உறவு
பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தூங்கு முகத்தவரின் பொதுமைப் பண்புகள் பற்றி பார்த்து வருகிறோம். இதுவரை 11 பண்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இன்னும் சில பண்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
12. அமைதியானவர்
நிறைகுடம் ததும்பாது என்பார்கள். இன்று உலக அமைதிக்குலைவுக்குக் காரணம் சில ஆளுமைகளிலுள்ள அமைதிக் குலைவுகளே. உளவியல்படி தனது ஆளுமையிலே அமைதியின்றியிருப்பவர்கள் மற்றவர்களை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். வேறு வார்த்தையில் சொன்னால் தன்னிடம் அமைதிக் குலைவு இருந்தால் இவர்கள் மற்றவர்கள் நிம்மதியைக் கெடுத்து, அதில் திருப்தியடைவார்கள். இன்னும் சொல்வதானால் தான் காயப்பட்டிருந்தால், இந்த நபர்கள் மற்றவர்களைக் காயப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இது குடும்ப உறுப்பினர்களுக்கும், குழு உறுப்பினர்களுக்கும் ஏன் குவலயம் முழுமைக்கும் பொதுவாயுள்ள ஓர் உளவியல் உண்மையாகும்.
உலகிலுள்ள தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களது வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் இது தெளிவாகப் புலப்படும். அது சதாம் ஹூசேன் ஆகட்டும், ஹிட்லர் ஆகட்டும். இவர்கள் யாவரும் தங்களது சிறுவயதில் அல்லது குழந்தைப் பருவத்தில் பேரதிர்ச்சிக்கு (trauma) உட்பட்டவர்களாகக் காண்கின்றோம். ஆனாலும் பாவம் ஓரிடம், பழி ஓரிடம் எனக் காண்பதுதான் கொடூரமானது. ஹிட்லரை அவரது தகப்பன் நாயாகத்தான் நடத்தினாராம். ஆனால் இவர்களைக் காயப்படுத்தியவர்கள் வேறு; இவர்கள் காயப்படுத்துபவர்கள் வேறு.
காயப்பட்டால் நிம்மதி, அமைதி இழந்து பிறரை காயப்படுத்துவது என்பது மனிதர்களிடையே மட்டுமல்ல, விலங்குகளிலேயும் காணப்படுகிறது. சமீபத்தில் நீலகிரியில் பிடிபட்ட மனிதரைக் கொன்ற புலியானது காயப்பட்டிருந்ததை வனத்திலுள்ள அதிகாரிகள் கண்டு வியப்புற்றனர். ஆனால் இவ்வாறு காயப்படுத்தியவர்களை அன்பு செய்து, மன்னித்து நல்ல மனிதர்களாக, மகான்களாக உயர்ந்தவர்களும் உண்டு. ஒரு நபர் தனது சொந்த தகப்பனால் பாலியல் வன்கொடுமைக்கு 18 வருடம் ஆளானார். ஆனால் அவரை இவர் மன்னித்ததனால் இன்று அநேகருக்கு இவர் மன்னிப்பின் வழியை கற்றுக்கொடுக்க முடிகிறது. ஹிட்லரை மன்னித்த யூதர் ஒருவரிடம் இதுபற்றி கேட்ட போது, ஹிட்லரின் பொருட்டு எனது மன அமைதியை நான் இழக்க விரும்பவில்லை என்றாராம்.
13. முடிவு எடுக்க தடுமாறுகிறவர்
தீர்மானம் செய்தல் அல்லது முடிவு எடுத்தல் வாழ்வின் மிக முக்கியமான அம்சமாகும். காரணம் ஒரு மனிதன் எடுக்கும் நல்ல/கெட்ட தீர்மானம் அவனை மட்டுமல்ல அவனது குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை மட்டுமல்ல, அகில உலகத்தையே பாதிக்கும் ஆற்றலுடையது.
தீர்மானம் செய்வதைப் பொருத்தமட்டில் சில நேரங்களில் அதிவிரைவில் தீர்மானம் செய்யும்போது அது பாதகமான விளைவுகளை உருவாக்கும். ஆகவேதான், ‘ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு’ என்பார்கள். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு உலகப் புகழ்ெபற்ற நாடக ஆசிரியர் ேஷக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’ கதாபாத்திரமாகும். இவன் தனது நண்பன் (உண்மையில் இவனது விரோதி) கியாகோ சொல்லை நம்பி அவசரப்பட்டு தன் மனைவி மீது வீண் சந்தேகம் கொண்டு அவளைக் கொன்றுவிடுகிறான். பின்னர்தான் தனது தவறை உணருகிறான். ஆனால், இழந்த உயிரை இவனால் திரும்பப்பெற முடியாது அல்லவா?
