ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

அந்த அறிவியல் அறிஞர், தனது ஆய்வகத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். அறிஞர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு தீவிரமான ஆய்வில் இருந்தார். சரி, அறிஞரின் அறைக்குச் சென்று அமரலாம் என்று அங்கே சென்றார். அங்கே உணவு, பாத்திரத்தில் தயாராக இருந்தது. நண்பருக்கு நல்ல பசி, அறிஞர் சாப்பிட்டு விட்டுத் தான் வேலை செய்கிறார் என்று எண்ணிக்கொண்டு இருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டுச் ெசன்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த அறிவியல் அறிஞருக்குப் பசி எடுத்தது போல இருந்தது. தனது அறைக்குச் சென்றார். உணவு இல்லை, பாத்திரங்களும் கழுவி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. “அடடா, நான் முதலில் சாப்பிட்டதை மறந்துவிட்டு மீண்டும் சாப்பிட வந்துவிட்டேனே” என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டு மீண்டும் ஆய்வகத்தில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இப்படித் தீராத, பசி தெரியாத, உணவையே மறந்து உழைத்த அறிஞர் தான் சர் ஐசக் நியூட்டன். அன்று வழங்கப்பட்ட மதிய உணவைப் பற்றிய கேள்வி வந்த போது தான் பின்பு நியூட்டன் சாப்பிட்டதாக நினைத்ததும், நண்பரின் பசியாற்றியதும் தெரிய வந்தது.

பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டு அறிவியல் வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் பல கண்டுபிடிப்புகளையும், புதுமைகளையும் கொண்டிருந்தது. எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் உலகமெங்கும் தோன்றிச் சாதனைகள் பல புரிந்த நூற்றாண்டுகள் இவை. குறிப்பாக, ஐசக் நியூட்டனின் புகழ் உலகமெங்கும் கொடிகட்டிப் பறந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

இளமையும், கல்வியும்

1642-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதியன்று லின்கோல்ன்ஷையர் என்ற பகுதியில் இருந்த, கிராந்தம் என்ற சிற்றூரில் ஐசக் நியூட்டன் மற்றும் ஹன்னா அய்ஸ்ஹாப் என்ற தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தந்தையின் பெயரே இவருக்கும் வைக்கப்பட்டது. காரணம், இவரது தந்தை நியூட்டன் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்தில் தன் மகன் பிறந்த மகிழ்ச்சி மட்டுமே தாய்க்கு இருந்தது. காரணம், தந்தை உயிருடன் இல்லை, குழந்தையும் மிகவும் எடை குறைந்த குறைப்பிரசவக் குழந்தையாக வலுவின்றிக் காணப்பட்டது.

இந்நிலையில் நியூட்டனுக்கு மூன்று வயது ஆன போது அவரது தாயார், அறுபது வயது நிறைந்த பர்னபாஸ் ஸ்மித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தால் வந்த மாற்றாந்தந்தையை நியூட்டன் சற்றும் ஏற்கவில்லை. குழந்தை மனம் வெறுப்பிலும் சோகத்திலும் ஆழ்ந்தது. எனவே, அவரது தாயார் நியூட்டனைத் தன் தாய், தந்தையரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இளம் வயதிலேயே தாய் மற்றும் தந்தையின் அன்பை முழுவதும் பெறமுடியாத சோகம் நியூட்டனைப் பாதித்தது.

ஆனாலும், நியூட்டனின் தாத்தாவும், பாட்டியும் படித்தவர்கள். ஆதலால் அன்போடு அவரைக் கவனித்தார்கள். அடிப்படைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள், இளம் வயதில் குடும்பச் சூழல் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் நியூட்டன் படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை.

சிறு வயதில் நியூட்டன் மிகவும் உடல் மெலிந்து ஒரு நோஞ்சான் பையன் போலக் காணப்பட்டார், படிப்பதிலும் ஆர்வம் இல்லை என்ற சூழ்நிலைதான் பள்ளி ஆரம்ப நாள்களில் நிகழ்ந்தது.

