உறவு

பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்

தூங்கு முகத்தவரின் ஆளுமையில் உள்ள பொதுவான குணநலன்களைப் பார்த்து வருகிறோம். சென்ற இதழ் வரை 14 பண்புகளைக் கண்டோம். இந்த இதழில் இன்னும் சில பண்புகளைக் காண்போம்.

  1. இணங்கிப் போகும் தன்மை

தூங்கு முகத்தவர் பிறரோடு இசைவாக, இணக்கமாக வாழ்பவர்கள். பிறரோடு சாதாரணமாக ஒத்துப்போகும் பண்பை உடையவர்கள். ஆனால் இதெல்லாம் அவர்கள் மாறவேண்டும், அவரது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று சொல்லாத வரையில்தான். இவர்களது சொந்த கருத்துக்கோ, நடைமுறை வாழ்க்கைக்கோ எதிராகப் பேசி பாருங்கள். அவ்வளவுதான்! எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிடுவார்கள். எனவே இவர்களது இணங்கிப் போகும் தன்மை நிபந்தனையுடன் கூடியதாகும். இவர்களோடு முரண்படுபவர்கள் இதைக் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, குடும்ப வாழ்வில் இத்தகைய உளப்பாங்கு உடையவர்கள் பற்றி எச்சரிக்கை தேவையாகும். ஏனென்றால், இது ஒருவகை அடிப்படை வாதமாகும். அதாவது எக்காரணம் கொண்டும் தங்களது கருத்தை, கொள்கையை விட்டுவிட இவர்கள் தயாரில்லை. ஒழுக்க ரீதியாக நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களது கருத்து வெறி (Olessession) இவருடன் மோதலை உருவாக்க காரணமாகிவிடும்.

நிகழ்ச்சி

ஒருவரின் ஒரே மகளை ‘நல்ல ஒழுக்கமுள்ள’ ஒரு நபருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். ஆனால் சில மாதங்களில் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று. இந்த கணவர் ஒழுக்க ரீதியாக ‘நல்லவனாக’ இருந்தாலும் “மனைவியை கண்காணிக்க வேண்டும்” என்ற இவனுடைய கருத்தை மாற்றுவதாக இல்லை. இவன் வேலைக்கு வென்ற பிறகு மனைவி யாருக்காவது போன் செய்தாளா என வீட்டு வேலைக்காரி கண்காணிக்க வேண்டும். வேலைக்காரி இல்லாத போது அவர்கள் குடியிருப்புக் காவலாளி கண்காணிக்க வேண்டும். இவள் யாருடனாவது பேசினாளா, வெளியே சென்றாளா என கண்காணிக்க வேண்டும். பிள்ளையின் பெற்றோர் மருமகனிடம் எவ்வளவோ கெஞ்சியும் இவன் தனது கருத்தை மாற்றிட தயாராக இல்லை. இத்தனைக்கும் அவனது குடும்பத்தார், அவனை அறிந்தவர்கள். யாவரும் “அவனைப் போல நல்ல மனிதன் பார்ப்பது அரிது” என்றே சொல்லி வந்தார்கள். இவனது இந்த பிடிவாத குணம் இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. தூங்கு முகத்தவர் கருத்துவெறி பற்றி கவனமுடன் இருக்க வேண்டும்.

  1. குறுகிய கண்ணோட்டம்,
    குறுகிய வட்டம்

அழுமுகத்தவரைப் போன்று தூங்கு முகத்தவரும் அதிகப் பேருடன் சகஜமாக பழகாதவர்கள் என்பதால், அவர்கள் உள்முக சிந்தனையாளர்கள் (introverts) என ஏற்கனவே பார்த்தோம். எனவே இவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வலம் வந்து கொண்டிருப்பார்கள்.

ஆங்கில இலக்கியம் கற்றவர்களுக்கு ஜெயின் ஆஸ்டின் என்ற ஒரு நாவலாசிரியரைத் தெரிந்திருக்கும். இவரது பண்புகளைப் பற்றிப் பேசும் போது, இவரது ‘குறுகிய எல்லை’ 
(limited range) பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறுவார்கள். முதலில் இவர் மொத்தம் 6 நாவல்கள்தான் எழுதியுள்ளார். இவர் திருமணமாகாதவர் என்பதால் குடும்ப வாழ்வு பற்றி நேரடி அனுபவம் இல்லாதவர். இன்னும் இவரது நாவல்களில் பெரிய வன்முறை, பலாத்காரம் என்பது இராது. கூடிப்போனால் ஒரு இளம் பெண் காதலனோடு ஓடிப்போவதுதான் (elopement) ‘வன்முறை’ எனலாம். என்றாலும் இவரது நாவல்கள் மிகவும் பிரபலமானவை. அவரது கருத்துப்படி தனது கருப்பொருளுக்கு ஓரிரு குடும்பங்களே போதும் என்பார். தூங்குமுகத்தவரின் இப்பண்பு சில நேரங்களில் இவர்களது தனித்துவமாகி தனிச் சிறப்புடையதாகவும் இருக்கும்.