அதேபோல்தான், இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக்கொடுத்த அவருடைய சீடன் யூதாசின் கதையுமாகும். இயேசு கைது செய்யப்பட்டதும் இவன் குற்றப்பழி உணர்வால், ‘மாசற்றவரைக் காட்டிக் கொடுத்தேனே’ என்றுகூறி, அவசரப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஒருவேளை இயேசுவை மூன்று முறை மறுதலித்த இன்னொரு சீடர் பேதுருவைப் போல் தனது தவறை உணர்ந்து அவரிடம் திரும்பி வந்திருந்தால், அவர் இவனையும் மன்னித்திருப்பார். ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே, தீர்மானம் செய்வதில் மிக மிகக் கவனமாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
அதேவேளையில், குறிப்பிட்ட நேரத்திலே சரியான தீர்மானம் எடுக்க, அதை விரைந்து எடுக்கத் தவறினால், அதற்குரிய விலையையும் நாம் கொடுக்க வேண்டியிருக்கும். இதை ஷேக்ஸ்பியரின் இன்னொரு நாடகமான ஹேம்லெட் சித்தரித்துக் காட்டுகிறது. தனது விரோதி கிளாடியுஸைக் கொல்ல நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கிறது. அப்போது இவனால் உறுதியான தீர்மானம் எடுக்க முடியாததால் அவனைத் தப்பவிடுகிறான். இதனால் முடிவில் இவனது உயிரை இழக்க நேரிடுகிறது. தனது இலக்கை அடைய முடியாமல் இறந்துவிடுகிறான். எனவே, நாம் முன் மதியோடு தீர்மானங்கள் எடுக்க வேண்டும். தூங்குமுகத்தவர் தீர்மானம் எடுப்பதில் தடுமாறுவதால் பல சமயங்களில் சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகிவிடுவது உண்டு.
14. பொறுமைசாலி
பொறுத்தார் பூமியாள்வார் என்பது சான்றோர் வாக்கு. இன்றைய காலக்கட்டத்தில், பொறுமையின்மையும் சகிப்புத்தன்மை இன்மையும் இருபெரும் சமுதாயத் தீமைகளாகும். ‘நீட்’ தேர்வு முடிவு எப்படியிருக்குமோ என்று பயந்து பொறுமையிழந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளம் உள்ளங்களைப் பற்றி நாம் பத்திரிகைகளில் பல சமயங்களில் செய்தி வருவதைப் பார்த்திருக்கிறோம்.
நிகழ்ச்சி: ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தில் அதிலுள்ள குறிப்பிட்ட இடத்தில் வைரம் இருப்பதாகக் கேள்விப்படுகிறான். அந்த இடத்தை அவன் விலைக்கு வாங்கி வைரத்தைக் கண்டுபிடிக்க அதைத் தோண்டிக் கொண்டேயிருக்கிறான். பூமிக்கடியில் ஆழத்தில் தோண்டிய பிறகும் வைரம் தென்படவில்லை. எனவே சோர்ந்துபோன இவன், அந்த நிலத்தை வேறொருவனுக்கு விற்றுவிடுகிறான். வாங்கியவன் முயற்சியைக் கைவிடாமல் ெதாடர்ந்து தோண்டுகிறான். என்ன ஆச்சரியம், இவன் இரண்டடி தோண்டிய உடனே இரத்தினக் கற்களைக் கண்டடைகிறேன். பாவம் முந்தினவன் கொஞ்சம் பொறுமைக் காத்திருந்தால் அவனுடைய முயற்சி திருவினையாகியிருக்கும். இப்படித்தான் வாழ்க்கையிலே பொறுமை இழந்து, சகிப்புத்தன்மை இழந்து பலர் வாழ்வில் வெற்றி வாய்ப்புகளை இழந்து நிற்கிறார்கள்.
தூங்கு முகத்தவரின் பொறுமை, அவர்களுடைய ஒரு நற்பண்பு பாராட்டுதற்குரிய பண்பாகவும் இருக்கிறது.
(தொடரும்)