இந்த நிலையில் சற்றுப் பருமனாக இருந்த ஒருவன் நியூட்டனை அடிப்பதும், கிண்டல் செய்வதுமாக இருந்தான். ஒரு நாள், நியூட்டன் அவனிடம் “இனி, நீ என்னைத் தொட்டால், உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று மிரட்டிய போது அவன், வேகமாகத் தன் காலால் நியூட்டனின் வயிற்றில் மிதித்துவிட்டான். அவ்வளவு தான், நியூட்டன் வேகமாகப் பாய்ந்து அவனைப் பிடித்ததும், அவன் ஓடிப்போய்விட்டான். இந்தச் சம்பவம் நியூட்டனுக்கு இரண்டு முடிவுகளை எடுக்க உதவியதாக அவரது குழந்தைப் பருவம் பற்றிய நூல்களில் தெரிவிக்கின்றார்கள்.

முதலில் தன்னுடைய உடலைப் பேணிக்கொள்ள வேண்டும்; இதன்மூலம் மற்றவர்கள் தன்னை ஏளனம் செய்யவோ, தன்னிடம் வம்பிழுக்கவோ மாட்டார்கள் என்று நியூட்டன் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தினார். இரண்டாவது தன்னைத் தாக்கியவனைப் படிப்பிலும் தோற்கடிக்க வேண்டும் என்று முயன்று படித்ததோடு, அதன்பிறகு பள்ளியில் ெதாடர்ந்து முதலிடம் பெற்றார் என்பதும் ஒரு செய்தியாக உள்ளது.

இன்றும் இங்கிலாந்து தேசத்தில் ‘கிராந்தம்’ என்ற சிற்றூரில், நியூட்டன் படித்த பள்ளியான ‘கிங்ஸ் பள்ளி’யில் ஒரு சட்டத்தில் ‘ஐ.நியூட்டன்’ என்று எழுதப்பட்டு உள்ளதைக் காணலாம். ஆம், புவியீர்ப்பு விசை கண்டுபிடித்து, உலகை ஈர்த்த அறிஞர் நியூட்டன் என்பதே அப்பள்ளிக்குப் பெருமை தானே!

இப்படி இளமைக்காலம் கடந்த போது, அவருக்கு பதினான்கு வயது நடந்த போது அவரது தாயார் மீண்டும் தன் மகனோடு வந்துவிட்டார். தனது இரண்டாம் திருமணம் மூலம் மூன்று குழந்தைகளும் பெற்றிருந்தார். அவரது இரண்டாம் கணவர் இறந்ததால் தனது மூத்த மகனோடு தான் தன் வாழ்வு என்று நியூட்டனும், அவரது சகோதர, சகோதரிகளும் ஒன்றாக வாழ்ந்தனர்.

நிறைய நிலங்கள் இருந்ததால் அவற்றில் விவசாயம் செய்து, தனது பண்ணையை நியூட்டன் நன்கு கவனித்துக் கொள்வார் என்று அவரது தாய் நினைத்தார். ஆனால், நியூட்டன் இந்தக் காலக்கட்டங்களில் எல்லாம் மரத்தடியில் அமர்ந்து வாசிப்பதையும், யோசிப்பதையும் தன் பழக்கமாகக் கொண்டிருந்தார். நியூட்டனின் தாய்க்கு முதலில் இது அதிர்ச்சியாக இருந்தாலும், படிப்பில் அவருக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டு டிரினிட்டி கல்லூரிக்குப் படிக்க அனுப்பினார்.

சிறு வயதில் அறிவியல் ஆர்வம் தென்பட்டதற்கான சில நிகழ்வுகளையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஒரு சமயம் ‘காற்று விசையாலை’ (Wind Mill) ஒன்றைச் செய்து, அதன் மூலம் தானியத்தை அரைக்க முடியும் என்று செய்து காட்டினார். ஓடும் தண்ணீரால் ஏற்படும் ஆற்றலால் இயங்கும் கடிகாரம் செய்து காட்டினார். ‘சூரிய ஒளிக்கதிர் நிழற் கடிகாரம்’ அமைத்துக் காட்டினார். இந்தக் கடிகாரம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது. படங்கள் வரைவது, புத்தகங்களைத் தேடிப் படிப்பது, மலர்கள், இலைகள் சேகரிப்பது, சிறு சிறு இயந்திரங்களை ஆய்வது என்பது அவரது இளமைக் காலப் பழக்கங்கள் ஆக இருந்துள்ளது.