  1. தன்னலம் சுயநலம் பேணுபவர்

தூங்கு முகத்தவர் சுயநலவாதிகளாக இருப்பார்கள். ‘என் புருஷன் எனக்குத்தான்’ என்பதுபோல பல காரியங்களில் தனக்கு மட்டுமே உரிமை கோருவது, சொந்தம் கொண்டாடுவது இவர்களது பண்புகளில் ஒன்றாகும். இது இவர்களது அன்பின் முதிர்ச்சியற்றத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். அன்பை வழக்கமாக மூன்றாகப் பிரிப்பார்கள்.

  1. தனதாக்கும் அன்பு (Possessive Love)
  2. உணர்ச்சி சார்ந்த அன்பு (Affective Love)
  3. சுயநலமற்ற அன்பு (Selfless Love)

மேலே கூறப்பட்ட மூன்று வகை அன்பில் தனதாக்கும் அன்பும், உணர்ச்சி சார்ந்த அன்பும் முதிர்ச்சியற்ற அரைவேக்காடு அன்பாகும். இவற்றுள் தூங்குமுகத்தவரின் அன்பு முதல் வகையைச் சார்ந்ததாகும். இது சிறு குழந்தைகளிடம் காணப்படும் துவக்க நிலை அன்பாகும். உதாரணமாக, சிறு குழந்தையானது தனது தாயின்மேல் யாராவது கை வைத்தால் கையை தட்டிவிடுவதைக் காண்கிறோம். குழந்தைகளுடைய கையிலுள்ள தின்பண்டத்தை யாராவது கேட்டால் அது கொடுக்க மறுத்துவிடும். கட்டாயப்படுத்தி பிடுங்கினால் அது சத்தம் போட்டு அழும். உண்மையில் மனைவி தூங்கு முகத்தவராக இருந்தால் கணவனிடம், “இவை எனது பிள்ளைகள்” என்று குழந்தைகளுக்கு சொந்தம் கொண்டாடும் உளப்பாங்கைக் கண்டு கணவன் குழம்பிப் போவதைப் பார்க்க முடியும்.

இரண்டாவது வகை அன்பு, உணர்ச்சியைச் சார்ந்தது. உணர்ச்சி சார்ந்த அன்பும் அதிக நாள் நீடிக்காது. குறிப்பாக இது காதலர்களிடையே உள்ள அன்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் காதல் கானல் நீராகி போகிறதே!

மூன்றாவது வகை அன்புதான், பக்குவப்பட்ட அன்பாகும். இது சுயநலம் தாண்டியதாகும். சுயநல வட்டத்தைத் தாண்டாமல் அன்பு வெளிப்பட முடியாது. அன்பு என்றாலே, அது சுயநலமற்ற தியாகமாகும். அதனால்தான் இழக்காமல் அன்பு செய்ய முடியாது என்பார்கள். தூங்கு முகத்தினர் முதல் வகை அன்பிலிருந்து மூன்றாவது வகை அன்புக்கு பயணிப்பது அவசியமாகிறது.

இந்த அன்பு தியாக அன்பு. பிறருக்காக தன்னையே கையளிக்கும் அன்பு. இது நிபந்தனையற்ற அன்பு. இது நம்மிலே நிறையும் போது யாருக்கு கொடுக்கலாம் எனத் தேடும் அன்பு; எதிர்பார்க்கும் அன்பல்ல, இது நம்மில் இருந்தால் யாரும் என்னை அன்பு செய்யவில்லையே என ஆதங்கப்படமாட்டோம்; முறையிட மாட்டோம். மாறாக பிறரை நான் இன்னும் அதிகமாக அன்பு செய்ய முயலுவோம். இந்த அன்பை அனுபவித்து உணரமுடியுமே தவிர அறிவால் பெற்றுக்கொள்ள முடியாது.

இங்கு ஒரு குழந்தையினுடைய தாயன்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. சிறு பிள்ளை பருவத்தில் (உளவியல்படி முதல் 6 வருடங்கள்) குழந்தை தாயிடமிருந்து இந்த தியாக அன்பை பெற்றிருந்தால், அனுபவித்திருந்தால் அந்த குழந்தை பிறரையும் இவ்வாறு அன்பு செய்யும். தேவையான நிபந்தனையற்ற அன்பை பெறாத பட்சத்தில் அந்த நபரின் ஆளுமையில் இந்த அன்பு இருக்காது. இதனால் இவர்களால் மற்றவர்களை பாரபட்சமில்லாமல், நிபந்தனையற்று அன்பு செய்ய இயலாது. தூங்கு முகத்தவரில் இந்த அன்பு குழந்தைப் பருவத்தில் அவருக்குக் கிடைக்காத நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.