வாழ்வியல் திறன்கள்

முனைவர். திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்

உலகில் பிறந்த எவருக்கும் நிறைவான வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற பெருமிதவுணர்வு இயல்பாக இருக்கும். ஆனால், இயல்நிலையில் அனைவரும் நிறைவாக உள்ளனரா? என்ற வினாவினை எழுப்பினால், பலர் பல இன்னல்களில் இருப்பதும், அதன் விளைவுகளால் தங்களின் வரமனைய வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதும் வெளிப்படையாகவுள்ளது. ஊன்றி நோக்கிடின், மனிதப் பிறப்பானது, “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” என்ற நம் ஒளவைப்பாட்டியாரின் அருள்நிலை வாசகத்தால் பிறப்பின் மேன்மையை நன்கறியலாம். மனிதப் படைப்பின் மேன்மை இவ்வாறிருக்க பின்னர் ஏன் மனித குலத்தில் இன்னல், போராட்டம், மாறுபாடுகள், மேல், கீழ் வேறுபாடுகள், பிறழ்வுகள் என்றாகச் சிந்திக்கும் போது, சிக்கல் பிறப்பில் இல்லை.

ஏனெனின், திருவள்ளுவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள் 972) என்ற குறட்தொடரில் மிகத் தெளிவாக அனைவரும் பிறப்பின்வழிச் சமமானவரே என்ற மெய்மையை உறுதிப்படுத்தியிருக்கின்றார். எனவே, அரிய படைப்பான மனிதப் பிறப்பு போற்றற்குரியது. இருப்பினும் வாழ்க்கையில் எதிர்நிலைகளை நேர்கொள்ளும் போது மனிதர்கள் மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலநிலைகள் இன்று உலகளவிலும், குறிப்பாக நம் நாட்டிலும் பெருமளவில் இலங்குவது நல்லோர் இதயங்களை நடுங்க வைப்பதாகவுள்ளது. தற்கொலைக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அந்நிலை அனைத்து வகையிலும் கடியத்தக்கதேயாகும்.

“நோய்நாடி நோய்முதல் நாடி” (குறள் 948) என்ற குறள்படி, எத்துணை சிக்கலாயினும் அதன் மூலகாரணத்தை அறிந்து, அதற்குகந்த வழிமுறைகளைக் கையாளும் போது, அனைத்திற்குமான தீர்வு உள்ளமையை அறியமுடிகின்றது. ஆனால் அதற்குப் பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் மிகவும் இன்றியமையாததாகும். பொறுமை என்பது, வரும்வரை காத்திருப்பது இல்லை; மாறாக,

“பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” எனக் கலித்தொகையும்,

“கொக்குஒக்க சீர்த்த இடத்து” (குறள் 490) என்ற திருக்குறளும், பொறுமை என்பது, உரிய காலத்தில் உடன் செயல்பட வேண்டியதன் அருமைைய உணர்த்துவதை அறியமுடிகின்றது. கவனத்திலிருந்து அகலாத காத்திருப்பே ஒருவருக்குப் பலநூறு ஆக்கங்களைத் தருவது இயல்பு. ஆனால் இன்றைய உலகியலில் உடனே தீர்விற்காக முைனந்து, அவசரத்தில் அரிய உயிரைப் போக்கிக் கொள்பவர்களின் தொகையானது பெருமளவில் இருப்பதை அனைவராலும் அறிய முடிகின்றது. ஒருவர் பொறுமையைக் கைக்கொண்டு செயல்படும் போது,

“அருவினை என்ப உளவோ?” (குறள் 483) என்ற வினாவினை எழுப்புவார் திருவள்ளுவர். ஏனெனின் பொறுமை நிலை என்பது ஓர் அரிய தவநிலை எனலாம். அந்நிலையில், மனம் பண்படுவதால், ஏனோ தானோ என முடிவெடுக்கும் செயற்குறைகள் சற்றும் நிகழாது. மேலும், எது சரியானதோ அதனைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முறைமை நிலைகள் ஏதுவாகும் (A sort of pro-active thinking process would prevail) எனவே மனமானது அறிவுநிலையில் செயல்படும்போது, உணர்ச்சி நிலையில் எடுக்கும் தப்பித முடிவுகளுக்கு இம்மியளவும் இடமின்றி போகும். தற்கொலை இழப்புகள் என்பது எவருக்கோ நிகழ்வதன்று, பெறத்தக்க மனித வளங்களை (Loss of
Precious Human Resources) ஒரு நாடோ! அல்லது உலகமோ! இழப்பதை ஒக்கும். எனவே, தவறுகள் நிகழ்ந்திடினும், குற்ற மனப்பான்மையில் சிக்கிக்கொள்ளும் மனப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