இவ்வாறு, எதையும் ஆராய வேண்டும் என்று துறுதுறுப்பாக இருந்த நியூட்டனை அவரது தாயும், மாமாவும் புரிந்துகொண்டு கல்லூரிக்கு அனுப்பினார்கள்.

புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான டிரினிடி கல்லூரியில் தனது பி.ஏ. படிப்பை 1661 முதல் 1665 வரை பயின்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள், தர்க்கவியல் நெறிமுறைகள் மற்றும் இயற்பியலில் அவர் கவனம் செலுத்தினார். தனது கல்வி ஆர்வத்தைப் பிற அறிஞர்களின் கோட்பாடுகளை அறிவதிலும் செலுத்தினார். 1664-ஆம் ஆண்டில் கணிதத்தின் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. கணிதத்தின் ஒவ்வொரு கோட்பாடு பற்றியும் தெளியவும், ஆய்வு செய்யவும் தொடங்கினார். நியூட்டன் பிறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் கலிலியோ மறைந்திருந்தார்.

அந்த நாட்களில் பாயில், கலிலியோ, கெப்ளர், டெஸ்கார்ட்ஸ், ஹியூஜென்ஸ் போன்ற பல அறிஞர்களின் கோட்பாடுகள் நியூட்டனைக் கவர்ந்தன. 1665-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்ற போது பாரோ என்ற பேராசிரியர் நட்புக் கிடைத்தது. நியூட்டனின் கணித அறிவைக் கண்டு வியந்த பாரோ அவரைக் கணிதத்தில் கவனம் செலுத்துமாறு ஊக்கப்படுத்தினார்.

பிளேக் நோயும், கண்டுபிடிப்புகளும்

1665-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் பிளேக் நோய் பரவி எண்ணற்றவர்கள், நோய்த் தொற்றால் உயிரிழந்தார்கள். எனவே, இப்போது கொரோனா தொற்றுக்கு முழு அடைப்பு செய்து, கல்வி நிறுவனங்களை மூடியது போன்று அப்போதும் பதினெட்டு மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

ஆராய்ச்சி ஆர்வத்தை ஏற்கெனவே தன்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஐசக் நியூட்டன் இந்தக் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். தனது வீட்டிலிருந்து கொண்ேட, பண்ணையின் வயல்வெளிகளிலும், வீட்டிலும் படித்துக் கொண்டே ஆய்வில் ஈடுபட்டார். இந்தக் காலங்கள் அவரது வாழ்வில் பொற்காலங்களாக அமைந்தது.

இவ்வாறு வீட்டில் பொழுதை அறிவியல் கண்ணோட்டத்தோடு பயன்படுத்திக் கொண்டிருந்த போது தான் ஆப்பிள் மரத்தடியில் அவருக்கு ஞானம் உதித்தது. ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் விழுந்த போது அது ஏன் கீழ்நோக்கி நேராக விழவேண்டும்? என்ற கேள்வியைத் தனக்குள்ளும், தான் அங்கே சந்தித்தவர்களிடமும் கேட்டுக் கொண்டேயிருந்தார். மற்றவர்கள் நியூட்டனின் இந்தக் கேள்வியைக் கண்டு அல்லது கேட்டு ‘பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது’ என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால், நியூட்டன் அதை எளிதில் கடந்து செல்லவில்லை. பூமியில் உள்ள ஈர்ப்பு விசை காரணமாகவே இது நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

