கல்வி-அறிவு-ஞானம்
டாக்டர்.ஜாண் பி.நாயகம் எம்.டி
மூளையின் செல்கள் திறமையுடன் செயலாற்ற சில வைட்டமின்களும், சத்துக்களும் இன்றியமையாதவையாக உள்ளன. இந்த வைட்டமின்கள் அல்லது சத்துக்களில் குறைபாடுகள் இருந்தால் மூளையின் செயல்திறன் குறையும்.
படிப்பதில் சிரமம்
நினைவுத் திறனில் வீழ்ச்சி
படித்ததை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதில் சிக்கல்
மனம் ஒருமுகப்படாத நிலை
குழப்பமான மனநிலை
மனச் சோர்வு, மன இறுக்கம்
போன்ற பல சிக்கல்களுக்கு இந்தக் குறைபாடுகளே அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இந்த வைட்டமின்கள், சத்துக்கள் குறித்தும், அவை எந்தெந்த உணவுகளில் அதிகம் உள்ளன என்பதையும் இப்போது காணலாம்.
- போலிக் ஆசிட் (Folic Acid)
மூளையின் வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் போலிக் ஆசிட் என்ற வைட்டமின் மிக மிக அவசியம். ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது, போலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் கருவில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
மூளையின் செல்கள் ஆக்சிஜனைத் திறம்பட உபயோகிக்க போலிக் ஆசிட் அவசியப்படுகிறது. போலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் மூளையின் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்காது. மூளைச் சோர்வு மிக எளிதில் வந்துவிடும்.
முளைவிட்ட தானியங்கள், பயிறு வகைகள், உளுந்து, சோயா பீன்ஸ், பசலைக்கீரை, ஆரஞ்சு ஆகிய உணவுகளில் இந்த போலிக் ஆசிட் அதிக அளவில் உள்ளது. உங்களது குழந்தைகளின் உணவில் இவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- குவர்செட்டின் (Quercetin)
மூளையிலுள்ள நரம்பு செல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு இந்தச் சத்து மிக மிக அவசியம். இச்சத்து குறைவாக இருந்தால் படிக்கும் திறன் கணிசமாகக் குறைந்து போகும்.
சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், வெந்தயக் கீரை, தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிவப்பு ஆப்பிள் (தோலோடு), கறுப்பு, சிவப்பு, திராட்சை, உலர்ந்த திராட்சை போன்ற உணவு வகைகளில் குவர்செட்டின் சத்து அதிக அளவில் உள்ளது.
- ஆந்தோ சயானின் (Antho Cyanin)
நரம்பு மண்டல செல்கள் சரியாக உருவாகவும், செல்களிடையே மின்தூண்டல் சரிவர நடைபெறவும் இந்தச் சத்து அவசியம். இதில் குறைபாடுகள் இருந்தால் படிப்பில் மந்தத்தன்மை, ஆர்வமின்மை, நினைவாற்றல் இல்லாமை போன்றவை உருவாகும்.
நெல்லிக்காய், செர்ரி, பிளம்ஸ், கறுப்பு அல்லது சிவப்பு திராட்சை, சிவப்பு ஆப்பிள், பீட்ரூட், கத்திரிக்காய், வெங்காயம் ஆகிய உணவுகளில் ஆந்தோ சயானின் அதிக அளவில் காணப்படுகிறது.
- ஒமேகா -3 (Omega 3)
இது ஒருவகை கொழுப்பு அமிலமாகும். மூளைச் செல்களின் வெளிச் சுவர்கள் சரிவர உருவாகவும், மூளைச் செல்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்’ என்ற வேதிப் பொருட்களின் உற்பத்திக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்கள் தேவை.
இந்தக் கொழுப்பு உடலில் குறைந்தால் நினைவாற்றல், படிக்கும் திறமை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். நரம்பு மண்டலமும் வலுவிழக்கும்.
மீன்களில் – குறிப்பாக கவலை (சாளை), மத்தி, அயிரை போன்ற மீன் வகைகளில் ஒமேகா – 3 அதிக அளவில் உள்ளது.
ப்ளாக்ஸ் சீட் (Flax Seed) போன்ற சில எண்ணெய் வித்துக்களில் சிறிய அளவில் உள்ளது.
மீன் உண்பதால் மூளை வலுவாகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உலகம் முழுவதிலும் நிலவி வருகிறது. அது உண்மையே என்பதை நவீன விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது.
- பைரோ குளுட்டோமேட்
(Pyroglutomate)
மனதை ஒருமுகப்படுத்தவும், நீண்ட நேரம் மூளை சோர்வின்றிச் செயல்படவும் இந்தச் சத்து உதவி செய்கிறது. நினைவாற்றலையும் இது அதிகரிக்கும்.
வலது மூளையிலுள்ள செல்கள், இடது மூளையிலுள்ள செல்களோடு தொடர்புகொள்ளவும் இணைந்து செயலாற்றவும் பைரோ குளுட்டோமேட் சத்து அவசியம். இது சரியான அளவில் இருந்தால் மூளையின் கற்பனை வளம், படைப்புத் திறமை ஆகியவை பலமடங்கு அதிகரிக்கும்.
மீன், பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ், பழங்கள், கீரைகள், காய்கறிகள்ஆகியவற்றில் இந்தச் சத்து காணப்படுகிறது. குறிப்பாக மீனில் அதிகம் உள்ளது.
- நியாசின் (வைட்டமின் – பி -3)
நினைவாற்றலை அதிகரிக்கும்
- பான்டோதீனித் ஆசிட் (வைட்டமின் பி-5)
நினைவாற்றலை அதிகரிக்கும்.
மூளையை முனைப்புடன் (அலர்ட்டாக) வைத்திருக்கும்.
- பைரிடாக்சின் (வைட்டமின் பி – 6)
நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் எனப்படும் மூளைத் திரவங்களை உருவாக்க இது அவசியம்.
பைரிடாக்சின் குறைபாடு உள்ளவர்களை மன அழுத்தமும், மனச் சோர்வும் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
- சயனோ கோபாலமின்
(வைட்டமின் பி-12)
படிப்புத் திறனை அதிகரிக்கும்.
இந்தச் சத்து குறைபடும்போது மனதில் குழப்பங்களும், அமைதியின்மையும் ஏற்படும்.
- பிற வைட்டமின்கள்
வைட்டமின் இ, வைட்டமின் ஏ போன்றவையும் மூளையின் நலமான இயக்கத்திற்குத் தேவையாக உள்ளன.
வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகள்
நாம் மேலே கண்ட அனைத்து வைட்டமின் சத்துக்களும் –
கீரைகள்
காய்கறிகள்
பழங்கள்
மீன்
முட்டை
பால்
போன்றவற்றில் உள்ளன, சரிவிகித உணவு உண்பவர்களுக்கு இந்தச் சத்துக்களில் குறைபாடு ஏற்படுவது இல்லை.
இதுவரையில் நாம் கண்ட சத்துக்கள், வைட்டமின்கள் அனைத்துமே இப்போது மாத்திரை, மருந்துகளாகவும் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்தின் அளவு அதிகமானால் பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம்.
முடிந்த வரையில் இந்தச் சத்துக்களை உணவின் மூலம் பெற்றுக் கொள்வதே நல்லது. நிச்சயமாக குறைபாடு உள்ளது என்பது உறுதியானால் மட்டுமே, மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளாக எடுத்துக்கொள்ளலாம்.
(தொடரும்)