“எற்றென்று இரங்குவ செய்யற்க” (குறள் 656) தெரியாமல் செய்துவிட்டேன் என்று வருந்துமாறு எதனையும் செய்யக்கூடாது; ஒருகால் தவறி செய்திடினும்,

“மற்றன்ன செய்யாமை நன்று” (குறள் 656), உள்ளத்தளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொண்டு, அதே மாதிரியான தவறினை செய்யக்கூடாது என்று நெறிப்படுத்திக்கொண்டு குற்றமற்ற மனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும் நிலையில் மனஇறுக்கங்களோ, மனத்தேக்கங்களோ மனமதில் தங்காது. மேலும், தவறான முடிவுகளுக்குச் செல்லாத அறிவுநிலைச் செயல்பாட்டிற்கு மனமதை உந்திச் செலுத்தும். உந்து சக்தி பெற்ற மனத்தால் மட்டுமே எத்தகையப் பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதிக்கக்கூடிய வல்லாண்மை இயல்பாகியிருக்கும். எனவே, எந்தப் பிரச்சனைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது நிரந்தர தீர்வாகாது என்பதனை மனித மனங்கள் ஆழமாக உணர்ந்துகொண்டால், இந்தப் புவியில் தனக்கென ஒரு பாதையை சமைத்து, அந்தப் பாதையில் அச்சமின்றி பயணிக்கக்கூடிய நெஞ்சுரம் மேலோங்கியிருப்பதை அறியமுடியும்.

அண்மையில், அறுவை சிகிச்சைப் பிரிவில் அரசுப் பணியாற்றும் இளைய மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தபோது வேதனை மனதைச் சுட்டது. தனது தற்கொலைக்கு எவரும் காரணமில்லை என்றும் எவரையும் இதற்காக துன்புறுத்த வேண்டாம் என்றும் இறுதியாக எழுதிய அவரின் வாக்குமூலம் அவரின் மென்மனதை படம்பிடித்துக் காட்டியது. மேலோட்டமாக காரணத்தை அறிந்தபோது, அவர் துணையிடமிருந்து பிரிந்து வாழ்கின்றார் என்பதை அறியமுடிந்தது. காரணம் எதுவாயினும் அவரின் இழப்பு, குடும்பம், நட்புவட்டம், பொதுநிலை, அவரின் எதிர்காலவியல் வளர்ச்சி எல்லாவற்றிற்கும் மேலாக அவரை செறிவுபடுத்திய இந்த நாட்டிற்கு, என்றாக ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் பேரிழப்பாக உள்ளதை அறியமுடிகின்றது. மேலும் பல மாணவச் செல்வங்கள், போட்டித் தேர்வில் தேறவில்லை என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் அனைவரையும் வாட்டும் ஒன்றாக உள்ளது. எனவே தீர்வுகளைத் தேடி அலைந்து துன்புறுவதை விட்டு, மனப்பான்மையை மாற்றிக்கொண்டு, பொறுைம, விடாமுயற்சி, பொதுநலப்பான்மை போன்ற உயர்ந்த செறிவுக்குணங்களோடு திகழ்பவருக்கு தங்களிடமே தீர்வுகளைக் கண்டுகொள்ள முடியும். தன்னை அறிந்தவரை தரணியே வணங்கி நிற்பதும் இயல்பாகும். எனவே,

  1. மனிதப் பிறப்பின் மாண்பினை உய்த்துணர வேண்டும்.
  2. பிரச்சனைகள் அனைவருக்கும் உண்டு என்றும், அதனை நேர்கொள்ள வேண்டும் என்றும் மனதினைப் பழக்க வேண்டும்.
  3. விழிப்புணர்வு சார்ந்த பொறுைம காக்க வேண்டும்.
  4. எந்த நிலையிலும் குற்ற மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
  5. எல்லாவிதப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  6. பொதுநலப்பான்மைகளைப் பெருக்கிக் கொண்டு செயல்படும் மனநிலையை உருவாக்கம் செய்திட வேண்டும்.

7.            தன்னைச் சுற்றி ஒரு சமூகமுள்ளது என்றும், தன்னின் திறன்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கமுடன் வாழ முற்படும்போது, தவறான முடிவுகள் அறவே தவிர்க்கப்படும்.