இந்தப் பேரண்டத்திலுள்ள எல்லாப் பொருட்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. மரத்திலுள்ள ஆப்பிள் பூமியால் ஈர்க்கப்படுகின்றது. ஆப்பிள் பழமும் பூமியைத் தன்வசம் ஈர்க்கின்றது. பூமியின் மீதுள்ள நீர்ப்பரப்பை, சூரியனும் நிலவும் ஈர்ப்பதால் கடலின் ஏற்றமும், கடல் வற்றுதலும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஈர்ப்பாற்றல் என்பதை ஒரு விதியாக ‘புவியீர்ப்பு விசை’ என்று அறிவித்தார். இதற்கான ஈர்ப்பின் மதிப்பையும் விளக்கினார். உலகம் ஒரு மாபெரும் அறிஞனைக் கண்டுகொண்டது.

இந்த ஈர்ப்பு விதியையும் கண்டறிந்த உடனே நியூட்டன் உலகிற்கு அறிவிக்கவில்லை. நியூட்டனின் ஆராய்ச்சி வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால், அவர் எல்லாவற்றையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டு உலகிற்குச் சொல்லத் தாமதப்படுத்தியது புரிகின்றது.

இவ்வாறு தன்னுடைய எல்லாக் கண்டுபிடிப்புகளையுமே உடனே தெரிவிக்காமல் அவற்றை ஆவணப்படுத்துதலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். இதனால் அவரது கண்டுபிடிப்புகள் பிறரால் நியூட்டன் ெவளியிடுவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் விவாதமும், சர்ச்சைகளும் உருவாகின.

‘புவிஈர்ப்பு விசை’ பற்றிய கோட்பாடும்கூட நியூட்டனுக்கு முன் பிறந்த ராபர்ட் ஹுக் என்பவரால் முன்மொழியப்பட்டது. ஹுக் ஈர்ப்பு விசை பற்றிச் சொல்லி ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் நியூட்டன் அதை அறிவித்தார். இதனால் இருவருக்குமிடையே சொற்போர், ஆய்வுப்போர் நிகழ்ந்தது. ஆனால், ஹுக் கண்டறிவதற்கு முன்பே, பல தெளிவான தரவுகள் மற்றும் ஆணித்தரமான ஆய்வுகள் மூலம் நியூட்டன் எழுதியிருந்ததும், கண்டறிந்ததும் நிரூபிக்கப்பட்டது. எனவே, இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நியூட்டனின் திறமைகளைக் காணவும், அவரோடு உரையாடவும் ஹாலி என்ற வானியல் அறிஞர் வந்திருந்தார். அவர் சில நாட்கள் நியூட்டனுடன் தங்கி, உரையாடிய போது நியூட்டனின் பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்து போனார். அவரது தூண்டுதலால் தான் நியூட்டன் தனது ஆய்வு முடிவுகளை, வெகு காலம் கழித்து ‘இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்’ என்று பொருள்படும்
(Principia) ‘பிரின்சிபியா’ என்று கையெழுத்து நூலாக வெளியிட்டார். இந்த நூல்தான் நியூட்டனை உலகிற்கு வெளிப்படுத்தியது.

நியூட்டனின் அடுத்த ஆய்வு ஒளியியல் சார்ந்து வெளியிடப்பட்டது. நியூட்டன் ஏற்கெனவே ஒளிச்சிதறல் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒரு சமயம், ஒரு தொலைநோக்கியின் மூலம் வெகுதொலைவிலுள்ள பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் நியூட்டன். அப்போது உருவான பிம்பங்களின் ஓரத்தில் பல வண்ணங்கள் தோன்றுவதைக் கண்டு அதை ஆய்வு செய்தார்.

சூரிய ஒளியை முப்பட்டைக் கண்ணாடி (PRISM) மூலம் அனுப்பிய போது அவை வானவில்லில் தோன்றும் ஏழு நிறங்களாகத் தோன்றுவதைக் கண்டறிந்தார். இதன் மூலம் வெண்ணிறம் என்பது ஏழு நிறங்களின் கூட்டுக்கலவை என்று கண்டறிந்தார்.

