் பற்றி கூறாது, மனத்தின் உறுதியால் மட்டுமே எண்ணங்களைச் செயல்களாக்க முடியும் என்று நெறிப்படுத்துகின்றது. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனையோ மாணவர்கள், இளைஞர்கள், வாழ்க்கைப்பயணத்தை தொடங்க இருப்பவர்கள், கடமைக்காக காத்திருக்கும் பெற்றோர்கள், வியாபார பெருக்கத்தின் கனவில் இருக்கும் வணிகர்கள் என ஏராளமானோர் உள்ளனர். எனவே பிறக்க இருக்கும் இப்புத்தாண்டில் கனவுகள் நிறைவேறுமா? என்ற ஐயத்தினை அகற்றி, ‘‘அனைத்தும் சாத்தியமே!’’ என்ற எண்ணத் துணிச்சலில் செயல்படவேண்டிய கடமை அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

 எண்ணுவம் என்பது இழுக்கு” (குறள்.467)

என்ற குறளை வாழ்வியலாக்கி, இலக்குகளை அடைவதற்கான பாதைகளில் நேரக்கூடிய துன்பங்களை எல்லாம், துன்பமாகப் பாவிக்காது, இறுதியில் எய்தக்கூடிய விழுமிய பயன்களை பார்வையில் நிறுத்திடவேண்டும். மேலும், அன்றன்று உடைபடாத முழு ஊக்கத்துடன் செயல்படும் நிலையில் எண்ணியன எண்ணியவாறே எய்த முடியும், என்பதுதான் வரலாற்று உண்மை . இடர்களால் அயற்சியுற்று இடையில் விட்டோரை எவரும் எண்ணிக்கூட பார்ப்பதில்லை,

‘‘மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே கதிகள் யாவும் தரும்’’ என்ற மகாகவியின் தன்னம்பிக்கை வரிகளை மந்திரமாக்கி, இலக்குகளை, அன்றன்று காட்சிக்கு உட்படுத்தி, “இன்று புதியதாய்ப் பிறந்தோம்” என்ற வீறு எண்ணமுடன் இயங்குபவர்களுக்கு அனைத்தும் சாத்தியமே!.

முனைவர். திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்