வர்ணங்கள் இல்லாத ஒளி தோன்ற முப்பட்டைக் கண்ணாடிக்குப் பதிலாக குழி ஆடிகள் அமைக்கப்பட்டு ஒளியை ஒற்றைக் கற்றையாக குவிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். இவற்றைத் தனது புகழ்பெற்ற ‘Opticks’ என்ற நூல் மூலம் உலகறியச் செய்தார். இந்தக் கண்டுபிடிப்பும் பின்னாளில் பல்வேறு ஒளியியல் ஆய்வுகளில் தெளிவு பெறுவதற்கு உதவியது.

நியூட்டனின் மூன்றாவது அளப்பரிய சாதனை கணிதத்தில் அவர் கண்டறிந்த கோட்பாடுகள் ஆகும். ஆனால், இங்கும் நியூட்டன் தனது கொள்கைகளைத் தாமதமாக வெளியிட்டதால் அவருக்கும், வில்ஹெம் லீப்னிஸ் என்பவருக்கும் பல ஆண்டுகள் நீதிமன்றம் செல்லும், அளவுக்குப் பிரச்சனைகள் நடைபெற்றது. ‘கால்குலஸ்’ என்ற கணிதப் பகுதியை மேலாய்வு செய்து உலகிற்கு வழங்கியவர் நியூட்டன் என்பது நீண்ட போராட்டத்துக்குப் பின்பு வெளியிடப்பட்டது.

நியூட்டனின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், விதிகளும் உலக அறிவியல் வரலாற்றில் என்றும் போற்றப்படுகின்றது. நியூட்டனின் இயக்கவியல் (Newtonian Mechanics) உலகளாவிய ஈர்ப்பு விசை (Universal Gravitation), கால்குலஸ் (Calculus), நியூட்டனின் இயக்க விதிகள், நியூட்டனின் குளிரூட்டு விதிகள், நியூட்டன் வளையங்கள், நியூட்டனின் திரவம் என்று பல்வேறு அறிவியல் கோட்பாடுகள், பயன்பாடுகள் அவரது புகழைச் சொல்லுகின்றன.

பணியும், வாழ்வும்

நியூட்டனின் திறமையைக் கண்டு அவருக்குக் கணிதப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் லூகாசியன் என்ற கணிதத் துறையில் கணிதப் பேராசிரியராக 1669 முதல் 1702 வரை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அவர் பணிசெய்தார். 1689 முதல் 1690 வரை ஓராண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் கல்வி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினராகவும் பணிசெய்தார்.

கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு ெபறுவதற்கு முன்பு 1699-ஆம் ஆண்டு அவர் நாணயச்சாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கள்ள நாணயங்கள் உருவாவதைத் தடுக்கப் புதிய நாணயங்களை உருவாக்கிக் கொடுத்து, அரசுக்கு உதவி செய்தார்.

அவரது பரந்த அறிவையும், ஆற்றலையும் புரிந்துகொண்டதால், அதை அங்கீகரிக்கும் வண்ணம் 1703-ஆம் ஆண்டு முதல் அவர் வாழ்நாள் இறுதிவரை ராயல் சொசைட்டியின் தலைவராகத் திகழ்ந்தார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற அறிவியல் கழகம் தான் ‘The Royal Society’ என்றழைக்கப்படுகின்றது. இதன் தலைவராக ஏறக்குறைய இருபத்தி ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தார் ஐசக் நியூட்டன். இவரது சேவைக்கு மகுடம் சேர்க்கும் வண்ணம் 1705-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி ஆனி, இவருக்கு ‘சர்’ பட்டம் தந்து கௌரவித்தார்கள். இதன்மூலம் சர். ஐசக் நியூட்டன் என்று அழைக்கப்பட்டார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்த பின்பு இலண்டனில் குடியிருந்த நியூட்டன் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். சிறந்த அறிஞர்களைச் சந்திப்பதையும், புதிய கோட்பாடுகளை வெளியிடுவதிலும் தன் அறிவியல் ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.

1727-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது உடல் ‘வெஸ்ட்மினிஸ்டர் அபே’ என்று ெசால்லக்கூடிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடம் இங்கிலாந்து நாட்டின் அரசர்களை அடக்கம் செய்யும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தன் தேசத்து மகனுக்குப் பெரிய கௌரவத்தை அன்றைய அரசாங்கம் வழங்கியது.

இருபத்து ஐந்து ஆண்டுகள் தி ராயல் அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்த நியூட்டனைக் கௌரவிக்க, 2010-ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானி, தனது விண்வெளிப் பயணத்துடன் நியூட்டனுக்கு ஈர்ப்பு விசைத் தெளிவு தந்த ஆப்பிள் மரத் துண்டு ஒன்றை விண்வெளி மையத்துக்கு எடுத்துச் சென்றார். நியூட்டனின் 350 ஆண்டுகால அறிவியல் நினைவைப் போற்றிட இந்நிகழ்வு நடந்தது.

தனது இறுதி ஆண்டுகளில் நியூட்டன் மிகத்தீவிரமாக ஆல்கெமி (Alchemy) என்று சொல்லக்கூடிய மந்திரக் கல்லைக் கண்டறிய ஆய்வு செய்தார். அதாவது ஒரு உலோகம் அதனைத் தொடும் எல்லாவற்றையும் தங்கமாக்கும் என்று நம்பப்பட்டு, இன்றளவும் தேடப்பட்டு வருகின்றது. இதற்கான பல ஆய்வுகளை நியூட்டன், வேதியியல் துறையிலும் தொடர்ந்தார். ஆனால், அதன் முடிவுகளை அவர் வெளியிடவில்லை.

சமய நம்பிக்கையில் நியூட்டன் ஆழ்ந்து காணப்பட்டார். இவ்வுலகம் அற்புதமாக இயங்குகிறது என்றால், இதனைக் கடவுள் ஒருவர் தான் கட்டுப்படுத்தி இயக்குகின்றார் என்று தனது உரைகளில் அடிக்கடிக் கூறி வந்தார். மதம் சார்ந்த ஆய்வுகளிலும், விவிலிய மாந்தர்களின் வாழ்வு மற்றும் எழுத்துகள் பற்றியும் நிறைய ஆய்வு செய்து சில கட்டுரைகளையும் வெளியிட்டார்.

குழந்தைப் பருவம் தனக்குச் சாதகமாக இல்லையென்றாலும், தனது முயற்சியால், உழைப்பால் வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொண்டார் ஐசக் நியூட்டன். பல்துறை அறிஞராக அவர் திகழ்ந்தார். கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், இறையியலாளர், எழுத்தாளர், இயற்கைத் தத்துவ ஞானி மற்றும் பல காலம் புகழ்பெற்ற ‘அறிவொளி’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

அவரது கடும் உழைப்பால் உருவான ஆய்வுகளின் வெளிப்பாடுகள், மனித சமுதாயத்துக்கு மாபெரும் பரிசுகளாக அமைந்துள்ளன. காலமெல்லாம் போற்றப்படும், நினைவு கூறப்படும் அறிஞர்களில் சர். ஐசக் நியூட்டன் மாமனிதராக என்றும் நிலைத்திருக்கின்றார்.

ஐசக் நியூட்டன் பொன்மொழிகள்

  • நான் அதிகமாக ஆய்வு செய்து அறிந்திருக்கிறேன் என்றால், அது மற்றவர்களின் கண்டுபிடிப்புப் பாதை என்ற வழிகளிலிருந்து தான் சாத்தியமாயிற்று.
  • கடற்கரையில் விளையாடும் சிறுவனைப் போலவும், அழகான கூழாங்கற்களைச் சேகரிப்பவன் போலவும் எனது வாழ்நாளில் விளையாட்டாக என் ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தேன்.
  • சூரியன், கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் இந்த அழகான அமைப்பு, ஒரு அறிவார்ந்த மற்றும் சக்திவாய்ந்த உயிரின் ஆலோசனை மற்றும் ஆதிக்கத்திலிருந்து மட்டுமே தொடர முடியும்.
  • தவறுகள் கலையில் இருப்பதில்லை, அதை உருவாக்கும் கலைஞர்களிடம் தான் இருக்கின்றது.
  • ‘அறிவுக்கூர்மை’ என்பது பொறுமையின் வெளிப்பாடாகும்.
  • பிளேட்டோ எனது நண்பர். அரிஸ்டாட்டில் எனது நண்பர். ஆனால் ‘உண்மை’ எனது சிறந்த நண்பர்.
  • ஒரு மனிதன் பொய்யான விஷயங்களைக் கற்பனை செய்யலாம். ஆனால், அவனால் உண்மையான விஷயங்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். காரணம், விஷயங்கள் பொய்யாக இருந்தால் அவை பற்றிய பயம், அதைப் புரிந்துெகாள்ள வழிகாட்டாது.
  • கண் பார்வையற்ற ஒருவருக்கு நிறங்களைப் பற்றிய சிந்தனை அல்லது பார்வை இல்லாதது போல, ஞானமுள்ள கடவுள் பற்றிய சிந்தனை மற்றும் பார்வை மனித இனத்துக்குக் கடினமானது ஆகும்.
  • ஒரு ஆய்வின் நன்மை மற்றும் வெற்றியைக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, எத்தனை ஆய்வு என்று எண்ணிக்கை பற்றிக் கவலை கொள்ளக்கூடாது.
  • இயற்கையின் எல்லாவற்றைப் பற்றியும் ஆய்வு செய்து முடிப்பது ஒரு தனி மனிதனுக்குக் கடினமான பணியாகும். நம்மால் ஆனவரை ஆய்வு செய்துவிட்டு, மற்றவற்றை நமக்குப் பின்னே வருபவர்களிடம் விட்டுவிடுவது நல்லதாகும்.
  • கடவுள் கண்ணுக்குத் தெரியாமல் உலகை ஆள்கிறார். மேலும் அவரை நேசிக்கவும், வணங்கவும் கட்டளையிட்டுள்ளார். நம் பெற்றோர், நம் எஜமானர்களை மதிக்கவும், நம்மைப் போலவே அண்டை வீட்டாரை நேசிக்கவும், நிதானமாகவும், நீதியாகவும், சமாதானமாகவும் நடந்து கொள்ளவும், மிருகத்தனமான மிருகங்களிடம் கூட இரக்கமுள்ளவர்களாக இருக்கவும் வேண்டும்.
  • தத்துவமயமாக்கலின் சிறந்த மற்றும் பாதுகாப்பான முறை, முதலில் பொருட்களின் பண்புகளை விடாமுயற்சியுடன் ஆராய்வதாகும். பின்பு சோதனைகள் மூலம் அந்தப் பண்புகளை நிரூபிப்பதாகும். பின்பு அவற்றை விளக்குவதற்கான கருதுகோள்களை உருவாக்கிச் சொல்லுவதாகும்.
  • கடவுள் மறுப்பு என்பது அர்த்தமற்றதாகும். நான் சூரியக் குடும்பத்தைப் பார்க்கும் போது, பூமி சூரியனிடமிருந்து சரியான அளவு வெப்பத்தையும், ஒளியையும் பெறுவதற்குச் சரியான தூரத்தில் இருப்பதைக் காண்கிறேன். இது தற்செயலாக நடக்கவில்லை. கடவுளின் ஆதிக்கத்தால் தான் இவ்வளவு அருமையான கட்டமைப்பை இவ்வுலகம் பெற்றுள்ளது.
  • மேலே செல்லும் எதுவும் கீழே வரவேண்டும்,
  • ஒவ்வொரு செயலுக்கும் சமமான ஒரு எதிர்வினை உண்டு.
  • நாம் பல சுவர்களைக் கட்டுகின்றோம். அவற்றை இணைப்பதற்குப் போதுமான பாலங்கள் இல்லை.